Published:Updated:

கோயிலுக்குள் உண்ணாவிரதம் இருக்கத் தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

கோயிலுக்குள் உண்ணாவிரதம் இருக்கத் தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
கோயிலுக்குள் உண்ணாவிரதம் இருக்கத் தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், " தமிழகத்தில் உள்ள பெரும் கோயில்களிலும் அதன் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்பைக் குறைக்கும் வகையில்,  அதிகாரிகளால் சுயலாபத்துக்காகக் கடைகள் வைக்கின்றனர். வெளி மாநிலங்களைப்போலத் தமிழகக் கோயில்களையும் பாதுகாக்க வேண்டும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை சிவன் கோயிலின் உள்பகுதியில் இந்து கலாசாரம் மற்றும் தர்ம அடிப்படையிலான பொருள்களை விற்கும் கடைகளைத் தவிர பிற அனைத்து வகையான கடைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். அந்தக் கடைகளும் பழமை மற்றும் சிறப்பைக் குறைக்காத வகையில் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

கோயிலின் அனைத்து முக்கியப்  பகுதிகள், கோயிலுக்குள் உண்ணாவிரதம் இருக்கவோ, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவோ வேறெந்த வடிவிலும் போராடவோ அனுமதிக்கக் கூடாது. கோயிலுக்குள் உணவு பதார்த்தங்களை விற்கும் கடைகளையும் அனுமதிக்கக் கூடாது. இந்த கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு மார்ச் 12-ம் தேதிக்கு வழக்கைத் தள்ளி வைத்தனர்.