Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

மனப் பக்குவம் இருந்தால்தான் மகேசன் அருள் கிடைக்குமாசேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

மனப் பக்குவம் இருந்தால்தான் மகேசன் அருள் கிடைக்குமாசேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

? தினமும் காலையில் லலிதா சகஸ்ரநாமத்தை செவிமடுத்துக் கொண்டே பணியில் ஈடுபடுவது என் வழக்கம். ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர், எதிலும் மனம் ஒருமித்துச் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் பலன் கிடைக்காது என்று அறிவுறுத்தினார். மனதைப் பக்குவப்படுத்தாமல் வெறுமனே இறைநாமத்தை செவிமடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும் கூறினார்.  அவரது கருத்து சரியா? மனப்பக்குவம் எல்லோருக்கும் சாத்தியமா? இயலாதவர்கள் இறைநாமத்தை ஜபித்து பலனடைய முடியாதா?

- வீ. ஜெயந்தி, சேலம்-5


முதல் கோணம்

உடலையும் உடலுறுப்புகளையும் பராமரிக்கத் தவறுவது இல்லை. மனமும் உடலில் இணைந்த ஒரு பகுதி. அதுவே, உடலின் இயக்கத்துக்கு ஆதாரமாக விளங்குகிறது. அதையும் அனுதினமும் பராமரிக்கவேண்டும்.

பல் விளக்குதல், நீராடல் போன்றவற்றை தினமும் கடைப்பிடிக்கிறோம். செயல் புலன் களுக்கு உரமூட்ட யோகா போன்றவற்றையும், விஞ்ஞானக் கருவிகளின் உதவியுடன் பல நடை முறைகளையும் கடைப்பிடிக்கிறோம்.

கால்களுக்கு காலணி, காலுறைகள் அணிந்தும், கண்களுக்கு கறுப்புக் கண்ணாடி அணிந்தும் பாது காப்போம். தொடுபுலன்களின் பராமரிப்புக்கு நறுமணப் பொருள்களைப் பயன்படுத்துவோம்.வெயில், மழை, பனி, காற்று ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க மின்சாரக் கருவிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின்விசிறிகள், குடைகள், கம்பளி ஆடைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவோம்.

கோடை காலத்தில் வெம்மை தாங்காமல், குளிர் பிரதேசத்துக்கு ஜாகையை மாற்றுவோம். அதே போல், குளிரில் இருந்து விடுபட வெப்பமான தேசத்தை சரணடைவோம்; அல்லது மின்சார சாதனங்கள் மூலம் வெப்பத்தை உருவாக்கி, குளிரை வெல்வோம்!

கேள்வி - பதில்

இயற்கையில் உதிர்ந்துபோகும் கேசத்துக்கு ஈடாக செயற்கை  கேசத்தை ஏற்படுத்துவோம். நரைத்த முடியை செயற்கை முறையில் கருமையாக்க முயற்சிப்போம். அதேபோல் தொந்தியைக் குறைக்க, உடல் பருமனைக் குறைக்க  விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தி உடனுக்குடன் செயல்படுவோம். பற்களை இழந்தால் பொய்ப்பல் கட்டுவோம், செவிப்புலனுக்கு யந்திரக் கருவி, பார்வைக் குறைபாடுக்கு கண்ணாடி, கால்களை இழந்தால் செயற்கைக் கால் என்று இழப்புகளைச் சரிசெய்ய முயற்சிப்போம். தோலின் கருமையைப் போக்க களிம்புகளைப் பூசுவோம். உதடுகளைச் சிவப்பாக இதழ் வர்ணங்களை (லிப்ஸ்டிக்) ஏற்போம். முதுமையிலும் இளமைத் தோற்றத்தைக் கொண்டுவர விஞ்ஞானக் கருவிகளின் துணை யோடு தொடர்ந்து முயற்சிப்போம்.

?  இந்த உதாரணங்கள் எல்லாம் எதற்காக?

உடலின் புற விஷயங்களில் காட்டும் அக்கறையை, அக விஷயத்தில் காட்டுவது இல்லையே நாம்! அதை உணர்த்துவதற்காகவே இந்த உதாரணங்கள்.

