பிரீமியம் ஸ்டோரி

கால பைரவர்

பைரவ தரிசனம்!

திண்டுக்கல், பேருந்து நிலையம் அருகிலுள்ள மகா கணபதி ஆலயத்தில் அருள்கிறார் கால பைரவர். இவருக்குப் பதினாறு வகை அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், தீராத வியாதிகளும் தீரும் என்பது நம்பிக்கை. அதேபோல், ஜாதக தோஷங்களின்  பாதிப்பு குறைவதற்கு ஏலக்காய் மாலை அல்லது முந்திரி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். திருஷ்டி தோஷம் விலக புனுகு, ஜவ்வாது, மரிக்கொழுந்து, அல்லி, செவ்வரளி மற்றும் சிவப்பு வஸ்திரம் சமர்ப்பித்து வணங்குகிறார்கள்.

ஆதி பைரவர்

திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில், சுமார் 12 கி.மீ தொலைவு பயணித்தால் விராலிப்பட்டி பிரிவு வரும். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சிறுமலைச் சாரலில்  அமைந்திருக்கிறது தவசிமடை மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்.

பைரவ தரிசனம்!

பரத்வாஜர் சித்தர் வழிபட்ட இந்த ஆலயத்தில் அருள்கிறார் ஆதி பைரவர். இங்கே சிவனாருக்கு எதிரிலேயே காட்சி தருகிறார் இவர். இவருக்கு மாதம் தோறும் மக நட்சத்திரத்திலும், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் ஆகிய நாட்களிலும் சிறப்பு அபிஷேகம் - பூஜை நடைபெறும். தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு செவ்வரளி சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம்! இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி அன்று காலையில் சிவனார் மீதும்,  மாலை நேரங்களில் இந்த பைரவரின் மீதும் சூரிய ஒளி விழும். அப்போது இந்த பைரவரைத் தரிசித்து வழிபடுவதால், பிரச்னைகள் யாவும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வடுக பைரவர்

பைரவ தரிசனம்!

திண்டுக்கல்லில் இருந்து 5 கி.மீ தொலைவில், NGO காலனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி திருக்கோயிலில் அருளும் வடுக பைரவர் மிகுந்த வரப்பிரசாதி! இவருக்கு ஞாயிறு ராகு காலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை மாதம் பைரவ ஜன்மாஷ்டமியில் திருமஞ்சள் பொடியால் அர்ச்சித்து இவரை வழிபடுவது சிறப்பு. மேலும், அஷ்டமி தினங்களில் வடுக பைரவருக்குப் பாலபிஷேகம் செய்து வழிபடுவதால் ஆயுள் விருத்தி ஏற்படும்; செவ்வரளி மற்றும் புனுகு சார்த்தி வழிபடுவதால், சகல நன்மைகளும் கைகூடும்.

சொர்ண ஆகர்ஷண பைரவர்

பைரவ தரிசனம்!

திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில் சுமார் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தாடிக்கொம்பு- செளந்தர்ராஜ பெருமாள் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு, கார்த்திகை மாத ஜன்மாஷ்டமி விசேஷம்! அன்று ராகு நேரத்தில், சனி ஹோரையில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், சனி பார்வையின் உக்ரம் குறையும்; சனி தோஷம் விலகும். மேலும், பைரவருக்கு மஞ்சள் தூள் மற்றும் செவ்வரளிப் பூவினால் அர்ச்சனை செய்து, சிவப்பு வஸ்தி்ரம் படைத்து வழிபட்டால், கடன் தொல்லை, குடும்பப் பொருளாதார பிரச்னை, சொத்துப் பிரச்னை, பில்லி, சூனியம் போன்ற அனைத்து பிரச்னைகளும் விலகும் என்கிறார்கள்.

 தொகுப்பு: சா.நித்யகுமரன்

படங்கள்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு