Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

வெள்ளம் தடுத்த பிரான்! எஸ்.கண்ணன்கோபாலன்

பிரீமியம் ஸ்டோரி

‘தொண்டைநாடு சான்றோர் உடைத்து’ என்பர். அதேநேரம், இறைவனின் அருள் சுரக்கும் ஆலயங்களுக்கும் தொண்டைமண்டலத்தில் பஞ்சமே இல்லை. ஆனால், ஒருகாலத்தில் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்த ஆலயங்கள் பலவற்றில் எத்தனையோ பல ஆலயங்கள் இன்றைக்கு இருந்த இடம் தெரியாதபடி சிதைந்து காணப்படுகின்றன.

ஆலய இடங்களில் வீடுகளைக் கட்டுவதும், ஆலய மதில்சுவர்கள் இடிந்த நிலையில், ஆலய வளாகத்தையே சாலையாகப் பயன்படுத்துவதுமான அவல நிலையை பல கோயில்களில் நம்மால் காணமுடிகிறது. அப்படி ஆலய வளாகத்தையே சாலையாகப் பயன்படுத்தும் ஆலயம்தான் இதோ இப்போது நாம் தரிசிக்கச் செல்லும் அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில்.
ஆதியில் இந்தப் பகுதி சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. கீழ்ப்புறம் ஒரு வனம், மேற்புறம் ஒரு வனம் என்று இயற்கை எழிலுடன் காட்சி தந்த சதுர்வேதிமங்கலத்தில் நான்கு வேதங்களிலும் தேர்ந்த வேதியர்கள் பலர் வசித்து வந்தனர். கீழ்ப்புறம் உள்ள கீழ்வனத்தில்தான் கரிவரதராஜ பெருமாள் கோயில் கொண்டுள்ளார்.

சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகத்துக்கு முன்னதாக, மேலவலம் பேட்டை என்னும் ஊருக்கு இடப்புறத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கீழ்வனம் (தற்போது கீழ்வலம் என்று அழைக்கப்படுகிறது) இந்தத் தலத்தில் அமைந்திருக்கும் கரிவரதராஜ பெருமாள் கோயில், பெயருக்குத்தான் கோயிலே தவிர, அங்கே நம்மால் கோயிலைக் காண முடியவில்லை. வெட்டவெளியில் ஒரு சிறிய கட்டிடத்துக்குள் பெருமாள் நின்ற நிலையில் காட்சி தருகிறார்.  கட்டடத்தின் அடிப்புறத்தில் பல கல்வெட்டுகள் ஆலயத்தின் தொன்மைச் சிறப்பைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. பெருமாளின் சந்நிதிக்கு எதிரில் வெட்டவெளியில் காட்சி தருகிறார் கருடாழ்வார். அவரை அடுத்து பலிபீடமும் காணப்படுகிறது. ஆலய அமைப்பைப் பார்க்கும்போது, ஒருகாலத்தில் கொடிமரமும் இருந்து, திருவிழாக்களும் நடந்திருக்கக்கூடும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

காஞ்சி வரதராஜ பெருமாளே இந்தத் தலத்தில் கரிவரதராஜ பெருமாள் என்ற திருப்பெயருடன் காட்சி தருவதாக ஐதீகம். ஸ்ரீபூமிதேவி மற்றும் மகாலக்ஷ்மி தாயாரும் உடன் காட்சி தருகின்றனர். மற்றபடி பிராகாரமோ, பரிவார தெய்வங்களோ இல்லாமல், திருப்பணிகளை எதிர்பார்த்திருப்பதுபோல் பரிதாபமாகக் காட்சி தரும் கோயிலைப் பார்த்தபோது, உள்ளபடியே பதற்றமும் வேதனையும்தான் ஏற்பட்டது. நமக்கு ஏற்பட்ட அந்த உணர்வு நேரில் சென்று பார்க்கும் எவருக்குமே ஏற்படத்தான் செய்யும். அந்த அளவுக்குச் சிதிலமடைந்து காணப்படுகிறது கோயிலின் இன்றைய தோற்றம்.
மதுராந்தகத்தில் அமைந்திருக்கும் ராமபிரானுக்கு, ‘ஏரி காத்த ராமர்’ என்னும் திருப்பெயர் ஏற்பட்டுள்ளதுபோல், கீழ்வலம் கரிவரதராஜ பெருமாளை, ‘வெள்ளம் தடுத்த பிரான்’ என்று அழைக்கும்படியாக ஓர் அருளாடல் நிகழ்த்தியிருக்கிறார் பெருமாள்.

‘‘1984-ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக மதுராந்தகம் ஏரி உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து, சுற்றிலும் இருந்த கிராமங்களை எல்லாம் மூழ்கடித்தது. பெருகிவந்த வெள்ளத்தை  கால்வாய் வழியாகத் திருப்பிவிட்டு, கீழ்வலம் ஊருக்குள் வெள்ளம் வராதபடி தடுத்து, மக்களைக் காப்பாற்றினார் கரிவரதராஜ பெருமாள்’’ என்கிறார் ஆலயத் திருப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தேவராஜன்.

கோயிலின் சிறப்புகள் மற்றும் திருவிழாக்கள் பற்றியும் அவரிடம் கேட்டோம்.

‘‘இந்தக் கோயிலில் நித்திய பூஜைகள் எல்லாம் ஒரு காலத்தில் நடைபெற்று வந்ததாக பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மார்கழி மாதம் தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் திருப்பாவை பாராயணமும், புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை உறியடித் திருவிழா, வீதியுலாவும் நடைபெற்று வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், இப்போது கோயில் முழுவதும் சிதிலம் அடைந்துவிட்டதால், இந்தக் கோயிலை மீண்டும் புதுப்பித்துக் கட்டுவதற்கு இப்போதுதான் ஒரு கமிட்டி ஆரம்பித்து உள்ளோம்.

ஆலயம் தேடுவோம்!

கோயில் முற்றிலும் சிதிலம் அடைந்திருப்பதால், பெரிய அளவில் திருப்பணிகளைச் செய்யவேண்டி இருக்கிறது. ராஜகோபுரம், சந்நிதிகள், புதிதாக பெருமாள் மற்றும் தாயார் திருவடிவங்கள், உற்ஸவ மூர்த்தங்கள், மதில்சுவர் எழுப்புவது என்று ஒரு கோயிலைப் புதிதாகக் கட்ட வேண்டும் என்கிற அளவுக்கு திருப்பணிகள் இருக்கின்றன.

மொத்த திருப்பணிகளின் மதிப்பும் ஏறக்குறைய 1 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.” என்றார்.

நம்முடைய ஆன்மிக வளத்தையும், தொன்மைச் சிறப்பையும், புராதன பாரம் பர்யத்தையும் காலத்துக்கும் நம் சந்ததிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், கோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம் என்பதற்காகவும் ஒவ்வொரு ஊரிலும் கலைநயமும், தெய்விக மணமும் கமழும் எண்ணற்ற கோயில்களை நம் மன்னர்கள் கட்டிச் சென்றுள்ளனர்.

ஆலயம் தேடுவோம்!

அப்படிப்பட்ட ஆலயங்களுள் ஒன்றுதான் இதோ சிதிலம் அடைந்த நிலையில் நாம் தரிசித்துக் கொண்டிருக்கும் கரிவரதராஜ பெருமாள் கோயில். கல்வெட்டுகளின்படி இந்தக் கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் திருப்பணிகள் செய்யப்பட்டது எனத் தெரிய வருகிறது. இந்தத் திருக்கோயில் திருப்பணிகள்  விரைவிலேயே பூர்த்தி அடைந்து சம்ப்ரோக்ஷணம் நடைபெற வேண்டும். ஆலயத்தில் நித்திய பூஜைகளும் விழாக்களும் தடையின்றி நடக்க வேண்டும். அதற்கு நாம் ஒவ்வொருவருமே நம்மால் இயன்ற நிதியுதவி, பொருளுதவி செய்யவேண்டும். அது, நாளும் நமக்கு அருள்புரியும் பெருமாளுக்கான நம்முடைய காணிக்கை மட்டுமல்ல, நாமெல்லாம் பெருமிதம் கொள்ளும் வகையில், ஆன்மிக வளத்தையும், புராதன பாரம்பர்யச் சிறப்பையும் நமக்கெல்லாம் விட்டுச் சென்றிருக்கும் நம் முன்னோர் களுக்கான நம்முடைய கடமையும்கூட!

பெருமாளின் அருளால் அவர் தாள் பணிந்து, அவருடைய திருப்பணிகளுக்கு நாமும் நம் காணிக்கைகளை மனம் மகிழ்ந்து செலுத்தலாமே!

 படங்கள்: தே.அசோக்குமார்

எங்கு உள்ளது? எப்படிச் செல்வது?

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகத்துக்கு முன்பாக மேலவலம்பேட்டை என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ மூலமாக திருக்கழுக் குன்றம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு