Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

க்னாதிபதி பாப கிரகங்களுடன் (வெப்ப கிரகங்கள்)இணைந்து இருந்தால் உடல் வலிமை குன்றிவிடும். சனி, செவ்வாய், சூரியன், தேய்பிறைச் சந்திரன், ராகு, கேது ஆகியவை பாப கிரகங்கள் என்கிறது ஜோதிடம். இவற்றின் சேர்க்கையால் (ஏதாவது ஒன்றோடு இணைந்தாலும்) தேகத்தின் சுகாதாரம் பாதிக்கப்படும்.

பரிணாம வளர்ச்சியில் 60 வயது வரை சுகாதாரம் படிப்படியாக வளர்ந்து நிறைவை எட்டிவிடும். அறுபதுக்குப் பிறகு அதன் வளர்ச்சி குன்றிவிடும். சிறு வயதில், பரிணாம வளர்ச்சியில் வளர வாய்ப்பு இல்லாதபடி பாப கிரகங்கள் இடையூறு விளைவிக்கும். அப்படி, சுகாதாரத்தை இழக்கும்போது வாழ்வில் இன்பத்தைச் சுவைக்க முடியாது. பொருளாதாரம், படிப்பு, பதவி, மனைவி, மழலைகள், வீடு, வாகனம் எல்லாம் நிறைவை தந்தாலும், உடல் சுகாதாரம் வீழ்ச்சியடைந்தால் மகிழ்ச்சியை உணர முடியாமல் செய்துவிடும். மகிழ்ச்சியை உணர்வதற்கு உடல் சுகாதாரமும் உள்ளத்தெளிவும் அடிப்படைத் தகுதிகள்.

இன்றைய நாளில் உடல், மனம் இந்த இரண்டின் சுகாதாரம் போதுமான அளவை எட்டாத இளைஞர்கள், மருந்துக்கும் கட்டுப்படாது என்பதை அறிந்தும் திருமணத்தில் இணைந்து, விவாகரத்தைச் சந்திக்கிறார்கள். ஆனால், ஜோதிட பிரபலங்கள் இது குறித்து ஆராயாமல் அலட்சியப்படுத்திவிட்டு, இணை சேர்த்து, விவாகரத்தைச் சந்திக்கவைப்பது தகாது.

முன்னோர்கள் சொன்னார்கள்

கர்மவினையானது மனம் உடற்பிணி வாயிலாக சுகாதாரத்தை உணர முடியாமல் செய்துவிடுகிறது (பூர்வஜன்மக்ருதம் பாபம் வ்யாதிரூபேண பாததெ). மருந்து பிணியை அகற்றும்; பிணிக்குக் காரணமான கர்மவினையை அகற்றாது. மருந்து எடுத்துக்கொண்டும் அகல வேண்டிய பிணி அகலாமல் இருப்பதற்கு, கர்மவினையே காரணம். புதுத் தலைமுறையினர் சாஸ்திரம், ஜோதிடம் ஆகியவை குறித்த வாசனை அற்றவர்களாக இருப்பதால், விஞ்ஞான ரீதியான விளக்கத்தை ஏற்பதால், பரிகாரத்தில் நம்பிக்கை இல்லாமல் மாறி மாறி மருத்துவனையும் மருந்தையும் எடுத்துக்கொண்டு, உயிர் பிரியும் வரையிலும் தமது சுகாதாரமின்மையை தக்கவைத்துக்கொள்வர். விஞ்ஞான மருத்துவத்தையும் குறை சொல்லிக்கொண்டு சமாதானம் அடைவார்கள்! பாப கிரகத்தின் சேர்க்கை மாறாப் பிணியைத் தோற்றுவிக்காது. கர்மவினை லேசாக இருந்தால், பிணியும் ஒரு வரையறையோடு மறைந்துவிடும். அதை ஜோதிட ஆராய்ச்சியில் தெரிந்துகொள்ள இயலும்.

அதுபோல் 6, 8, 12-ல் லக்னாதிபதி இணைந்தாலும் சுகாதாரம் பாதிக்கும். பகைவர்களின் எதிர்ப்பு, கடனில் மூழ்கி திருப்பிக் கொடுக்க இயலாமையால் தவிப்பு, வீண் பழி ஆகியவற்றின் வாயிலாக மனம் அமைதியை இழந்து, உடற்பிணிக்குக் காரணமாகிவிடும். அதுவும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உணர விடாமல் தடுக்கும். இந்த இரண்டு இடங்களிலும், அதாவது லக்னாதிபதி பாபியின் சேர்க்கையில் இருக்கும் தறுவாயிலும், லக்னாதிபதி 6, 8, 12 வீடுகளில் ஒன்றில் இருந்தாலும், சுப கிரகத்தின் பார்வை லக்னாதிபதிக்கு இருந்தால், பிணி அவனைத் தாக்கி சுகாதாரத்தை இழக்க வைக்காது (லக்னேச்வர:க்ரூரஸமஸ்வித:). லக்னாதிபதி சுபனானாலும் அசுபனானாலும் அதில் பிறந்தவனுக்கு நன்மையை மட்டும் செய்வான் என்கிறது ஜோதிடம்.

லக்னாதிபதி அசுப கிரகச் சேர்க்கையில் தன் பலத்தை இழக்கிறான். 6, 8, 12-ல் வந்ததால் பலமிழக்க நேரிட்டது. ஆனால், சுப கிரகத்தின் பார்வை, பலம் இழப்பதை தடுத்து பலத்தை ஊட்டும். லக்னாதிபதி தனது இயல்பின்படி செயல்படுகிறான். அதன் காரணமாக ஜாதகனும் சுகாதாரம் நிறைவு பெற்று விளங்குகிறான். வந்த இடையூறு சுபபார்வையில் விலகியதால் சுகாதாரம் வலுப்பெற்று விடும்.
தோஷம் அதாவது கெடுதல் அல்லது இடையுறு ஆகியவற்றை விலக்குவதற்கு கிரகங்களின் சேர்க்கையைவிட பார்வை பலம் பொருந்தியது என்கிறது ஜோதிடம். பெண் ஜாதகத்தில் 8-ல் இருக்கும் செவ்வாயை, குரு 7-ம் பார்வையாகப் பார்த்தால் தோஷம் விலகும் என்கிறது ஜோதிடம். 6, 8, 12-ம் வீட்டுக்கு உடையவர்களில் ஒருவருடன் இணைந்து, லக்னாதிபதி லக்னத்தில் இருந்தாலும் அவனது சுகாதாரம் கெட்டுவிடும். கெட்டவர்களின் (பாப கிரகம், அசுப கிரகம், 6, 8, 12-க்கு உடையவர்கள்) சேர்க்கைதான் சுகாதார இழப்புக்குக் காரணம். 6, 8, 12-ல் லக்னாதிபதி இருந்தாலும் அந்த வீட்டின் சேர்க்கை உண்டு. லக்னாதிபதி அவர்களோடு இணைந்தாலும், அவர்கள் (6, 8, 12) லக்னத்தில் வந்து லக்னாதிபதியோடு இணைந்தாலும் பலன் ஒன்றுதான். அப்போதும் அவன் சுகாதாரத்தை இழப்பான். 7-ம் பார்வையாக சுப கிரகம் பார்த்தால் பாதிப்பு அகன்றுவிடும். உண்மையில் லக்னாதிபதி தானாகவே பலமிழந்தவனானாலும், அவன் கேந்திரத்திலோ த்ரிகோணத்திலோ இருந்தால் (பாப கிரகச் சேர்க்கை இல்லாமல் இருந்தால்), அவன் சுகாதாரம் செழிப்புடன் நீடிக்கும்; சுகாதாரம் நிறைவுபெறும்; வாழ்க்கையில் மகிழ்ச்சியை உணர்வான் என்கிறது ஜோதிடம் (துஸ்தானபேனாபியுதேன).

இங்கு இரண்டு விஷயங்கள் கவனத்துக்கு உரியவை. பலம் குன்றிய லக்னாதிபதி 1, 4, 5, 7, 9, 10-ல் இருந்தால் பலம் பெற்று திகழ்கிறான். இது, கேந்திர த்ரிகோண ஸ்தானத்தின் பெருமை. பலம் பெற்ற லக்னாதிபதி 6, 7, 8-ல் வருவது அல்லது 6, 7, 8-ல் இருப்பவன் லக்னத்தில் அமர்ந்து இருப்பது பலம் குறைய வழி வகுத்துவிடும். லக்னாதிபதி எங்கிருந்தாலும், ஸ்தானம், பாப கிரகத்தின் சேர்க்கை இருக்க, சுபக்ரஹத்தின் பார்வை இருந்தால் லக்னாதிபதி சிறந்த பலனை ஏற்க வைப்பான். இங்கு பார்வையின் பெருமை விளக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னோர்கள் சொன்னார்கள்

ஸ்தான பலம் (வீட்டின் பெருமை), பார்வை பலம், சுப கிரகத்தின் பார்வை ஆகியன வரப்போகும் இடையூறை முற்றிலுமாக அகற்றிவிடும். லக்னாதிபதி எந்த கட்டத்தில் இருக்கிறானோ, அந்தக் கட்டத்துக்கு உடையவன் (அந்த ராசிநாதன்) கெட்ட ஸ்தானத்தில் 6, 8, 12-ல் இருந்தால், பிணி ஏற்படலாம் அல்லது பலம் குன்றலாம் என்கிறது ஜோதிடம் (லக்னேச்வராதிஷ்டிரத ராசினாதோ). அதாவது லக்னாதிபதியின் பலத்தை எடை போட, அவன் அமர்ந்த ராசிநாதனின் பலத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஜோதிடம் வலியுறுத்தும். லக்னாதிபதி அமர்ந்த ராசிநாதன் பலம் பெற்றவனாக இருந்தால், லக்னாதிபதி இயல்பாகவே பலம் குன்றியிருந்தாலும் பலம் பெற்றுத் திகழ்வான் என்கிறது ஜோதிடம். அந்தந்தப் பாவத்துக்கு (வீட்டுக்கு, ராசிக்கு) அதிபதிகள் அமர்ந்த ராசிநாதனின் பலத்தையும் சேர்த்து பாவாதிப் பலனை நிர்ணயம் செய்ய வேண்டும் (தத்தத் க்ரஹாதிஷ்டித ராசினாதை:). பாவாதிபதி அமர்ந்த ராசிநாதனின் பலம் - பலமின்மை ஆகியவற்றை உணர்ந்து பாவாதிபதியின் பலனை இறுதி செய்ய வேண்டும்.

லக்னத்தில் பாப கிரகம் (வெப்ப கிரகம்), 5 அல்லது 9 - ல் குளிக கிரகம் இருந்தால் பிறந்தவன் (லக்னாதிபதி) பயத்துக்கு ஆட்பட்டு நிம்மதியை இழப்பான். ‘எனது சேமிப்புகள் பறிபோய்விடுமோ, பொருள்களை திருடன் கைப்பற்றிவிடுவானோ. எனக்குக் கிடைக்க வேண்டியவை பறிக்கப்பட்டுவிடுமோ’ என்ற பயம் அவனை விட்டு விலகாது.

லக்னத்தில் ராகு, குளிகன் சேர்ந்து இருந்தாலும் பயம் அகலாது. லக்னாதிபதி ராகுவுடன் மட்டும் இணைந்திருந்தால், அவன் திருட்டு பயம் ஏற்படுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பான். எந்தப் பொருள் அவனிடம் இருந்தாலும், எவரேனும் அதை திருடிக்கொண்டு விடுவார்களோ என்ற பயம் இருந்து கொண்டிருக்கும் (பாபெ விலக்ளே குளிகேத்ரிகோணெ). குளிகன் என்ற கிரகம் 11-ம் வீட்டில் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகன் பயமில்லாமல் இருப்பான். 11-ல் குளிகன் இருந்தால் அவனுக்கு நிம்மதி இருக்கும். மற்ற 11 வீடுகளில் குளிகன் எங்கு தென்பட்டாலும், அந்த வீட்டுக்கு (ராசிக்கு) உகந்தபடி, ‘கெடுதலை சந்திப்போமோ’ என்ற பயத்தில் இணைந்திருப்பான்.

பயம் ஒன்றுதான் மனிதனை அலைக்கழிக்கும். இல்லாத பயத்தை இருப்பதாக எண்ணினாலும் பயம் இணைந்துவிடும். சிலபேர், பாம்பை நினைத்து பயந்து கொண்டிருப்பார்கள். பாம்பை எங்காவது பார்த்தாலும், அது நம்மைத் தீண்டிவிடுமோ என்று மனம் பயத்தில் ஆழ்ந்துவிடும். இரவில் வெளியே செல்ல பயப்படுபவர்களும் உண்டு; பிறர் துணையோடு மட்டுமே இரவில் செல்ல முனைவார்கள். இரவில் தன்னந்தனியே உறங்கப் பயப்படுவார்கள். எந்த இடத்திலும் தனிமையில் இரவில் தங்கத் தயங்குவார்கள். பயணத்தின்போது, பொருள்களை தனது உடைமைகளைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். ரயில் பயணத்தில் பணத்தை கையில் வைத்துக்கொண்டு (மறைத்துக்கொண்டு) உறங்குவார்கள். ரயில் எங்காவது தடம் புரண்டதாகக் கேள்விப்பட்டால், தான் பயணிக்கும் ரயிலும் தடம்புரண்டுவிடுமோ என்று பயப்படுவார்கள்.

