பிரீமியம் ஸ்டோரி

‘நாரதரைச் சந்தித்துப் பல நாட்கள் ஆகிவிட்டதே, எங்கு இருக்கிறாரோ, என்ன செய்கிறாரோ’ என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ‘நாராயண’ நாமத்தை நாவினிக்க ஓதியவாறு வந்தமர்ந்தார் நாரதர். “தக்கோலம் அழகுராஜ பெருமாள் கோயில் ஆக்கிரமிப்புகள் பற்றி விசாரிக்கிறேன் என்று கிளம்பிப் போனீர்களே, என்னதான் ஆயிற்று?” என்று ஆர்வம் தாங்காமல் கேட்டோம்.

“பலமுறை கோரிக்கைகள் விடுத்தும், எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று ஊர்மக்கள் சொன்ன பிறகும் விசாரிக்காமல் இருப்பேனா! வேலூர் மாவட்ட இந்துச் சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையரைத் தொடர்புகொண்டு விசாரித்தேன். ‘அழகுராஜ பெருமாள் கோயில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறோம். நானும் உடனடியாக நேரில் அந்தக் கோயிலுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்கிறேன். கூடிய விரைவில் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, திருக்கோயில் திருப்பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்போம்’ என்று கூறியிருக்கிறார்” என்ற நாரதர்,

“கைகொடுங்கள்! உங்கள் குழுவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!” என்றார்.

அவருடன் கைகுலுக்கிய படியே, “திடீரென்று எதற்கு இந்தப் பாராட்டு?” என்றோம் புரியாமல்.

“கடந்த சக்தி விகடன் இதழை மகாமகச் சிறப்பிதழாகக் கொடுத்திருந்தீர்கள் அல்லவா? கூடவே, முழுமையான கையேடு என்றும் ஓர் இணைப்பிதழ் கொடுத்திருந் தீர்களே... இரண்டும் மிகப் பிரமாதம் என்று, நான் போன இடங்களில் எல்லாம் உங்கள் வாசகர்கள் என்னிடத்தில் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். அதற்குத்தான் இந்தப் பாராட்டு!” என்ற நாரதரிடம் நாமும், “உண்மைதான் நாரதரே! வாசகர்கள் தொடர்ச்சியாக போன் மூலமாகவும், கடிதங்கள் வாயிலாகவும் தங்கள் பாராட்டுக்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்!” என்றோம்.

“மகிழ்ச்சி! உங்கள் சிறப்பிதழைப் படித்த கையோடு, குடந்தைக் குப் போய் ஒரு ரவுண்டு பார்த்து வருவோமே என்றுதான் பறந்து விட்டேன்!”

நாரதர் உலா

“குடந்தை எப்படியிருக்கிறது? மகாமகத்துக்குத் தயாராகிவிட்டதா?”

“நகரில் எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகள்! 20 ஆயிரம் போலீஸார் முகாமிட்டுள்ளதாகத் தகவல். நகர வீதிகளில் அரசு வாகனங்கள் அங்குமிங்கும் சுற்றித் திரிகின்றன. அதிகாரிகளின் ராஜ்ஜியமாகத்தான் தெரிகிறது. இவர்களின் நடமாட்டத்தைப் பார்த்து பக்தர்கள் கொஞ்சம் மிரண்டுதான் போயிருக்கிறார்கள்.

கொடியேற்றத்துக்கு முந்தைய தினம், அதாவது பிப்ரவரி 12-ம்  தேதியன்று, ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பூஜை சம்பிரதாயம் முடித்து, அமிர்த கலசத்தை எடுத்து வந்து மகாமகக் குளத்தில் சேர்ப்பது வழக்கம். இது இனிதே நடந்தேறியது. மறுநாள் கொடி யேற்றம் என்பதால், ரொம்பவும் உன்னிப்பாக இந்த வைபத்தைக் கவனித்திருக்கிறார்கள்.”

“அதில் பிரச்னை ஏதும் வந்துவிடவில்லையே?”

“அமிர்த கலசத்தைச் சேர்ப்பிக்கும் வைபவம் குறிப்பிட்ட நேரத்தில் நடந்தது. உள்ளூர் ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் முன்னி லையில்தான் இந்த நிகழ்வு நடக்கவேண்டுமெனத் திட்டமாம்.
ஆனால், அந்த பிரமுகர் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை. அவர் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. பயங்கர கடுப்பாகி விட்டாராம் அந்த பிரமுகர். ஆனால், அதிகாரிகள் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. ‘நீர் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்களாம்.”

“சரிதான்..! இன்னும் சில நாட்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வரப்போகிறது. அது வந்தால், தேர்தல் கமிஷனின் பிடியில் அரசு நிர்வாகம் வந்துவிடும். அதன்பின், ஆளுங்கட்சியினருக்கு வாய்ஸ் இருக்காது. முழுக்க முழுக்க அதிகாரிகள் ஆட்சிதான். அதைத்தான் இந்த நிகழ்வு மூலம் சூசகமாக அந்த ஆளுங்கட்சி பிரமுகருக்கு உணர்த்தினார்களோ, என்னவோ?” என்றோம். தொடர்ந்து...

நாரதர் உலா

மகாமகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருகிறாரா? விழா ஏற்பாடுகள் எப்படி நடக்கின்றன?” என்று கேட்டோம்.

“நான் விசாரித்தவரையில், கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழில் முதல்வர் ஜெயலலிதா படத்தைப் போடவேயில்லை. இன்றைய நிலையில் இதுவே பெரிய ஆச்சரியம்! கும்பகோணத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளின் மைதானங்களில் ஹெலிபேடுகள் ரெடியாகி வருகின்றன. இவை முதல்வர் ஜெயலலிதாவுக்காகவா அல்லது, டெல்லியில் இருந்து வரவிருக்கும் வி.வி.ஐ.பிகளுக்காகவா என்று தெரியவில்லை. பிப்ரவரி 22-ம் தேதி மாகமக நீராடல் விழாவின்போது, இங்கிருந்து கலச நீர் குடங்களை சென்னைக்கு எடுத்துச் செல்ல இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இதையெல்லாம் பார்க்கும் போது முதல்வர் வருவது சந்தேகம்தான் என்று தோன்றுகிறது. அவர் வருவது குறித்து நிச்சயத் தகவல் இல்லை” என்ற நாரதர்,

நாரதர் உலா

“இந்து அமைப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலரிடம் பேசினேன். மகாமக குளக்கரையில் மணிக்கூண்டு அருகில் மூன்று கடைகளை ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் அப்புறப்படுத்தினார் களாம் அதிகாரிகள். அந்தக் கடைகள் இருந்த வளாகத்தில் பிள்ளையார் சிலை ஒன்று இருந்ததாம். அதை யாரும் ஏனோ கண்டுகொள்ளவேயில்லை. ஒரு மாலைகூடப் போடவில்லை. ஆனால், சிலை இருக்கும் பகுதியின் முகப்பை ஒட்டி, இப்போது ஒரு தற்காலிக கழிவறையை கொண்டுவந்து வைத்திருக்கிறார்களாம். அதை அகற்றச் சொல்லி, சென்னையில் உள்ள இந்து அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணிக்கு புகார் போயிருக்கிறதாம்” என்றார்.

“அடக் கடவுளே!”

“அடக் கடவுளே என்று நீங்கள் அலுத்துக் கொள்ள இன்னொரு விஷயமும் இருக்கிறது. பொற்றாமரைக் குளக்கரையில் ஒரு பெரிய மைதானம் உள்ளது. முன்பு ‘மூர்த்தி கலையரங்கம்’ நடந்த இடமாம் அது. அந்த இடத்தில் ஊரில் உள்ள குப்பைகளை  எல்லாம் கொண்டுவந்து கொட்டிவைத்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துவதற்கு என இப்படி எதற்காவது அந்த இடத்தை முறையாகப் பயன்படுத்தியிருக்கலாம். இப்படி ஒரு பெரிய மைதானத்தைச் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டிருப்பதற்கு அதிகாரிகளின் மெத்தனம்தான் காரணம் என வேறொரு அரசியல் பிரமுகர் ஒருவர் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார்.”

நாரதர் உலா

“மகாமகக் குளத்தில் நீர் சுத்திகரிப்பு முறையாகச் செய்யப்படுகிறதா?”

“தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையனிடம் இது பற்றிக் கேட்டேன். ‘ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை குளத்தில் நீர் பரிசோதனை செய்வதற்காக பெரிய டீமே களமிறக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகச் சுற்றுப்புறவியல் நிபுணர்களில் ஆரம்பித்து, தண்ணீர் பரிசோதனை நிபுணர்கள் வரை பல்வேறு அதிகாரிகள் தயாராக இருக் கிறார்கள். குளத்துக்குள் தண்ணீர் வந்து செல்லும் வழியை உள்ளே-வெளியே என இரண்டாகப் பிரித்திருக்கிறோம். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை புதுத் தண்ணீரை குளத்தில் விடுவதுபோல் திட்டமிட்டிருக்கிறோம். அதனால், பக்தர்கள் எந்த பயமுமின்றி சுகாதார முறைப்படி மகாமகக் குளத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீரில் நீராடலாம்’ என்றார் சுப்பையன்” என்ற நாரதர்,

நாரதர் உலா

“மகாமகக் குளியல் வெறும் நீராடலாக இல்லாமல், புனித நீராடலாக அமைய அந்த ஆதி கும்பேஸ்வரன்தான் அருள்பாலிக்க வேண்டும்” என்றபடி அந்தர்தியானமானார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு