ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##
'மா
தா, பிதா, குரு, தெய்வம்!’ என்பது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! மாதா, அடுத்து பிதா, அவரையடுத்து குருநாதர்... இவர்கள் அனைவருக்கும் பிறகே தெய்வம் என்று சொல்லி வைத்தார்களா? அல்லது... மாதா, பிதா, குரு ஆகிய மூவரும் தெய்வத்துக்குச் சமமானவர்கள் எனப் போதித்தார்களா?

பிறப்பில் இருந்து துவங்குகிறது வாழ்க்கை. இந்த உலகுக்கு வருகின்ற உயிரானது, அன்பையும் கருணையையும், வாஞ்சையையும் உணவையும் தாயிடம் இருந்துதான் முதன்முதலாகப் பெறுகிறது. அதையடுத்து, வளரத் துவங்குகிற தருணத்தில், அந்தக் குழந்தையை தந்தை தன் தோளில் சுமக்கிறான்; கன்னம் கிள்ளுகிறான். மிகப் பெரிய மலையுச்சியின் மீது நின்று, இந்த உலகைக் காட்டி மகிழ்கிறான்.

குழந்தை நடக்கவும் ஓடவும் செய்ததும், கூர்ந்து பார்க்கவும் பேசவும் ஆரம்பித்ததும், அந்தக் குழந்தையைக் கல்வி கற்க அனுப்பினர், பெற்றோர். குருவுக்கு மரியாதை செய்து, கல்வியையும் வேதத்தையும் தன் குழந்தைக்குக் கற்பித்தனர். கல்விக் கண் திறப்பதற்குக் காரணமாக இருந்த ஆசானை, ஆசிரியரை, குருநாதர் எனப் போற்றினர், மாணவர்கள். அந்த குருநாதர்தான், தெய்வங்களை எப்படி வழிபடவேண்டும், என்ன மந்திரங்கள் சொல்லி வணங்க வேண்டும், எந்தக் கடவுளுக்கு என்ன மலர்களை அலங்கரிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லித் தருகிறார். ஆக, மாதாவின் அன்பில் பிறந்து, பிதாவின் அரவணைப்பில் வளர்ந்து, குருநாதரின் போதனைகளில் தெளிந்து, இறைவனின் திருப் பாதங்களைச் சரணடைகிற அற்புதமான வாழ்க்கையை நமக்கு உணர்த்துகின்றன ஞான நூல்கள்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பிடவூர் எனப்படுகிற திருப்பட்டூரில்... ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில், மாதாவாக ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி கனிவு ததும்ப, கருணை பொங்கக் காட்சி தருகிறாள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இவளுக்குப் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும்; தாம்பத்திய வாழ்க்கை வளம் பெறும்! அந்த பிரம்மனின் சாபத்தைப் போக்குவதற்கும், அவனுடைய இழந்த பதவி திரும்பக் கிடைப்பதற்கும் காரணமாக இருந்தவள் ஆயிற்றே! நம் வாழ்வில் உண்டான சாபங்களையும் பாபங்களையும் போக்குவாள்; இழந்த பதவியையும் பெருமைகளையும் மீட்டுத் தருவாள் அம்பிகை.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

ஆடி மாதத்தின்போது, திருப்பட்டூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள  விவசாயிகள், முளைப்பயறு கட்டுகிற வைபவத்தைச் செய்கின்றனர். அந்த முளைப்பயறை எடுத்து வந்து, அம்பாளின் சந்நிதியில் வைத்து வணங்கி, ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். பிறகு அவற்றை விதைத்து, விவசாயப் பணிகளைத் துவக்கினால், நம் நிலத்தில் அந்த உமையவளே இருந்து, விவசாயத்தைத் தழைக்கச் செய்வாள் என்பது ஐதீகம்!

கிழக்குப் பார்த்த ஆலயம்; ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கிழக்குப் பார்த்தபடி சந்நிதி கொண்டிருக்கிறார். அவருக்கு இடப்பக்கத்தில் தனிக்கோயில் கொண்டு, கிழக்குப் பார்த்தபடி அருள்புரிகிறாள் ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி. போதாக்குறைக்கு, ஸ்ரீபிரம்ம புரீஸ்வரரின் வலப்பக்கப் பிராகாரத்தில், மிக அற்புதமாக, பிரமாண்டத் திருமேனியுடன், கிழக்குப் பார்த்தபடி சந்நிதி கொண்டிருக்கிறார் ஸ்ரீபிரம்மா. ஆக, மாதாவும், மாதாவை அடுத்து பிதாவும், அவர்களின் குருவாகிய ஸ்ரீபிரம்மனும் வரிசையாகக் காட்சி தரும் ஒப்பற்ற திருத்தலம் திருப்பட்டூர்.

ஏழு நிலை ராஜகோபுரம் ஓங்கி உயர்ந்து நிற்க, பிரமாண்டமாக இருக்கிறது திருக்கோயில். உள்ளே நுழைந்ததும் நந்திதேவர். சிவநந்தியின் அழகைச் சொல்ல வேண்டுமா என்ன?! பிரதோஷ நாயகனின் பெருமைகளை சிலாகிப்பதற்கும் போற்றுவதற்கும் இந்த ஜென்மம் போதாதே!

இங்கே... நந்தி அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு சிறப்பு உண்டு. பிரதோஷ காலத்தில், சிவாலயங்களில் பூஜைகள் அமர்க்களப்படும். அதேபோல், ஸ்ரீநரசிம்ம மூர்த்தி கோலோச்சுகிற ஆலயங்களிலும் பிரதோஷ நாளில், விமரிசையாக பூஜைகள் நடந்தேறும். இங்கே பிரதோஷ நாயகனாம் நந்தி அமர்ந்திருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள தூண்களில், ஸ்ரீநரசிம்ம மூர்த்தத்தின் அவதாரக் காட்சிகளும் திருக்கோலங்களும் சிற்ப நுட்பத்துடன் திகழ்கின்றன. அதாவது, பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள இங்கு வரும் அன்பர்கள், ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும் தரிசிக்கலாம்; ஸ்ரீநரசிம்ம மூர்த்தியையும் பிரார்த்திக்கலாம்.

முன்னதாக, ஏழு நிலை ராஜகோபுரத்தைக் கண்ணாரத் தரிசியுங்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். குறிப்பாக, இந்தத் தலத்து ஆலயத்துக்கு ஏழு அடுக்கு கோபுரம் வைக்கப்பட்டிருப்பது, வேறொரு விஷயத்தை உணர்த்துவதற்காகத்தான்! 'விதி இருப்பின் விதி கூட்டி அருளுக!’ என்று சிவனார் பணிக்க, அன்று முதல் இந்தத் தலத்துக்கு வருகிற அடியவர்களின் தலையெழுத்தை மாற்றி அருள்கிறார் ஸ்ரீபிரம்மா என்று பார்த்தோம், அல்லவா! இதற்காக, வேறு எந்தத் தலத்திலும் இல்லாதபடி, இங்கே ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் சந்நிதிக்கு அடுத்தாற்போல், கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபிரம்மதேவன்.

ஏழு நிலை ராஜகோபுரம் உணர்த்துகிற விஷயம் என்ன தெரியுமா?

திருப்பட்டூர் அற்புதங்கள்!

நாம் செய்கிற பாவமும் புண்ணியமும் ஏழேழு ஜென்மத்துக்கும் நம்மைத் தொடரும் என்கின்றன சாஸ்திரங்கள். ஒவ்வொரு பிறவியில் நாம் படுகிற துன்பங்கள் நம்முடைய முந்தைய பாவங்களில் இருந்தும், நாம் அனுபவிக்கிற சந்தோஷங்கள் நாம் எப்போதோ, எந்த ஜென்மத்திலேயோ செய்த புண்ணியங்களிலிருந்தும் விளைகின்றன என்பார்கள்.

ஆக, இப்பிறவியில் நமக்கு உண்டாகிற கவலைகளுக்கும் அவமானங்களுக்கும், எங்கோ, எப்போதோ, எந்தப் பிறவியி லேயோ செய்த பாவ காரியங்களே காரணம். காரணமின்றிக் காரியமில்லை என்பார்கள். இப்படி, எந்த ஜென்மத்து வாசனையோ... அது நமக்கு இந்த ஜென்மத்திலும் தொடர்வதை, அறிந்து உணர்ந்தால் பிரச்னையில்லை.

'விதி இருப்பின் விதி கூட்டி அருளுக!’ என்று சிவனார் பணித்ததற்கு இணங்கி, இங்கு சந்நிதி கொண்டிருக்கிற ஸ்ரீபிரம்மா, நம் ஏழேழு பிறவியின் பாவங்களைப் போக்கி, இந்த ஜென்மத்தை களங்கமும் கவலைகளும் இன்றி வாழ வைக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்.

ஆம், அன்பர்களே..! நம் ஏழேழு ஜென்மத்துப் பாவங்களை நீக்கியருளும் திருத்தலம் திருப்பட்டூர் என்பதைக் குறிக்கும் வகையில், இந்தக் கோயிலில் ஏழு நிலை ராஜகோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதாகத்தான் உள்ளுணர்வு சொல்கிறது. கோடி புண்ணியங்களை அள்ளித் தருகிற கோபுரத்தைத் தரிசித்து மனதாரப் பிரார்த்தியுங்கள்; மனதுள் மங்கலம் நிறையும்!

- பரவசம் தொடரும்
படங்கள்: ப்ரீத்தி கார்த்திக்