மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 21

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 21
News
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 21

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

35.இருமன்னரைப்  பெற்றேனோ  வால்மீகரைப்  போலே!

 இலக்குவன் தேரிலிருந்து சீதாபிராட்டியை இறங்கச் சொல்கிறான். காட்டின் மையப் பகுதி அது. தூரத்தில் சில முனிவர்களின் ஆசிரமங்கள் தெரிகின்றன. எதற்கு இலக்குவன் தன்னை இங்கே இறக்கி விட்டான்?

மிதிலைமகள் ஒன்றும் புரியாமல் இலக்குவனைப் பார்க்கிறாள். இலக்குவன் தலையைக் குனிந்தபடி ஊர்மக்களின் புறம்பேச்சினை கேட்டு அயோத்திய சக்கரவர்த்தித் திருமகன் சீதையை காட்டில் விட்டு வருமாறு பணித்ததைக் கூறினான்.

“ பெண்களுக்குக் கணவன்தான் தெய்வம். வேறு கதி இல்லை. எனவே என் கணவன் இட்ட கட்டளைக்கு அடிபணிவேன் என்று சொல். இன்னொன்றையும் சொல். ருது காலம் தாண்டி நான் அந்த ஸ்ரீராமனின் கர்ப்பத்தைத் தாங்கிக் கொண்டுள்ளேன் என்றும் சொல்.”
அழுவதற்குக் கூட கண்ணீர் வற்றிய இலக்குவன் அங்கிருந்து அகன்றான்.

திசை தெரியாது கலங்கி நின்ற ஜனகபுத்ரிக்கு வால்மீகி முனிவர் அடைக்கலம் கொடுத்தார். ஆசிரம பெண்களை அழைத்து சீதையை அவள் பேறுகாலம் முடியும் வரை கவனமாக பார்த்துக் கொள்ளச் சொன்னார். உரிய காலத்தில் சீதை இரண்டு ஆண் சிங்கங்களுக்கு நிகராக இரண்டு புத்திரர்களைப் பெற்றாள்.

“ ஆஹா! என்ன ஒரு ஒளிமயமான பிறவிகள் “ என்று வாங்கிக் கொண்ட வால்மீகி குழந்தைகளைத் தழுவிக் கொண்டார். தனது கண்ணே பட்டுவிடும் என்றால் ஊரார் கண்களுக்குக் கேட்பானேன் என்று குழந்தைகள் இருவரையும் தனது கையிலிருந்த தர்ப்பைப் புல்லினின் குசம் என்ற மேல்பாகத்தால் ஒரு குழந்தையையும், இலவம் என்ற கீழ் பாகத்தால் மற்றொரு குழந்தையையும் தொட்டு காப்பிட்டார். எனவே அந்த குழந்தைகள் இலவ குசன் என்ற பெயரோடு விளங்கினர். வால்மீகி  முனிவர் இரண்டு சிறுவர்களையும் நன்கு வளர்த்து இராமகாதையைக் கற்றுக் கொடுத்து ஊரெல்லாம் பாடச் செய்கிறார்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 21

நைமிசாரண்யம். ஸ்ரீராமன் அசுவமேத யாகத்திற்கு யாககுன்டங்கள் அமைத்து யாகம்  செய்துவருகிறான். பரதன் இந்த இரண்டு சிறுவர்களின் ராமகாதை பாடுதிறனைக் கண்டு ஸ்ரீராமனிடம் அழைத்து வருகின்றான். சிறுவர்களுக்கு ஸ்ரீராமன் தங்களது தகப்பன் என்பது தெரியாமல் முப்பத்திரண்டு நாட்கள் ராமகாதை வாசித்தனர். ஸ்ரீராமன் அதனை ஆனந்தமாகக் கேட்கிறான். இதனை நான் சொல்லவில்லை குலசேகர ஆழ்வார் தனது பாசுரத்தில் சொல்கிறார் இப்படி.

அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி 
            அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான் 
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி 
            உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் 
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான் 
            தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் 
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால் 
            பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே  

மிதிலைச் செல்வி இந்த உலகம் உய்வதற்காக பெற்ற இரண்டு புதல்வர்கள் பாடிய தனது சரித்திரத்தை ஸ்ரீராமன் தானே கேட்டான் என்கிறார் ஆழ்வார்.

