Published:Updated:

`காணும் யாவும் தெய்வம்’ என்ற உணர்வைத் தரும் வள்ளிமலை! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி! பரவசப் பயணம் - 11

`காணும் யாவும் தெய்வம்’ என்ற உணர்வைத் தரும் வள்ளிமலை! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி! பரவசப் பயணம் - 11
`காணும் யாவும் தெய்வம்’ என்ற உணர்வைத் தரும் வள்ளிமலை! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி! பரவசப் பயணம் - 11

`காணும் யாவும் தெய்வம்’ என்ற உணர்வைத் தரும் வள்ளிமலை! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி! பரவசப் பயணம் - 11

மனமும் உடலும் இணைந்து செயல்படுவது என்பது குறைந்துகொண்டே வருகிறது. உடல் ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும்; மனமோ வேறு ஒரு சிந்தனையில் லயித்திருக்கும். பழக்கத்தின் காரணமாகவும் நம் உடல் அனிச்சையாகவே பல செயல்களைச் செய்கிறது. ஆனால், மனமும் உடலும் எளிதாக ஒருமைப்படக்கூடிய இடங்கள் என்று எதுவும் இருக்கிறதா என்று கேட்டால், கோயில்கள்தாம் நம்முடைய ஒரே பதிலாக இருக்கும். அவற்றில்கூட இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் அமைந்திருக்கும் கோயில்கள், நம் மனதையும் உடலையும் ஒருமைப்படுத்துவதுடன், பரவச அனுபவத்தையும் நமக்குத் தருகின்றன. 

வருங்காலத்தில் பரபரப்பான சூழலில் நாம் சிக்கித் தவிக்கப்போகிறோம் என்பதை தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்திருந்த நம் முன்னோர்கள், அதன் காரணமாகவே இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கோயில்களை அமைத்துச் சென்றிருக்கின்றனர். நம்முடைய வள்ளிமலை யாத்திரையில் நமக்கு ஏற்பட்ட இத்தகைய சிந்தனைகளுடனே, வள்ளிமலை வள்ளலை - அழகு முருகனை தரிசித்துவிட்டு, வள்ளிமலைச் சித்தரின் தியான மண்டபத்தை அடைந்தோம். அங்கு நாம் கண்ட வேம்பு, வில்வம், அரசு ஆகிய விருட்சங்களைப் பற்றி உடன் வந்த அன்பர் கூறிய தகவல் நம்மை மெய்சிலிர்க்கச் செய்தது.

மூன்று விருட்சங்களுமே மூன்று சித்தர்களின் ஜீவசமாதிகள் என்று கூறிய அன்பர், வள்ளிமலைச் சித்தர் அங்கே வந்தபோது மூன்று சித்தர்களின் தெய்விக உடல்கள் அழிந்துபோகாமல் தியான நிலையில் இருந்ததைக் கண்டு, அந்த இடத்தை மூடி, மூன்று மரங்களை நட்டு வைத்தார் என்றும் தெரிவித்தார். அருகில் உள்ள அறிவிப்புப் பலகையும் அன்பர் கூறிய செய்தியை உறுதிப்படுத்தியது. சித்தர்களின் அம்சமான அந்த மரங்களை வணங்கிவிட்டு, மலையின் உச்சியை நோக்கி ஏறத் தொடங்கினோம். பாறைகள் வழுவழுப்பாக வழுக்கிவிடுவதுபோல் இருந்ததால், மிகவும் கவனமாகக் கால் பதித்து ஏறினோம்.

மலையுச்சியை நோக்கி நடந்தோம். பாதையின் ஆரம்பத்திலேயே ஓர் இடத்தைக் காட்டிய அன்பர், அந்த இடத்தில்தான் முருகப்பெருமான் வேங்கை மரமாக நின்றதாகக் கூறினார். (தற்போது அங்கே மரம் இல்லை) அருகிலேயே முருகப்பெருமான் குளித்ததாகச் சொல்லப்படும் சுனையும் காணப்பட்டது. சற்றுத் தொலைவு சென்றதும் மற்றொரு சுனையைக் காட்டி, அந்தச் சுனையில்தான் வள்ளியம்மை மஞ்சள் தேய்த்துக் குளித்ததாகத் தெரிவித்தார் அன்பர். இரண்டு சுனைகளிலும் பாசி படர்ந்த நிலையில் தண்ணீர் காணப்பட்டது. வழியெங்கும் மலைப் பாறைகள் மஞ்சள் பூசியதுபோல் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டன. மலைப் பாறைகளின்மீது படியும் ஒருவித உப்புச் சத்துதான் இப்படி மஞ்சள் நிறமாக மாறுவதாகச் சொல்கிறார்கள். அந்தச் சத்தை சிலா சத்து என்கிறார்கள். ஆனால், வள்ளியம்மை விட்டுச் சென்ற மஞ்சள் என்றே நினைத்து, அதைத் தடவி எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள் பக்தர்கள். 

மலை உச்சியில் சிறிய அழகிய மண்டபத்தின் கீழே மல்லிகார்ஜுனர் அருள்பாலிக்கிறார். சிமென்ட் பூச்சு எதுவுமின்றி கட்டப்பட்ட அழகிய சிற்ப மண்டபம் இது. பெரிய ஆவுடையில் சிறிய லிங்கத் திருமேனியராகக் காட்சி அருள்கிறார். முருகப் பெருமானுக்கும் வள்ளிப்பிராட்டிக்கும் ஈசன் இங்கே காட்சி தந்ததாகச் சொல்கிறார்கள். ஈசனுக்கு நீரால் அபிஷேகம் செய்து, அல்லிமலர்களால் அலங்கரித்து வணங்கினோம்; வணங்கி மகிழ்ந்தோம்.
 

மலையைச் சுற்றிலும் காணக் காண இயற்கை அழகு நெஞ்சை அள்ளுகிறது. எங்கும் பசுமை, எங்கும் பிரமாண்ட மலைகள் என்று காட்சியளிக்கிறது. அங்கிருந்து பார்த்தால் ஞானமலை, பொன்னைநதி எல்லாமே தெரிகிறது. ஆந்திராவிலிருந்து வரும் பொன்னை நதி காலத்தால் காவிரிக்கு மூத்தவள் என்கிறார்கள். நாம் நின்றிருந்த மலைச்சரிவுக்குக் கீழே, செதுக்கிய சிற்ப வடிவில் வெங்கடாசலபதி காணப்படுகிறார். அவரையும் வணங்கிவிட்டு, இயற்கை அழகைவிட்டுப் பிரிய மனமில்லாமல் இறங்குகிறோம். 

வழியெங்கும் பாறைகளின் இடுக்குகளில் எல்லாம் சுனை நீர் காணப்படுகிறது. அந்தச் சுனைகளில் பூத்திருக்கும் அல்லி மலர்கள் நமக்கு வள்ளியம்மையை நினைவுபடுத்தின. வழியில் ஒரு பெரிய தாமரையைக் கண்டு ரசித்தபடி இறங்கிக்கொண்டிருந்தோம். மலையின் இடப் புறமாகச் சென்ற நீண்ட பாதையில் நம்மை அழைத்துச் சென்றார்கள். அங்கு கண்ட காட்சி நம்மை மலைக்கச் செய்தது. 

ஆம், ஒரு பிரமாண்ட மலைப்பாறையைச் செதுக்கி கலைப்பொக்கிஷமாகவே மாற்றியிருக்கிறார்கள். சமணர்களின் படுக்கைகளும், சமண சமய தீர்த்தங்கரர்களின் சிலைகளும் அங்கே பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. நுண்ணிய அந்தக் கலைப்படைப்புகள் நம்மைப் பெரிதும் வியக்கச் செய்தன.

கங்க ராஜ மல்லன் (கிபி 816-843) காலத்தது என்று கல்வெட்டு கூறுகிறது. மலையைச் செதுக்கி ஒரு கலைக்கூடமாக மாற்றிய விந்தையை எண்ணியவாறே வள்ளிமலையை விட்டு இறங்கினோம். 

வள்ளிமலை அழகினைக்காண இங்கே க்ளிக் செய்யவும்...

ஆழியை ஆழாக்கு அளக்க முனைந்ததைப் போலவும், அண்டமதை அளக்க முழங்கை முனைந்ததைப் போலவும், முருகப்பெருமானே! நீயும் நின் தேவி வள்ளியம்மையும் உலாவிய இந்த வள்ளிமலையில் எமக்குக் கிடைத்த அனுபவங்களை, ஆன்மிகப் பரவசத்தை எம்மால் முடிந்த வரை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளோம். 

'தீபக்கோயிலில் அதன் சுடர் தெய்வம்; மலர்க்கோயிலில் அதன் நறுமணம் தெய்வம் என்பார்கள். ஆனால். எம் ஐயனே, அழகு முருகனே! நீ கோயில் கொண்டு அருளாட்சி செலுத்தும் இந்த வள்ளிமலையில் காணும் யாவுமே தெய்வம்' என்று முருகப்பெருமானின் திருவருளைப் போற்றியபடி, இயற்கை விரிந்து பரந்து தெய்வமாகக் காட்சி தரும் வள்ளிமலையை மறுபடியும் ஒருமுறை தொழுதுவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

பயணம் தொடரும்...

அடுத்த கட்டுரைக்கு