ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

அக்டோபர் மாதம் 25-ம் தேதி காலை சுமார் 7 மணி முதல் அக்டோபர் 26 அதிகாலை சுமார் 3:45 வரை சதுர்த்தசி இருப்பதாக சில பஞ்சாங்கங்களில் உள்ளது. எனில், தீபாவளி 25-ம் தேதியா அல்லது 26-ம் தேதியா?

ஆர்.சுப்ரமணியன், சென்னை-24

அதிகாலையில் நீராடும் வேளையில் சதுர்த்தசி இருக்க வேண்டும். அதற்குப் பெயர் நரகசதுர்த்தசி ஸ்நானம். அது, செவ்வாய்க்கிழமையன்று பின்னிரவில்தான் இருக்கிறது. ஆகையால், அக்டோபர் 26-ம் தேதி புதன்கிழமை காலை, தீபாவளி பண்டிகை என்பது பொருந்தும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சிவாலயங்களில் அர்த்தசோம பிரதட்சிணம் செய்வது ஏன்? அர்த்தசோம பிரதட்சிணம் என்றால் என்ன?

- ந.பரமேஸ்வரன், திருநெல்வேலி

##~##
வலம் வருதல் என்பது இறைவனுக்கான பணிவிடைகளில் ஒன்று. ஈசனை வலம் வருதல் மாறுபட்ட முறையில் கடைப்பிடிக்கப்படுவதுண்டு. அதை, அர்த்தசோம பிரதட்சிணம் என்பார்கள்.

ஈசனின் சிரசில் கங்கை வீற்றிருப்பாள். அபிஷேகத்தில் மகிழ்பவர் அவர் (அபிஷேகப்ரிய: சிவ:). அபிஷேக நீரானது, ஈசனின் சிரசில் இருக்கும் கங்கையில் பட்டு வெளிவரும். கருவறையைத் தாண்டி வெளி வரும் அந்த அபிஷேக நீரானது, பிரதட்சிண வழியின் குறுக்கே செல்லும். பிரதட்சிணம் செய்பவர்கள், கங்கையோடு இணைந்த அந்த அபிஷேக நீரைத் தாண்டிச் செல்லக்கூடாது. எனவே, அபிஷேக நீர் விழும் இடம் வரை வந்து, மீண்டும் வந்த வழியே திரும்பிச் சென்று அபிஷேக தீர்த்தத்தின் மறுபக்கத்தில் வலம் வருதலை முடித்துக் கொள்வார்கள். அதாவது, பிரதட்சிணத்தின் ஆரம்பமும் முடிவும் அபிஷேக நீரின் இருபக்கங்களில் நிகழும். அபிஷேக நீரைத் தாண்டாமல் இருப்பதற்காக பிரதட்ணம் பாதியில் திரும்புவதால், அது அர்த்தசோம பிரதட்சிணமாயிற்று.

சுப காரியங்களின்போது, நாழி நிறைய விதை நெல்   வைத்திருப்பார்கள். விதை நெல்லுக்குப் பதிலாக அரிசி நிரப்பி வைக்கலாமா? இதற்கான தாத்பரியம் என்ன?

- தமிழன்பன், நாகர்கோவில்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

விதை நெல்தான் வைக்க வேண்டும். அரிசியை வைக்கக் கூடாது. சுப காரியங்கள் வளர்ந்தோங்க வேண்டும் என்கிற

எண்ணத்தில் விதை நெல்லை வைக்கிறார்கள். நெல் விதைத்தாலும் அரிசிதான் முளைக்கும். உமி தானாகவே அகன்றுவிடும். அரிசிதானே முளைக்கிறது, உமி அல்லவே என்று நினைத்து, நெல் லுக்குப் பதிலாக அரிசியை விதைக்க முடியுமா? அது முளைக்காது! முளை விட்டு வெளிவர நெல் (உமி) வேண்டும்.

சுப காரியங்கள் முளை விட்டு படிப்படியாக வளர்ந்து செழிப்போடு விளங்குவதற்கு, விதைநெல்தான் வேண்டும். சுப காரியங்களுக்கு, பாலிகையில் விதையைப் பாவி வளர்ப்பது உண்டு. உற்ஸவ காலங்களில், ஆரம்ப வேளையில் பாலிகைகளில் விதைத்த விதைகள், நாள் தாண்டத் தாண்ட முளையிட்டு வளர்ந்து பயிர்க்கற்றைகளாகக் காட்சியளிக்கும். உற்ஸவ நிறைவு நாளில், அவற்றை மேளதாளத்தோடு நீரில் கரைப்பதுண்டு. உற்ஸவம் வளர்ந்தோங்கி செழிப்புற்று நடந்ததாக மனநிறைவு இருக்கும்.

மாற்றுப் பொருளை ஏற்கும்போது, அடிப்படைத் தகுதி இழக்கப் படாமல் இருக்கவேண்டும். பண்டமாற்று மாறி, தங்கத்தை ஏற்றார்கள். பிறகு தங்கம் மாறி நிக்கல் நாணயங்களாக உருமாறியது. தற்போது காகிதமாக (காசோலையாக) மாறியிருக்கிறது. இங்கு தகுதி இழக்கப்படவில்லை. ஆனால், நெல்லுக்கு மாற்றான அரிசி, குறிக்கோளை இழக்கச் செய்யும்.

விநாயகர் பூஜை முதலான வைபவங்கள் நடக்கும்போது மறுநாள் புனர்பூஜை செய் வதற்கு முன்னதாக... முதல் நாள் சமர்ப்பித்த நிர்மால்யத்தை எடுத்துவிட்டு, புதிதாக பூக்கள் சாத்தி வழிபடுவது தவறு; முந்தைய நாள் நிர்மால்யத்தை எடுக்காமல் எல்லாம் சேர்த்துதான் விசர்ஜனம் செய்ய வேண்டும் என்கிறார்கள். இதில், எது சரி?

- கே.வி.வெங்கடசுப்ரமணியன், சென்னை-88

பூஜைக்கு மறுநாள்... முதல் நாள் நிர்மால் யத்தை முற்றிலும் அகற்றிவிட்டு புனர்பூஜை செய்ய வேண்டும். ஓர் இரவைத் தாண்டிய பொருட்கள் நிர்மால்யமாக மாறுவதால், அவற்றை அகற்றிய பிறகே புனர்பூஜையில் இறங்க வேண்டும். இரவு உணவருந்திவிட்டு உறக்கத் தில் ஆழ்ந்த உடலில் இருந்து வெளிவரும் மலங் களை, மறுநாள் காலையில் களைந்த பிறகுதான் உணவு ஏற்போம். இரவு சேமித்த தண்ணீர் மறுநாள் பழையதாகிவிடும் ஆதலால், அதைக் களைந்து புது நீரைப் பயன்படுத்துவோம். முதல் நாள் சமைத்த உணவை மறுநாள் உணவோடு இணைத்துக் கொள்வதில்லை.

புனர்பூஜை அதாவது திரும்பவும் பூஜை என்று வரும்போது, பூஜையில் அர்ப்பணித்த மலர்களை அகற்றிவிடவேண்டும் என்பது புலனாகிறது. ஆகவே, நிர்மால்யத்தை அகற்றிவிட்டு, புனர்பூஜை செய்ய வேண்டும்.

அமாவாசை தினங்களில் காக்கைக்கு அன்னம் வைப்பது வழக்கம். அப்போது, காகங்கள் வந்து அன் னத்தை உண்ட பிறகே, நாம் சாப்பிட வேண்டுமா? கடந்த மஹாளய அமாவாசை அன்று வெகுநேரம் காக்கைகள் வராமல் போகவே, மனநெருடலுடன் சாப்பிட நேர்ந்தது. இதுகுறித்து தங்களின் அறிவுரையை வேண்டுகிறேன்.

- வி.சுப்ரமணியம், திருப்பூர்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

தினமும் காகத்துக்கு அன்னம் அளிக்கவேண்டும். அமாவாசை தினத்தன்று மட்டும் அளித்தால் போதாது. தினமும் அன்னம் அளித்தால் மட்டுமே, அமாவாசை அன்றும் தவறாமல் காகம் வரும்.

