மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 10

சிவமகுடம்  - 10
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 10

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

அடிகளாரின் ஆணை!

 ‘‘அந்தப் பெயருக்கு சிறிதும் தகுதியில்லாத பெரும் கோழை நீ!’’ கடுங்கோபத்துடன் இரைந்து ஒலித்த அந்தக் குரல், அடர்ந்த வனத்தில் எளிதில் கண்ணுக்கு எட்டிவிடாதபடி உள்ளடங்கி திகழ்ந்த அந்த பழைய மண்டபத்தின் சுவர்களையும் தாண்டி, வனமெங்கும் எதிரொலித்தது.

அந்தக் குரலுக்கு இணையாக... திடுமென வானில் கருமேகங்கள் கூடிவிட்டதால் அடுத்து சில கணங்களில் பெய்யப்போகும் கோடை மழைக்கு முன்னோட்டமாக முழங்கிய இடியோசையும் சேர்ந்துகொள்ள, வனத்தில் வாழும் விலங்குகள் யாவும் பெரும் அச்சத்துக்கு ஆட்பட்டன. அந்தி மயங்கி விட்டதால் கூடு திரும்பிய பட்சிகள் பெரும் பதற்றத்துடன் எழுப்பிய ‘கீச் கீச்’ எனும் ஒலிகளும், அப்போதுதான் இரை தேடக் கிளம்பியிருந்த சில இரவு விலங்குகளின் முன்னெச்சரிக்கை உறுமல்களும், விட்டு விட்டு வீசிய பெருங்காற்றால் நிலைகுலைந்து ஆடிய விருட்சங்கள் உண்டாக்கிய விநோத ஒலிகள் யாவும் சேர்ந்து, அழகான அந்த வனத்தில் ஓர் அதிபயங்கரச் சூழலை ஏற்படுத்தின! வனத்தின் இந்தப் புறச் சூழலையும் தோற்கடிப்பதாகத் திகழ்ந்தது, வன மண்டபத்து அறையின் அகச்சூழல்! வெளியே இடியும் அதைத் தொடர்ந்து மழையும் பெய்தது என்றால், அறையிலோ அந்த அதிபயங்கர மனிதரின் அதட்டல் இடியாக ஒலிக்க, அதன் விளைவாக முரடர்கள் இருவரது கண்களும் பெருமழையென கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தன.

அச்சமா அல்லது மிதமிஞ்சிய மரியாதையா எனக் காரணம் கண்டுகொள்ள முடியாதபடிக்கு, தங்களின் ஆஜானுபாகுவான தேகத்தை பன்மடங்கு குறுக்கி, தலைகுனிந்து நின்றிருந்த அந்த இருவரையும் பார்க்கவும் பிடிக்காமல், அவர்களுக்கு முதுகைக் காட்டியபடி அறையின் பெரும் சுவரை நோக்கி திரும்பி நின்றிருந்தார், காடதிர ஒலித்த குரலுக்கு உரிய அந்த மனிதர்!
உறையூரில், மானியின் சுழற்படையால் அவர்களது திட்டம் முறியடிக்கப்பட்டதை அறிந்ததாலும், இந்த இருவரையும் எதிரிகள் அடையாளம் கண்டு கொண்டிருப்பார்களே என்ற ஆதங்கத்தாலும் விளைந்த சீற்றம் சிறிதும் தணியாமல் நின்றிருந்தார் அவர்.

சிவமகுடம்  - 10

சிராப்பள்ளி குன்றின் குகையில் பரமேசுவரப் பட்டர் மற்றும் கோச்செங்கண் சகாக்களிடம் இருந்தும், அவர்கள்  புரட்டிவிட்ட பெரும்பாறை யிடம் இருந்தும், கீழே அடிவாரத்தை சுற்றி வளைத்து மெள்ள மேலேறி வந்துகொண்டிருந்த பாண்டிய முன்னோடிப் படைகளிடம் இருந்தும் ஒருவழியாக தாங்கள் தப்பிப்பிழைத்து வந்த கதையை முரடர்கள் இருவரும் பவ்வியமாக விவரிக்கத் துவங்க... அதைச் செவிமடுக்க விருப்ப மில்லாதவராக, முகத்தை மட்டும் திருப்பி அவர்களை தமது பார்வையாலேயே அடக்கியவர், தமது தடித்த உதடுகளில் ஏளனப் புன்னகையையும் தவழவிட்டார். அதன் தொடர்ச்சியாக உதடு களைச் சுழித்து ‘ஹூம்’ என்று விநோத ஒலியெழுப் பியபடி, முரடர்களில் அச்சுதன் எனும் பெயர் கொண்டவனை கையால் சைகை செய்து தம் அருகில் அழைத்தார். மிகத் தயக்கத்துடன் அவன் தம்மை நெருங்கியதும் வஜ்ரம் போன்ற உறுதியான தமது வலக்கரத்தால் அவன் தோள் ஒன்றைப் பற்றியபடி, அவன் முகத்தைக் கூர்ந்துநோக்கி கேட்டார்.

