மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
News
அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்

பகவான் ரமணர்

மகான்களைப் பற்றிய வரலாறுகளை நமது இதிகாஸ புராணங்களில் படிக்கும் போது, ‘இப்படியும் ஒருவர் உண்மையில் வாழ்ந்திருக்கமுடியுமா?’ என்று வியந்து போயிருக்கிறோம். தன்னை உணர்ந்து கொண்ட ஆத்மாவின் குணாதிசயங்களைக் கேட்கும்போது, அந்த நிலை சாத்தியமா என்று அதிசயித்திருக்கிறோம். நம்மிடையே, நம் கண்ணெதிரே இந்தக் காலத்தில் அம்மாதிரியான ஒரு மகான் வாழ்ந்து வந்திருக்கிறார். அவர்தான் பகவான் ரமணர்.

ஒரு சமயம் சிஷ்யர் ஒருவர் பகவானிடம் ‘‘நான் என்னை அறிவதால் பிறருக்குப் பலன் உண்டா?’’ என்று கேட்டபோது, பகவான் சொன்னார்...

அருட்களஞ்சியம்

‘‘ஒருவன் அளிக்கக்கூடிய உயர்ந்த பலன் அதுவேதான்! உலகத்தில் மகத்தான உண்மைகளெல்லாம் ஆத்மாவின் தெளிவான ஆழத்திலிருந்து வெளிவந்தவை. தன்னை அறிந்தவன், மற்ற எல்லோரிடமும் தன்னையே காண்கிறான். அவனுக்குப் ‘பிறர்’ என்பது கிடையாது. நம் கடமை வாழ்வது; இப்படி வாழ்வது அப்படி வாழ்வது என்று திட்டம் போட்டுக் கொள்வது அல்ல. உங்களை சிருஷ்டித்த சக்தி உலகத்தையே ஆக்கியிருக்கிறது. உங்களை ரக்ஷிக்க முடியுமானால், அதனால் உலகத்தையே சம்ரக்ஷிக்க முடியும். நித்யமான பாஷை மெளனம்தான்; நமது பேச்சுதான் அதைக் கலைக்கிறது. எல்லா பாஷைகளையும் கடந்திருக்கிறது மெளனம்!’’ என்றார்.

** 23.4.50 ஆனந்த விகடன் இதழில் இருந்து...

சித்திர ராமாயணம்

சீதா கல்யாணம்

ராமன் வசிஷ்ட விச்வாமித்திர முனிவர்களை யும் தந்தையையும் அடிவணங்கி, தந்தையின் பக்கத்திலிருந்த ஆசனத்தில் அமர்ந்தான். அதே சமயத்தில், சீதையும் மணமண்டபத்துக்கு வருகிறாள்:

அலைகடல் பிறந்து, பின்னை
அவனியில் தோன்றி, மீள
மலையிடை உதிக்கின் றாள்போல்
மண்டபம் அதனில் வந்தாள்.


கல்யாண மண்டபத்தின் கிழக்கு வாசலை நோக்கிச் சீதை தேரிலே வருகிறாள். கிழக்கு முகமாக வீற்றிருக்கும் ராமன் அந்த வருகையையும் அழகையும் பார்க்கிறான். கீழ்த் திசையிலே இளஞ்சூரியன் உதயமாவதுபோல், சீதையாகிய பெண் - ஜோதி தோன்றுவதாகக் கற்பனை.

அருட்களஞ்சியம்

சூரியன் முதலில் கடலிலே உதித்துப் பின்பு அக்கடலுக்கு அடுத்த நிலப்பரப்பில் விளங்கி, அதன்பின் அப்பாலுள்ள மலை மேலும் பிரகாசிக்கக்கூடுமல்லவா? அப்படியே சீதை என்ற ஜோதியும் முதலில் கடலிலே லக்ஷ்மியாகப் பிறந்தாளாம். பின்பு பூமியிலே சீதாலக்ஷ்மியாகத் தோன்றினாளாம். அதன்பின், மலை போன்ற இந்த மண்டபத்திலே உதயம் செய்கிறாளாம் மணமகளாக.
என்ன கற்பனை! இப்பாட்டின் இசை ஓர் ஆனந்தக் கடல் போலவும், இனிய கருத்தும் கற்பனையும் அந்தக் கடலின் அலைகள் போலவும் வருகின்றன.

தேவர்களும் வருகிறார்கள்

மகாலக்ஷ்மியாகச் சீதை பாற்கடலில் தோன்றிய காலத்திலே, மகாவிஷ்ணுவாக இருந்த ராமன் அந்தத் திருமகளை மணம் செய்து கொண்டானாம். அன்றைத் திருக்கல்யாணத் திலும் இன்றைத் திருக்கல்யாணம் விசேஷ அழகுடையதென்று இரண்டு திருமணங்களையும் காணப்பெற்ற தேவர்கள் ஒருமுகமாய் அபிப்பிராயப்படுகிறார்களாம்.