உரிய நடைமுறையைப் பின்பற்றாமல், அமாவாசையன்று தாங்கள் அளிக்கும் வேளையில் வரவில்லையே என்று வருத்தப்படுவது, தங்களின் தவறு. நாமெல்லாம் தினமும் உணவு உட்கொள்கிறோம். காகத்துக்கும் தினமும் உணவு வேண்டும். அமாவாசை ஒரு நாள் உணவருந்த வேண்டுமெனில், அதுவரை அது உயிரோடு இருக்க, மற்ற நாட்களில் உணவு வேண்டுமே? அதையும் நாம் அளித்தால்தான் காகம் வரும். தினமும் காகத்துக்கு உணவு அளித்துப் பழகுங்கள். அமாவாசை அன்று அது உணவுக்கு வந்து காத்துக்கொண்டிருக்கும்!

பசு மாடு தானம் செய்ய இயலாத நிலையில், வெள்ளியால் ஆன சிறிய பசு - கன்று பொம்மையை தானம் செய்கிறார்கள் சிலர். இதற்குப் பலன் உண்டா? கோ தானத்தின் மேன்மை மற்றும் நியதிகள் குறித்து சாஸ்திரம் சொல்லும் விளக்கங்கள் என்ன?

- லெக்ஷ்மி சந்தானம், ஸ்ரீரங்கம்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பசுமாடு தானம் செய்ய இயலாத நிலையில், அதற்குரிய விலையை (பணத்தை) அளிக்கலாம். அதுவும் முடியாத நிலையில், அதன் விலையில் சரிபாதியை அளிக்கலாம். அதற்கும் இயலாதவாறு ஏழ்மையில் இருந்தால், விலையில் நான்கில் ஒரு பங்கு அளிக்கலாம். அத்துடன் ஒரு தேங்காயும் சேர்த்து அளிக்கலாம். உயிரற்ற தங்கம், வெள்ளி பொம்மையை அளிக்கக் கூடாது.

ஒரு பசுமாட்டை தானம் அளித்தால், இந்த பூமியை தானம் அளித்த பலன் உண்டு. தானத்துக்குரிய பசுவும் கன்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பசு, பால் சுரக்கும் திறனுடனும், இளமையாகவும் இருக்கவேண்டும். அறத்தைச் செயல்படுத்துவதற்கான வேள்விக்கு, போதுமான நெய்யை  பசு அளிப்பதால், பசு தானம் உயர்ந்ததாக விளங்குகிறது.தவறான நடைமுறைகளைப் பின் பற்றியதால், கடமைகளைச் செய்யும் தகுதி இழந்தவன், இழந்த தகுதியைத் திரும்பப் பெறுவதற்கு, பசு தானம் பயன்படும். உயிர் பிரியும் வேளையில், சங்கடத்தை விலக்குவதற்கு கோ தானம் பயன்படும். உத்க்ராந்தி கோ தானம் என்று அதற்குப் பெயர். உடலை விட்டுப் பிரிந்த ஜீவாத்மா, எமலோகம் செல்லும் வழியில் வைதரணீ எனும் ரத்த ஆற்றைக் கடப்பதற்கு கோ தானம் பயன்படும். அதற்கு, வைதரணீ கோ தானம் என்று பெயர்.

பாவம் அகல - புண்ணியம் சேர்க்க செயல்படும் பூஜை - புனஸ்காரங்கள், வேள்விகள் ஆகியவற்றை முழுமையாக்க கோ தானம் பயன்படும். பிராச்யாங்க, உதீச்யாங்க கோ தானம்; ஆரம்பத்திலும் முடிவிலும் செய்யும் கோ தானம் (பூர்வாங்கம் - உத்தராங்கம) உண்டு. இரண்டு பசு மாடுகளை அளித்து, கன்யகையைப் பெற்று மணம் முடித்துக்கொள்ளும் திருமண முறையும் உண்டு. சாந்திராயணம், பிராஜாபத்யம், தப்தம், பராகம், பிபீலிகா கிருச்ரம் போன்றவற்றை நிறைவேற்ற இயலாத நிலையில் பசு தானம் அளித்து, அவற்றை நிறைவு செய்யலாம். இப்படி, தர்மசாஸ்திரம் பல கோணத்தில் பசு தானத்தின் பெருமையை விளக்கியுள்ளது. எல்லோரிடமும் அறம் செய்யும் விருப்பத்தை வளர்க்கும் நோக்கில், பசுமாடு தானம் விரிவடைந்துள்ளது. கிரய- விக்கிரய நோக்கில் அதை பயன்படுத்துவதை தர்ம சாஸ்திரம் ஏற்காது.

- பதில்கள் தொடரும்...