மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 9

சிவமகுடம் - 9
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 9

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

வாகீசர் வாக்கும்... பூ வாக்கும்!

கோயில் கருவறை போன்றே சிருஷ்டிக்கப் பட்டிருந்த மணிமுடிச் சோழரின் அரண்மனை பூஜா மண்டபம், பேரொளியால் நிரம்பியிருந்தது. ஆங்காங்கே சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த தீப பந்தங்கள் ஒவ்வொன்றும், அந்த சித்திரை மாதத்து வைகறைப் பொழுதின் இருளைப் போக் கும் விதமாக கீழ்த்திசையில் உதித்த கதிரவனின் கிரணங்களுக்கு நிகராக ஒளிவீசித் திகழ்ந்தன.  
அவற்றுக்குப் போட்டியாக, நறுமணம்  கலந்த எள் எண்ணெய் நிரப்பி, பருத்தித் துணியில் திரிக்கப்பட்ட திரிகளைக் கொண்டு தீபம் ஏற்றப் பட்டிருந்த பலவிதமான பூஜா விளக்குகளும் தங்களது சுடரொளியை அந்த அறையெங்கும் பரப்பியிருந்தன.

பந்தங்களாலும், திருவிளக்குகளாலும் அந்த அறையெங்கும் வியாபித்திருந்த ஒளியானது, அறையின் மையத்தில் இருந்த பூஜா மண்டபத் தூண்களிலும் விதானத்திலும் வேயப்பட்டிருந்த பொன் தகடுகளின் மீதும், மணிமுடிச் சோழரின் அருகே கண்மூடி கரம் குவித்து அமர்ந்திருந்த இளவரசி மானியின் மேனியில் துலங்கும் பலவிதமான ஆபரணங்களின் மீதும் விழுந்து தெறிக்க, தகடுகளின் பசும்பொன்னும் ஆபரணங் களில் துலங்கிய முத்து ரத்தினங்களும் ஒளியை  ஏற்று, அதனுடன் தத்தமது வண்ணங்களையும் கலந்து ஜொலித்து, அந்த பூஜையறையில் புதுவித வர்ணஜாலத்தை சமைத்திருந்தன!

ஆனால் இவையாவும் நிலையானதா என்றால், இல்லை! இவற்றுக்கெல்லாம் மேலான நிலையான பேரொளியும் பெருஞ்ஜோதியுமாகத் திகழ்வது, அதோ, பூஜா மண்டபத்தில் நாயகமாய், லிங்கத் திருமேனியாய் சமைந்திருக்கும் சிவப்பரம்பொருளே அல்லவா?!

சிவமகுடம் - 9

அந்த மெய்யொளியை நோக்கி அதன் திருவடியில், தமது கரங்களில் இருந்த மலர்களோடு தன் மனதையும் மலராக்கிச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தார் மணிமுடிச் சோழர். ‘ஆணுக்கும் அல்ல பெண்ணுக்குமல்ல; வெற்றி இறைவனுக்கே' என்ற வாகீச முனிவரின் வாக்கு, அவரின் அகத்தில் சொல்லொண்ணா அமைதியை அளித்திருந்தது.

பாண்டியருடன் தான் நிகழ்த்தப்போகும் பெரும் போருக்கு முன், வாகீசரிடம் அருளும் ஆசியும் பெற விரும்பினார் சோழர்பிரான். பல்லவ தேசத்தில் உறைந்துய்யும் வாகீசரை, தானே நேரில் தரிசிக்கவும் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், அழகர் மலையில் இருந்து பாண்டிய படைகள் சோழம் நோக்கிப் புறப்பட்டுவிட்டன என்று செய்தி வரவும், வேறு வழியின்றி தனக்குப் பதிலாக ஓர் ஓலையுடன் தூதனை அனுப்பிவைத்தார்.

அதன்படி பல்லவ தேசம் சென்று மீண்ட தூதனும், அங்கே ராஜதானியான காஞ்சிக்கு அருகே கச்சிஅநேகதங்காவதத்தின் எல்லைப் புறச் சத்திரத்தில் எதிர்பாராதவிதமாக வாகீசரை தரிசித்ததை மன்னரிடம் விவரித்தான். அத்துடன், வாகீசரிடம் தான் வந்ததற்கான காரணத்தைக் கூறுமுன்பே, அவர் தன்னிடம் சிவவாக்கு போன்று ‘இறைவனுக்கே வெற்றி’ என்ற சிந்தை மகிழும் வாக்கியத்தையும் ஆசியையும் அருளியதையும், அதற்கு அடையாளமாக, ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து விபூதிப் பிரசாதத்தையும் அவர் வழங்கியதையும் விரிவாக விளக்கினான்.

வாகீசர் கொடுத்தனுப்பியதாக அவன் அளித்த விபூதியை தனது நெற்றியிலும் மார்பிலு மாக சோழர்  பூசிக்  கொண்டபோதே, இறைவனுக் கான வெற்றி கனிந்துவிட்டதாக ஒரு மலர்ச்சி அவருக்குள்!

செய்தியை வந்து சொன்னபோது தூதன் அவரிடம் கேட்டான்: ‘‘மன்னவா! வாகீசர் வெற்றி ஆணுக்குமல்ல பெண்ணுக்குமல்ல என்று கூறினாரே அதன் பொருள் என்ன?’’

அதற்கான பொருள் மன்னருக்குத் தெரிந்தே இருந்தது என்றாலும் அவர் அந்த தூதனுக்கு, ஒரு புன்னகையையே பதிலாகத் தந்தார். அவனோ அவரது அந்தப் புன்னகையை, பதில் தெரியாததனால் ஏற்பட்ட விளைவாகவே கருதினான். அத்துடன் அவருக்குக் கிடைக்காத பாக்கியம் தனக்குக் கிட்டிவிட்டதால் ஏற்பட்ட கர்வமும் சிறிது சேர்ந்துகொண்டதால், அதுபற்றி மன்னரிடம் மேலும் பேசுவதில் பலனிருக்காது என்று அவனாகவே முடிவு செய்துகொண்டான். வாகீசர் சொன்ன மற்றொரு வாக்கியத்தையும் அவரிடம் சொன்னான்.

‘‘இறைவனின் வெற்றி ஒரு பாலகனால் சாதிக்கப்படும் என்று வாகீசர் மறு வாக்கியம் ஒன்றும் பகர்ந்தார்’’ என்றான் மிடுக்குடன்.

வாகீசர் விஷயத்தை அந்த வீரன் விவரித்த கணத்தில், மன்னரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமோ, அதற்கு உண்டான பணிவோ அவனிடம் இல்லாததை சோழர்பிரானும் கவனிக்கவே செய்தார். ஆனால் அதற்காக அவர்  கோபம் கொள்ளவில்லை. மாறாக அவருக்குள் மகிழ்ச்சியே பிறந்தது.

தனது வீரர்களிடம் வீரத்துடன் சிவபக்தியும் இயல்பிலேயே இரண்டறக் கலந்திருப்பதை உணர்ந்தார். சிவனடியாரைத்  தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பும் பாக்கியமும் அந்த வீரனுக்கு எத்தகையதொரு உவகையைத் தந்திருக்கிறது என்பதை எண்ணிச் சிலாகித்தார். அதனால் உண்டான விளைவே அவனது இந்த நடத்தைக்குக் காரணம் என்பதையும் புரிந்துகொண்டவர்,  ‘‘வாகீசரிடம் இருந்து வேறு ஏதேனும் செய்தி உண்டா?’’ என்றும் கனிவோடு வினவினார்.