அருட்களஞ்சியம்

கல்யாணச் சிறப்பிலும் விசேஷமாய் மணமக் களான சீதா ராமர்களின் அழகுச் சிறப்பைக் காணவே வந்தார்களாம். இந்தத் தம்பதியரின் சேர்த்தியழகைக் காணத் தாங்களும் தம்பதிகளாக வந்தார்களாம்.

இந்திரன் சசியொடும்
எய்தி னான்: இளஞ்
சந்திர மௌலியும்
தையலாளுடன்
வந்தனன்; மலரவன்
வாக்கி னாளுடன்
அந்தரம் புகுந்தனன்,
அழகு காணவே.


வசிஷ்டர் திருமணச் சடங்குக்கு ஆயத்தம் செய்கிறார்; சீதையும் ராமனும் மண வேதிகளில் வீற்றிருக்கிறார்கள்.

ஜனகன், ராமன் எதிரே நின்று சீதையை ராமன் கையில் தாரை வார்த்துக் கொடுக்கிறான்:

கோமகன் முன்சன
கன், குளிர் நன்னீர்,
‘பூமகளும் பொரு
ளும்என நீஎன்
மாமகள் தன்னொடு
மன்னுதி’ என்னாத்
தாமரை அன்ன
தடக்கையின் ஈந்தான்.


‘‘நீ என் மகளுடன் பூமியும் செல்வமும் போல் நிலை பெற்று வாழ்வாயாக!” என்று ஜனகன் குளிர்ந்த நல்ல ஜலத்தைத் தாரை வார்த்துக் கொடுத்தான். நில வளமும் வனப்பும், கைத்தொழில் வர்த்தகம் முதலான பொருளும் ஒருங்கே கலந்திருப்பதுதான் ஒரு நாட்டுக்குச் சிறப்பு என்பது கம்பன் கருத்து. ‘அப்படியே நீங்களும் வாழ வேண்டும்’ என்பது ஜனகன் வாழ்த்து.

பாணிக்கிரகணம்

அந்தணர்கள் ஆசி கூறுகிறார்கள். பெண்கள் பல்லாண்டு பாடுகிறார்கள். அரசர்கள் ‘போற்றி, போற்றி’ என்று வந்தனம் செலுத்துகிறார்கள். நாவலர்கள் வாழ்த்துகிறார்கள். சங்குகள் முழங்குகின்றன. தேவர்கள் சொரிந்த பூ மழையுடன், அரசர்கள் சொரிந்த பொன்மலர்களும், மற்றையோர் சொரியும் முத்துக்களும், வெண்மலர்களும் கலந்துகொண்டு, பூமியையும் நக்ஷத்திரங்களால் விளங்குகிற வானம் போலச் செய்துவிடுகின்றன. ராமன் ஹோமம் செய்து சீதையைப் பாணிக்கிரகணம் செய்கிறான்.

சீதையின் தளிர் போன்ற மெல்லிய கையை ராமன் தன் பெரிய கையால் பிடித்துக்கொண்டு தீ வலம் வருகிறான். பிறகு, அம்மி மிதித்து அருந்ததி பார்க்கிறார்கள். பின்பு தம்பதியர் முனி சிரேஷ்டர்களான வசிஷ்ட விச்வாமித்திரரை வணங்குகிறார்கள். அப்பால் தசரதனை வணங்கி அரண்மனைக்குள் பிரவேசிக்கிறார்கள்.

கலைத்தேவிக்கும் கல்யாணம்

இத்தகைய சீதா கல்யாணத்திலே உலகம் முழுவதும் மங்கள ஓசைகளால் நிறைந்து விளங்குகிறதாம்.

ஆர்த்தன பேரிகை,
ஆர்த்தன சங்கம்;
ஆர்த்தன நான்மறை,
ஆர்த்தனர் வானோர்;
ஆர்த்தன பல்கலை;
ஆர்த்தன பல்லாண்(டு);
ஆர்த்தன வண்டினம்,
ஆர்த்தன அண்டம்!


அந்த மகிழ்ச்சியில் ‘சிறிது, பெரிது’ என்ற வேற்றுமையில்லாமல், எல்லாம் ஒன்றுபடு கின்றன. அற்ப வண்டுகளும் தங்கள் மகிழ்ச்சியை ரீங்கார பாஷையில் அறிவிக்க, அண்டங்களும் அந்தரத்திலே ஆனந்தக் கூத்தாடுகின்றனவாம். இத்தகைய ஆனந்த கோஷங்களில், ‘ஆர்த்தன பல்கலை’ என்று பல்வேறு கலைகளின் ஆனந்த ஆரவாரத்தைக் கவிஞன் சிறப்பாகக் குறிப்பிடுகிறான். சீதா கல்யாணம் கலைகளுக்கும் வெற்றிதான். அந்தப் பங்குனி உத்தரத்தில்தானே கலைப்பெருஞ் செல்வமான கம்ப ராமாயணம் அரங்கேறியது! அந்த மங்கள முகூர்த்தத்தில்தானே கலைத் தேவியும் கம்பனுக்கு மாலை சூட்டி மகிழ்ந்தாள்!

மாங்கல்ய தாரணம்

பாணிக்கிரகணம் ஆகிவிட்டது. சீதையின் கையைப் பிடித்துக் கொண்டு அரண்மனைக்குள் சென்ற ராமன், தாயார் மூவரையும் பணிந்து ஆசீர்வாதம் பெற்றான். அம்மூவரையும் ஒருங்கே கண்டதும் முதன்முதல் யாரைப் பணிந்தான், தெரியுமா?

தன் தாயான கௌஸல்யா தேவியை அல்ல; முதலில், கைகேயி அடிகளில் தாழ்ந்து வணங்கினானாம். ‘அன்போடு தாழ்ந்து வணங்கினான்’ என்று சொல்ல வந்த கவிஞன், ‘தாயினும் அன்பொடு தாழ்ந்து’ வணங்கியதாகச் சொல்லுகிறான். பெற்ற தாயான கௌஸல்யா தேவியிடம் ராமன் வைத்திருந்த அன்பைக் காட்டிலும் அதிக அன்பைக் கைகேயியிடம் வைத்திருந்தான் என்று குறிப்பிடுகிறான். கைகேயியும் பரதனைக் காட்டிலும் ராமனையே அதிக அன்புடன் நேசித்து வந்தாள்.

பாணிக்கிரகணம் முற்றுப் பெற்றதும் ராமன் கைகேயியை முந்தி வணங்கினான் என்று இங்கே, பால காண்டத்தின் இறுதியில் குறிப்பிடுவது, அயோத்தியா காண்ட முகப்பிலே கைகேயியின் கொடுமையைத் தூக்கிக் காட்டுகிறது. அதுமட்டுமில்லை; விதியின் கையிலே ஒரு பெருங்கருவியாக அமையப் போகிறாள் இவ்வுணர்ச்சி நலம் வாய்ந்த பெண்மணி என்பதையும் சூசிப்பிக்கிறது.
கைகேயியை வணங்கி, கௌஸல்யா தேவியையும் வணங்கி, சுமித்திரையையும் தொழுகிறான் ராமன். சீதையும் அந்த முறைப் படியே மாமியாரை நமஸ்கரிக்கிறாள்.
திருமணம் இனிது முற்றுப்பெறுகிறது.

‘சரி, இவ்வளவு முறையாக வைதிகச் சடங்குகளுடன் நடந்த திருமணத்திலே தாலி கட்டியதாகக் கம்பன் சொல்லவில்லையே’ என்று வாதிப்பவர்கள் உண்டு. ‘வட நாட்டில் தாலி கட்டும் வழக்கம் இல்லை; வட நாட்டுக் கதையானதால் அந்த வழக்கத்தை அனுசரித்துப் பாடியிருக்கலாம்’ என்று சிலர் சமாதானம் சொல்லுகிறார்கள். ஆனால், கம்பன்தான் ராம கதையைத் தமிழ்க்கதையாக்கிவிடுகிறானே? பண்டைத் தமிழர் மரபையொட்டி, சீதா தேவி கல்யாணத்தைக் காதல் மணமாக வர்ணிப்பவன், தாலி கட்டும் தமிழ் வழக்கத்தை மறந்திருக்க முடியுமா? கல்யாண தடபுடலில் தாலி கட்ட மறந்த கதை போல மறந்துவிட்டானா?

அப்படியிருக்க முடியாது. அயோத்திமா நகரத்தைப் பூமிதேவியின் ‘நிறை நெடு மங்கல நாணோ?’ என்றும், சீதாலக்ஷ்மியைப் பெண்களுக்கெல்லாம் ‘திருமங்கல நாண்’ என்றும் வர்ணிக்கும் கவி, மாங்கல்ய தாரணத்தை மறந்திருக்க முடியுமா?

மாங்கல்யச் சரடு அல்லது தாலிதான், மற்ற ஆபரணங்களை அணிந்துகொள்ளும் உரிமையை ஒரு பெண்ணுக்கு அளிக்கிறது என்பது தமிழர் கொள்கை. ஆனால், சீதையை நோக்கி, ‘‘நீ வீசி எறிந்த மற்ற ஆபரணங்கள்தான் உனக்கு ‘மாங்கல்யப் பிச்சை’ அளித்தன, ராமனுயிரைக் காப்பாற்றி!” என்று எவ்வளவு துணிவாகச் சொல்கிறான் அனுமன்.

மற்றைநல் அணிகள்காண், உன்மங்கலம் காத்த, மாதோ!

ஆதலால், மாங்கல்ய தாரணத்தைக் குறிக்கும் பாட்டு ஒருவேளை கால வெள்ளத்திலே மறைந்து போயிருக்கலாமோ?

** 16.12.45 மற்றும் 23.12.45 ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து...

கடவுள்களின் பள்ளத்தாக்கு!

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கையாழ்வார் தன் பாசுரத்தில்...

முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோல் ஊன்றி
விதிர்விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டிருமி
‘இது வென் அப்பர் மூத்தவா’றென்று இளையவர் ஏசா முன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே


- என்று, முதுகில் ஒரு கை வைத்துக் குச்சி ஊன்றி இருமிக்கொண்டு, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டு, ‘தாத்தா போறார் பாரு’ என்று சின்னப் பையன்கள் கேலி பண்ணுவதற்கு முன்னமே பத்ரி போய் சேவித்துவிடுவோம் என்று வற்புறுத்தியுள்ளார். எனவே, மேற்சொன்ன காரணங்களால் பத்ரி நாராயணனை வணங்கப் பயணப்பட தீர்மானித்துவிட்டேன். முதலில், ஆக்ஸ்போர்டு அட்லாஸ் ஒன்று வாங்கிப் பார்த்தால் பத்ரி, உத்தரப்பிரதேசத்தில் இந்தியாவின் உச்சந்தலையில் திபெத், சைனா எல்லைகளின் அருகில் இருக்கிறது. இருந்தும் அதற்குப் போகிற வழிகள், பயண ஏற்பாடுகள் எல்லாம் மிகச் சுலபம். காசு வேண்டும்; அவ்வளவுதான்!

நாங்கள் போன பகுதி உத்தரப் பிரதேசத்தின் கடுவால் ஜில்லாவின் மலைப்பிரதேசம். இமாலய மலையின் பர்வதங்களின் பக்கவாட்டில் கீறி கோடு போட்டாற்போல பார்டர் ரோடு இலாகா சாமர்த்தியமாக அமைத்த பாதை. ஒரு மலையில் ஏறி இறங்கி, ஒரு பெய்லி பாலத்தைக் கடந்து, அடுத்த மலையில் ஏறி மறுபடி இறங்கிச் செல்லும்போது கூடவே அலகாநந்தா நதி பிடிவாதமாகத் தொடர்கிறது.

அருட்களஞ்சியம்

சிலவேளை சிமென்ட் பச்சையில், சிலவேளை வெண்மையாக, சிலவேளை அகலமாக அருகிலேயே, சிலவேளை நரைமுடிபோல மெல்லிசாகத் தெரியும் ஆழத்தில்! அநேக உற்சாகத்துடன் கற்களை உருட்டிக் கொண்டு, சாலையின் குறுக்கே உற்சாகமாகச் செல்ல.. எந்தச் சமயத்திலும் கல் குன்றோ மலைச்சரிவோ எதிர் லாரியோ வரக்கூடிய, உடல் பூரா அட்ரினலின் பிரவகிக்கும் பயணம். ஆழ்வார் சொன்னது சத்தியமே. இளைய வயதிலேயே செல்ல வேண்டிய பயணம். இந்த ரோடுகளைத் தினம் தினம் இயற்கையோடு போராடித் திறந்து வைத்திருப்பதே பெரிய சாதனைதான்.

அருட்களஞ்சியம்

திருமங்கையாழ்வார்- தேவப்ரயாகை, ஜோஷிமட், பத்ரி மூன்று இடங்களுக்கும் வந்து பாடியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பத்ரிகாசிரமத்துக்குப் போகும் வழி உங்களுக்கெல்லாம் தெரியும். டெல்லி போய் அங்கிருந்து ஹரித்வார், ரிஷிகேசம், தேவப்ரயாக், கர்ணப்ரயாக், நந்தப்ரயாக், ருத்ரப்ரயாக் விஷ்ணுப்ரயாக் (ப்ரயாக் என்றால் சங்கமம்!) என்று அங்கங்கே அலகாநந்தாவில் பாகீரதி, மந்தாகினி போன்ற நதிகள் வந்து கலக்கும். சுமார் அரை டஜன் ப்ரயாகைகளைக் கடந்து ஸ்ரீநகர் (காஷ்மீரத்தது அல்ல). அதன்பின் பீப்பல்கோட்டி, ஜோஷிமட், பத்ரிகாசிரமம். ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு’ என்று சொல்லப்படும் சுந்தரச் சரிவு. வீழ்ச்சி உயரம் 10,350 அடி. பாதை ஹரித்வாரிலிருந்து 333 கிலோ மீட்டர்!

** 1.11.92 ஆனந்த விகடன் இதழிலிருந்து...