Published:Updated:

சித்தமெல்லாம் சித்தமல்லி

நிவேதிதா

பிரீமியம் ஸ்டோரி

கான்களாலும் மகரிஷிகளாலும் வழிபடப்பெற்ற ஆலயங்கள், இறைவன் சுயம்புவாகத் தோன்றிய ஆலயங்களைவிடவும் அளவற்ற மகிமை கொண்டு திகழ்கின்றன. அதேபோல், மகான்கள் வழிபட்ட தெய்வ மூர்த்தங்கள் அளவற்ற அருள்திறனைத் தன்னகத்தே கொண்டு, தன்னை தரிசிப்பவர்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் தாமதிக்காமல் வழங்கி அருள்கின்றன.

அப்படித்தான், மகான் ஸ்ரீராகவேந்திரரால் வழிபடப்பெற்ற சித்தமல்லி திருவேங்கடநாத பெருமாளும் பக்தர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற அருளாடல்களை கடந்த மூன்று வருடங்களாக நிகழ்த்தி வருகிறார்.

அதற்கு முன், கவனிப்பார் யாருமின்றி, சுந்தரநாராயணனின் வீட்டின் பின்புறத்தில் பத்மாவதி தாயாருடன் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மோனத் தவத்தில் மூழ்கிக் கிடந்தார்.
அதற்கான காரணம்தான் என்ன?

சுந்தரநாராயணனின் முன்னோர்களில் ஒருவரின் வாழ்க்கையில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டன. ஒருகட்டத்தில் அவர் மனம் மிகவும் நொந்து, மகான் ஸ்ரீராகவேந்திரரால் பூஜிக்கப்பெற்ற திருவேங்கடநாதப் பெருமாளை அனுதினமும் வழிபடும் தன்னை இப்படி அடுக்கடுக்கான சோதனைகள் சூழ்ந்து துன்புறுத்துகிறதே என்கிற ஆதங்கத்தில், அவரும் அவருடைய தங்கையுமாகச் சேர்ந்து, தலைமுறை தலைமுறையாக அவர்கள் முன்னோர்களால் வழிபடப்பெற்ற அந்தப் பெருமாளையும் தாயாரையும் பூஜையறையில் இருந்து எடுத்து, வீட்டின் பின்புறத்தில் போட்டுவிட்டனர். காலப்போக்கில் அந்த தெய்வமூர்த்தங்கள் மண்மூடிப் போய்விட்டன.

சித்தமெல்லாம் சித்தமல்லி

தன் வாழ்க்கையில் இப்படிச் சோதனைகள் தொடர்வதற்கு தங்களின் முன்வினைப் பயன்களே காரணம் என்பதை உணராமல், பழியை பெருமாளின் பேரில் சுமத்திய அவர்களின் அறியாமை, பெருமாளின் இதழ்களில் ஒரு நமுட்டுச் சிரிப்பை வரவழைத்தது. அதன் காரணமாகவே பெருமாளின் இதழ்கள் சுழித்த நிலையில் இருப்பதை இன்றைக்கும் தரிசிக்கலாம்.

பெருமாளின் திருக்கரத்தில் உள்ள சங்கு, விநாயகப் பெருமானின் திருவுருவத்தை நினைவுபடுத்துவதுபோல் அமைந்திருக்கிறது. அவருடைய தோளில், முருகனின் வேல் காணப்படுகிறது. இப்படியான அபூர்வ தோற்றத்தில் உள்ள பெருமாளின் திருவுருவம் வேறெங்கும் இல்லை. ஆனால், இந்தப் பெருமாளின் மகத்துவத்தை உணராமல், ஏதோ தங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட சோதனைகளுக்கெல்லாம் பெருமாள்தான் காரணம் என்ற தவறான எண்ணத்தில் அவர்கள் பெருமாளையும் தாயாரையும் புறக்கணித் திருந்தாலும், தம்மை தரிசித்து வணங்கிய அன்பர்களுக்கெல்லாம் அருள்புரிந்த பெருமாள், கலியின் துன்பங்கள் பெருகி நம்மை வருத்தும் இன்றையச் சூழலில் மறுபடியும் நமக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டு, உரிய தருணத்துக்குக் காத்திருந்தார்.

விதைத்தவன்தானே அறுவடை செய்ய வேண்டும்? புறக்கணித்தவர்களைக் கொண்டே மீண்டும் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளச் சித்தம் கொண்டார் சித்தமல்லி பெருமாள்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பெருமா ளைப் புறக்கணித்த அந்த நபர்தான், இன்றைக்கு ஆரம்பத்தில் நாத்திகராக இருந்து பின்பு ஆத்திகராகி, சித்தமல்லி பெருமாளின் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் சுந்தரநாராயணன். அன்றைக்கு அவருடைய தங்கையாக இருந்து பெருமாளைப் புறக்கணித்தவர்தான், ஸ்ரீராகவேந்திரர் அருளால் இன்றைக்கு சித்தமல்லி பெருமாளைப் பற்றி வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தும் பேறு பெற்ற பத்மா மாமி.

சித்தமெல்லாம் சித்தமல்லி

சுந்தரநாராயணனுக்கும் சரி, பத்மா மாமிக்கும் சரி... இந்தப் பிறவியிலும் மிகுந்த சோதனைகளும் துன்பங்களும் ஏற்படவே செய்தன. ஆனால், அவர்களின் துன்பங்களைப் போக்கவும், அவர்களைக் கொண்டே உலக மக்களின் நன்மைக்காகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவும் திருவுள்ளம் கொண்ட பெருமாள், தம்மை வழிபட்ட மகான் ஸ்ரீராகவேந்திரரின் மூலமாகவே தம்மை வெளிப்படுத்திக் கொண்டார். மகான் ஸ்ரீராகவேந்திரரின் அருளால் உண்மையை உணர்ந்த பத்மா மாமியும் சுந்தரநாராயணனும் எப்போது தங்களை சித்தமல்லி பெருமாளின் திருப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கினார்களோ, அன்றிலிருந்தே அவர்களுடைய சோதனைகளும் கதிரொளி பட்ட பனித்துளி போன்று மெள்ள மெள்ள மறையத் தொடங்கின.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன், தம்மை வெளிப்படுத்திக் கொண்ட சித்தமல்லி பெருமாளுக்கு, அழகிய ஓர் ஆலயம் எழுப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சுந்தரநாராயணனுக்கு, மகான் ஸ்ரீராகவேந்திரரின் அனுக்கிரஹமும் பெருமாளின் அருளும் பூரணமாகக் கிடைத்துவிட்டது போலும்! அதனால்தான் மிக விரைவாக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘‘கருவறை விமானம், கர்ப்பகிரஹ மண்டபம், கருவறைக்குப் பின்புறம் ஒரு மண்டபம், சுற்றி வரும் பிராகாரத் தூண்களில் ஸ்ரீராகவேந்திரரின் திருவுள்ளப்படி கிருஷ்ண லீலைகளைச் சித்திரிக்கும் சிற்பங்கள் போன்ற பணிகள் முடிந்திருக்கின்றன.

முன்மண்டபம், ஸ்ரீராகவேந்திரர் சந்நிதி, ஆஞ்சநேயர் சந்நிதி... பெருமாளின் சங்கு, விநாயகரின் திருவுருவத்தை நினைவு படுத்துவதாக அமைந்திருப்பதால் விநாயகருக்கு ஒரு சந்நிதி, பெருமாளின் தோளில் முருகப் பெருமானின் வேல் போன்ற அமைப்பு இருப்பதால் முருகப் பெருமானுக்கு ஒரு சந்நிதி ஆகியவற்றையும் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இன்னும் வர்ணம் பூசுதல், மின் ஒயரிங் போன்ற பல பணிகள் காத்திருக்கின்றன.

விரைவில் திருப்பணிகள் நிறைவு பெற்று சம்ப்ரோக்ஷணம் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். இத்தனை தூரம் எங்களை வழிநடத்திய பெருமாளும் ஸ்ரீராகவேந்திரரும் இனியும் எங்களுக்குத் துணை நின்று திருப்பணிகளை விரைவிலேயே நிறைவேற்றிக் கொள்வார்கள் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் சுந்தரநாராயணன்.

சித்தமெல்லாம் சித்தமல்லி

லியுகத்தில் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை அகற்றி, அவர்களின் வாழ்க்கையில் சாந்தியும் சந்தோஷமும் நிலவச் செய்ய வேண்டும் என்பதற்காகவே, மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட மாமணியாம் திருவேங்கடநாத பெருமாள், சுந்தரநாராயணனின் நம்பிக்கையை நிச்சயமாகக் காப்பாற்றுவார் என்பதில் சந்தேகமே இல்லை. தன்னுடைய பக்தை பத்மாவிடம் ஸ்ரீராகவேந்திரர் சித்தமல்லி பெருமாளைப் பற்றிக் குறிப்பிடும்போது...

‘கேதுவுக்கு காளஹஸ்தி, செவ்வாய்க்கு வைத்தீஸ்வரன்கோவில் என்பார்கள். அங்கே காளஹஸ்திக்கு அருகில் உலகப்பிரசித்திப் பெற்றுத் திகழும் திருப்பதியைப் போல, இங்கே வைத்தீஸ்வரன்கோவில் அருகில் உலகப் பிரசித்தி யுடன் திகழ இருக்கிறது, திருவேங்கடநாதப் பெருமாள் அருளாட்சி செலுத்தும் சித்தமல்லி’ என்று அருள்வாக்கு கூறியுள்ளார்.
மகான்களின் அருள்மொழிகள் பொய்ப்பதே இல்லை!

-நிறைவுற்றது.


படங்கள்: க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு