Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

உபதேசங்களால் உபயோகம் உண்டா, இல்லையா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

உபதேசங்களால் உபயோகம் உண்டா, இல்லையா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

? பண்டிகை தினம் ஒன்றில் தொலைக்காட்சியில் சிறப்புப் பட்டிமன்றங்களும், பக்திச் சொற்பொழிவுகளும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கவிடாமல் சேனலை மாற்றிக் கொண்டிருந்தனர் எங்கள் வீட்டு இளசுகள்.

இந்த விஷயத்தை என் மகனிடம் கவலையோடு பகிர்ந்து கொண்டேன். ‘மற்ற விஷயங்களோடு ஆன்மிகத்தையும் அவர்க ளுக்குப் போதிக்க வேண்டாமா’ எனக் கேட்டேன். தூய கருத்துகள் பதியும்போது மனமும் எண்ணமும் செம்மையாகும் என்பது எனது கருத்து. ஆனால் என் மகனோ, ‘மனதைத் தூய்மையாக்க சொற்பொழிவுகளும் கதைகளும் மட்டுமே போதாது’ என்கிறான். சரியான தீர்வை நீங்கள்தான் விளக்கவேண்டும்.

- கே. காமாக்ஷி, திருப்பூர்

முதல் கோணம்

‘எண்ணங்கள் மனதில் உதயமாகும்; அதன் உருவம் வார்த்தை வடிவில் வெளிவரும்; அது செயல்வடிவில் நிறைவு பெறும்’என்கிறது வேதம்(யத்திமனஸாத்யாதயதிதத்வாசாவததி). எண்ணங்களின் தரம் மனதின் இயல்புக்கு உகந்த வகையில் இருக்கும். அமைதியான மனம், நல்ல எண்ணங்களை உருவாக்கித் தரும். அறியாமையில் மறைந்த மனமும் (ஆவரணம்), ஆசையில் இணைந்த மனமும் (விக்ஷேபம்) நல்ல எண்ணங்களை உருவாக்காது. கொந்தளிப்பின் காரணமாக சிந்தனை வளத்தை இழந்துவிடும்.

மனம் தூய்மையாக இருக்க  வேண்டும்.  அது,  அறியாமை  அல்லது ஆசைக்கு அடிபணிந்தால், உள்ளதை உள்ளபடி வெளியிடாது.

ஆன்மாவின் இணைப்பில் மனம் நம் உடலை இயக்குகிறது.தோன்றிய ஆசைகளை புலன் வாயிலாக நிறைவேற்றிக் கொள்கிறது. நமது உயர்வுக்கும் தாழ்வுக்கும் மனம்தான் காரணம் (மனஏவ மனுஷ்யானாம் காரணம் பந்தமோக்ஷயோ;).

கேள்வி - பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறியாமையின் தாக்கம், ஆசைகள் நிறைவேறாத ஏக்கம் இவை இரண்டும் முன்னேற்றத்துக்கும் தாழ்வுக்கும் பிறரைக் காரணம் காட்டி, தனது குறையை மறைத்துக்கொள்ளும்.

? ஆசை, அறியாமை நீங்குவதற்கு சொற்பொழிவுகள் மூலம் பெரியோர்கள் தரும் புத்திமதிகள் உதவும் அல்லவா?

பட்டிமன்றம், கேள்வி - பதில், வாத ப்ரதிவாதம் ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்பவர் களின் மனம், உண்மையை வெளிக்கொண்டு வரும் எண்ணத்துடன் இருக்காது. ஆசையும், அறியாமையும்
ஒருதலைப்பட்சமான விளக்கத்தோடு முடிவடையச் செய்துவிடும். காலம் காலமாகத் தொடர்ந்து நடைபெறும் பட்டி மன்றம் முதலானவை, இதுவரை உண்மையை உணர்த்தவில்லை. அதில் கலந்துகொள்பவர்களில் பெரும்பாலானோர் அறியாமையிலும் ஆசையிலும் கட்டுண்டவர் களாகவே இருக்கிறார்கள். தனது வாதம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில், அவர்களது விளக்கவுரைகள் உண்மைக்குப் புறம்பாக வந்துவிடும். ஒரு கட்டத்தில், நிகழாத ஒன்றை நிகழ்ந்ததாக சுட்டிக்காட்டி வாதத்தின் வெற்றிக்கு முனைவார்கள். இங்கு அறியாமை மனதை ஆட்கொண்டுவிடுவதால், தெளிவான விளக்கத்துக்கு திசை திரும்பாது.

அறியாமை விலக வேண்டும். ஆசை அடங்க வேண்டும். அப்போது மனம் சீரான வழியில் சிந்தனை செய்யும்; அமைதி பெறும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். ஆக, அத்தனை அலுவல்களுக்கும் அடிப்படைக் காரணமான மனதைப் பக்குவப்படுத்தும் முயற்சியில் இறங்குவது சிறப்பு. தெளிந்த மனதின் சிந்தனை வளம் உயர்ந்த முறையில் செயல்பட்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை அளித்துவிடும். ஆசை, கோபம், அறியாமை, ஆணவம், அசூயை, பொறாமை ஆகிய அத்தனையும் மனதில் உதயமாகும். ஈவு, இரக்கம், பரோபகாரம், பெருந்தன்மை, பொறுமை, அடக்கம், கொடை, தாட்சண்யம் ஆகியவையும் மனதில் உதயமாகும். ஆசை முதலானவை தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் அமைதியின்மையை ஏற்படுத்தும். பரோபகாரம் போன்றவை தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் உயர்வை ஏற்படுத்தும்.

எனவே, கெடுதல் செய்யும் எண்ணங்களை அழித்து, நல்லதை விளைவிக்கும் எண்ணங்கள் மலர வழிவிட வேண்டும். ஆவரணம் (அறியாமையில் மறைவு), விக்ஷேபம் (ஆசைகளை எட்டிப்பிடிக்க முனையும் நிலையில் ஏற்படும் கொந்தளிப்பு) ஆகிய இரண்டையும் விலக்கினால் நல்ல எண்ணங்கள் தடங்கலின்றி தோன்றி வளர்ந்து, தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் அமைதியை நிரந்தரமாக்கும்.

? நல்ல கருத்துகளைத் தொடர்ந்து செவிமடுத்தால்தானே மனதில் நல்ல எண்ணங்கள் வளர வழி பிறக்கும்?!

இன்றைய சில மகான்களின் சொற்பொழிவுகள் ஆவரணம் அல்லது விக்ஷேபம் இணைந்த மனம் படைத்தவர்களிடம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உழுது பயிரிட வேண்டும். மனதை பக்குவப்படுத்தி உபதேசம் செய்ய வேண்டும். இறைவனை ஏற்காத, அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் மனம் படைத்தவர்களுக்கு, விழுந்து விழுந்து மேற்கோள்களையெல்லாம் சுட்டிக்காட்டி, சொற்பொழிவுகளில் சொல் வளத்தால் இறைவனின் பெருமை ஓதப்படுகிறது. அவை அனைத்தும் கட்டாந்தரையில் விதைத்த விதை போல் வீணாகிவிடும்.

இந்த இறைவனை வணங்கினால் திருமணம் கைகூடும்; மழலைச் செல்வம் கிடைக்கும். இந்த இறைவனை வணங்கினால் வெளிநாட்டு வேலை பொருளாதாரத்தில் நிறைவு, பட்டம், பதவி அத்தனையும் தானாகவே வந்து சேரும் என்று சொற்பொழிவில் விளக்குவார்கள். அப்பாவி மக்கள், அவற்றையெல்லாம் கையாண்டு ஆசையை வளர்த்துக்கொண்டு, பிறகு அது இடையூறைச் சந்திக்கும்போது, அதை எதிர்த்து செயல்பட்டு துவண்டு போவார்கள். அவர்களின் அறியாமையை அகற்றவோ, ஆசைகளை அடக்கவோ எந்த மகான்களும் முனைவதில்லை. ஒருவேளை அவர்கள் முனைந்தாலும், அப்பாவி மக்களின் ஆதரவு குறைந்து, தொடர் சொற்பொழிவுகள் தடைப்பட்டு மகான்களின் ஆசை நிறைவேறாமல் போய்விடும்.

? எனில், அப்பாவிகளின் அறியாமையை அகற்ற வேறு என்னதான் வழி?


அப்பாவிகளின் ஆசைகளைத் தூண்டிவிட்டு அலைக்கழிக்காமல், அவர்களின் மனதில் கெட்ட எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை வளர உதவும் சொற்பொழிவுகளில் இறங்க வேண்டும். அவர்களுக்கு மனப் பக்குவத்தை ஊட்டினால் போதும்; அவர்களே தங்கள் சிந்தனையில் உண்மையை அறிந்து மகிழ்வார்கள். அவர்களை பகடைக்காயாக பயன்படுத்தாமல், அறியாமை அகலவும், ஆசையை அடக்கவும் அவர்களின் மனதுக்கு முதலுதவி செய்தால் போதுமானது.

குருவருள், திருவருள், பக்தி இவை குறித்த விளக்கவுரைகள், அவர்களை எந்த விதத்திலும் ஈர்க்காது. அமைதியான மனமே அவற்றை ஏற்கும். தற்போதைய சூழலில் அலுவல்களில் வெற்றியடைய முனையும் அப்பாவிகளை, எந்த அருளும் திசை திருப்பாது அறியாமையை அகற்றும் மருந்து, ஆசைகளை கட்டுப்படுத்தும் துணிவு ஆகிய இரண்டும்தான் பயனுள்ளதாக இருக்கும். மற்றபடி பக்தி ப்ரபாஷணங்களும் கதாகாலக்ஷேபங்களும், அவற்றை நடைமுறைப் படுத்துபவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும்.

கேள்வி - பதில்

தங்கள் வாதம் உள்நோக்கம் உடையது. பக்தி, முக்தியை ஈட்டித் தரும் என்பது வியாச முனிவரின் வாக்கு. அப்பாவி மக்களைக் கரையேற்ற பதினெட்டு புராணங்களை தந்தருளினார் அவர். அத்தனைப் புராணங்களும் பக்தியை உயர்வாகப் போதிக்கின்றன. குழந்தையான த்ருவனும், ப்ரஹலாதனும் பக்தியில் மேன்மை அடைந்தார்கள். கடவுள் பக்தி அறியாமையை அகற்றி, ஆசையை அடக்கி, மன உயர்வை அளித்து பெருமைப்படுத்தும்.

உலக சிந்தனையாளர்களாக மாற வேண்டிய கட்டாயம் இல்லை. உலகவியலை அறியாமலேயே இறை பக்தியில் ஏற்றம் காணலாம். மனம் படைக்காத உயிரினங்களும் பக்தியில் தன்னை உயர்த்திக்
கொண்டிருக்கின்றன. ‘ஆதிமூலமே’ என்ற யானையும் முக்தி அடைந்திருக்கிறது.

இரண்டாம் கோணம்...

? பக்தி உயர்வானது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், எங்களின் கேள்வி... வெறும் கதைகளால் பக்தியை வளர்க்க முடியுமா, மன மாசுக்களை அழிக்க இயலுமா என்பதுதான்?

முதலில், கேட்பவர்களுக்கு மனப் பக்குவம் வேண்டும். பக்குவம் வந்துவிட்டால் அவர்களுக்கு பக்தியை ஊட்டத் தேவையில்லை. மற்ற அலுவல்களில் இருந்து முற்றிலும் விடுபட்டு, இறைவனில் லயித்துவிட்டால் மனதில் தோன்றும் ஆசைகள், அறியாமை அத்தனையும் அழிந்துவிடும். இறைவனில் ஈடுபடும் மனம் ஆசை, அறியாமையில் இருந்தும் விலகிவிடும்.

தனக்காகவும் சமுதாயத்துக்காகவும் நன்மை செய்ய விரும்பும் அன்பர்கள், முதலில் பக்தியோடு கடவுளை (பிள்ளையார்) வணங்கித்தான் கடமைகளில் இறங்குவார்கள். மனம், வாக்கு, உடல் - இம்மூன்றால் இழைத்த பாவங்களை அகற்ற ‘ராம ராம ராம’ என்று பக்தியோடு உரைத்தால் போதும். பாபங்கள் அகன்றுவிடும்; கடமையில் ஈடுபாடு நிலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம் (மானஸம் வாசிகம் பாபம் கர்மணா சமுபார்ஜிதம் ராமஸ்மரணேனைவ வ்யபோஹதி நஸம்சய:).

வேதத்தை பாகுபடுத்தி அளித்தும், பதினெட்டு புராணங்களை இயற்றியும்கூட வியாசரின் மனம் அமைதி பெறவில்லை. பக்திக்கு உயர்வளிக்கும் பாகவதத்தை இயற்றி அமைதி பெற்றார் என்பது வரலாறு. மெத்தப் படித்த நாராயணபட்டதிரி தனது மனம் அமைதி பெற நாராயணீயத்தை இயற்றினார். பாவங்கள் காரணமாகப் பிணி ஏற்படுகிறது. பக்தியால் பாவங்கள் அகன்று பிணியும் விலகுகிறது என்பதை தனது வாழ்க்கையை உதாரணமாக்கினார் அவர். வேதாந்தத்தில் உச்சாணிக் கொம்பில் இருந்த மஹான் மதுஸூதன ஸரஸ்வதி, ‘பக்தி ரஸாயனம்’ என்ற நூலை இயற்றி அமைதி பெற்றார்.  இன்றைய நாளில், மக்கள் பெருக்கம் எல்லையைத் தாண்டிய நிலையில், அப்பாவி மக்களைக் கரையேற்ற பட்டிமன்றமும், கேள்வி - பதிலும், வாத - பிரதிவாதங்களும், சொற்பொழிவுகளும்தான் உதவுகின்றன.

? அது எப்படி சாத்தியம்? தன்முனைப்பும், இடைவிடாத வழிபாடுகளும் இல்லாமல் பக்தியில் உயர்வை அடைய முடியுமா?

இன்றையச் சூழலில் அன்றாட அலுவல்களை முழுமையாக நிறைவேற்ற நேரம் போதாத நிலையில், குருவை தேடிப் பிடித்து மனப் பக்குவத்தை அடைந்து, உபதேசத்தை ஏற்கும் நிலையில் மக்கள் இல்லை. நாளேடுகளும், மாத ஏடுகளும், சானல்களும் போட்டிப் போட்டுக்கொண்டு முளைத்தும் எல்லா மக்களையும் உயர்வை எட்டவைக்கும் முயற்சியில் வெற்றி பெற இயலவில்லை!

கேள்வி - பதில்

‘கலியுகத்தில் கடவுளை வணங்கிப் பெருமையைப் பெறு’ என்று சொல்வார்கள் (கலெளஸங்கீர்த்யகேசவம்). நல்ல வழியில் சென்று கொண்டிருக்கும் சமுதாய சேவையில், இல்லாத குறைகளைச் சுட்டிக்காட்டி, அலங்கோலப்படுத்தும் நபர்களிடத்தில் அறியாமையும் ஆசையும் அகலாமல் இருக்கிறது என்பது உண்மை. நமது கடமைகளில் இருந்து விடுபட்டு, நேரம் கிடைக்கும்போது கடவுள் பெயரை உச்சரித்தால் போதுமானது; அது மன அமைதிக்கு வழிவகுக்கும். பண்டைய காலம் போன்று 24 மணி நேரமும் இறை வழிபாட்டில் ஈடுபட இயலாது. வாழ்க்கைப் பயணம் இடையூன்றி செயல்பட பல அலுவல்களை ஏற்க வேண்டிய கட்டாயம் உண்டு. அதுவும் அறம்தான் - கடவுள் வழிபாடுதான். அது நினைவில் இருந்தால் போதும்.

மூன்றாவது கோணம்...

ங்களது மதிப்பீட்டை ஏற்க இயலாது. அடுக்கு மொழிச் சொற்களும், சொல் வளமும் அப்பாவி மக்களை ஏமாற்றிவிடும். சொல் வளத்தில் மயங்கி தலைவனுக்கு அரசை தாரை வார்த்த மக்களும் உண்டு. தலைவனின் தேனொழுகும் வார்த்தையிலும், வாக்குறுதியிலும் நம்பிக்கை வைத்து ஏமாந்து போன மக்களும் இருந்திருக்கிறார்கள்!

‘கடவுளை வழிபடு; எல்லா இன்னல்களும் அகன்றுவிடும்’ என்பார்கள். ஆனால், அறியாமை கடவுளை நினைக்கவிடாமல் தடுத்துவிடும். ஆசைகளில் கட்டுண்டவன் ஆசைகளை நிறைவேற்ற கடவுளை அணுகுவான். ஆசைகள் அவனை நெருங்கவிடாது. இன்றும் பல பேர் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பக்தியிலும், கடவுள் வழிபாட்டிலும் இணைகி றார்கள். மற்ற விஷயங்களில் பற்று இல்லாத கடவுள் ஈர்ப்பு அவர்களிடம் இருக்காது!

? பற்று இருக்கும் இடத்தில் பக்தி இருக்காது என்று எப்படிச் சொல்ல முடியும்?

கடவுள் சிலையில் இருக்கும் இரு கைகளில் ஒன்று வரத ஹஸ்தம் (பக்தனுக்கு விரும்பியதை அளிக்கும் கை); மற்றது அபய ஹஸ்தம் (பயத்திலிருந்து காக்கும் கை). வரத ஹஸ்தத்தைப் பார்க்கும் பக்தர்கள், தங்களது அன்றாட தேவைகளை - விருப்பங்களை நிறைவேற்றும் இறையுருவமாகக் காண்பார்கள். விருப்பம் நிறைவேறாத நிலையில் கடவுளைப் பழிப்பார்கள். பக்திக்கு விலையாகப் பண்டமாற்று முறையிலான ஒப்பந்த பார்வையும் சிலரிடம் உண்டு. அங்கு இம்மியளவும் பக்தி இருக்காது. ஏனெனில், அறியாமையும் ஆசையும், கடவுளின் மனம் ஈடுபடுவதைத் தடுத்து விடும்.
ஆசாபாசத்தோடும், அறியாமையோடும் கடவுள் பக்தி சேர்ந்து இருக்காது. அப்படித் தென்படும் இடத்திலும், வியாபார நோக்கில் விருப்பம் நிறைவேறும் வரை தொடரும். தோல்வியுற்றால் பக்தி கழன்றுவிடும். ‘தினம் தினம் பக்தியோடு உன்னை வழிபடுகிறேன். அப்படி இருந்தும் எனது இன்னலை நீ ஏன் விலக்கவில்லை? புஷ்பங்களாலும், பழங்களாலும் எனது சக்திக்கு மீறி உன்னை ஆராதித்து வருகிறேன். இருந்தும் என்ன பயன்? எனது பிணி அகலவில்லை, எனது பொருளாதாரம் சிறக்கவில்லை, விரும்பிய வேலை கிடைக்கவில்லை! இந்த அநாதையைக் காப்பாற்ற இயலாதவனுக்கு, அநாத ரக்ஷகன் என்று எப்படி பெயர் விளங்கும்? உனக்குக் கண்களும் இல்லை; எனது அவலத்தை உன்னால் கண்டுகொள்ள முடியவில்லையே. உனக்குக் காதும் இல்லை; எனது கதறல் உன் காதில் விழவில்லையே? நீ கடவுள் இல்லை; வெறும் கல். நான் ஏமாற்றப்பட்டேன். இந்த நிமிடம் முதல் உனக்கு எந்த பூஜையும் கிடையாது’ - இப்படி, விருப்பம் நிறைவேறாத கதறல்களைக் கேட்டிருப்போம்.

கேள்வி - பதில்

இப்படியானவர்களின் பக்தி ஆசையால் விளைந்தது; அதில் உண்மையில் பக்தி இல்லை. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக பக்தி ஆசைகளை நிறைவேற்றியது என்ற எடுத்துக்காட்டுகளை வைத்து, சொந்த விருப்பத்தை நிறைவேற்ற பக்தி செய்பவர்களாக மாறுவார்களே தவிர, உண்மையான பக்தர்கள் உருவாக வழியில்லை. த்ருவனைப் போலவோ, ப்ரஹ்லாதனைப் போலவோ கடவுள் நம்பிக்கை வைப்பவர்கள் இன்று இல்லை. ஆதிமூலத்துக்கு அருளியது கடவுளின் கடமை; ஆபத்திலிருந்து விடுதலை அளிக்கும் பொறுப்பு செயல்பட்டது. முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முற்படக் கூடாது. ஆசாபாசங்களில் இருந்தும், அறியாமையில் இருந்தும் முற்றிலும் விடுபட்ட மனம் கடவுளைப் பற்றிக் கொள்ளும். கலங்கிய மனதில் கடவுள் குடியேற மாட்டார்.

? கலங்கிய மனம் தெளிவடைய கடவுளின் திருவருள் துணை செய்யாதா?

பிறந்த மனிதர்களின் அத்தனை அலுவல்களையும் அவர் ஏற்கமாட்டார். மனத்தெளிவை கடவுள் ஏற்படுத்த மாட்டார். மனதில் பற்றிக்கொண்ட அறியாமையையும் ஆசைகளையும் கடவுள் தன்னிச்சையாக அழித்து சுத்தம் செய்து மனதில் குடியேற மாட்டார். பிறக்கும்போதே மனதையும், சிந்தனை வளத்தையும் அளித்தவர் அவர். அவற்றை வைத்துக்கொண்டு நாம்தான் முன்னேற்றத்துக்காகச் செயல்பட வேண்டும். அதுதான் நியதி.

உயிரினங்களையும் உலகத்தையும் படைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு வகைகளையும் இயற்கையில் மலர வைத்து, காப்பாளனாகவும் கடைசியில் அவற்றை ஆட்கொள்பவனாகவும் உயர்ந்த நிலையில் பார்த்த கடவுளை, ஒவ்வொரு மனிதனும் தனது விருப்பப்படி ஆசாபாசங்களை வளர்த்துக்கொண்டு, பாவ புண்ணியத்துக்கு அஞ்சாமல், தூசு படிந்து மலினமான மனதை துடைத்துத் தெளிவாக்கும் வேலையை அவருக்கு அளித்து, தாழ்ந்த மதிப்பீட்டில் அவரை வைப்பது தகாது.

கடவுள், தன்னிச்சையாக மனதில் படிந்த மாசை அகற்றுவார் என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை. கண்ணுக்குப் புலப்படாத அந்தச் செயல் - அவர் நிகழ்த்துகிறார் என்பது பிற்பாடு வந்த சொற்பொழிவாளர்களின் தவறான மதிப்பீடு. அவர்களது மதிப்பீட்டை அப்பாவிகள் ஆதரிப்பதால், அது மெய்யாகிவிடாது. அறிஞர்கள் ஆதரிக்கமாட்டார்கள். மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள தர்ம சாஸ்திரம் சில நல்ல நடைமுறைகளைச் சொல்லும். அதை ஏற்று மனம் தெளிவான பிறகு பக்தி செலுத்தினால் பலன் உண்டு. ஆக, கடவுளை நெருங்க இயலாத வகையில் மனம் கொந்தளிப்பை அடைந்திருக்கும்போது அவனுக்கு பக்தி புகட்டுவது, போகாத ஊருக்கு வழி சொல்வதாகும். இந்தச் சொற்பொழிவுகள் மக்களைத் திருத்தாது.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

அறியாமையில் இருந்து வெளிவர வேண்டும். ஆசைகளை விட்டொழிக்க வேண்டும். அப்போதுதான் மனம் கடவுளில் மட்டுமே ஊன்ற இயலும். இரண்டும் கலந்து தென்படும் மனம் கடவுளை நெருங்க நினைத்தாலும், ஆசைகளும் அறியாமையும் முட்டுக்கட்டைகளாக மாறிவிடும். கடவுள் மனதில் நுழைந்தால் அவர் ஆசைகளையும் அறியாமையையும் அகற்றுவார். ஆனால், அவரை நுழையவிடாமல் ஆசைகளும் அறியாமையும் தடுத்துவிடும்.

உண்மை நிலையைப் புரிந்துகொள்ளாமல், ஒருவர் சொன்னதை ஆராயாமல் ஏற்றுக்கொண்டு, மற்றவர்களையும் ஆராயவிடாமல் ஏற்றுக்கொள்ள வைப்பது மனித சேவை ஆகாது. காதலில் கட்டுண்டவன் கடமையை மறக்கிறான். செல்வத்தில் மிதப்பவன் மரணத்தை மறக்கிறான். அசுரர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ள பக்தியில் இணைந்தார்கள்; மடிந்தார்கள். உண்மையில் அவர்களுக்கு பக்தி இல்லை. கடவுள் பக்தியில் மூழ்கியவர், பக்தி சொற்பொழிவுக்கு அரங்கேற மாட்டார். கடவுளைப் பார்த்த மஹான் பொது உபதேசத்தில் இறங்கமாட்டார்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.