‘‘அச்சுதன் என்ற பெயருக்கு உரியவனின் மகிமையை நீ அறிவாயா? ம்ஹும்... உனக்கு எங்கே தெரியப் போகிறது அந்த மாவீரனின் மகிமை?’’ என்றவர், அந்த முரடனின் பதிலுக்குக் காத்திராமல், பாட்டொன்றும் பாடத் துவங்கினார்.

* ‘‘அரசர் குலதிலகன் அச்சுதன் முற்றத்தில்

  அரச ரவதரித்த வந்நாள் - முரசதிரக்

  கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர்

  வெட்டிவிடும் ஓசை மிகும்’’


 - இந்த இடத்தில் சட்டென்று பாடுவதை நிறுத்தியவர், தனது பெரிய விழிகளை இன்னும் அகலவிரித்தபடி அவர்களை நோக்கிக் கேட்டார்... ‘‘இது யார் பாடியது, எவரைக்குறித்து பாடியது தெரியுமா?’’

முரடர்கள் இருவரும் பதில் சொல்லத் தெரி யாது விழிக்கவே, தானே பதில் கூறத் துவங்கினார். ‘‘நீ எவன் பெயரை உனது பெயராகாகக் கொண்டிருக்கிறாயோ, அந்த மாமனிதனைப் புகழ்ந்து சோழ மன்னன் ஒருவன் பாடியது’’ என்றவர், ‘‘சோழன் மட்டுமல்ல சேர, பாண்டிய மன்னர்களும் பாடிப் பரவியிருக்கிறார்கள் நம் அச்சுதனை’’ என்றார் பெருமிதம் பொங்க. அந்த கணத்தில் அவரின் முகத்தில் சீற்றம் தணிந்து, ஓரளவு கனிவும் தோன்றியது. ஆனால் மறுகணமே அவரது முகபாவம் கடுமையாக மாற, முரடர்களான அவ்விருவரையும் நோக்கி, ‘‘இப்போது சொல்லுங்கள். பகைவர்களும் போற்றிப் பரவிய அந்த அச்சுதன் எங்கே... சிறு படைக்குப் பயந்து இலக்கையும் லட்சியத்தையும் தவறவிட்ட இழிபிறவியான நீங்கள் எங்கே? களப்பாளர்கள் என்று மார்தட்டிக்கொள்ள வெட்கமாக இல்லை?’’ என்று கடுஞ்சொற்களை வீசினார்!

அவரது வார்த்தைகள் தன்மானத்தை சீண்டி யிருக்க வேண்டும். ஆகவே, இருவரிலும் அச்சுதன் எனும் பெயர் கொண்டவன் சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான்: ‘‘அடிகளார் மன்னிக்கவேண்டும். ஒருபோதும் நாங்கள் எங்களது லட்சியத்தில் பின்னடையவில்லை.முயற்சியில் சிறிது தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் சூழலின் காரணமாக! தருணம் சாதகமாக இல்லாதபோது செயல்வேகத்தைக் கட்டுப்படுத் துவது விவேகம் அல்லவா...’’ என்றவன், மேலும் ஏதோ நீட்டிமுழக்க முயற்சிக்க, ‘‘ச்சீ.. மூடு வாயை’’ என்று அதட்டி மேற்கொண்டு அவனைப் பேசவிடாமல் தடுத்துவிட்டவர், தான் பேசத்தொடங்கினார்.

‘‘நன்றாகக் கேளுங்கள். ஏறக்குறைய அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு வரையிலும் தென்பரத கண்டமே நம் வசமிருந்தது. பார் போற்ற நாடாண்டோம். நம்மை எதிர்க்கத் துணிந்தோர் எவருமில்லை. நம்மவர்களின் சந்தோஷத்துக்கும் குறைவில்லாமல் இருந்தது. அதிலும், அச்சுத களப்பாளன் காலம் நமது பொற்காலம். அவன் பெயரைக் கேட்டாலே வடதேச அரசர்களும்
அஞ்சி நடுங்கிய காலம் அது. அவன் காலத்தில் பெளத்தம் செழித்தது. பின்னர் சமணமும் செழித்தோங்கியது. தென்மதுரை தாண்டி கழுகு மலை வரை பரந்து பட்டிருந்தது நம் பெருமை.  பள்ளிகள் எத்தனை, படுகைகள் எத்தனை எத்தனை... அப்பப்பா!’’

