Published:Updated:

தன்னை வணங்குபவர் யாராக இருந்தாலும் கருணை பொழியும் சாய் பாபா! - ஒரு நிகழ்வு #SaiBaba

தன்னை வணங்குபவர் யாராக இருந்தாலும் கருணை பொழியும் சாய் பாபா! - ஒரு நிகழ்வு #SaiBaba
தன்னை வணங்குபவர் யாராக இருந்தாலும் கருணை பொழியும் சாய் பாபா! - ஒரு நிகழ்வு #SaiBaba

நோயினால் அவதிப்படும் குழந்தைக்கு அதன் தாய் கசப்பான மருந்தைப் புகட்டுகிறாள். மருந்து கசக்குமே, குழந்தைக்குப் பிடிக்காதே என்றெல்லாம் தாய் நினைப்பதில்லை. குழந்தைக்கு நோய் குணமாக வேண்டுமே என்பதற்காகக் கட்டாயப்படுத்தி கசப்பு மருந்தை குழந்தைக்குப் புகட்டுகிறாள். நாம் குழந்தைகளாக இருக்கிறோம். நம்முடைய தாயாக நம் மனதில் நிறைந்திருக்கும் சாய் பாபா இருக்கிறார். நாம் விரும்பவில்லையென்றாலும்கூட, அவர் நம்மை ஆட்கொள்ளத் திருவுள்ளம் கொண்டுவிட்டால் போதும், அவராகவே நம் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துகொள்வார்.

இங்கே ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

தன் பாடல்களாலும், கீர்த்தனைகளாலும் பாபாவின் புகழை எல்லா திசைகளிலும் பரப்பியவர் தாஸ்கணு. கண்பத்ராவ் தத்தாத்ரேய ஸகஸ்ரபுத்தே என்ற இயற்பெயர் கொண்ட இவர், ராமரின் தீவிர பக்தர். காவல்துறையில் உயர் பதவி வகிக்க வேண்டும் என்பதே இவரின் லட்சியமாக இருந்தது. சாந்தோர்க்கர் என்பவர் மாவட்ட துணை அதிகாரி பதவியில் இருப்பவர். இவர் சாயிநாதரின் மீது அளவற்ற பக்திகொண்டிருந்தவர். இவருக்குப் பாதுகாப்பாளராக கண்பத்ராவ் பொறுப்பில் இருந்தார். இவர் சாயிநாதரை தரிசிக்க ஷீரடிக்கு வரும்போதெல்லாம் பாதுகாப்பாளராக கண்பத்ராவும் உடன் வருவார். தன் அதிகாரியிடம் கொண்ட மரியாதையினால் இவரும் சாயிநாதரை வணங்குவார்.

ஒரு தாயானவள் தன்னை யாராவது அம்மா என்று அழைத்தால் போதும், அழைத்தவர் யாராக இருந்தாலும், தன் பிள்ளைக்கு நிகரான அன்பினைக் காட்டுவாள். அதுபோல் சாயிநாதரும் தன்னை வணங்குபவர் எப்படியிருந்தாலும், அவர்கள் மீது கருணையையே பொழிவார்.

ஒரு நாள் கண்பத்ராவ் பாபாவை வணங்கும்போது, பாபா அவரிடம் 'நீ இந்த உத்தியோகத்தை விட்டுவிட வேண்டும்' என்று கூறினார். பாபாவின் வார்த்தைக்கு மறுப்புக் கூற விரும்பாத கண்பத்ராவும் அவரிடம் சரியென்று மேம்போக்காகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். காவல்துறைப் பணியை அதிகமாக நேசித்தவர் கண்பத்ராவ். அவரால் அந்த வேலையை விடமுடியும் என்பது நடக்காத காரியம். அதை பாபாவும் நன்கு அறிவார்.

காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளின் உத்தரவுக்குப் பிறகே வெளியூர்களுக்குச் செல்ல முடியும். அப்படி உத்தரவில்லாமல் செல்வது சட்டப்படிக் குற்றமாகக் கருதப்படும். ஒருமுறை தாஸ்கணு எந்த ஓர் அனுமதியும் பெறாமல் நிஜாம் பகுதிக்குச் சென்றார். அவர் மீது பொறாமை கொண்ட சக காவலர்கள் அதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் கூறினர்.

தாஸ்கணு கோதாவரி நதிக்கரையில் இருந்தபோது, சக காவலர்கள் தம்மைப் பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியிருப்பது தெரிய வந்தது. நாம் சாதாரணமாக இருக்கும்போது நமக்கு பாபாவின் நினைவு வருவதில்லை. பிரச்னை வரும்போதுதான் பாபாவின் நினைவு நமக்கு வரும். தாஸ்கணுவுக்கும் பிரச்னை வந்தபோதுதான் பாபாவின் நினைவு வந்தது.

அவர் கோதாவரி ஆற்றில் இறங்கி, தன் கையில் கோதாவரி தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு பின்வருமாறு வேண்டினார். தாம் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட்டால், பாபாவின் சொல்படி தாம் இந்த உத்தியோகத்தை விட்டுவிடுவதாக பாபாவிடம் பிரார்த்தனை செய்துகொண்டார். அந்தப் பிரார்த்தனையின் பலன் உடனேயே அவருக்குக் கிடைத்தது. கோதாவரி நதிக்கு அருகிலிருந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர் அங்கே வந்து தாஸ்கணுவைப் பார்த்து, சில கொள்ளைக்காரர்கள் தாம் கொள்ளையடித்த பொருள்களுடன் புதர் மறைவில் இருப்பதாகவும், தாஸ்கணு அங்கே வந்தால் அவர்களைப் பிடித்துவிடலாம் என்றும் கூறினார்.

இதைக் கேட்ட தாஸ்கணு இன்னும் சிலரை அழைத்துக்கொண்டு கொள்ளையர்களைப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்து, மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெற்றார். இது தனது பதவி உயர்வுக்காக நிகழ்ந்தது என்று தவறாக எண்ணியவர், தாம் இக்கட்டில் இருந்தபோது பாபாவிடம் தாம் செய்துகொண்ட சங்கல்பத்தை மறந்துவிட்டார்.

ஆனால் அனைத்தையும் அறிந்தவர் அல்லவா பாபா?!

அவருக்கு இரண்டாவது முறையாகவும் ஒரு வாய்ப்பினை அளித்தார். கானோபீல் என்பவன் கொள்ளைக்கூட்டத்தின் தலைவனாக இருந்தவன். இவன் மக்களுக்குப் பெரிதும் தொல்லைக் கொடுத்து வந்தான். எனவே இவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்தனர்.

இவனை எப்படியாவது பிடித்துத் தந்தால், தனக்குப் பதவி உயர்வு கிடைக்கும் என்று எண்ணிய தாஸ்கணு அவனைப் பிடிக்க துப்பறியும் பணியில் ஈடுபட்டார். ராம பக்தர்போல் வேடமணிந்து, ராமர் கோயில் ஒன்றில் இருந்தபடி கானோபீலை ரகசியமாகக் கண்காணித்து வந்தார். அவ்வப்போது அவனைப் பற்றிய தகவல்களை ரகசியமாக காவல்துறைக்குத் தெரியபடுத்தி வந்தார். ஆனால், இதை கானோபீல் எவ்வாறோ அறிந்துகொண்டான். ராமர் கோயிலில் தங்கியிருந்த அவரைக் கொல்வதற்காக அங்கு வந்தான். உயிருக்கு பயந்த தாஸ்கணு, பாபாவை மனதில் வணங்கினார். தம் உயிரைக் காப்பாற்றினால் தாம் இந்த வேலையை விடுவது உறுதி என்று வேண்டிக்கொண்டு ராமரின் பாதத்தில் விழுந்து வணங்கினார். ராமபக்தரான கானோபீல் அவர் ராமரின் பாதத்தில் வீழ்ந்ததால், அவரைக் கொல்லும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு சென்றுவிட்டான்.

ஆனால், இந்த முறையும் தாஸ்கணு தனது பணியினை விடுவதற்கு விரும்பவில்லை. நாம் என்னதான் நினைத்தாலும், கடவுள் நினைப்பதே நடக்கும் என்பதை நிரூபிப்பதுபோல், அவர் பணியினைத் துறப்பதற்குக் கடைசி வாய்ப்பினை அளித்தார் பாபா. ஒரு முறை காவல் துறையின் பொறுப்புகள் அனைத்தையும் தாஸ்கணுவிடம் ஒப்படைத்துவிட்டு இன்ஸ்பெக்டர் வெளியூருக்குச் சென்றார். அப்போது ஒரு வாரன்ட்டின் காரணமாக 32 ரூபாய் பணத்தினை காவல் நிலையத்தில் கட்டுமாறு கிராம முன்சீப்புக்கு உத்தரவிட்டனர்.

கிராம முன்சீப்பும் தன் பணியாளனை அழைத்து ரூபாய் 32-ஐ அவனிடம் கொடுத்து, அதை காவல்துறையினரிடம் கொடுத்து ரசீது பெற்று வருமாறு அனுப்பினார். அவனும் பணத்தை எடுத்துக்கொண்டு வந்தான். அங்கிருந்த போலீஸ்காரர் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீதினைப் பின்னர் அனுப்பிவைப்பதாகக் கூறி அவனை அனுப்பிவிட்டார். தாஸ்கணுவின் மேல் கொண்ட வெறுப்பினாலும், பணத்தாசையினாலும் அந்தப் பணத்தினை தாமே எடுத்துக்கொண்டார் அந்த கான்ஸ்டபிள். பணம் கைக்கு வராத காரணத்தால் மீண்டும் கிராம முன்சீப்புக்கு வாரன்ட்டை அனுப்பினர் அதிகாரிகள். ஆனால், முன்சீப் பணத்தைச் செலுத்திவிட்டதாக பதிலளித்தார். எனவே, அவர்கள் அப்போது பதவிப் பொறுப்பில் இருந்த தாஸ்கணுவைப் பிடித்தனர்.

இந்த முறை தாஸ்கணு தனது தவற்றை உணர்ந்துகொண்டார். பாபாவிடம் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினாலேயே தனக்கு இந்த நிலை ஏற்பட்டது என்பதை அறிந்தவர், 'பாபா இந்தப் பிரச்னையிலிருந்து என்னை விடுவித்தீரானால் நான் இந்த வேலையை விடுவது உறுதி' என்று தன்னுள்ளேயே பிரமாணம் செய்துகொண்டார்.

அனைத்தும் அறிந்த பாபா அவரைப் பிரச்னையிலிருந்து விடுவித்துக் காப்பாற்றி அருளினார். தாஸ்கணுவும் தனது வாக்கினைக் காப்பதற்காக தன் உத்தியோகத்தை ராஜினாமா செய்துவிட்டு பாபாவிடம் வந்தார். பாபாவின் பாதங்களில் வீழ்ந்த அவர், "தங்களின் கட்டளைப்படி நான் என் பணியை விட்டுவிட்டேன். ஆனால், நான் இனி எவ்வாறு என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்?" என்று வினவினார்.

பாபா அவர் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து, ''என்னை நம்பியவர்களை நான் எப்படிக் காப்பாற்றாமல் போவேன்?'' என்று கூறியவர் தொடர்ந்து, ''இனி நீ கடவுளின் கீர்த்தனைகளைப் பாடி பக்தர்களின் மனதில் பக்தியைத் தோற்றுவிக்க வேண்டும்'' என்று பணித்தார்.

தாஸ்கணுவும் அவ்வாறே கீர்த்தனைகள் பாடுவதைத் தன் தொழிலாகக் கொண்டார். அவருக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவற்றிற்கும் மேலாக சிறிது நிலங்களையும் பாபா அளித்தார் என்பதைச் சொல்லவேண்டிய அவசியமில்லை! பாபா தன் பக்தர்களுக்கான தேவைகளை அவர்கள் கேட்கும் முன்னே அளித்துவிடுவார். அதுபோலவே அவர்களுக்கு வேண்டாததை அவர்கள் விரும்பினாலும் அளிக்க மறுத்துவிடுவார்.