ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

விளாச்சேரியைச் சேர்ந்த ரங்கன் என்பவர் பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் பள்ளித்தோழர். போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ரங்கனின் தந்தையும் வக்கீலாக இருந்த பகவானின் தந்தை சுந்தரமும் நண்பர்களாக இருந்ததால், அவர்களின் குடும்பமும் நெருங்கிப் பழகிவந்தது. ரங்கனும் பகவானும் திருச்சுழியில் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்து வந்தார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பணிமாற்றம் வர, அவர்கள் பிரிய நேர்ந்தது. பிறகு பகவானும் அவர் மூத்த சகோதரரும் மதுரைக்குப் போய் பள்ளியில் சேர, ரங்கனும் படிப்பதற்கு மதுரை வந்தார். வெவ்வேறு பள்ளியில் படித்தாலும், இருவரும் ஒருவருக்காக மற்றவர் காத்திருந்து வைகைக் கரையில் விளையாடிவிட்டுப் போவார்கள்.

##~##
பகவான் ஸ்ரீரமணர் மதுரையை விட்டு நீங்கி, திருவண்ணாமலை வந்ததும் தொடர்பு விட்டுப்போயிற்று. பகவான், பிராமண சுவாமி என்று அழைக்கப்படுவது தெரிந்து, ரங்கன் அவரை பார்க்கப் போனார். விருபாட்சி குகையில் அவரைத் தரிசித்தார். எதுவும் பேசவில்லை. பிறகு மீண்டும் தன் குடும்பத்துடன் போய், ''என்னை அடையாளம் தெரிகிறதா?'' என்றுகேட்க 'ரங்கன்’ என்று மெல்லிய, ஆழ்ந்த குரலில் பகவான் பதில் சொன்னார்.

'நீங்கள் மிகப் பெரிய நிலையை அடைந்துவிட்டீர்கள்’ என்று அன்பும் வியப்புமாய் ரங்கன் சொல்ல, பகவான்... 'இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்றார்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி, தன் உன்னத நிலையைப் பாராட்டிக் கொள்ளாதது மட்டுமல்ல, மற்றவர் பாராட்டினாலும் மெள்ள அதை ஒதுக்கினார். 'இது எனக்கு மட்டும் உரித்தானதல்ல, உனக்கும் கைகூடும்’ என்கிற அர்த்தத்தில் பதில் இருந்தது.

இன்னொரு முறை சந்திக்கும்போது, பகவான் அடைந்ததிலெல்லாம் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று ரங்கன் சொல்ல, பகவானின் தாய், 'ரங்கன் சொல்வதைக் கேட்டாயா?’ என்றார். 'ஆமாம்! அவனும் நம்மில் ஒருவனல்லவா! அவனுக்கும் பங்கு உண்டு’ என்றார்.

'இந்த ஞானம் என் சொத்து’ என்று இடுக்கிக் கொள்ளும் தன்மையே இல்லை. ஆமாம் என்று சொல்லிவிட்டால் சம்பந்தப்பட்டவருக்கு சந்தோஷம். அத்தோடு அந்தப் பேச்சும் முடிவுக்கு வந்துவிடும். மேற்கொண்டு தொடர முடியாது.

பகவான் சமதிருஷ்டி உள்ளவர். சகலரையும் ஒரேவிதமாக பாவிப்பவர். ஆனாலும் ரங்கன் மீது அவருக்கு நல்ல வாஞ்சை இருந்தது. ரங்கன் வேலை தேடி சென்னைக்குப் போனார். போகும் முன் பகவானைத் தரிசித்தார்.

'ஆண்கள் எங்கேயும் போய், எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அப்படியில்லையே! குடும்பத்துக்கு என்ன செய்திருக்கிறாய்?’ என்று ரங்கனைக் கேட்டார். 'வேண்டியதைச் செய்திருக்கிறேன்’ என்று ரங்கன் பதில் சொல்லிவிட்டு, சென்னைக்குப் போனார்.

ரங்கனின் தாய் தரிசனத்துக்கு வந்தபோது, ரங்கனின் குடும்பம் பற்றி பகவான் விசாரித்தார். 'போகும்போது கொஞ்சம் காசு கொடுத்து விட்டுப்போனான். அது செலவாகி விட்டது. இப்போது திண்டாட்டம்தான்’ என்று ரங்கனின் அம்மா பதில் சொன்னார். மறுபடி ரங்கன் தரிசிக்க வந்தபோது, 'என்னப்பா... குடும்பத்துக்கு தேவையானது செய்தேன் என்றாய். உன் அம்மா, உன் குடும்பம் திண்டாடுகிறது என்கிறாளே?’ என்று கேட் டார். ரங்கன் பதில் சொல்ல வில்லை.

அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த ரங்கனுக்கு அருகே பகவான் வந்து உட்கார்ந்தார். 'என்ன ரங்கா, மிகவும் கவலையாக இருக் கிறதா? உன் கஷ்டம் போக ஒரு பத்தாயிரம் ரூபாய் போதுமா?’ என்று வாஞ்சையோடு கேட்டார். ரங்கன் பதில் சொல்லவில்லை.

சாதாரண மனிதருக்கு ஒரு குடும்பம். ஆனால் துறவிக்கோ பலநூறு குடும்பங்கள். எல்லோர் கவலைகளும் அவர் கவலைகள் ரங்கனுக்கு மதுரையில் உள்ள ஒரு மோட்டார் கம்பெனியில் மேனேஜர் வேலை கிடைத்தது. பிறகு அதே கம்பெனியில்பேருந்து விற்கும் ஏஜென்டாக மாறினார். சம்பளம் மட்டுமில்லாது ஒவ்வொரு பேருந்து விற்பனைக்கும் நல்ல கமிஷன் கிடைத்தது. எல்லாம் சேர்த்து பத்தாயிரம் ரூபாய் மிச்சம் பிடிக்க முடிந்தது.

இதை வைத்து தன் இரண்டு பெண்களுக்கும் தன் அண்ணன் மகளுக்கும் ரங்கன் ஐந்து நாட்கள் விமரிசையாய் திருமணம் நடத்தினார்.

நடுவே மறுபடி வேலையில்லாதபோது, ரங்கனிடம் 'மேனேஜர் வேலை கிடைத்தால் செய்வாயா?’ என்று  பகவான் கேட்டார்.

ஸ்ரீரமண மகரிஷி

சில நாட்களிலேயே சென்னையில் ஸ்ரீராம விலாஸ் மோட்டார் கம்பெனியில் வேலை கிடைத்தது. பகவான் மறைமுகமாக ரங்கனிடம் அவருக்கு வருவதைச் சொன்னபடிதானிருந் திருக்கிறார். பாவம், ரங்கனால் அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

சிறுவயதில், குளத்தில் நீச்சல் அடித்ததுபோல ரங்கனும் பகவானும் பாண்டவ தீர்த்தத்தில் குளித்து மகிழ்ந்தார்கள்.

அப்போது இஞ்சிக்கொல்லை தீட்சிதர், தரையில் படுத்து தூக்கத்தில் நகத்தால் மண்ணை கீறிக் கொண்டிருந்தார்.

'தக்கிளி கிடைத்துவிட்டதா?’ என்று பகவான் கேட்க, விழித்துக் கொண்டுவிட்டார். ஆவணி அவிட்டம் வருகிறது; அதனால் தக்கிளியில் நூல்

நூற்க வேண்டும் என்று தீட்சிதர் கனவு கண்டு கொண் டிருந்தாராம். பகவானுக்கு அவர் கனவில் நடப்பதும் தெரிந்திருக்கிறது.

'ஞானிகள் முக்காலும் உணர்ந்தவர்களா? -ரங்கன் கேட்டார்.

'முக்காலும் உணர்வதெல் லாம் ஞானிகளுக்குச் சாதாரண விஷயம். பிற உலகங்களில் நடப்பது கூட தெரியும். நமது உலகம் போலவே பிற உலகங் கள் இருப்பதும் உண்மை.

சாதாரண மனிதனுக்கு எல்லா அறிவையும் கொடுத்துவிட்டு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாதபடி கடவுள் வைத்திருக்கிறார்’ என்றார்.

மூன்று காலங்களும் உணரும் ஞானிகள் சாதாரணர்கள் அல்ல என்று சூசகமாக இங்கே சொல்லப்பட்டது.

வேறொரு முறை, 'சந்நியாசம் வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்’ என்று ரங்கன் சொன்னபோது, பக்த விஜயம் என்கிற புத்தகத்தைக் கொண்டு வந்து, அதில் விட்டோபா என்கிற பக்தரின் வாழ்வைப் படிக்கச் சொன்னார் பகவான்.

விட்டோபா, குடும்பம் விட்டு போனபோது அவர் மகன் ஞானதேவ் கூடவே போய், 'ஒருவன் மனம் காட்டுக்கு போனாலும் வீட்டுக்குப் போனாலும் கூடவே போகிறது’ என்று அறிவுறுத்தினான். ஞானத்தை வீட்டிலிருந்தே அடையலாம் என்றான். விட்டோபா வீடு திரும்பினார்.

'நீங்கள் ஏன் சந்நியாசி ஆனீர்கள்?’ -ரங்கன் பகவானைக் கேட்டார். 'அது என் பிராப்தம். குடும்ப பாரம் சுமப்பது கடினம்தான். ஆனால் ஞானம் பெற இதுவே எளிதான வழி’ என்று பகவான் நிதானமாகப் பதில் சொன்னார்.

சந்நியாசம் சற்று பிசகினாலும், புரட்டி கீழே தள்ளிவிடும் என்று சொல்லாமல் சொல்லப் பட்டது.

ரங்கனிடம் பகவானின் தாயார், தான் கண்ட காட்சியை விவரித்தார்.

பகவானை அவர் தாய் பார்த்துக் கொண்டே இருந்தபோது, அவர் உடம்பு மறைந்து லிங்கம் தோன்றியது. அந்த லிங்கம் திருச்சுழி கோயிலில் உள்ள லிங்கம் போல் இருந்தது. பகவான் மறையப் போகிறாரோ என்று தாய் கவலைப்பட, லிங்கம் மறைந்து பகவானின் உடம்பு தோன்றியது.

இன்னொரு முறை, பகவான் உடம்பெல்லாம் சில பாம்புகள் படர்ந்திருந்தன. சற்று நேரம் தழுவியபடி இருந்துவிட்டு இறங்கி மறைந்தன.

'என்னை உன் பிள்ளையாகக் கருதாதே’ என்கிற உணர்வை தாய்க்கு ஏற்படுத்த, இந்தச் சம்பவங்கள் உதவியிருக்கும். அன்னையின் வாயால், இது கேட்ட அனைவருக்கும் பகவானின் பெருமை புரிந்திருக்கும்.

ஒருநாள், மலையில் உலவிக்கொண்டிருந்த போது, பகவானுக்குப் பசித்தது. அப்போது வயதான ஒரு கிழவி, கஞ்சி கொண்டு வந்து கொடுத்து அருந்தச் சொன்னாள். பிறகு அவளைக் காணோம். 'வந்தது அன்னை பார்வதியாக இருக்கலாம்’ என்று பகவான் சொன்னார்.

'ரங்கா, இந்த மலையை வெறும் கல்லால் ஆன மலை என்று நினைக்காதே. இந்த மலையின் குகைகளில், பல சித்த புருஷர்கள் வசிக்கிறார்கள். கீரியாய் பாம்பாய், மயிலாய், சிறுத்தையாய் என்னை வந்து பார்த்து விட்டுப் போவார்கள்’ என்று பேசியிருக்கிறார். யோக சாஸ்திரத்தில் தேர்ந்த ஒருவர் யோகா எவ்வளவு முக்கியம் என்று பிரசங்கம் ஒன்று நிகழ்த்தினார். அவர் பேசும் வரை மௌனமாய் இருந்த பகவான், அவரிடம் 'நீங்கள் சொல்வதெல்லாம் மனம் ஒளியிலும் ஒலியிலும் லயப்படுவதற்கு உதவும். ஒளி - ஒலி மறைந்து போனால், மறுபடி மனதில் எண்ணங்கள் குவியல் குவியலாய்த் தோன்றத் துவங்கும். இது நிரந்தரத் தீர்வு அல்ல. மனோ நாசமே தீர்வு. மனம் நசிக்க, இடையறாத விசாரத்தால்தான் முடியும்’ என்று விளக்கினார்.

யோக சாஸ்திரியும் 'இது உண்மை’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

உலகில் மனிதனால் பல்வேறு வித்தைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மனம் என்பதை ஆராய, அதை அடக்க, அழிக்க பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் உபதேசமே தெளிவானது.

- தரிசிப்போம்...