அவை மட்டுமா? தொலைதூரப் பயணங்களை எளிதாக்க வாகனங்கள், ஒரே நேரத்தில் பலருடன் கலந்துரையாட தொலைபேசி, உடலுறுப்புகளுக்கு எதிர்பாராதவிதமாக தலைவலி, இருமல், ஜல தோஷம் முதலான சங்கடங்கள் ஏற்பட்டால், முதலுதவியாக கடைகளில் தென்படும் மருந்து களை எடுத்துக்கொண்டு சமாளிப்போம். ஊனமுற்றோர்களின் வேலைகளை சிறப்பாகப் பார்ப்போம். அவர்களை பரிவுடன் பராமரிப்பது டன், சலுகைகளும் அளிப்போம். ஊனமுற்றவன் என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றாமல் செய்துவிடுவோம்.

உறுப்புகளில் தென்படும் குறையை அவ்வப் போது களைய முற்படுவோம். ஆனால், மனமும் உடலுக்குள் இருக்கும் ஒரு உருப்படி. அதைப் பராமரிப்பவர்களை விரல் விட்டு எண்ண
லாம். அதன் செயல்பாட்டில் ஏற்படும் குறையை அகற்ற முற்படமாட்டோம்; அதன் செயல்பாட்டில் சந்திக்கும் விபரீதங்களை ஏற்போம்.  அதை சரி செய்ய மருத்துவ உதவியை நாடமாட்டோம்.
ஆசையிலும் தவறான சிந்தனையிலும் கொந்தளிப்பை அடைந்த நிலையில், மனதை அமைதிப்படுத்த முயற்சிக்கமாட்டோம். ஆசைக்கு உகந்த வழியில் செயல்படவைத்து, கொந்தளிப்பை அதிகப்படுத்தி, அமைதியின்மையை உருவாக்கிக் கொள்வோம். அன்றாட அலுவல்களில் சந்திக்கும் அத்தனை இன்னல்களுக்கும் மனக்கொந்தளிப்பே காரணம் என்று சுட்டிக்காட்டினாலும் ஏற்க மாட்டோம். மனம் போன போக்கில் போக அனுமதிப்போம்.

அது நன்மையைவிட தீமையை அளித்துவிடும். அதை ஏற்று துயரத்தில் துவண்டு போவோம். ஆக, தினம் தினம் மனதின் பராமரிப்பு அவசியம். அதை நடைமுறைப்படுத்தினால் நல்ல வாழ்க்கையைச் சுவைத்து மகிழலாம்.

? கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்வதெல்லாம் சாத்தியமா?

சாத்தியம்தான். ஆயுர்வேதம் மனப் பராமரிப்பை வலியுறுத்தும். அதற்காக தனிப்பிரிவை ஏற்படுத்தி யிருக்கிறது. ‘ஸத்வாவஜயம்’ என்கிற தலைப்பில் கட்டுப்பாட்டுடன் மனதை வைத்துக் கொள்ளப் பரிந்துரைக்கிறது. வேதம், தரிசனங்கள் அத்தனையும் மன வளர்ச்சியையும், அதன் மூலம் சிந்தனை வளத்தையும் பெருக்கி மனஅமைதிக்கு வழிவகுத்தன. சிந்தனையாளர்கள் என்று சொன்னாலே மனதுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் என்பது உறுதியாகிறது. நாமும் மனதுக்கு முன்னுரிமை அளித்து அதைப் பராமரிக்கவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி - பதில்

அதிகாலையில் நீராட வேண்டும். தூய்மையான ஆடை அணிய வேண்டும். நெற்றித் திலகம் வேண்டும். கடவுளை வணங்க வேண்டும். கோயிலுக்குச் செல்லவேண்டும். பெரியோர்களை மதிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடு வேண்டும். அடக்கமும் ஒழுக்கமும் வேண்டும். நட்பை வளர்க்க வேண்டும். பகையைத் துறக்க வேண்டும். இரவில் உறங்க வேண்டும். பகலில் உழைக்க வேண்டும். பொறுப்போடு செயல்பட வேண்டும்.

இரவில் உறங்கும் தறுவாயில், ‘கடமையைச் செய்துவிட்டேன். மறந்தும் தவறு செய்யவில்லை’ என்பதை ஆராய வேண்டும். இவை அத்தனையும் மனதின் அமைதியைப் பாதுகாக்க மறைமுகமாக உதவும்; சுறுசுறுப்போடு இயங்க உதவும்; ஆசைகளை துறக்க உதவும். மேலும், கொந்தளிப்பைத் தோற்றுவிக்காமல் பாதுகாக்கும்.

புதுச் சிந்தனையாளர்கள் இவற்றை மதக் கோட்பாடாகச் சித்திரித்து, மக்களை திசை திருப்பி விடுவது, அறியாமையின் வெளிப்பாடே தவிர உண்மையல்ல என்பதை உணர்ந்தால் மகிழ்ச்சி உண்டு.

