தியாக ஸ்வரூபி; கருணா மூர்த்தி போன்ற திருநாமங்களுக்குப் பொருத்தமாகத் திகழ்பவர் நம் ஐயன் சிவபெருமான். அதனால் அவர் பட்ட சோதனைகள்தான் எத்தனை எத்தனை? பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்து பட்ட கஷ்டமும், தேவர்களுடன் நம்மையும் இந்த பிரபஞ்சத்தையும் காப்பதற்காக ஆலகால விஷத்தை உகந்து ஏற்றதும், இன்னும் எத்தனையோ அடியவர்களுக்காக அவர் எதிர்கொண்ட சோதனை களும் அவருடைய தியாக சிந்தனை, அன்பு, கருணை போன்ற நற்பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அதனால்தான், ‘அன்பே சிவம்’ என்றனர் ஆன்றோர்.
நம் ஐயன் ஏற்ற சோதனைகளும் அதனால் அவர் பட்ட கஷ்டங்களும் நம்முடைய நல் வாழ்க்கைக்காகத்தான்; நாமும் அன்பு, கருணை, தியாகம் போன்றவற்றை பெற்றிருக்க வேண்டும் என்பதை நமக்கெல்லாம் உணர்த்துவதற்காகத்தான். அதனால்தான் பரந்த இந்த உலகத்தில் ஆயிரம் ஆயிரமாய் ஆலயங்கள் நம் ஐயன் பரமனுக்கு அமைந்திருக்கின்றன.
ஒரு காலத்தில் எழிலார்ந்த ஆலயத்தில் சந்நிதி கொண்டு, தரிசித்த அன்பர்களுக்கெல்லாம் அருள் புரிந்த இறைவனின் பல நூறு ஆலயங்கள் இன்று சிதிலம் அடைந்து காணப்படுவதுடன், ஆலயத்தில் இருந்த தெய்வ மூர்த்தங்கள் எல்லாம் வெட்ட வெளியிலும் பொட்டல் காடுகளிலும் கேட்பாரற்று இருக்கின்றன. அத்தகைய ஆலயங்களுள் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு மச்சேஸ்வரர் ஆலயம்.
கிராமத்துக்குள் நுழையும்போதே நம்மை வரவேற்றது நீர் நிரம்பித் தளும்பிய ஏரிதான். கரையோரங்களில் பல வகையான மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்க, அவற்றுக்கு நடுவே கரையின்மேல் சற்றுத் தொலைவில் அமைந்திருந்த ஒரு தகரக் கொட்டகையில் நம் ஐயன் மச்சேஸ்வரர் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார். அவருடன் நந்தி தேவரும், சண்டிகேஸ்வரரும் காட்சி தருகின்றனர்.

அம்பிகையைப் பற்றிக் கேட்டபோது அங்கிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ரவணாஜி கூறிய ஒரு தகவல் அம்பிகையின் கருணைத் திறத்தினை நமக்கு உணர்த்துவதுபோல் இருந்தது.
ஒரு காலத்தில் ஆலயத்தில் இருந்த அம்பிகையின் திருவுருவம், ஆலயம் சிதிலம் அடைந்தபோது பின்னம் அடைந்து விட்டது. அதனால், அம்பிகையின் சிலையை ஏரிக்குள் போட்டுவிட்டனர். சிவலிங்க மூர்த்தம், நந்தி தேவர், சண்டிகேஸ்வரர் திருவுருவங்கள் மட்டும் ஏரியின் உட்புறத்தில் கரையோரமாக இருந்தன. ஏரியில் தண்ணீர் இல்லாத காலங்களில் மட்டும் சில அன்பர்கள் சிவலிங்க மூர்த்தத்துக்கு எளிய முறையில் அபிஷேக ஆராதனைகள் செய்து வந்தனர்.
சுமார் நூறு வருஷத்துக்கு முன்பு ஒருமுறை கடுமையான வறட்சி ஏற்பட்டது. வெண்பாக்கம் மக்களுக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்ட அம்பிகை, ஓர் அன்பர் மூலமாக ஏரிக்குள் இருக்கும் தன்னுடைய திருவுருவத்தை எடுத்து அபிஷேக ஆராதனை செய்தால் மழை பெய்யும் என்று கூறினாள். மறுநாள் ஊர்மக்கள் அப்படியே செய்தனர். உடனே மழை பெய்து வறட்சி நீங்கியது. இன்றைக்கும் ஊரில் மழை இல்லாவிட்டால், ஏரிக்குள் இருக்கும் அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அங்கிருந்த பெரியவர் சாரங்கபாணி என்பவர், தன்னை ஒரு விவசாயி என்றும் பசுமை விகடனின் நீண்டகால வாசகர் என்றும் நம்மிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர் நம்மிடம், ‘‘சில மாதங்களுக்கு முன்பு இங்கே வந்த சென்னை கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை அமைப்பைச் சேர்ந்த அன்பர்கள், நீண்ட கால மாகவே ஏரிக்குள் கரையோரமாக இருந்த சிவலிங்க மூர்த்தம் மற்றும் நந்தி தேவர், சண்டிகேஸ்வரர், மற்றும் ஒரு தெய்வத் திருவுருவம் ஆகியவற்றை எடுத்து ஏரிக் கரையின் மேல் ஒரு தகரக் கொட்டகை அமைத்து பிரதிஷ்டை செய்தனர். இறைவனின் திருப்பெயர் தெரியாத நிலையில், அந்த அன்பர்கள்தான் ஏரிக்கரையில் இருந்த ஐயனுக்கு மச்சேஸ்வரர் என்னும் திருப்பெயர் சூட்டினர். அன்றிலிருந்து குணாளன், வேங்கமலை போன்ற சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தினசரி பூஜை மற்றும் பிரதோஷ பூஜை போன்றவற்றைச் செய்து வருகிறார்கள்’’ என்று கூறினார்.
குணாளன் மற்றும் வேங்கமலை ஆகியோரிடம் பேசினோம். ஊர்ப் பெரியவர்களின் ஆதரவுடன், இப்போது தகரக் கொட்டகையில் இருக்கும் இறைவனுக்கு விரைவிலேயே கோயில் கட்ட இருப்பதாகவும், அதற்காக ஒரு திருப்பணிக் கமிட்டி விரைவில் ஏற்படுத்த உள்ளதாகவும் கூறினர்.
ஏரிக்குள் இருந்த நிலையிலும், மக்களுக்கு அருள்புரியும் கருணைத் திறம் கொண்ட அம்பிகைக்கு நாம் செலுத்தக் கூடிய நன்றிக்கடன், அம்பிகையின் நாயகராம் ஐயன் மச்சேஸ்வர பெருமானுக்கு ஆலயம் அமைய நம்மால் ஆன உதவிகளைச் செய்வதைவிடவும் வேறு என்னவாக இருக்க முடியும்?

அருளை அள்ளி அள்ளி வழங்கும் ஐயன் மச்சேஸ்வரருக்கு விரைவிலேயே ஓர் ஆலயம் அமைந்திட நம்மால் ஆன உதவி களைச் செய்வோம். அதன் பயனாக அம்பிகையின் அருளுடன்
ஐயன் மச்சேஸ்வரரின் அருளும் நம் வாழ்வில் அனைத்து நலன்களையும் கொண்டு சேர்க்கும் என்பது உறுதி.
படங்கள்: ச.பிரசாந்த்
எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது?
காஞ்சிபுரம் மாவட்டம் வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு, சென்னை தாம்பரம்-வாலாஜாபாத் சாலையில் பண்ருட்டிகண்டிகை என்ற இடத்தில் இறங்கி, இடப் புறம் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரம் சென்றால் ஏரிக் கரையில் அமைந்திருக்கும் ஐயனின் ஆலயத்தை அடையலாம்.