Published:Updated:

காளஹஸ்தி முதல் திருவாலங்காடு வரை விபத்துகள்... ஆகம நியதி மீறல்தான் காரணமா?

காளஹஸ்தி முதல் திருவாலங்காடு வரை விபத்துகள்... ஆகம நியதி மீறல்தான் காரணமா?
காளஹஸ்தி முதல் திருவாலங்காடு வரை விபத்துகள்... ஆகம நியதி மீறல்தான் காரணமா?

மிழகத்தைப் பொறுத்தவரை, பழைமையான எல்லா ஊர்களுமே பொதுவாக மரங்களை அடிப்படையாகக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளன. ஓர் ஊரில் எந்த மரங்கள் அதிகமாக வளர்ந்ததோ அந்த மரத்தின் அல்லது வனத்தின் அடிப்படையிலேயே ஊரின் பெயரும் வழங்கப்படும். கடம்பவனம், திருவேற்காடு, திருவாலங்காடு, தர்ப்பாரண்யம் என்று இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கையோடு இணைந்த வாழ்வையே நம் முன்னோர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதை இதிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம். அந்த அடிப்படையில்தான் தமிழகத்தில் இருக்கும் பழைமையான ஆலயங்களுக்கும் தலவிருட்சம் என்ற ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றனர். ஓர் ஆலயத்தின் சிறப்புகளைக் கூறும்போது, மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் என்று கூறுவார்கள். கோயிலில் முக்கிய அம்சமாகத் திகழும் விருட்சம், அந்தக் கோயிலில் அருளும் இறைவனின் அம்சமாகவே போற்றப்படுகிறது. சமீப காலமாக திருக்கோயில்களில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகிறது. காளையார்கோயில் தீ விபத்து, காளஹஸ்தி கோயில் தீ விபத்து, திருச்செந்தூர் மண்டம் இடிந்தது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் தீ விபத்து போன்ற விபத்துகளைத் தொடர்ந்து, நேற்று இரவு திருவள்ளூர் - அரக்கோணம் சாலையில் அமைந்திருக்கும் திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரர் கோயிலின் தல விருட்சமான ஆலமரம் நேற்று தீயில் எரிந்தது பக்தர்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூத்தத் திருப்பதிகம் பாடிய காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற இந்தப் பழைமையான ஆலயத்தில் என்ன காரணத்தினாலோ இந்த விபத்து நடைபெற்றுள்ளது. பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தின சபை கோயிலான திருவாலங்காட்டில் அரிய பொக்கிஷங்கள் கலைவடிவில் இன்றும் உள்ளன. ஆனால், கோயில் சரியான பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. நிர்வாகத்தினரின் அலட்சியம் காரணமாகவே தலவிருட்சம் நெருப்புக்கு இரையானது என்று பக்தர்கள் வருத்தத்துடன் பேசிக்கொள்கிறார்கள். தொடர்ந்து இப்படி விபத்துகளும் சேதங்களும் உருவாகக் காரணம் என்ன? அலட்சியப்போக்கா? இல்லை ஆண்டவன் ஏதாவது குறிப்பால் உணர்த்துகிறாரா? என்று மக்களும் குழம்பி வருகிறார்கள். இதையொட்டி ஆளாளுக்குப் பல வதந்திகளையும் எழுப்பி பீதியைக் கிளப்பி வருகிறார்கள். இதையொட்டி திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தின் கோடீஸ்வர சிவாசாரியாரிடம் கருத்துக் கேட்டோம்.

"ஆலயங்களில் மூர்த்தங்களுக்கு இணையானது ஸ்தல விருட்சம். ஸ்தல விருட்சமே தீயால் எரிந்து போவது என்பது நிச்சயம் நல்லதல்ல. அது ஆண்டவனின் கோபத்தினை நமக்கு உணர்த்துகிறது. மேலும் இப்படித் தொடர்ந்து ஆலயங்கள் சேதமாவது என்பது கோயில்களின் மீது நமக்குள்ள அலட்சியத்தையே காட்டுகிறது. அரசும், பக்தர்களும் ஆகம நியதிப்படி கோயில்களை மதிப்பதில்லை என்பதே உண்மை. கேரளாவில் உள்ள சிறிய கோயில்களில் கூட நிர்வாகமும், பக்தர்களும் அந்தந்த கோயில்களுக்கு உரிய விதிகளை மதித்து தூய்மையான வழியில் தரிசனம் செய்கிறார்கள். ஆனால், பல நூறு ஆண்டுகளைக் கடந்த, அரிய பொக்கிஷமாக உள்ள பிரமாண்டமான கோயில்களில் கூட மனம் போன போக்கில் வழிபாடுகளும், தரிசனமும் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. கோயிலில் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ, அவை எல்லாமே நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.

உடையில், ஒழுங்குமுறையில், தரிசிக்கும் நியதியில் என எல்லாவற்றிலுமே விதிகள் மீறப்படுகின்றன. அறநிலையத்துறை விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. எல்லாக் கோயில்களிலும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய காலம் இது. ஒரு கோயில் நன்றாக இருந்தால் அரசும், அதன் மக்களும் க்ஷேமமாக இருக்க முடியும். ஸ்தல விருட்சம் எரிந்து போவது என்பது நிச்சயமாக ஓர் அசுப சகுனம்தான். பல இயற்கைப் பேரிடர்கள் வரலாம். அரசுக்கு ஆபத்து நேரிடலாம். நிச்சயமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம். எனவே இனியும் கோயில் விதிகளில் அலட்சியம் காட்டாது ஆகம விதிகளின்படி பூஜைகள், தரிசன முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். கோயிலுக்குள் எந்தவித ஊழலும், முறைகேடுகளும் நடைபெறவே கூடாது. அப்போதுதான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கோயில்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு பக்தர்களுக்கும் உண்டு.

இந்தத் தல விருட்ச தீ விபத்தை பொறுத்தமட்டில் கட்டாயம் பரிகார ஹோமங்கள் செய்யப்பட வேண்டும். சிறப்பான பூஜைகள், பரிகார ஹோமங்கள் மூலமாகவே ஆண்டவனை சாந்தப்படுத்த வேண்டும். ஆனால், என்னவிதமான ஹோமங்கள், பூஜைகள் என்பதை ஆன்மிகப்பெரியோர்கள் கூடி அங்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். பொதுவாக எதையும் கூற முடியாது. மரம் முழுவதும் எரிந்துவிட்டதா? வேர்கள் நல்ல நிலையில் உள்ளதா? தானாக நடந்ததா? அலட்சியம் காரணமா? இப்படி எல்லாவற்றையும் ஆலோசித்தே பரிகாரப் பூஜைகள் செய்ய வேண்டும். ஆலயங்கள் எல்லாம் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கான களமாகவும் திகழ்ந்தன. அத்தகைய ஆலயங்களை நாம் நம்முடைய அலட்சியப் போக்கின் காரணமாகப் புறக்கணித்துவிடக் கூடாது. மீறினால் இப்படியான விபத்துகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

மக்கள் வழிபடவும், மனதில் உறுதியும், நம்பிக்கையும் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட கோயில்களில் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டால், மக்களின் நம்பிக்கை சிதைந்துவிடும். வாழ்க்கையையும் சிக்கலாக்கும். எனவே, நாம் அனைவரும் ஒன்றுகூடி கோயில்களைப் பராமரித்துப் பாதுகாப்போம். தெய்வ ஆராதனைகளைச் சிறப்பாகச் செய்வோம்'' என்றார்.

நியாயம்தானே? அன்றிலிருந்து இன்றுவரை திருக்கோயில்களே நமது நல்வாழ்வுக்கான கலங்கரை விளக்கங்களாக இருந்து வருகின்றன. எனவே, கோயில்களைப் பாதுகாப்பது என்பது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதைப்போலத்தான். இனியேனும் அரசும், திருக்கோயில் நிர்வாகங்களும் விழிப்பு உணர்வுடன் செயல்படவேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.