இரண்டாவது கோணம்

தங்களது விளக்கம் ஏற்புடையதாக இல்லை.

உடலை முறைப்படி பராமரித்தாலே, அதில் உள்ளமும் இணைந்துவிடும். அதன் பொருட்டு அனுதினமும் சில அலுவல்களைத் திணித்து சுதந்திரத்தைப் பறிப்பது தகாது. இயற்கை, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை கவனித் துக் கொள்ளும். மனதைப் பராமரிக்கத் தனிக் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

?மனமது செம்மையானால் அனைத்தும் செம்மையாகும் என்றும் பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படியிருக்க, மனதைப் பராமரிக்கும் அவசியம் இல்லை என்கிறீர்களே?!

இன்றையச் சூழலில் கடவுள் வணக்கம் தேவையற்றதாக மாறிவிட்டது. மகான்கள் பலர் சொற்பொழிவு ஆற்றுகிறார்கள். அவற்றைக் கேட்டாலே போதும்; பிறவிப்பயன் கிடைத்து விடும். ஒன்பது விதமான பக்தியில் முதல் பக்தி- கேட்பதுதான். அதை ச்ரவண பக்தி என்பார்கள். கடவுள் பெருமையைக் கேட்டால் போதும். அதுவே உயர்ந்த பக்தி. அது எல்லா விருப்பங் களையும் நிறைவேற்றிவிடும். மகான்கள் கடவுள் அவதாரங்கள்; மனித வடிவில் தோன்றிய கடவுள் அவர்கள் (தெய்வம் மானுஷ ரூபேண). தெய்வமே, ‘மனித வடிவில் எனது பெருமையை கேட்டால் போதும்’ என்று சொல்லும்போது, தேவையில்லாத அலுவல்களை ஏற்று சுமையாக்கிக் கொள்வது வீண்.

கடவுள் பக்தர்கள் எண்ணிக்கையில் அதிகம். அவர்களை வணங்கினால் போதும். கடவுள் வரைக்கும் போக வேண்டாம் என்று மகான்கள் சொல்வார்கள். இன்னும் சில மகான்கள்.  ‘மகான் களின் சமாதியை வணங்கினால் போதும், அதில் அவரது சைதன்யம் உறைந்திருக்கிறது. நமது விருப்பப்படி அது வழிகாட்டும்’ என்று சொல்வார்கள். ஸமாதியில் பூஜை, புனஸ்காரங்கள், பஜனை செய்தால் போதும்; விருப்பம் நிறைவேறும். சில மகான்களின் ஸமாதிகளில் கோயில் கட்டி, கடவுளையும் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அங்கு வழிபட்டால், கடவுளின் அருளும் மகான்களின் அருளும் ஒருங்கே கிடைத்துவிடும். அங்கு வழிபட எந்த சட்டதிட்டமும் நம்மை கட்டுப்படுத்தாது. வீட்டிலேயே வழிபட நினைத்தால் குறிப்பிட்ட ஸமாதியின் படத்தை வைத்து ஆராதிக்கலாம். பற்பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டிய மகான்களின் ஸமாதியை பார்த்தாலே ஜன்மம் கடைத்தேறிவிடும்.

கேள்வி - பதில்

? எனில், தெய்வங்களோ அவர்களுக்கான வழிபாடுகளோ அவசியம் இல்லை என்கிறீர்களா?

இருந்த இடத்தில் இருந்துகொண்டே மனதைப் பராமரித்துப் பேணிக் காக்க இயலும் எனச் சொல்லவருகிறோம். அவதாரங்களை எடுத்த தெய்வங்கள் பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றவில்லை. அவர்களது இன்னல்களையும் அகற்றவில்லை. ‘அறம் வாட்டமுற்று அதர்மம் தலைதூக்கும் வேளையில் தோன்றி, அதர்மத்தை அழித்து அறத்தை நிலை நாட்டுவேன்’ என்றுதான்
மந் நாராயணன் சொன்னதாகப் புராணம் கூறுகிறது. மகான்கள் அப்படியல்ல. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அருள் வழங்கி முன்னேற வைக்கிறார்கள். மனிதனால் இயலாத அதிசயங் களையும் அற்புதங்களையும் நிகழ்த்தி, தாங்கள் கடவுள் என்பதை அடையாளம் காட்டுகிறார்கள்.

இன்றைக்கு ஆன்மிக இதழ்களும், சானல்களும் கடவுள் பெருமையை விளக்குகின்றன. அவற்றைப் பார்த்தும் கேட்டும் மனம் தானாகவே பக்குவமாகிவிடும். எனவே,  மதக் கோட்பாடுகளை ஏற்று கடவுள் வழிபாட்டைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கட்டுக்கடங்காத அலுவல்களுக்கு இடையே கடவுள் வழிபாடு சுமையாக மாறுமே ஒழிய, மனம் லேசாகாது. கலி யுகத்தில் (இன்னாளில்) கடவுள் பெயரைச் சொன்னால் முக்தி என்கிறது சாஸ்திரம் (கலெஹஸம் சீர்த்யகேசவம்). வாழ்க்கைப் பயணம் சுமையாக மாறும் இந்த யுகத்தில் கரை ஏற கலிஸந்தரணோபநிஷத்தை கேட்டால் போதும் என்று மகான்கள் சொல்வார்கள். ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே; ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே - இதுதான் உபநிஷத். இதைக் கேட்டால் போதும்; பக்தனுக்குக் கட்டுப்பட்டவன் கடவுள். பக்தனை வணங்கினால் போதுமானது. மகான்களுக்குப் பணிவிடை செய்தவர்கள் மோட்சம் அடைந்திருக்கின்றனர். அவர்கள் அருளால் தேவையான பொருளாதர நிறைவு கிடைத்துவிடும். பரிச்ரமம் இல்லாமல் பரமபதத்தை அடைய மகானின் பக்தனை வணங்கினால் போதும்.

? உபநிடதங்களையும் சொற்பொழிவுகளையும் வெறுமனே செவிமடுப்பதால் மட்டுமே பலன் கிடைத்துவிடுமா?

இன்றைய நாளில் வேதம் ஓதுபவர்களும், தர்சனங்களை கரைத்துக் குடித்தவர்களும், தர்ம சாஸ்திர நுணுக்கங்களை அலசி ஆராய்ந்தவர் களும், வாழ்க்கைப் பயணத்தை சிறப்பாக்க பக்தி சொற்பொழிவை ஏற்கிறார்கள். வேதம் படித்த பரம்பரை அற்றுவிட்டது. உயர்கல்வியை எட்ட இயலாதவர்களும், அதைத் தவற விட்டவர்களும் வேதக் கல்வியைப் பயின்றார்கள். மனப்பாடம் செய்ய இயலாமல், புத்தகத்தைப் பார்த்து வேத பாராயணம் செய்பவர்கள் எண்ணிக்கை யில் அதிகம். அவர்களும் நாம ஸங்கீர்த் தனத்தில் இறங்கி வாழ்க்கையை நடத்துகிறார்கள். நாமத்தை கேட்பது வேள்வியாகும். ஆயிரம் நாமாக்களை கேட்க வேண்டாம்; ‘ராம ராம’ என் பதை கேட்டால் போதும், மோட்சம் உண்டு என்று சொல்லும் புராணம்.

கடவுள் கண்ணுக்குப் புலப்பட மாட்டார்; பக்தன் புலப்படுவான். அவனைப் பார்த்தால் போதும், அவன் பெருமையை சொன்னால் போதும்; அவன் ஆராதிக்கும் கடவுள் நமக்கு அருள்புரிவார். பேசாத கடவுளைவிட பேசும் கடவுள் உயர்ந்தது.

கடவுளை, தவமிருந்து தோன்றவைத்து விருப்பத்தை அடையவேண்டும். ஆனால், மகான்களோ தன்னை அண்டியவர்களுக்கு அவர்கள் விருப்பப்படி அத்தனையையும் அளித்து மகிழ்விப்பார்கள்.
ஆக, பக்தர்கள் மனம் சரியாக இயங்க எந்த வழிமுறைகளையும் பின்பற்றுவது இல்லை. மனப்பக்குவத்தை ஏற்படுத்த எந்தப் பாடத் திட்டமும் பள்ளிக்கூடத்திலும் இல்லை, கல்லூரி யிலும் இல்லை, மகான்களின் உபதேசங்களிலும் இல்லை. ஏற்பவனின் இயல்பை ஒட்டியே உபதேசம் செய்வார்கள். ஆக, உடலைப் பராமரித்தால் போதும்; மனதைப் பராமரிக்கத் தேவையில்லை.