செல்போனில் பேசும்போது அது வெடித்து முகம் ரணமானதைக் கேள்விப்பட்டால், செல்போனில் பேசுவதைத் தவிர்ப்பார்கள். எவரையேனும் நாய் கடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை பார்த்தும் கேட்டும் இருப்பவன், நாயைக் கண்டவுடன் அது கடித்துவிடுமோ என்று பயப்படுவான். இப்படி இல்லாத பயத்தை இருப்பதாக நினைக்கும் எண்ணம், அவன் மனதை விட்டு விலகாது. அது அவனது வாழ்வில் நிம்மதியைப் பறித்து விடும். திருடனைப் பார்த்து பயப்படும் காவல்துறையினரும் உண்டு. மடியில் கனம் இருந்தால் வழியில் பயப்படுபவர்களும் உண்டு. பல பிரபலங்கள், மகான்களிடம்கூட இந்த பயம் உண்டு. வெட்கம் காரணமாக அதை வெளிப்படுத்த மாட்டார்கள்.

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜாதகங்களினால் இந்தக் குறை இருந்தால் அவன் மனம் நிம்மதி அடையாது. ‘என் கணவன் பயந்த சுபாவம் உடையவர்’ என்று மனைவி சொல்லுவது உண்டு. ‘என் மகன் தொட்டதற்கு எல்லாம் பயப்படுகிறான். அவன் எப்படி வாழப்போகிறானோ’ என்று அங்கலாய்க்கும் அன்னையும் உண்டு. சின்ன விஷயம் ஆனாலும் பெரிய காரியங்களில் தோல்வியுறச் செய்துவிடும்.

லக்னத்தில் சனி இணைந்தால் அல்லது 7-ம் பார்வையாகப் பார்த்தால், எதை எடுத்தாலும் அதில் பயம் தொற்றிக்கொண்டு விடும். பணம் சேமிக்க முற்பட்டு வங்கியில் தவணை முறையில் செலுத்தினாலும், ‘ஒருவேளை சேமிப்பு கிடைக்காமல் போய்விடுமோ’ என்ற பயம் இருக்கும். வைப்பு நிதியை உரிய நேரத்தில் கிடைக்கவிடாமல் ஏமாற்றிவிடுவார்களோ என்ற பயம் இருக்கும். பணத்தைக் கையாளும் வேலையில் இருப்பவனுக்கு, பண இழப்பால் அரசாங்க தண்டனையை ஏற்கவேண்டி வருமோ என்று பயம் எழும். இன்னும் சிலருக்கு வேலை போய்விடுமோ என்றோ,  திருமணத்தில் இணைந்த மனைவி தன்னை கைப்பொம்மையாக்கி விடுவாளோ என்றோ பயம் இருக்கும். பயம் தோன்றாத விஷயங்களிலும் பயத்தைப் பார்க்கும் மனம் உண்டு. அப்படியான பயம் மற்றவர்கள் எப்படி உபதேசித்தாலும், தெம்பு அளித்தாலும், விளக்கி கூறினாலும் அவனை விட்டு விலகாது.

படுக்கும் வேளையில் அறையில் பாம்பைப் பார்த்தான் ஒருவன். அதை விரட்டத் தடி எடுத்து வந்தபோது பாம்பைக் காணவில்லை. அந்த இரவு அவனுக்கு உறக்கம் வராது. பாம்பு கடித்துவிடுமோ என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும். அவனே அந்த பாம்பைப் பார்த்து அடித்து மடியச்செய்து வெளியே தூக்கி எறிந்தாலும்கூட பயம் விலகாது. பாம்பு தனியே வராது, ஒருவேளை அதன் இணை பாம்பு அறையில் இருந்து இரவில் கடித்தால் என்ன செய்வது என்று அவன் மனம் தானாகவே பயத்தைத் தழுவிக்கொள்ளும். எத்தனையோ கணவன்மார்கள் மனைவியின் துணையின்றி செல்லமாட்டார்கள். மனைவிக்குத் தெரியும், தன் கணவர் காரணமில்லாமல் பயப்படுகிறார் என்று. வெளியில் சொன்னால், அது கணவனை குறைபாடாகப்படும் என்பதால் வெளியே சொல்லமாட்டார்கள்!

சனி கிரகத்தை துக்க காரகன் என்று சொல்லும் ஜோதிடம். அவன் லக்னத்தில் இருந்தாலும், லக்னத்தைப் பார்த்தாலும், துக்கத்துக்குக் காரணமான பயத்தை உண்டு பண்ணுவான் என்கிறது ஜோதிடம் (நிஹந்த பாபக்ருத்சனி:).

இப்படி, ஆழமாக ஆராயப் பரிந்துரைக்கும் ஜோதிடத்தை அலட்சியப்படுத்திவிட்டு, சந்தர்ப்பத்துக்கு உகந்த வகையில், கேட்பவரின் மனநிலைக்கு உகந்தவாறு பலன் சொல்லும் ஜோதிட பிரபலங்களை அடையாளம் காண இயலாமல் தவிக்கிறார்கள் அப்பாவிகள்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism