ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

''சிவராத்திரிக்கு முதல் நாளில் இருந்து, பகவான் சத்யசாயி பாபாவின் லீலைகள், இந்த இல்லத்தில் தொடங்கின!'' என்கிறார் பக்தை நளினி.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

'அரசு தகவல் தொகுப்பு விவர மைய’த்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கும் நளினி, அற்புதமான பாடகி. இவரின் மகள் பவதாரிணி, 'ஸ்வாமி கீதமுலு சி.டி’-யில், பத்து சி.டி-க்கள் பாடியிருக்கிறார். இவர்கள் இரண்டு பேருமே, இசைமேதை டி.கே.பட்டம்மாளிடம் 26 வருடங்கள் முறையாகப் பாட்டு கற்றுக் கொண்டவர்கள். பாட்டுக் குடும்பமான இது, சாயி குடும்பமாக மாறியதற்கான தெய்விக நிகழ்வுகளைக் கூறுகிறார் இந்த பக்தை.  

''சிவராத்திரிக்கு முதல் நாள், 108 முறை விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லவேண்டும் என்று நினைத்து, அதன்படியே சொல்லத் தொடங்கினேன். பூஜையறையில் யாரோ விபூதியை தாறுமாறாகச் சிந்தியிருப்பதுபோல் தோன்றியது. பெண்ணையும் பிள்ளையையும் கடிந்துகொண்டேன், 'இப்படியா விபூதியைச் சிந்துவது?’ என்று. அவர்கள் விழித்தார்கள். பின்னே, அவர்கள் அதைச் சிந்தினால்தானே..? அது பாபாவின் லீலை! நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே, விபூதி அதிகரித்தது. மேலும் மேலும் வளர்ந்து மலை போலாயிற்று. சிவலிங்கம் போன்று உருப்பெற்றது. அதன்மேல் மஞ்சள், குங்குமம், சந்தனம் எல்லாம் கமகமவெனப் பொழிந்து, வண்ண அலங்காரம் செய்துகொண்டது. வாசனைப் பூக்களையும் தூவிக்கொண்டு, பரிமளாதிவாசனையுடன் வளர்ந்து நின்ற விபூதி லிங்கத்தைப் பார்த்துப் பிரமித்துப் போனோம். வியப்பின் உச்சத் துக்குப் போய், கைகூப்பித் தொழுதபடியும், அழுதபடியும் இருந்தோம்.    

##~##
பிறகு, ஆறுகால பூஜை புரியும் பெரிய கோயில்களில், விசேஷ நாட்களில் நடைபெறும் அத்தனை அபிஷேகமும், வீட்டில் தானே நடக்கத் துவங்கின. பூஜையறை வாசல் தொடங்கி, எல்லா அறை வாசல்களிலும் இந்த அதிசயம் தொடர்ந்தது. ஒரு வாசலில் குங்குமம் பொழியும்; அதை அள்ளியெடுப்பதற்குள் இன்னொரு வாசலில் மஞ்சள் பொழியும்; அதை அள்ளச் செல்வதற்குள் மற்றொரு வாசலில் சந்தனம்... சாமந்தி... மல்லி... மரு... தவனம் என்று பூக்கள் பொழியும். ஒவ்வொன்றையும் அள்ளி அள்ளி மாளவில்லை'' என்கிறார் நளினி. பால் கொட்டத் தொடங்கியதும், நளினியின் கணவர் அனந்தராமன் சொன்னாராம்... 'ம்... பால் வந்தாச்சு! இப்ப சுவாமி காபிப் பொடி கொடுப்பாராமா..?’ என்று. 'சும்மா இருங்கோ! எதுவும் அபத்தமா பேசாதீங்கோ!’ என்று நளினி சொல்லிக் கொண்டிருந்தபோதே, வாசல் அருகில் இருந்த ஸ்வாமி படம் முழுவதும் கமகமவென்று மணம் வீசும் காபிப் பொடியால் நிரம்பியது. 'பாருங்கோ, காபிப் பொடியைக் கொடுத்துட்டார் சுவாமி’ என்று பயத்துடன் கணவரை அடக்கினார் நளினி. அந்தந்த வாசல்களில் பொழிந்துகொண்டிருந்த அபிஷேகப் பொருட்களை அள்ளி எடுப்பதற்குள் பொழுதே விடிந்துவிட்டது. 'என்ன நடக்கிறது உங்கள் வீட்டில்? வாசனை ரோடு வரை வீசுகிறதே!’ என்று விசாரித்தபடி, காலையில் பக்தர்கள் வந்து கூடிவிட்டார்கள். இந்த அதிசயம் ஆறு மாத காலம் நடந்தது.

அடிக்கடி பூஜையறையில் கற்பூரம் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்ததும், வீட்டில் உள்ளவர்களை, 'இதென்ன... யாரு இப்படிப் பண்றீங்க? கண்ட நேரத்துல யார் கற்பூரம் ஏத்தறது?’ என்று கடிந்துகொண்டார் நளினி. அந்த அதிசயத்தையும் சுவாமி பாபாதான் செய்துகொண்டிருந்தார் என்பதும் உடனே புரிந்தது. திடீரென்று, விக்கிரகங்களுக்கும் சிவலிங்கத்துக்கும் தானே அபிஷேகம் நடைபெறும். பூப்போட்டு மணியடித்து, தானே ஆரத்தி நடப்பதைப் பார்த்து திகைத்துப் போனோம். கோயில்களில், ஷீர்டியில் ஆரத்தி நடைபெறும் நேரங்களில் எல்லாம், இங்கும் முறைப்படி பூஜை நடந்து ஆரத்தியாகும்! ஷீர்டி பாபா சிலை எங்கள் பூஜையறையில் உண்டு. ஷீர்டி பாபா சிலையின் தோளில் குச்சி சார்த்தியிருந்தால், பூஜை நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

'என்னவென்று புரியவில்லையே’ என்று சொல்லிக்கொண்டே தொலைவில் உட்கார்ந்து, எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். காலையில், பூஜையறையில் சுவாமி சத்ய சாயிபாபாவும் ஷீர்டி பாபாவும் சேர்ந்திருக்கும் படம் வந்திருந்தது. அதன் கீழ், 'நான்தான் வந்திருக்கிறேன். இன்னுமா புரியவில்லை? - சத்யசாயி பாபா’ எனும் வாசகமும் இருந்தது. அதன் பிறகு, பகவான் பாபாவின் வழிபாட்டை, முறையாகவும் முழுமையாகவும் ஆனந்தமாகச் செய்யத் தொடங்கினோம். ஷீர்டி பாபாவை ஆரம்பத்தில் வழிபட்டு வந்த எனக்கு, இரண்டு பாபாக்களும் ஒருவரே என்ற உண்மை புரிந்ததும், சத்ய சாயிபாபாவை ஆத்மார்த்தமாக வழிபடலானேன்.  

இதையடுத்து, பூஜையறையில் சுவாமியின் கடிதங்கள் வரத் தொடங்கின. 'பாண்டிச்சேரிக்குப் போ! திருவண்ணா மலைக்குப் போய் வா! பர்த்திக்கு வந்து தங்கு’ என வழிகாட்டுதலாக, ஆசீர்வதிப் பாக, தீர்ப்பாக... தெய்வக் கடிதங்கள் வரத் தொடங்கின. ஆபத்பாந்தவனாக, அநாத ரட்சகனாக இருந்து எங்களைக் காத்தார் பாபா.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

ஒருமுறை எங்கள் மகன் பிரசன்னா, எங்களைக் கோபித்துக் கொண்டான்... 'என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் எனக்கு? இது பிடிக்கவே இல்லை’ என்றான். சுவாமி அவனுக்கு, 'ஸ்ரீராம் பராசரன்’ எனப் பெயர் சூட்டினார். அவனுக்குப் பரம சந்தோஷம். ஒருநாள், நான் இசை நிகழ்ச்சிக்குப் போய்த் திரும்பியதும், 'அம்மா! தாகமா இருக்குன்னு மேங்கோ ஜூஸ் குடிச்சேன். நாக்கு, வாய், தொண்டை, தலை எல்லாமே தாங்க முடியாம எரியறது!’ என்று சொல்லி அரற்றினான் ஸ்ரீராம். ஓடிப் போய் அவன் குடித்ததாகச் சொன்ன பாட்டிலைப் பார்த்தால், அது 'கான்சன்ட்ரேட் நைட்ரிக் ஆசிட்’. பார்ப்பதற்கு மாம்பழ ஜூஸ் போல இருக்கவே, தெரியாமல் அந்த அபாயகரமான அமிலத்தைக் குடித்துவிட்டிருக்கிறான்.  

பக்கத்திலிருந்த மருத்துவமனையில் அவனை அட்மிட் செய்தோம். 'பன்னிரண்டு மணிக்கு மேல்தான் எதையும் சொல்ல முடியும்’ என்று டாக்டர் கூறிவிட, சுவாமியிடம் மன்றாடி, அழுதபடி இருந்தேன். 'இவனுக்கு நாக்கு போயிடுமா? தொண்டை எரிஞ்சுபோயிடுமா? தலையில், மூளையில் கோளாறு வந்துடுமா? உயிருக்கு ஆபத்தாயிடுமா? சுவாமி, இவனைக் காப்பாத்து’ என ஓவென்று அழுதுகொண்டே இருந்தேன். டாக்டர் பன்னிரண்டு மணிக்கு மேல் வந்து மகனைப் பரிசோதித்துவிட்டு, 'என்னம்மா... ஆபத்தான அமிலத்தைக் குடித்திருக்கிறான் என்கிறீர்கள். ஆனால், பையனுக்கு ஒரு பாதிப்பும் இல்லையே! என்ன அதிசயம் இது!’ என்று ஆச்சரியப்பட்டுச் சொல்ல...  'எல்லாம் சுவாமி பாபாவின் லீலை’ என்று நெகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம்'' என்கிறார் நளினி.  இப்போது ஸ்ரீராம் பராசரன், எம்.ஏ. மியூஸிக் படிக்கிறான்; பலருக்கும் தேவாரம் சொல்லிக் கொடுக்கிறான்.

பகவான் பாபாவின் பாதுகா பூஜை நிகழ்ச்சியில் ஒரு பிரபல பாடகியின் குழுவில் சேர்ந்து பாடும் வாய்ப்பு, மகள் பவதாரிணிக்கு வந்தது. முக்கியமான நிகழ்ச்சி. அனைவரும் மஞ்சள் வண்ணச் சேலையில் வரவேண்டும் என்று சொல்லப்பட்டது. அடுத்த நாள் நிகழ்ச்சி. வீட்டில் பீரோவில், கப்போர்டில் தேடித் தேடிப் பார்த்தும், மஞ்சள் நிறச் சேலை இல்லை. 'சரி, பாண்டி பஜார் போய் புதுசாகவே ஒரு சேலை எடுத்துண்டு வந்துடலாம்’ என்று நளினி சொல்லிக்கொண்டிருக்க, பவதாரிணியின் பீரோவுக்கு அருகில் இருந்து, அவள் தோழி பல்லவி கத்தினாள். எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு அங்கு ஓடினோம். அவள் எதற்கும் இன்னொரு முறை தேடிப் பார்ப்போமே என்று பவதாரிணியின் பீரோவைத் திறக்க, மிகப் பெரிய சிவப்புக் கரையிட்ட ஆடம்பரமான ஜரிகையுடன் கூடிய, அழகிய மஞ்சள் வண்ணப் பட்டுச் சேலையும், அதற்கு ஏற்ற ரெடிமேட் பிளவுஸும் இருந்தது. சுவாமிதான் லட்சணமாக வாங்கிவந்து போட்டிருக்கிறார். அதைப் பார்த்ததும் நெகிழ்ச்சி தாளாமல் பவதாரிணி அழ, பல்லவி அழ, நளினி அழ... வீடு முழுவதும் தாளமுடியாத சந்தோஷத்தில் ஆனந்தமாய் அழுது தீர்த்தது.

இப்படி, வீட்டில் சத்ய சாயிபாபா பிரத்யட்சப்பட்டதனால், பூஜை அறையில் இருந்த, ஷோகேஸில் இருந்த, ஹாலில் இருந்த தெய்வ விக்கிரகங்கள் எல்லாம் நகர்ந்து வரத்தொடங்கின என்று நளினி, அந்த அற்புதத்தைச் சொல்லத் தொடங்கியபோது, அதை எந்த வார்த்தைகளால் விவரிப்பது என்று புரியாமல் திகைத்துப் போனேன்.

- அற்புதங்கள் தொடரும்

'ஆரஞ்சு நிற மருந்து!'
வாசகர் அனுபவம்

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

து 1985-ஆம் வருடம். புது வீடு கட்டி நாங்கள் குடிபோன தருணத் தில், அங்கே இருந்த பார்த்தினீயச் செடிகளாலோ அல்லது வேறு காரணங்களாலோ தோலில் அரிப்பு ஏற்பட்டு, உடலில் தழும்பு தழும்பாக வந்து, பிறகு அதுவே கறுப்புப் புள்ளிகளாக முகத்திலும் பரவிவிட்டது. இரண்டு வருடங்களாக, பார்க்காத மருத்துவர் இல்லை; செய்யாத வைத்தியம் இல்லை. அதற்கு 'லைகம் ப்ளானஸ்’ என்று ஒரு பெயர் சொல்லி, 'இது மெள்ள மெள்ளத்தான் குணமாகும்; மருந்து ஏதும் இதற்கு இல்லை’ என்று தெரிவித்துவிட்டார், டாக்டர். வெளியில் செல்லவே வெட்கப்பட்டுக் கொண்டு, வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன்.

அப்போதுதான் ஒரு கனவு... மிகப்பெரிய ஹால். அதில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருக்க, நடுவில் இருந்த நடைபாதையில், எல்லோரையும் முந்திச் சென்று, அங்கிருந்த மேடையில் ஏறுகிறேன். அங்கே, வட்டமாக அமர்ந்துகொண்டு, பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு இருக்கின்றனர் சிலர். அவர்களுடன் நானும் உட்கார்ந்துகொள்ள... எனக்கு இடப் பக்கத்தில் ஸ்ரீசாயிபாபா; 'இதைப் பார்த்துப் பாடு’ என்று ஒரு புத்தகத்தை என்னிடம் தருகிறார். பிறகு நானும் பாடுகிறேன். என் முகத்துக்கு முன்னே, தன் கைகளால் வட்டமிட்டு, 'ஆமாம், இதென்ன?’ என்று பாபா கேட்க, அழுதபடி நடந்ததை விவரிக்கிறேன் நான். 'அழாதே... எல்லாம் போயிடும்’ என்று பாபா சொல்லி முடிக்கும்போது, கனவும் முடிந்துவிட்டது.

அதிர்ச்சியும் குழப்பமும் எனக்குள்! அதுவரை, பாபாவை வழிபட்டதும் இல்லை; தரிசித்ததும் கிடையாது. பிறகு, இது குறித்து சாயி பக்தையான என் தோழியிடம் தெரிவித்ததும், 'கனவில் அவர் வந்தால், நேரில் வரப்போகிறார் என்று அர்த்தம்’ என்றாள். சிலிர்ப்புடன் மெள்ள மெள்ள, அவருடைய பாடல்களை, பஜனைகளில் பாடி வந்தேன்.

அடுத்த சில நாளில், மும்பையில் வசிக்கும் என் கணவரின் சகோதரர், 'இதற்குப் புதிதாக ஆயின்மென்ட் வந்துள்ளது. அதைத் தருகிறேன்’ என்று சொல்லி விட்டு, பத்து நாட்கள் கழித்துக் கொண்டு வந்து கொடுத்தார். அந்த மருந்தைப் பார்த்ததும் 'சாயிராம்’ என்று என்னையும் அறியாமல் உச்சரித்தேன். காரணம், அந்த மருந்து பாபாவின் அங்கியின் கலரில்... ஆரஞ்சு நிறத்தில் இருந்தது! பாபாவே அனுப்பித் தந்திருக்கிறார் என்று பூரித்தேன். அதுமட்டுமா? அதையடுத்த ஒவ்வொரு நாட்களிலும், எவரேனும் வந்து விபூதிப் பிரசாதம் கொடுத்தார்கள்; பாபா படம் போட்ட டாலர் கொடுத்தார்கள். சில நாட்களில் தழும்பும் கறுப்புப் புள்ளிகளும்  முற்றிலுமாக மறைந்துவிட்டன.

சூட்சுமமாக அருள்புரியும் அந்தக் கருணா மூர்த்தியின் கடாட்சத்துக்கு எல்லையே இல்லை!

- நாகி நாராயணன், பெங்களூரு