அவன், ‘இல்லை’ என்று தலையசைக்கவே, அருகில் நெருங்கி பரிவுடன் அவன் தோளைத் தட்டிக்கொடுத்ததுடன், வாகீசர் அளித்த விபூதியில் சிறிது எடுத்து தாமே அந்த வீரனின் நெற்றியில் பூசியும் விட்டார். அத்துடன், ‘‘வீரனே, பெரியோர் வாக்குகளை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. எனினும், வாகீசர் அற்புதமான மங்கல வார்த்தையையே நமக்கு ஆசியாக அருளியிருக் கிறார். ஆகவே, சோழத்துக்கு வெற்றி நிச்சயம் என்று முடிவு செய்துகொள். மேலும், நான் அளித்த பணியை சிரமேற்கொண்டு செய்த உனக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். போருக்குப் பிறகு அதற்கானப் பரிசு நிச்சயம் உனக்கு உண்டு. இப்போது நீ செல்லலாம். நம் எல்லோருக்கும் பெரும் பணிகள் காத்திருக்கின்றன...’’ என்று வாஞ்சையோடு அவனுக்கு விடைகொடுத்தார். வீரனும் பேசுவதற்கு நா எழாமல், கண்களில் நீர் மல்க அவரிடம் விடைபெற்றுக் கொண்டான்.

அவன் நகர்ந்ததும், சிறிதும் தாமதிக்காத மணி முடிச் சோழர், மாதண்ட நாயகர்களை அழைத்து சில ஆணைகளைப் பிறப்பித்தார். அடுத்தடுத்த கணங்களில் உறையூர் துடித்தெழுந்தது. நகரை போருக்கு முழு ஆயத்தப்படுத்தும் பொருட்டு நாற்புறங்களிலும் கோட்டை மதில்களின் பெரும் முரசுகள் முழங்கின! கோட்டைக்கு வெளியே, அதன் இருபுறங்களிலும் இரண்டு அரை வட்டங்களாகப் பிரிந்து அணி வகுத்திருந்த  படையணிகள், மெள்ள நகர்ந்து நெருங்கி, கோட்டையைச் சுற்றி பெரும் வளையமாக இணைந்தன. அதேநேரம், கோட்டையின் பிரதான வாயிற் புறத்தில் இருந்து வீரர்களைச் சுமந்தபடி புயலென வெளியேறிய புரவிகள் சில, சோழர் அளித்திருந்த தகவலை உரிய இடங்களில் சேர்ப்பிக்க, வெவ்வேறு திசைகளில் சென்று மறைந்தன!

இங்ஙனம், சிலபல உத்தரவுகளில் போருக்கான முழு ஆயத்தங்களையும் செய்தபிறகு, இதோ... இளவரசி மானியுடன் பூஜையறைக்கு வந்து சிவ பூஜையில் மூழ்கிவிட்டார் மணிமுடிச் சோழர்.
அவர் பூஜையில் லயித்திருக்க, அருகில் இருந்த இளவரசி மானியோ எம்பிரானுடன் உரையாடத் துவங்கிவிட்டாள்.

சிவமகுடம் - 9

`உரையாடுகிறாளா..? தரையில் அமர்ந்து கண்மூடி கரம் கூப்பி அவள் அமர்ந்திருக்கும் நிலையைக் கண்டால் உரையாடுவது போலவா தோன்றுகிறது! அதுவும், சிவப் பரம்பொருளுடன் உரையாடுகிறாள் என்றால்... எப்படி?!

மேலோட்டமாகப் பார்த்தால் மானியின் நிலை ஒரு தியான நிலை போன்றுதான் இருக்கும். அவளின் வதனத்தை உற்றுநோக்கினால்... மூடிய இமைகளையும் மீறித் தென்படும் கண்மணி களின் நகர்வுகளையும், வில்லையொத்த அவளின் புருவங்கள் இரண்டும் மேலும் கீழுமாக ஏறி இறங்குவதையும், அவ்வப்போது அதரங்களில் இளநகை தோன்றி மறைவதையும் ஊன்றிக் கவனித்தால் புலப்படும்... தந்தையும் தாயுமான சிவனாருடன் அவள் அளவளாவிக் கொண்டிருக்கிறாள் என்று.

ஆம்! எத்தகையச் சூழலாக இருந்தாலும் சரி, எந்த முடிவுகளானாலும் சரி, சோழ நாட்டைக்குறித்த - சொந்த வாழ்க்கைக் குறித்த எவ்விதத் திட்டமாக இருந்தாலும் சரி... அதை அப்படியே எம்பிரானிடம் ஒப்படைத்துவிடுவதும், அவரிடமே முடிவை வேண்டுவதும் மானியின் வழக்கம். அவளின் எண்ணம் அல்லது அவள் வகுத்த திட்டம் சரிதான் என்றால், அவள் கண்விழித்ததும் லிங்கத் திருமேனியில் இருந்து பூவோ, பூச்சரமோ உதிர்ந்து விழுந்து, ஓர் அனுமதியாய் அவளுக்கு ‘பூ வாக்கு' கிடைக்கும்.

இப்போதும் அப்படித்தான். பாண்டிய தேசத்துடன் பெரும் போர் மூண்டுவிட்ட நிலையில், தனித்தனியே தான் வகுத்த திட்டங்களை விரிசடைக் கடவுளிடம் மெளன மொழியால் விவரித்து அனுமதி வேண்டினாள் மானி.

முதல் திட்டம் - தந்தையின் வியூகப்படி பாண்டியரின் பெரும் படைகளை ஆங்காங்கே தேக்கி நிறுத்துவது. இரண்டாவது- கடற்புறத்தில் எதிரிகள் எதிர்பாராத தருணத்தில் - இலக்கில் பரதவர்களின் படையைக்கொண்டு தாக்கி, அவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை அளித்து, அதன் மூலம் சோழர்களின் வெற்றியை நிலைப் படுத்துவது. இரண்டும் பலன் அளிக்காவிடில் மூன்றாவதாகவும் ஒரு திட்டம் வைத்திருந்தாள் இளவரசி மானி. அந்த மூன்றாவது திட்டத்தை எம்பிரானிடம் சமர்ப்பித்துவிட்டு அவள் கண்ணலர்ந்தபோது, எம்பிரானிடம் இருந்து அவளுக்குப் பூ வாக்கு கிடைத்தது! லிங்கத் திருமேனியின் உச்சியில் இருந்து கொன்றை மலர்கள் சரசரவென கீழே உதிர்ந்தன!

அச்சம் தந்த பெயர்!

சிராப்பள்ளியின் அந்தப் பெருங்குகைக்குள் திடுமென வீசிச் சென்ற காற்றால், முரடர்களில் ஒருவனின் கையில் இருந்த பந்த தீபம் அணைத்து விட, அந்த நிலை அவர்களுக்கு பேருதவியாய்  இருந்தது.
இருள் மட்டுமின்றி, அடிவாரத்தில் இருந்து பாண்டியர்களின் முன்னோடிப் படையினர் வடிவில் மேலேறி வரும் பேராபத்தும் விரைவில்  தங்களைச் சூழ்ந்துகொள்ளும் என்பதைத் தெள்ளத் தெளிவென உணர்ந்த பரமேசுவரப்பட்டர் மேற்கொண்டு ஒரு முடிவெடுப்பதற்குள், பேரரவம் ஒன்று அவர் சிந்தையைக் கலைத்தது. அதைத் தொடர்ந்து மெல்லிய ஒளிக்கீற்றும் குகைக்குள் நுழையவே, குகைக்கு வேறுபுறத்தில் ஒரு வழி இருப்பதும், அதை மூடி மறைத்திருந்த பாறையை முரடர்கள் இருவரும் நகர்த்தியதே பேரரவத்துக்குக் காரணம் என்றும் புரிந்தது பட்டருக்கு. அதைத் தொடர்ந்து முரடர்கள் இருவரும் ஒளிக்கீற்று உள் நுழைந்த வழியே பாய்ந்து வெளியேறுவதும் புலப்பட்டது.

சற்றும் தாமதிக்காது தானும் குகையில் இருந்து வெளியேறிய  பரமேசுவரப் பட்டர், ஏற்கெனவே அங்கு காவலுக்கு நின்றிருந்த கோச்செங்கணின் சகாக்களிடம், வேறொரு பாறையைச் சுட்டிக் காட்டி, தப்பிச் செல்லும் கயவர்களை நோக்கி அதைப் புரட்டிவிடும்படி  கட்டளையிட்டார்.

மறுகணமே அவரது  கட்டளை நிறைவேற்றப் பட்டது. பெரும் ஓசையுடன், முரடர்கள் தப்பிச் செல்லும் சரிவை நோக்கி விழத் துவங்கியது அந்தப் பெரும் பாறை. ஆனாலும் அதிர்ஷ்டக் காற்று முரடர்கள் பக்கமே வீசியது. பாறை தங்களை நோக்கி உருண்டு வருவதைக் கண்டதும் சட்டென்று அருகில் இருந்த பள்ளத்தில் குதித்து, தப்பித்துக்கொண்டார்கள் இருவரும்.
 
இந்தக் காட்சியைக் கண்டு முதலில் பெரும் சலிப்பை வெளிப்படுத்திய கோச்செங்கண் சகாக்களின் திருமுகங்கள், அடுத்து நிகழ்ந்த சம்பவத்தைக் கண்டதும் மகிழ்ச்சியால் மலர்ந்தன!

ஆம், குகைப்பகுதியில் இருந்து கீழே உருண்டு விழுந்த பாறை ஏற்படுத்திய சத்தம் பாண்டிய முன்னோடிப் படையினரின் கவனத்தை ஈர்க்க, குன்றினை நாலாபுறமும் சுற்றி வளைத்து மேலேறி வந்துகொண்டிருந்த அவர்கள், பாறை ஒலியெழுப்பி விழுந்த திக்கை குறிவைத்து அந்த ஒரு திசையை மட்டுமே நோக்கி நகர, பரமேசுவரப் பட்டரும் கோச்செங்கண் சகாக்களும் தப்பிக்க வழி கிடைத்தது.
 
அதுமட்டுமா?

முரடர்களும் அந்த திசையை நோக்கிதான் ஓடிக்கொண்டிருந்தனர்.  தங்களிடம் இருந்து தப்பித்தவர்கள் பாண்டியர்களிடம் நிச்சயம் சிக்கிக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையால் ஏற்பட்ட மலர்ச்சியும் அவர்களின் முகத்தில் தெரிந்தது! பரமேசுவரப் பட்டருக்கோ தனது ஓரே ஆணையில் இரு காரியங்களைச் சாதித்துவிட்ட பெருமிதம். ஆனால் இந்த பெருமிதமும் சந்தோஷமும் ஒருகணமே நீடித்தது.

தப்பியோடியவர்களில் ஒருவன் இவர்களை நோக்கி இரைந்து உரைத்த சூளுரையும், தன்னுடையதாக அவன் விளித்த பெயரும் அவர்களை குலைநடுங்கச் செய்தது. அப்படி, அவர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய அந்தப் பெயர்... *அச்சுதன்! ஒருகாலத்தில் தென் தமிழகத்தை நடுநடுங்கச் செய்த பெயர்!

- மகுடம் சூடுவோம்...

* சங்க காலத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி செய்த களப்பிரர்களில் ‘அச்சுதன்' எனும் பெயர் பிரசித்தம். அச்சுத விக்ரந்தன் எனும் களப்பிர மன்னன் குறித்து விநயவிநிச்சயம் எனும் (பாலி மொழியிலான) நூலில் குறிப்பு உண்டு.