இதற்குக் காரணமானவர் வால்மீகி. அந்த வால்மீகியைப் போல இரண்டு மன்னர்குல திலகங்களான இலவன் குசன் இருவரையும் சீதை பெற்று வால்மீகி கைகளில் அளிக்க அவர்களை நல்ல பிரஜைகளாக வளர்த்து ஆளாக்கியதைப் போல தான் எதுவும் செய்யவில்லையே என்று அந்தப் பெண்பிள்ளை திருக்கோளூரைவிட்டு வெளியேறுகிறாள்.

36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே ?

தேவதேவி “ கையில் காசிருந்தால் வா, இல்லையென்றால் போ" என்று ஓங்கி கதவை சாத்திவிட்டு உள்ளே போய்விட்டாள். தொண்டரடிபொடியார் தனது பெயர், குலம்,  கற்ற வேதம், அறிந்த அரங்கன் அனைத்தயும் மறந்து அந்த தாசி வீட்டின் வாயிலில் கிடந்தார்.

ஸ்ரீமத்பாகவதத்தில் மாலாக்காரர் ஒருவரை பற்றிய குறிப்பு வரும். கம்சனைக் காண கண்ணன் வரும்போது தன் கையால் செய்த மாலையை அந்தக் கண்ணனுக்கு சூட்டி அழகு பார்க்கக் காத்திருந்தானாம். அவனுடைய எளிமையான ஆனால் மிகத் தூய்மையான அன்பை பகவான் ஏற்றுக் கொண்டு அவனுக்கு முக்தி அளிக்கிறார். எனவே புஷ்ப கைங்கரியம் என்பது ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆத்மார்த்தமாக எம்பெருமானுக்குச் செய்யும் கைங்கரியங்களில் முக்கியமான ஒன்று. அப்படி ஒரு கைங்கரியத்திற்காக அரங்கன் கோயிலின் அருகில் அழகிய நந்தவனம் அமைத்து தினமும் தான் தொடுத்த மாலைகளை ரங்கநாதருக்கு அணிவிப்பதை ஒரு கைங்கரியமாக செய்து வந்த விப்ர நாராயணர் ஒரு அந்தணர். நான்கு வேதங்கள் கற்றவர். பின்னால் வந்த திருமங்கை மன்னன் அவர் நந்தவனம் அழிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தனது மதிலை போக்கை சற்று விலகி அமைத்தாராம். அப்படி ஒரு நல்ல மனிதர் தனது புலன்கெட்டு தேவதேவி என்ற தாசியியே கதியென்று கிடக்கிறார்.

 எம்பெருமானுக்கு தாங்குமா?

கதவு மீண்டும் ஒலிக்கும் ஓசை கேட்டு தேவதேவி திறக்கிறாள்.

“ எத்தனை முறை ஓய் சொல்வது? காசிருந்தால் வாரும். இல்லையென்றால் நடையைக் கட்டும்" என்று ஆவேசமாகக் கதவைத் திறக்கிறாள்.

ஆனால் வெளியில் நின்றது அந்தண வடிவில் வந்த அரங்கன்.

“ யார் நீர்?" என்றாள்.

“ விப்ர நாராயணன் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவன். அவனிடம் காசில்லை என்று அறிந்தேன். எனவே எனக்கு சொந்தமான பொன்வட்டிலை உன்னிடம் கொடுக்கிறேன். அவனை அனுமதி. “ என்றார்.

தேவதேவி பொன்வட்டிலை பார்த்தாள். தன சேடியிடம் காண்பித்து நல்ல தங்கமா என்று பார்க்க சொன்னாள். சேடியும் அது சொக்கத் தங்கம் என்று உறுதியளித்தாள்.
காசுக்கு ஆதிமூலம் பார்ப்பது வேசிக்கு பணியில்லை.

“ உம்முடைய பெயர்? "

‘ அழகிய மணவாளர் " என்று சிரித்தான் அந்தணர் வடிவில் வந்த அரங்கன்.

வட்டில் கை மாறியது. விப்ரநாராயனருக்குக் கதவு திறக்கப்பட்டது.

மறுநாள் திருவரங்கக் கோயில் முழுவதும் அல்லோல கல்லோலப்பட்டது. கணக்கு எடுக்கும்போது அதிகாரிகளுக்கு ஒரு பெரிய பொன்வட்டில் கணக்கில் வரவில்லை. இரண்டு மணிநேரம் ஆகியும் கிடைக்கவில்லை என்றது வட்டில் களவு போயிருப்பது தெரிந்தது. களவாடியவன் கள்வர்களுக்கெல்லாம் பெரிய கள்ளனான அந்தக் கண்ணபிரான் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. ஏழைக்கு இளைத்தவன் என்றுமே பாவியல்லவா? அரங்கன் சன்னதி பொறுப்பில் இருந்த கடைநிலை ஊழியனின் பேரில் சந்தேகப்பட்டு அரசு அதிகாரிகள் கட்டி வைத்து அடித்தார்கள். அவனோ தேவதேவியின் சேடியின் காதலன். சேடி ஓடி வந்து முதல்நாள் விப்ரநாராயனரின் நண்பர் என்று கூறிக்கொண்டு ஒரு அந்தணர் அந்தப் பொன்வட்டிலை தேவதேவியிடம் கொடுத்ததைக் கூறினாள். பொன்வட்டிலை திருடிய குற்றத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் தொண்டரடிப்பொடி அடைக்கப்படுகிறார்.

தனது குலப் பெருமை இழிந்து, நலம் தரும் சொல்லை மறந்து, புலன்வழி சென்று நாயினும் கீழான பிறவியாகிவிட்டோமே என்று நைந்து நொந்து வெந்து திருமாலை என்ற 45 பாசுரங்களைப் பாடுகிறார்.

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் 
            பெரியது ஓர் இடும்பை பூண்டு 
உண்டு இராக் கிடக்கும் அப்போது 
            உடலுக்கே கரைந்து நைந்து 
தண் துழாய்-மாலை மார்பன் 
            தமர்களாய்ப் பாடி ஆடி 
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் 
            தொழும்பர்சோறு உகக்குமாறே  

 .
 அழகிய துளசி மாலை அணித திருவரங்கனாதனைப் பாடி அவனுடைய திருநாமம் என்ற அமுதத்தைப் பருகாமல் விரைவில் மகளிர் பெண்களின் இல்லம் சென்று தன் உடல் குறித்தே கவலைப்படும் மனிதன் வெறும் சோற்றுக்கு ஆசைப்படுபவன் மட்டுமே, என்று கூறும் அந்தத் திருமாலை பாசுரங்கள் நாற்பத்தைந்தும் கேட்பவர் உள்ளங்களை உருக்கும் தன்மையது.

தன்னை உணர்ந்த தொண்டரடிப்பொடியாரை எம்பெருமான் மன்னன் கனவில் தோன்றி வட்டிலை எடுத்தது தாம்தான் என்று தெளிவுபடுத்தி அகச்சிறை புறச்சிறை இரண்டிலிருந்தும் மீட்கிறான்.
தொண்டரடிபொடியாழ்வாரின் அடையாளங்களில் ஒன்று அவர் தினமும் தனது நந்தவனத்திற்கு சுமந்துசெல்லும் பெரிய பூக்குடலையும் எம்பெருமானுக்கு அவர் தொடுத்த பெரிய துளசி மாலையுமாகும். தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்றுதான் அவர் அழைக்கப்பட்டவர். ஒரு மாலை அவர் அரங்கனுக்கு தினமும் கட்டும் துளசி மாலை.

இரண்டாவது மாலை அரங்கன் மீது அவர் பாடிய 45 பாசுரங்கள் அடங்கிய திருமாலை. திருமாலை அறியாதான் திருமாலை அறியாதான் என்பது சிலாக்கியம். எனவே அந்தத்தொண்டரடிபொடியாழ்வார் போல இரண்டு மாலைகளை அந்த பகவானுக்கு தொடுத்துப்போட்டு கைங்கரியம் தான் செய்யவில்லையே எங்கள் வைத்தநிதிப் பெருமாளுக்கு. பிறகு நான் திருக்கோளூரில் இருந்து என்ன புண்ணியம் என்று அந்தப் பெண்பிள்ளை வெளியேறுகிறாள்.