மூன்றாவது கோணம்

ஒருதலைப்பட்சமான தங்களது கணிப்பை எல்லோராலும் ஏற்க இயலாது. வீடுபேறு அளிக்கும் நாம சங்கீர்த்தனத்தால் நாட்டை காப்பாற்ற இயலவில்லை. சான்று இல்லாத தத்துவ விளக்கத்தை எல்லோராலும் ஏற்க இயலாது.

பக்தர்களின் கதைகளைச் சான்றாக ஏற்க இயலாது. இன்றைக்கு சொற்பொழிவாற்றும் நபர், அன்றைய பக்தர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல. செவிவழி, சொல்வழித் தகவல்கள் மெய்யாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எண்ணெய்க்கு பதில் நீரை விட்டு விளக்கேற்றினார் தென்னாட்டில் ஒருவர். வடநாட்டிலும் ஒருவர் இருந்ததாகத் தகவல் வந்திருக்கிறது. இயற்கைக்கு மாறாக செயல்படுபவர்களை கடவுள் என்று விளக்கும் கூற்று, பாமரர்களை ஏற்கவைக்கும்; படித்தவர்கள் ஏற்கமாட்டார்கள்.

? நம்மைவிட விஷய ஞானம் உள்ளவர்களை வணங்கத்தக்கவர் களாகக் கருதுவது எப்படி தவறாகும்?

சில உதாரணங்களைச் சொன்னால் உங்களுக்குப் புரியும். கண்ணனை நண்பனாகப் பெற்றும் அர்ஜுனன் பல இன்னல்களை எதிர்த்துப் போராட நேர்ந்தது. ராமனை அண்ணனாகப் பெற்றும், நினைவிழந்த லட்சுமணனை விழிக்கச் செய்ய அனுமனின் ஒளஷதி பர்வதம் பயன்பட்டது. விபீஷணனும், த்ருவனும், ப்ரஹ்லாதனும் பக்த சிரோமணிகள். கண்ணனின் அருளில் வீடுபேறு கிடைக்கவில்லை.அரசாண்டு, வம்ச பரம்பரையை வளர்த்து, உரிய காலத்தில்தான் பரமபதத்தை அடைந்தார்கள். முசுகுந்தன் கண்ணனை வேண்டினான் ‘எனக்கு வீடு பேறு வேண்டும்’ என்று. ‘நீ செய்த தவறுகளுக்கெல்லாம் புண்ணிய க்ஷேத்திரங்களில் நீராடி கடவுளை வழிபட்டுத் தூய்மையான பிறகு, உன்னை அழைத்துக்கொள்கிறேன்’ என்றான்.

கடவுளை நேர்காணலில் வணங்கியும் வீடுபேறும் கிடைக்கவில்லை; அருளும் கிடைக்க வில்லை. அவரோடு சேர்ந்து வாழ்ந்தும் இன்னலில் இருந்து வெளிவர இயலவில்லை. அப்படியிருக்க, அவர் பெயரை சொற்பொழிவாளர் சொல்லக் கேட்டால் மட்டும் எப்படி மனப் பக்குவம் ஏற்படும், வீடுபேறு கிடைக்கும்? ‘பக்தி முக்திக்குக்கருவி; அதுவே முக்தி அல்ல’ என்கிற கருத்தை, சிந்தனையாளர்கள் சான்றோடு விளக்கி யிருக்கிறார்கள். மனம் சம்பந்தப்படாத எந்த விஷயமும் பலன் அளிக்காது.

? நீங்கள் சொல்வது புரியவில்லை. எல்லா செயல்களுக்கும் ஒரு பலன் இருக்கவே செய்யும். அப்படியிருக்க, மனம் தொடர்பு இல்லாத விஷயங்கள் பலனளிக்காது என்று எப்படிச் சொல்ல முடியும்?

மனம் நினைத்ததையே வாக்கு சொல்லும். வாக்கு சொன்னதை செயல்புலன்கள் நடை முறைப்படுத்தும். காது கேட்கும். ஆனால், அதை மனம் ஆராய்ந்து தெளிவுபெற்றால்தான் சிந்தனை செயல்படும். செயல்பாட்டில் பலனை எதிர்பார்க்கலாம். செயலின்றி எந்தப் பலனும் கிடைக்காது.

பேசத் தெரிந்த இரண்டு வயதுக் குழந்தை கடவுள் பெயரை உச்சரிக்கும். அதன் மனம் பக்குவம் அடையாத நிலையில் அதன் பெருமையை உணராது. எங்கு பக்குவமான மனம் விஷயங்களை ஆராய்ந்து, உண்மையை உணர்ந்து செயல்படுகிறதோ, அவனுக்கு மட்டும்தான் பல ஸித்தி ஏற்படமுடியும். இன்றைய நாளில், குழந்தைகள் போல் மனப்பக்குவம் ஏற்படாத வர்கள் ஏராளம். அவர்கள் கடவுள் நாமாவைக் கேட்டால் மனம் வாங்காது. அவர்களுக்கு வீடு பேறு கிடைக்கும் என்பது வறட்டு வாதம். வீடுபேறு என்பது பஜனையில் விநியோகம் செய்யப்படும் சுண்டல் அல்ல! கர்ம காண்டத்தைச் சாடும் ஆதிசங்கரர், ‘வேதம் பயின்று, கடமையைச் செயல்படுத்தி, சித்த சுத்தி ஏற்பட்டவனுக்கு மட்டுமே ஆன்மிகம் விளங்கும்’ என்கிறார்.

சித்தம்- சிவம். அதுதான் மங்களம். சித்தம் சீராகாத வரையிலும் எந்த முயற்சியும் பலன் அளிக்காது. சீரான சித்தம் கடவுள் பெயரை உச்சரித்தால், அவரது பெருமையை உணர்ந்து செயல்பட்டு தானாகவே முக்தியைத் தேடிக் கொள்ள இயலும்; கடவுளின் சிபாரிசு தேவை இல்லை. சுத்தம் அடைந்த சித்தம், சிந்தனையில் அறியாமையை அகற்றி அறிவைப் பெற்றுவிடும். அறிவுதான் கடவுள் என்று உணர்வான். அவனது அறியாமையை அகற்ற அவன் மனம்தான் செயல்பட வேண்டும். செயல்பாடு சிறக்க சித்தம் சுத்தமாக வேண்டும். சித்தம் சுத்தமாக அன்றாட அலுவல்களை முறைப்படி கடைப்பிடிக்க வேண்டும். சுத்தமான சித்தத்தில் சிந்தனை வளம் பெருகும். விஷயத்தை ஊடுருவி ஆராயத் துணியும். அப்போது, இடையூறான அறியாமை அகலும்; அறிவு ஒளிரும். கடவுள் உணர்வு அனுபவத்துக்கு வரும். மனப்பக்குவம் இல்லாதவனின் ச்ரவண பக்தியில் இது ஈடேறாது. தினம் தினம் மனதில் உதிக்கும் ஆசைகளையும், மாத்ஸர்யங்களையும் அகற்றாத வரையிலும் நாம சங்கீர்த்தனம் பயன் அளிக்காது. நாம சங்கீர்த்தனம் கருவி. அதை மனம் வாங்கி, அவனது பெருமையை உணர்ந்தால் மட்டுமே பலன் உண்டு.

கேள்வி - பதில்

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

சொற்பொழிவாளர்கள் வியாசரின் படைப்புகளைக் கையாளுவார்கள். அதன் உட்கருத்தை அறியாதவர்களும் சொற் பொழிவில் இணைந்திருக்கிறார்கள். ஆனால், சிந்தனையாளர்கள் பொதுச் சந்தையில் தங்களது மதிப்பீடுகளை விலை பேச மாட்டார்கள். தன்னை அண்டி வருபவர்களின் மனப்பக்குவத்தை ஆராய்ந்து செயல்படுவார்கள்.

பசித்தவனுக்கு உணவு வேண்டும். பசிக்காதவனுக்கு அளித்தால் அதை அலட்சியப் படுத்துவான். இன்றைய சொற்பொழிவுகள் யாவும், கருத்தை உள்ளது உள்ளபடி வாங்கிக்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாதவர்களில் நிகழ்த்தப் படுகிறது. அப்போது, கேட்பவர்களின் மகிழ்ச்சிக்கு உகந்த வகையில் திசை திருப்பப்படு கிறது. அப்பாவிகள் கடவுள் பெயரை காதால் கேட்டாலே போதும் என்று நம்பிவிடுவார்கள். அவர்கள் மனப்பக்குவம் அடைவதற்கு முயற்சி செய்யாமலே வாழ்க்கையை முடித்து விடுவார்கள். ஆக, இவர்களது சொற்பொழிவு கேட்பவர்களின் சிந்தனை வளத்தை வளர விடாமல் தடுத்துவிடுகிறது. பெருமை பெற்ற தத்துவ விளக்கங்கள் கட்டாந்தரையில் விதைத்த விதை போல் வீணாகிவிடுகின்றன!

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.