ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

னிய நண்பர் சேரமான் பெருமாள் நாயனாருடன் சேர நாட்டுக்குச் சென்று, அங்கே திருவஞ்சைக்களம் ஈசனை வழிபட்டு, சில காலம் தங்கியிருந்தார் சுந்தரர். பிறகு, திருவாரூர் திரும்ப எண்ணினார். அவருக்கு பல அரிய ஆபரணங்களும் பட்டாடைகளும் தந்த சேரமான், ஏவலர்கள் சிலரையும் துணைக்கு உடன் அனுப்பிவைத்தார்.

##~##
அடியார்களுடன் புறப்பட்ட சுந்தரர், கொங்கு நாட்டில் மாதவி வனத்தை அடைந்து, இரவு அங்கு தங்கினார். மறுநாள் புறப்படும்போது, ஒரு திருவிளையாடல் நிகழ்ந்தது. புலி நகங்கள் கோக்கப்பட்ட ஆரங்கள்; வெள்ளைக் கொம்பினாலான குண்டலங்கள்; இடையில் புலித்தோல் ஆடை அணிந்தபடி, கையில் வில்லுடன் முரட்டு வேடவனாக கோலம் கொண்டார் ஈசன். பிறகு, பூதகணங்கள் வேடர்களாகப் பின்தொடர, சுந்தரர் இருந்த இடத்துக்கு வந்து அனைவரையும் மிரட்டினார். உடனிருந்தவர்கள் பயந்து ஓட, செய்வதறியாது நின்றார் சுந்தரர். ''உன் பொருட்களையெல்லாம் கொடுத்துவிடு!'' என்று மிரட்டினார் சிவ வேடவன் (பொன் - பொருள் கொடுக்க யாம் இருக்கும்போது, சேரமானி

டம் பெற்றது ஏன் என சிவனார் எண்ணினார்போலும்)! பாவம் சுந்தரர்... தமது உடைமைகளை எல்லாம் வேடரிடம் பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக நின்றார்!

அப்போது, அந்த வனத்தில் இருந்த ஆனைமுகன், இதைக் கண்டிப்பது போன்று... வண்டுகள் ஒலிப்பது போல் 'கூ...கூ...’ என சத்தம் எழுப்பினார். அந்த இரைச்சல், வேட்டுவ வடிவம் கொண்ட சிவகணங்களின் காது களைக் குடைந்தன! இதனை உணர்ந்த சிவவேடவர், விநாயகரைக் கடிந்துகொண்டார்; 'நீ இந்த மரத்தடியிலேயே என்றென்றும் தனியாக இருக்கக்கடவாய்!’ என்றும் ஆணையிட்டார். பிறகு, தம் கூட்டத்தாருடன் இருப்பிடம் திரும்பி, சுயரூபம் ஏற்றார்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

அங்கே வனத்தில் இருந்த கணபதி, வேடர்கள் சென்ற திசையைத் தமது தும்பிக்கையால் சுந்தரருக்குச் சுட்டிக்காட்டினார். சிதறி ஓடிய அடியார்கள் மீண்டும் வர, அனைவரும் விநாயகர் காட்டிய திசையில், வேடர்களின் காலடித் தடத்தைப் பின்பற்றிப் பயணித்தனர். சுந்தரர், ''பெருமானே... நீர் எங்கே இருக்கிறீர்? கடுஞ்சொல் பேசும் வேடர்கள் வசிக்கும் இவ்வூரில் உமாதேவியருடன் நீர் ஏன் இருக்கிறீர்? இவ்வூரில் எல்லைக் காவல் ஒன்றும் இல்லையா? தேவரீர் விரும்பும் இடத்துக்கு இடபத்தின் மீது ஏறிச் செல்ல உமக்கு வசதியுள்ளதே..! எதன் பொருட்டு இவ்வூரில் உறைகிறீர்?’ என்று மனம் கசிந்து பாடினார். சுந்தரரின் செந்தமிழில் மகிழ்ந்த இறைவன், தாம் கவர்ந்து வந்த பொருட்களை, சுந்தரர் மனம் மகிழும்படி காட்டியருளினார். இப்படி, வேடுபறி நிகழ்ந்த தலம் திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை சாலையில், அவிநாசிக்கு அருகிலுள்ள இந்தத் தலத்தில், முருகன் வழிபட்டுள்ளார். எனவே, இறைவனுக்கு ஸ்ரீமுருகநாதேஸ்வரர் என்று திருநாமம்; அம்பிகை- ஸ்ரீமுயங்குபூண் முலையம்மை.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

மனநோய் உள்ளவர்கள், இந்தக் கோயிலில் தங்கி யிருந்து, தினமும் திருக்குளத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு நோய் நீங்கப்பெறுகிறார்கள். இந்தத் தலத்து ஆறுமுகனை திருப்புகழில் போற்றியுள்ளார் அருணகிரியார். மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இந்தக் கோயில் உள்ளது. இங்கே, மாசியில் சுந்தரர் வேடுபறி உற்சவம் விசேஷம்! இந்தத் தலத்துக்கு மாதவி வனம் என்றும் பெயர் உண்டு.

செல்வத்தைப் பறிகொடுத்தபோது வாடிய முகத்துடனும், அதை மீண்டும் பெற்ற பின்பு மகிழ்ச்சியான முகத்துடனும் கூடிய சுந்தரரின் வடிவங்களையும், வேடனாக வந்த சிவபிரானின் திருவடிவையும் இங்கே தரிசிக்கலாம். இங்கு ஈசான மூலையில் உள்ள குழியில்தான், சுந்தரரிடம் பறித்து வந்த பொருட்களை ஈசன் வைத்திருந்தாராம். இந்தக் கோயிலுக்கு தானம் வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்றில், 'பொருள் பறிச்சுக்கொண்ட பாதைக்கு மேற்கு’ எனும் குறிப்பு உள்ளது; வேடுபறி சம்பவத்துக்கு இதுவே ஆதாரமாக உள்ளது.

சுந்தரரைக் கூப்பிட்டு வழி காட்டிய ஸ்ரீகூப்பிடு பிள்ளையார், தனிக் கோயிலில் ஊர் எல்லையில் காட்சியளிக்கிறார். கோயில் நன்கு திருப்பணி செய்யப் பட்டுள்ளது. கோயிலின் மேற்புறம், தும்பிக்கையைத்தூக்கிக் காட்டும் அமைப்பில் உள்ள விநாயகரின் திருவுருவம், தரிசித்து இன்புறத்தக்கது!

'மின்திகழ் சடையார் இவ்வாறு
அருள்செய வியப்பின் வைகு
மன்றலங்கரிய கூத்தன்
மலைக் கொடி உயர்ந்த செல்வக்
குன்றின் மாமுகத்தினார்க்கு
கூப்பிடு பிள்ளையார் என்று
அன்று தொட்டு இன்றும் அந்த
அருட் பெயர் விளங்கிற்றன்றே’

எனச் சிறப்பிக்கிறது திருமுருகன்பூண்டி தலபுராணம். அதாவது, ஒளி பொருந்திய சடைமுடிக் கடவுளான சிவபெருமான் இவ்வாறு திருவருள் செய்ததால், அதிசய மணம் பொருந்திய அழகிய கறுத்த கூந்தலையுடைய பார்வதிதேவி பெற்ற, மலை போன்ற யானையின் முகத்தை உடைய கடவுளுக்கு, அன்று முதல் இன்றளவும் 'கூப்பிடு பிள்ளையார்’ என்று பெயர் விளங்கி வருகிறதாம்!

- பிள்ளையார் வருவார்...
  படங்கள்: செ.பாலநாக அபிஷேக்