ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'திருக்குறளில் 'கடவுள்’ இருக்கிறாரா?'' என்று கல்லூரி வகுப்பறையில், மாணவர் ஒருவர் கேட்டதும் அதிர்ந்து போனேன். சட்டென்று சுதாரித்துக் கொண்ட மாணவர், ''அதாவது, திருக்குறளில் கடவுள் என்ற சொல்லைத் திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறாரா?'' என்று விளக்கமாகக் கேட்டார்.  

உடனே இன்னொரு மாணவர், ''கடவுள் வாழ்த்து என்று முதல் அதிகாரம் தொடங்குகிறதே... படிக்கலையா?'' என்று பதில் சொன்னார். மொத்த மாணவர்களும் கலகலப்பானார்கள். சிறிய சலசலப்புக்குப் பிறகு அந்த முதல் மாணவர், ''ஐயா, நீங்க பதில் சொல்லுங்க. 'கடவுள்’ என்ற சொல், திருக்குறளில் உண்டா?'' என்று தன் கேள்விக்குப் பதில் கிடைப்பதிலேயே குறியாக இருந்தார்.  

##~##
''இல்லை'' என்றேன் நிதானமாக. உடனே மாணவர்கள் பலரும் ''அப்படியெனில் கடவுள் வாழ்த்து?’ என்று கேட்க... ''நன்றாகக் கவனியுங்கள். இறைவன், தெய்வம், வாலறிவன், எண்குணத்தான் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர். 1,330 குறளில், ஓரிடத்தில் கூட, கடவுள் என்கிற சொல்லைச் சொல்லவே இல்லை வள்ளுவர். பிற்காலத்தில், திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதிய உரையாசிரியர்கள்தான் கடவுள் வாழ்த்து என்பதாகச் சேர்த்திருக்க வேண்டும். திருவள்ளுவர், திருக்குறளை எழுதினாரே தவிர, அதற்கு விளக்கமோ தனித்தனி அதிகாரமோ பிரிக்கவில்லை'' என்று விளக்கம் அளித்தேன்.

உடனே ஒரு குறும்பு மாணவர், 'அப்படின்னா, கடவுள் இல்லைன்னு திருவள்ளுவர் ஒத்துக்கறாரு. அப்படித்தானே ஐயா!'' என்று சொல்ல... அனைவரும் கைத்தட்டினார்கள்.

''எதையும் அரைகுறையாப் புரிஞ்சுக்கக் கூடாது. கண்ணப்ப நாயனாரைத் தெரியுமா?'' என்று கேட்டேன். வகுப்பே அமைதியானது. ''எங்கே... நீ சொல்லு?'' என்று ஒரு மாணவனைக் கேட்க, ''ஐயா, நேத்திக்கி நான் லீவு'' என்றான். இதைக் கேட்டுச் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் சமாளித்தபடி, ''நானே சொல்லிடுறேன். அறுபத்து மூன்று நாயன்மார்கள்ல இவரும் ஒருத்தர். 'மலைவேடா...’ என்று தொடர்ந்து சொல்ல எத்தனிக்க... முதலில் கேள்வி கேட்ட மாணவர் அவசரம் அவசரமாக எழுந்து, ''ஐயா ஐயா... நீங்க சொல்ற கண்ணப்ப நாயனாரை எனக்குத் தெரியும். பெரியபுராணத்துல வர்றவர்தானே?! அவர் வேட்டையாடிக் கொண்டு வந்த மான்கறியைத்தானே சிவபெருமான் சாப்பிட்டாரு!'' என்றான்.

'ஓஹோ... சல்மான்கானுக்கு முன்னாடியே சிவபெருமான் மான்கறி சாப்பிட்டிருக்காரா?'' என்று மாணவர்கள் கோரஸாகச் சொல்ல... ''எதையும் குழப்படியாவே தெரிஞ்சுக்கறீங்களேப்பா. கண்ணப்பன் மான்கறி கொண்டு வந்து கொடுத்தார்ங்கறது சம்பவம். ஆனா, அதுக்குப் பிறகு சிவபெருமான் மான்கறி சாப்பிட்டதா செய்தி இல்லை. அதுமட்டுமில்லை... குழந்தையோடு விளையாடும் தந்தை, பிள்ளையை மகிழ்விக்க, 'இந்தப் பம்பரத்தை முழுங்கப் போறேன், பாரு’ என்று சொல்லிவிட்டு, சட்டென்று, மறைத்துக் கொண்டு, பம்பரத்தை முழுங்கிவிட்டதாக ஏப்பம் விடுவார். அந்தக் குழந்தையும் 'எங்க அப்பா, பம்பரத்தையே முழுங்கிருவாரு. அவருக்கு காலை டிபன், பம்பரம்தான்!’ என்று சொல்லிக் குதூகலிக்கும்.

நமக்கெல்லாம் அம்மையப்பனாகத் திகழ்கிற கடவுளும் அப்படித்தான். அடியார்களின் மனம் மகிழ, அற்புதங்களை எப்போதும் நிகழ்த்திக் கொண்டிருப்பார் என்று விளக்கம் தர...  நெகிழ்ந்து போனார்கள் மாணவர்கள்.

கடவுளையும் கடவுளுக்கு நிகரான பெற்றோர்களையும் இன்றைய தலைமுறைக்கு உணர்த்திய திருப்தி, எனக்கு!