சிவமகுடம்  - 10

கண்களில் புத்தொளி துலங்க, பழங்கதையை தமது எதிர்காலக் கனவோடு பின்னிப் பிணைத்து விவரித்தார், தோற்றத்தில் துறவியாகத் தெரிந்த அந்த மனிதர்.

‘‘பூச்சியபாதர், அவரின் சீடர் வச்சிரநந்தி அடிகள் முதற் கொண்டு நம் அடியவர்கள் பலரும் எண்திசையும் புகழ்மணக்கத் திகழ்ந்தார்களே... அவர்கள் காலத்தில் தோன்றி மிளிர்ந்த திரிமிள சங்கத்தின் மாண்பை வெறும் சொற்களால் வடிக்க இயலுமா? அந்தப் பொற்காலம் திரும்ப வேண்டும். நம் பழம் பெருமையை நாம் மீட்டாக வேண்டும்!’’

உணர்ச்சிப் பெருக்குடன் பேசிமுடித்து, அர்த்த புஷ்டியோடு தங்களை ஏறிட்டுப் பார்த்த அந்த மனிதரை பெரும் தயக்கத்துடன் நோக்கினார்கள் முரடர்கள் இருவரும். வெள்ளுடை தறித்து துறவிபோல் தென்பட்ட அந்த மனிதரிடம் இப்போது சீற்றம் முழுமையாக தணிந்திருப்பதை நன்றாக உணர்ந்தார்கள். ஆகவே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சற்று சகஜமாகப் பேசவும் துணிந்தார்கள்.

‘‘அடிகளே... கட்டளையிடுங்கள். இதுவரை யிலும் எங்கள் பணியைச் சிறப்பாகவே செய்தோம். சில சறுக்கல்கள் இருந்தாலும் அது காலத்தால் ஏற்பட்டது. அந்தப் பிழைகளை மன்னியுங்கள். இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’’

அவர்களது கேள்விக்கு வெகுதிட்டமாக பதில் வந்தது அந்த மனிதரிடம் இருந்து.

‘‘இருவரை அழிக்கவேண்டும்!’’

இந்த பதில் முரடர்களுக்கு பெரும் வியப்பை அளித்தது. ஒருவர் யார் என்பது தெரியும். அவரை அழிப்பதற்கான முயற்சிதான் உறையூரில் இளவரசி மானியால் முறியடிக்கப்பட்டது. அடிகளார் இப்போது இருவர் என்கிறாரே... எனில், மற்றோருவர் யார் என்ற குழப்பம் அவர்களுக்கு. அவர்களின் அந்த குழப்பத்தை நீக்கும் வகையில், இரண்டாமவரின் பெயரையும் மெள்ள உச்சரித்தார், அமணத் துறவியின் தோற்றத்துடன் திகழ்ந்த அந்த மனிதர்.

அவர் உச்சரித்த அந்தப் பெயரைக் கேட்டதும், பகைவர் எவருக்கும் அஞ்சாத பலவான்களும் வீரர்களுமான அந்த முரடர்கள் இருவருக்குமே குலைநடுக்கம் ஏற்பட்டது! அவர்களில் கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது, உயிர் அச்சம்!

சிற்பங்கள் காட்டிய வியூகங்கள்!

பிறைசூடிய பெருமானிடம் இருந்து பூவாக்குக் கிடைத்ததில் இருந்து மகள் மானியின் போக்கு ஒவ்வொன்றும் பெரும் புதிராகவே இருந்தது மணிமுடிச் சோழருக்கு. சொல்லிலும் செயலிலும் அதீத வேகத்தைக் காட்டினாள் மானி. அவளின் அசைவுகள் ஒவ்வொன்றும் சோழர் படைகளை மிக அற்புதமாக நகர்த்திக்கொண்டிருந்தன.

பாண்டிய படைகள் ரிஷபகிரியில் இருந்து நகரத் துவங்கி விட்டதை அறிந்ததும், உறையூரில் இருந்தும் படைகள் நகரத் துவங்கின. படைகளில் ஒரு பிரிவு உறையூர் கோட்டையை  காத்து நிற்க, மற்றொன்று புலியூரை அடைந்துவிட்டது. மூன்றாவதாக ஒரு படைப்பிரிவு இரண்டு ஊர்களுக்கும் நடுவில் பாசறை அமைத்திருக்கிறது. கடற்புறத்தில் பரதவர்கள் எதிரிகளுக்காகக் காத்திருக்கிறார்கள். 

அனைத்தும் நன்று. 'பாண்டியனின் வியூகம் அஸ்திரம்' என்ற ரகசியமும் அவன் படை நகரத் துவங்குமுன்பே தெரிந்துவிட்டது. என்றாலும், அஸ்திரம் ஒன்றல்ல இரண்டு என்பதும், அவற்றில் ஒன்று மட்டுமே நகர்ந்திருக்கிறது; மற்றொன்று இன்னும் ரிஷபகிரியிலேயே நிலை கொண்டிருக்கிறது என்றும் வந்த தகவல்கள்தான் பெரும் புதிராக இருந்தன சோழர்பிரானுக்கு. இந்தத் தகவல் மானியை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்றும் அவர் எதிர்பார்த்தார்.

ஆனால் நிகழ்ந்ததோ வேறு. முன்பைக்காட்டிலும் அதிக சுறுசுறுப்பைக் காட்டினாள் மானி. பாண்டியனின் போக்கை அவள் பாராட்டவும் தவறவில்லை. இது, சோழருக்கு சிறிது எரிச்சலைத்
தந்தாலும் அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பகைவனின் பலத்தை எடைபோடும் தன் மகளின் திறமையை மெச்சவே செய்தார். என்றாலும் பாண்டியனின் இரண்டாவது அஸ்திரத்துக்கு அவள் என்ன பதிலை வைத்திருக்கிறாள் என்பதை  அவரால் அறியமுடியவில்லை. அத்துடன், தம்மையுமறியாமல் போர் நடவடிக்கைகளில் இந்த அளவு சுதந்திரத்தை மானிக்கு தான் வழங்கி விட்டதை நினைத்து வியக்கவும் செய்தார்.

சிவமகுடம்  - 10

அனைத்துக்கும் மேலாக ‘மூன்றாவது திட்டம் ஒன்றுண்டு’ என்றவள் அதைப்பற்றி வாய் திறக்காமல் இருப்பதும், அவருக்குப் பெரும் நெருடலைத் தந்தது. அதுபற்றி இன்று உறுதியாகக் கேட்டுத்
தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முடிவுடன்தான் அவள் அறையை நாடி வந்திருந்தார்.

ஆனால் இளவரசி மானியோ பட்டர்பிரான் வரட்டும் அனைத்துக்கும் பதில் சொல்கிறேன் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டதால், மேற் கொண்டு எதுவும் பேசாமல் சிந்தனையில் மூழ்கிப்போனார் மணிமுடிச் சோழர். மானியோ, ஓலைகளை எழுதுவதும், அதை வீரர்களை அழைத்து வெவ்வேறு இடங்களுக்குக்  கொடுத்தனுப்புவதுமாக நேரத்தைக் கழித்தாள்.

நான்கைந்து நாழிகைகள் கழிந்ததும் பரமேசுவரப்பட்டர் வந்து சேர்ந்தார். அவரை வரவேற்று உபசரித்த இளவரசி, தந்தையின்  கேள்விக்கு இடம் கொடுக்காமல் கூறினாள்...

‘‘தந்தையே! இனியும் தங்களை சிந்தனையில் ஆழ்த்த நான் விரும்பவில்லை. வாருங்கள், நீராட்ட குளத்துக்குச் செல்வோம். பாண்டியரின் அஸ்திரங்களை முறிப்பதற்கான விளக்கமும் வியூகமும் அங்கு கிடைக்கும் உங்களுக்கு’’ என்றபடி அவரின் பதிலை எதிர்பார்க்காமல் நடக்கத் துவங்கினாள். சோழரும், பட்டர்பிரானும் அவளைப் பின்தொடர்ந்தனர்.

நீர் தழும்பிக் கிடந்தது நீராட்டக்குளம்.படித்துறையை அடைந்த மானி, அங்கே பிடிச் சுவரில் இருந்த ஒரு புலிமுகச் சிற்பத்தைத் தன் கரங்களால் சுழற்றினாள். மறுகணம் பெரும் ஓசையுடன், எங்கு சென்றது எப்படி வழிந்தது என்று தெரியாத வகையில், அந்தக் குளத்தின் நீர் முழுவதும் வழிந்து வற்றிப்போக குளத்தின் தரைத் தளம் தெரிந்தது. மானி, மீண்டும் ஒருமுறை புலி முகத்தைத் திருப்ப, குளத்தின் தரைத் தளம் பிளந்து, பெரியதொரு சுரங்கப் பாதையைக் காட்டியது.

‘‘நானே அறிந்திராத ரகசியம்!’’ என்று கண்கள் விரிய வாய்விட்டு அரற்றினார் சோழர்பிரான். அந்த வியப்பு நீங்காமல் மானியையும் பட்டர் பிரானையும் தொடர்ந்து சுரங்கத்தின் படிகளில் இறங்கவும் செய்தார்.

உள்ளே, சுரங்கத்தின் சுவர்களில் சித்திரங்களும், சிற்பங்களுமாக   விரிந்துகிடந்தன பாண்டியனின் அஸ்திரங்களை முறிக்கக் காத்திருக்கும் வியூகங்கள்!

- மகுடம் சூடுவோம்...