Published:Updated:

முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா?

முதியவர்கள் - முன்னோடிகளா,  முட்டுக்கட்டைகளா?
பிரீமியம் ஸ்டோரி
முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முதியவர்கள் - முன்னோடிகளா,  முட்டுக்கட்டைகளா?
பிரீமியம் ஸ்டோரி
முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா?

? சமீபத்தில் என் நண்பன் ஒருவன் தன் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டதாக அறிந்து வருந்தினேன். அதுபற்றி மற்ற நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ‘பெரியவர்களும் வீட்டில் சும்மா இருப்பதில்லை. அவர்கள் தொந்தரவு செய்யாமல் இருந்தால் பிள்ளைகள் இந்த முடிவுக்கு வரமாட்டார்களே’ என்றான் நண்பன் ஒருவன்.

என்னால் இதை ஏற்க இயலவில்லை. முதியோர்களின் வழிகாட்டுதலையும், அறிவுரைகளையும் தொந்தரவாக நினைக்கலாமா? தவிர, நமது பண்டைய கலாசாரத்தின் பிரதிபலிப்பான கூட்டுக்குடும்ப அமைப்பும் படிப்படியாக சிதைந்து வருகிறது. இப்படியான நிலைமைகள் நன்மையை விளைவிக்குமா?

- சி.பழநியப்பன், திருச்சி-2


முதல் கோணம்

பண்டைய நாட்களில் குடும்பத் தலைவ னான தாத்தா சொல்வதை மகனும் கேட்பான், பேரனும் கேட்பான். ஏன், குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே தாத்தா சொற்படி நடப்பார்கள். அவரது சொல்லை விமர்சனத்துக்கு உட்படுத்த மாட்டார்கள். அதைத் தீர்வாக ஏற்பார்கள். மொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியில் விளங்கும். குடும்பத்தில், அப்பா தாத்தா ஆனதும் புதிய பேரனும் தோன்றிவிடுவான். அப்போது அந்த தாத்தாவின் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள். பேரனே தாத்தா ஆகும்போதும் அவனது அறிவுரையில் குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும்.

? சரிதான்... எல்லாவற்றுக்கும் மூத்தோரை எதிர்பார்த்துக் கொண்டி ருந்தால் சடுதியில் காரியம் நடக்குமா?

சடுதியில் நடக்கிறதோ இல்லையோ சங்கடம் இல்லாமல் நடந்தேறும். நமது பண்பாடு தாத்தாவிடம் இருந்து மகனுக்கும், பேரனுக்கும் கைமாறும். அத்துடன் குடும்ப உறுப்பினர்களும் பண்பாளராக மாறிவிடுவார்கள்.

கூட்டுக் குடும்பம், சொந்தபந்தம், நட்பு வட்டம், பெரியோர்களது அரவணைப்பு, சிறியோர்களின் ஒத்துழைப்பு ஆகிய அத்தனையும் பழக்கத்துக்கு வந்து நட்பும் பாசமும் வளர்ந்து நிலைபெற்று விடும்.

முதியவர்கள் - முன்னோடிகளா,  முட்டுக்கட்டைகளா?

அந்நியராகப் பார்க்கும் எண்ணம் அறவே அகன்றுவிடும். இவன் என்னைச் சார்ந்தவன்; அவன் என்னில் இருந்து வேறானவன் என்ற எண்ணம் தோன்றாமல், நட்பில் அனைவரையும் தன்னைச் சேர்ந்தவராகப் பார்க்கும் பாங்கு வளரும். கிராமம், நகரம், தேசம் என்ற பாகுபாடுகளைக் கடந்து, உலகமே நம்மைச் சேர்ந்தது, உலக மக்கள் எனது குடும்ப உறுப்பினர் என்ற உயர்ந்த எண்ணம் உதயமாகி, இன்னல் தோன்றா உலகை உருவாக்குவார்கள் (அயம்நிஜ: பரோவேதிகண னாலகுசேதஸாம் உதாரசரிதானாம்து வஸுதை வகுடும்பகம்). அன்றைக்கு பண்பும் பாசமும் கலந்து, மகிழ்ச்சியும் பூரிப்பும் நிறைந்த குடும்ப வாழ்க்கை ஒன்று இருந்தது.

? இன்றைக்கு எவருமே மகிழ்ச்சியாக இல்லை என்கிறீர்களா?

 இன்று விஞ்ஞான முன்னேற்றம் பண்பையும் பாசத்தையும் மறக்கடித்து, சுய நலத்தையும் பாகு பாட்டையும் வளரவைத்து, ‘எங்கே மகிழ்ச்சி, எங்கே அமைதி’ என்று அலைந்து திரிந்து தேடும் அவலத்தைப் பார்க்கிறோம். கடைசியில் மகிழ்ச்சியும் அமைதியும் கைக்கு எட்டாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறான். விஞ்ஞான முன்னேற்றம் அவனை திசை திருப்பவில்லை. அவன், இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி விஞ்ஞான வாழ்க்கையை சரண் அடைகிறான். பண்பையும் பாசத்தையும் மறந்த மனம், விஞ்ஞான மாயையைத் தழுவி, அமைதியற்று கொந்தளிப்போடு வாழ்ந்து திக்குத் தெரியாமல் தவிக்கிறது.

பண்புக்கும் பாசத்துக்கும் பாடசாலை இல்லை. அவற்றை தாத்தாவிடமும், அப்பாவிடமும் குடும்பச் சூழலில் கற்றுக்கொள்ள வேண்டும். வெள்ளைக்காரன் ஆட்சியில், பள்ளிக்கூடத்தில் வாரத்துக்கு ஒரு நாள் 45 நிமிடம் அறநூலின் சாரத்தை ஓத வாய்ப்பு அளித்து வந்தார்கள். ஆட்சி நம் கையில் மாறியபிறகு,  இந்த வழக்கத்தை பள்ளிக்கூடத்தில் இருந்து விரட்டி அஞ்ஞான வாசத்தை ஏற்கவைத்தோம். பண்பும் பாசமும் தொடாத கல்விதான் நமக்குப் பிடித்திருக்கிறது. அவை இரண்டும் நம்மில் இல்லாதபடியால், அவற்றை அறிமுகம் செய்ய இயலவில்லை.

தாத்தா ஒரு குடும்பம், அப்பா ஒரு குடும்பம், பேரன் ஒரு குடும்பம் என்று சிதறிப்போய்விட்டது பண்டைய கூட்டுக்குடும்பம். தாத்தாவின் பரிந்து ரையை அப்பா கேட்க மாட்டார். அப்பாவின் பரிந்துரையை பேரன் கேட்க மாட்டான். விஸ்தாரமாக இருந்த நட்பு வட்டம் சிறு குடும்பமாகச் சுருங்கிவிட்டது. சிறு குடும்பத்தில் இருக்கும் கணவன், மனைவி, மகன் - இவர்களும் சுயநலத்தில் தனித்தனியாகவே வாழ்கிறார்கள். சுயநலத்துக்கு உகந்த சிந்தனையில் அவர்கள் விருப்பப்படி வாழ்கிறார்கள். பொறுப்பு இல்லாத சுதந்திரத்தையே எல்லோரும் விரும்புகிறார்கள்!

? எவரையும் சாராமல் தனித்து வாழ முயற்சிப்பதை பொறுப்பில்லாத தன்மை என்று எப்படிச் சொல்ல முடியும்?

அப்பாவுக்கு தாத்தா சுமையாகப்படுகிறார். அவரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிடு கிறார். பேரனுக்குக் குடும்பச் சூழல் கசக்கிறது. எனவே, ஹாஸ்டலில் தங்கியிருந்து பள்ளிக்கூடம் செல்கிறான். கணவன், மனைவி இருவரும் வேலை பார்ப்பதால், சமையல் செய்ய நேரம் இல்லை. உணவை வரவழைத்து உண்டு  மகிழ்வார்கள். வீடு என்பது வெறும் தங்கும் இடமாக மட்டுமே மாறிவிட்டது. தனி வீட்டில் வாழ்வது சங்கடமாக மாறிவிட்டது. வீட்டின் பராமரிப்பு சுமையாகத் தோன்றிவிட்டது. அத்துடன் பாதுகாப்பு இன்மை யும் அவர்களை சிந்திக்கவைத்தது. ஆகவே, வீட்டை விட்டு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு மாற வேண்டிய கட்டாயம் வந்தது. பராமரிக்க ஆள் இருப்பதால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்ற நப்பாசை, அவர்களை அந்த வாழ்க்கையில் நிலைக்கவைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதியவர்கள் - முன்னோடிகளா,  முட்டுக்கட்டைகளா?

அங்கும் சுயநலம் மேலோங்குவதால், அது அக்கம்பக்கத்துடன் அவர்களை நெருங்க இடமளிக்கவில்லை. ஓர் அறையில் தம்பதி இருவரும் தனியாக வாழ்கிறார்கள். அதுமட்டுமா? பொருளாதார நிறைவும் புகழும் எட்டியவுடன் அகங்காரம் மேலிட்டு, அந்த இருவருக்குள்ளும் விரிசல் ஏற்படும்; விவாகரத்தைச் சந்திக்கவும் தயங்கமாட்டார்கள். ஆக, சுயநலம் அவர்களை தனிமைப்படுத்த உதவியது. அதன் பிறகு மற்றொருவருடன் மறுமணத்தை ஏற்காமல் ஒப்பந்தத்தோடு சேர்ந்து வாழ எண்ணுவார்கள். அப்போதும் பண்பும் பாசமும் தலைதூக்காது. சுயநலம் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கும். திருமணத்தை ஏற்றால் மீண்டும் விவாகரத்தைச் சந்திக்கவேண்டியிருக்கும். ஆகையால் அதைத் தவிர்த்து வாழ முனைவார்கள்.

அவர்களின் மனம் சந்தோஷத்தை சுவைக்க முடியவில்லை சந்தேகக் கண்ணோடு திகழும் அவர்களது பரிமாற்றம் நிலையான வாழ்க்கையை இழக்கச் செய்கிறது. இத்தனை அவலங்களுக்கும் நமது பண்பாடும், ஒழுக்கமும், பாசமும் அறவே அகன்று போனதுதான் காரணம் என்ற சிந்தனை இன்னும் முளைக்க வில்லை. விஞ்ஞானம் வானளாவ வளர்ந்தாலும் மகிழ்ச்சி எட்டாக் கனிதான். அகங்காரத்தைத் துறந்து, பண்பையும் பாசத்தையும் புதுப்பித்துக் கொண்டால் மட்டுமே அமைதியை எட்ட இயலும்.

இரண்டாவது கோணம்

தங்களது கணிப்பு ஏற்புடையது அல்ல. அறியாமையே தங்களின் சிந்தனையை மாற்றியிருக்கிறது. மாறிக்கொண்டே இருப்பதுதான் காலத்தின் இலக்கணம். கிருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களும் மாறிக்கொண்டிருக்கும் கால அளவை வைத்து எழுந்தன. தியானத்தில் கடவுளைக் கண்டவன், வேள்விக்கு இறங்கி வந்தான். அதுவும் இயலாமல் பூஜையில், வழிபாட்டில் கடவுளைப் பார்க்க எண்ணினான். கடைசியில் இன்று அவன் பெயரை உச்சரிப்பதோடு நிறுத்திக்கொண்டான். கால மாற்றத்துக்கு உகந்தபடி நாம் மாற விரும்பா விட்டால் வாழ இயலாது.

? நடைமுறைகளின் மாற்றம் நமது இயல்பையும் மாற்றினால், அது நன்மை தருமா?

வாழ்க்கை வாழ்வதற்கே; காலம் கடந்து செயலற்றுப் போன பண்புகளை பேணிக் காப்பதற்கு அல்ல. ஆறு பருவங்களும் கூடகாலத்துக்கு உகந்த வகையில் தங்களின் இயல்பை மாற்றிக் கொள்கின்றன. இலையுதிர் காலம் வசந்தமா கவும், வசந்தம் கோடையாகவும், கோடை மழைக்காலமாகவும் மாறுவதைக் காண்கிறோம்! பண்டைய பொருட்கள் பலவும் இன்று இல்லை. பண்டைநாளில் தென்படாத பொருள்கள் இன்று தோன்றியிருக்கின்றன. நதி தீரங்கள் பாலை வனமாகவும், பாலைவனம் நதி தீரங்களாகவும் மாறியிருக்கின்றன! இயற்கையே மாற்றத்தை ஏற்கும்போது, இயற்கையின் படைப்பான மனித இனமும் மாறித்தான் ஆக வேண்டும்.

தாத்தா வாழ்ந்த சமுதாயத்தின் நடைமுறைகள் அப்பாவின் காலத்தில் இருக்காது. பேரன் காலத்தில் அதன் அடையாளமே வேறாக இருக்கும். தாத்தாமார்கள் தங்களின் அனுபவத்தை நிலையானதாக நினைத்துக்கொண்டு, தனது மகனையும் பேரனையும் காலத்துக்குப் பொருந்தாத வகையில் பரிந்துரை அளித்து அவர்களை திசை திருப்புகின்றனர். கூட்டுக் குடும்பத்தில் பண்பு காப்பாற்றப்படவில்லை. மற்றவர்களது சுதந்திரத்தை முடக்கி, கசப்பான அனுபவங்களை குடும்ப உறுப்பினர்களிடம் திணிக்கிறார்கள்.

முதியவர்கள் - முன்னோடிகளா,  முட்டுக்கட்டைகளா?

? கசப்பான அனுபவங்கள் என்று எதைச் சொல்கிறீர்கள்?

நீண்ட பட்டியலே உண்டு! கூட்டுக் குடும்பத்தில் மாமியாரும் மருமகளும் நட்போடு இருந்ததாகச் சரித்திரமே இல்லை. ஆக, பெயருக்குக் கூட பண்பு தென்படவில்லை. ஆக, ஆணாதிக்கம் வலுப்பெற்ற நிலையில் குடும்ப உறுப்பினர்கள் கசப்போடுதான் வாழ்ந்தனர். தாத்தாவை பின்பற்றி அப்பனும் ஆணாதிக்கத்தை ஏற்று, குடும்ப உறுப்பினர்களை அடிமைகளாக வாழ வழிவகுத்தார். பேரனும் அப்படியே.

ஆக, அங்கு பண்பும் பாசமும் பயிற்றுவிக்கப்பட வில்லை. ஆண் வர்க்கத்தின் சர்வாதிகாரம் செயல்பட்டுக் கொண்டு இருந்தது. உலக நாடுகளில் அடிமைத்தனம் மறைந்து ஜனநாயகம் தழைத் தோங்கி வளர்ந்த பிறகே, காலம் கடந்து விழித்துக் கொண்டது பாரதம். அந்த மாறுதல் தென்பட்ட பிறகுதான் குடும்ப உறுப்பினர்களிடம் சுதந்திர வேட்கையும், காலத்திற்கு உகந்த மாறுபாட்டை ஏற்கும் துணிவும் வந்தது.

? எனில், நம் தாத்தா-பாட்டி காலத்தில் சுதந்திர மாக வாழ இயலவில்லை என்கிறீர்களா?

பெண்மையை நுகர்பொருளாகப் பார்த்த காலம் அது. மகனும் மருமகளும் தாத்தா-பாட்டிக்கு பணிவிடை செய்துகொண்டு, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாவலர்களாக இருக்கச்
செய்வதே நோக்கம். பண்பு என்ற பெயரில் மகன், மருமகளின் வாழ்க்கை சுகத்தைத் துறக்க வைத்து, தாத்தாவும் பாட்டியும் தங்களது சுயநலத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். தாய் சொல்லை தட்டாதே, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்றெல்லாம் சொல்லி, தங்களது வாழ்க்கைச் சிறக்க அவர்களது வாழ்க்கையைத் துறக்கவைத்தார்கள்!

மாமியார் மருமகளை துன்புறுத்தும்போது அப்பனும் மகனும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்கள். மருமகளிடம் அனுதாபம் இருக்காது.

மாமியாருக்கு  மருமகள் பெற்ற குழந்தையைப் (பேரனை) பிடிக்கும். மருமகளைப் பிடிக்காது. இதற்குப் பெயர் பண்பா? மகனும் தாய் சொல்லைக் கேட்டு மருமகளை (தனது மனைவியை) அவளது பிறந்தகத்துக்குத் திருப்பி அனுப்பிவிடுவான். அவனது பெற்றோர்கள் மௌனமாயிருப்பார்கள். ஆக, மகனுக்கும் மருமகளுக்கும் சுதந்திரமாக செயல்பட அதிகாரம் இருக்க வில்லை.

? தற்காலத்தில் மட்டும் நிலைமை சீராகிவிட்டது எனக் கருதுகிறீர்களா?

தற்போது அவர்களது காலம் கனிந்திருக்கிறது. தனித்து இயங்கும் தன்னம்பிக்கை வளர்ந்திருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி அவர்களுக்கு சாதகமாக பயன் பட்டது. கூட்டுக் குடும்பத்திலிருந்து விடுபட்டு வெளியே வந்தார்கள். ஆணாதிக்கம் மறைந்து, பெண் சுதந்திரம் வளர்ந்து, படிப்பிலும் வேலை யிலும் மேன்மை அடைந்து சுதந்திரமாக வாழ்ந்து, அவர்கள் உலக சுகத்தை சுவைத்து மகிழும் காலம் வந்திருக்கிறது. அப்பனின் உதவியின்றி படித்து பட்டம் பெற்று வேலையில் அமர்ந்து, புகழோடு வாழும் வழிவகைகள் மகன்களுக்கும் மகள் களுக்கும் கைவந்த கலையாக மாறி விட்டது.

முதியவர்கள் - முன்னோடிகளா,  முட்டுக்கட்டைகளா?

எனவே, முதுமையை அடைந்தவர்கள் சிறுசு களின் வாழ்க்கையில் தலையிடாமல் ஒதுங்கி யிருப்பது அழகு. அதற்கு முற்படாமல் அவர்களது வாழ்க்கையில் தேவையற்று நுழைந்து செயல்படும் போதுதான், இளையவர்கள் முதியோர்களை அப்புறப்படுத்தும் கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்; முதியோர் இல்லத்தில் வைத்து பாதுகாக்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். இதுதான் பண்பு.

அப்பனைப் போல் சுயநலத்தில் முழுகாமல் தனது குழந்தைகளை மூன்றரை வயதிலிருந்தே கல்வியில் இணைத்து அவனது வாழ்வுக்கு அஸ்திவாரம் அமைக்கிறார்கள். அவர்கள் வளர்ந்து சமுதாயத்தில் ஈடுபடும் வேளையை மதிப்பீடு செய்து, அந்தக் காலத்துக்கு உகந்த வகையில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவதற்கு ஏற்ப, படிப்பையும் தொழிலையும் பரிச்சயப்படுத்துகிறார்கள். தற்கால அப்பன் பிள்ளைகளை எதிர்பார்க்காமல் வாழத் தெரிந்தவன். மகன்களும் அப்பனை எதிர்பார்க்காமல் வாழத் தெரிந்தவர்கள். இரண்டு குடும்பமும் சச்சரவு இன்றி அமைதியாக வாழ்கிறது. இதுதான் இப்போதைய பண்பு.

மூன்றாவது கோணம்!

சொல் வளத்தால் பண்பை பாதகமாக சித்திரிக்கிறீர்கள். செயல்பாட்டில் அது எடுபடாது. பலரும் தங்களின் சொல்வளத்தால் மக்களை மயக்கி தங்களது சுயநலத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். இனி, அதுபோன்றவர்களின் அளவு கடந்த பாசத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள்! சொல்வளத்தால் எவரையும் ஏய்க்க முடியாது!

? இளைய தலைமுறையின் எதிர்பார்ப்புகளையும் கருத்துகளையும் சொல் வளம் என்றும் வெறும் அலங்கார வார்த்தைகள் என்றும் அலட்சியப்படுத்துவது சரியா?

எவரையும் நாங்கள் அலட்சியப் படுத்தவில்லை. இன்றையச் சூழலில் தனி மனிதன் தனியாக வாழ இயலாது. பிறரோடு இணைந்துதான் வாழ வேண்டும். இணைந்து வாழும் பண்பு இருந்தால் மட்டுமே வாழ இயலும். உலக நாடுகளே ஒன்றோடு ஒன்று இணைந்துதான் வாழ இயலும் என்பதை அறிந்து செயல்ப டும்போது, தனிமனிதன் எப்படி சுதந்திரமாக வாழ இயலும்?

வாழ்க்கையில் தேவைகள் புதிது புதிதாக தோன்றிக் கொண்டிருக்கும். காலத்துக்கு ஏற்ப தேவைகளின் அளவும் மாறிக் கொண்டிருக்கும். சமுதாயத்தோடு இணைந்து செயல்பட்டு தேவை களை நிறைவேற்ற வேண்டும். குடும்பத்தோடும், கிராமத்தோடும், நகரத்தோடும், தேசத்தோடும், உலகத்தோடும் இணைந்துதான் இருக்க வேண்டும். காலத்துக்கு ஏற்ப மாறுதலுக்குக் கட்டுப்பட்டு, நட்போடு மற்றவர்களுடன் இணைந்து வாழும் பக்குவம் ஏற்படாத வரையில் வாழ்க்கை இனிக்காது.

வேலையில் அமர்ந்தவன் மேலதிகாரியின் கட்டுப்பாட்டில் தனது சுதந்திரத்தை இழப்பான். பல இடங்களில் சுதந்திரத்தை விட்டுக்கொடுத்துதான் வாழ இயலும். முழு சுதந்திரம் எவருக்கும் இல்லை. தவறு செய்தவனுக்கு, தவறுக்கு உகந்த தண்டனையை அளிப்பார் கடவுள். தனது விருப்பப்படி சுதந்திரமாக செயல்பட இயலாது. அணு ஆயுத சோதனையை ஒரு தனி நாடு செயல்படுத்த இயலவில்லை. மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. பண்பாடும், ஒழுக்கமும் தனி மனித முன்னேற்றத்திற்கு அவசியம். காலத்தால் ஏற்பட்ட மாற்றம் அதற்கு ஈடாகாது. பண்பும் ஒழுக்கமும் உளவியலைச் சார்ந்தது. அது கால மாற்றத்துக்குச் சம்பந்தம் இல்லாதது. அதற்கு நூலறிவு மட்டும் போதாது; செயலறிவும் வேண்டும். அது கூட்டுக் குடும்பத்தில்தான் கிடைக்கும்.

? கூட்டுக் குடும்பத்திலும் பிரச்னைகள், தடைகள் உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

சுதந்திர செயல்பாட்டுக்கு தடையிருக்கும் என்பதையே நீங்கள் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறீர்கள். பண்பை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையை சுதந்திரம் பறிபோனதாகச் சித்திரிப்பது தவறு.

சுதந்திரத்தைப் பறிகொடுத்து பல தேவைகளை நிறைவு செய்வோம். அலுவலகத்தில் இரவு பகலாக வேலைப் பளுவை ஏற்று சுதந்திரத்தை இழப்போம். மனைவியிடம்  ஏற்படும் ஈர்ப்பில் அவளுக்குச் சாதகமாகச் செயல்பட்டு நம் சுதந்திரத்தை மறப்போம். குழந்தையைக் காப்பாற்ற இரவு உறக்கத்தை துறப்போம். குடும்ப நன்மைக்காக கடன் சுமையை ஏற்போம்.

தாத்தாமார்கள், தனது குடும்பம் பண்போடும் ஒழுக்கத்தோடும் விளங்கவேண்டும் என்று எண்ணுவர். அதை நடைமுறைப் படுத்த சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவார்கள். எதிர்காலத்தில் பேரனின் வாழ்க்கையைப் பார்த்து மகிழும் வாய்ப்பு இருக்குமா இல்லையா எனத்தெரியாது. ஆனாலும், பேரன் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவார். அவரிடம் சுயநலம் அணு அளவும் இல்லை. பொதுநலனில் அக்கறை இருக்கும். தான் சேமித்த சொத்தை குடும்பத்துக்கு அளித்துவிடுவார். ஆணாதிக்கமும் அங்கு தென்படாது. வழிதவறிப் போகாமல் இருப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது ஆணாதிக்கம் ஆகாது. மகனுக்கு மருமகளைத் தேடிப்பிடித்து அளித்ததும் அவர் தான். அவனுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைப்பதும் அவர்தான்!

குடும்ப உறுப்பினர்கள் சீரும் சிறப்புமாக வாழத் தனி கவனம் செலுத்துவார்கள். குடும்ப கௌரவத்தை கட்டிக்காக்க விழித்துக் கொண்டிருப்பார். உயிர் பிரியும் வரை, குடும்பத்தின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஒத்துழைப்பு கொடுத்துக்கொண்டு ஓயாமல் பாடுபடுவார். மகன், மகள், பேரன்கள் இவர்களோடு இணைந்து இருந்துகொண்டு, அவர்களது முன்னேற்றத்தைக் கண்டு மனம் மகிழ்வார். மற்றவர்கள் தங்களுக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்று விரும்பமாட்டார்.

முதுமையில் அவர்களது விருப்பம் சுயநலமல்ல. குடும்பம் செழிப்போடு வளர்ந்து மகிழ்வதைப் பார்த்து மகிழ்பவர்கள் முதியவர்கள் இளையோர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க எப்போதும் தயாராக இருப்பார்கள். பணம் சேமிப்பார்கள்... தங்களுக்காக அல்ல; குடும்பத்துக் காக. அவர்களுக்கு குடும்ப மகிழ்ச்சிதான் முக்கிய குறிக்கோள்.

? அப்படியான குறிக்கோள் இன்றைய சமுதாயத்தில் இல்லை என்கிறீர்களா?

இன்றைய சமுதாயம் குடும்ப பந்தத்தையும், நட்பையும், பாசத்தையும் அறுத்துக்கொள்ள விரும்புகிறது. அதற்கு உகந்த வகையில் செயல்பட வும் துணிந்துவிடுகிறது.

மூன்றரை வயது குழந்தையை ஆங்கிலக் கல்வியில், அதுவும் உயர்ந்த கல்வியில் இணைத்து படிக்கவைப்பார்கள். தங்களின் தகுதிக்குப் பொருந்தாத அளவில் பிள்ளையை வளர்ப்பான். ஆனால், பிள்ளை வயது வந்ததும் தகப்பனை மதிக்காதவனாக மாறிவிடுவான். தனது விருப்பப்படி செயல்படுவான்; விருப்பப்படி மணப்பான். அவனிடம் தந்தை பாசம் இருக்காது. தனிக்குடித்தனம் போவான். பந்தமும் பாசமும் இல்லாமல் வளர்வான்.

தந்தை விஷயத்தில் மட்டுமா? காதலித்து கைப்பிடித்தவள் ஒத்துவராவிட்டால் அவளையும் துறப்பான். அன்பும் பண்பும் இருக்காது. மீண்டும் திருமணத்தில் இணைந்தாலும் இரண்டாம வளும் ஒத்துவரவில்லை எனில், அவளையும் முறித்துவிடுவான்.அன்பும், பண்பும், பாசமும் அறவே இருக்காது. சேமித்த பணத்தை விருப்பப்படி செலவு செய்வான். குடும்பப் பொறுப்பு அறவே அற்றுவிடும். சந்தர்ப்பத்துக்கு உகந்தவாறு நட்பும் பகையும் செயல்படும். மனிதப் பண்பு அற்றுவிடும். இப்படியான நிலையைப் பெருமையாகச் சித்திரிக்கும் தங்களின் திறமை ஏற்புடையது அல்ல. காட்டில் ஆறாவது அறிவு இல்லாத வனவிலங்குகளே கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. ஆனால், மனித இனமோ கூட்டுக்குடும்பத்தில் வாழ விரும்பாததை எண் ணும்போது, மனதில் வேதனை எழுகிறது. பண்பு, பந்தம், பாசம் ஆகியவற்றை புதுப்பித்து கூட்டுக்குடும்ப வாழ்க்கையை ஏற்பது சிறப்பு.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை

சில பழைமையான நடைமுறைகள் என்றைக்கும் பயனுள்ளதாக இருக்கும். அவை காலத்தால் அழியாமல், நிரந்தரமாக நன்மையை அளிக்கும். உண்மையைப் பேசு, கடமையைச் செய் (ஸத்யம் வதர தர்மம் சர) என்பது மிகமிகப் பழைமையானது. அது காலத்தால் அழியாது.

குற்றவாளியிடம் உண்மையைக் கண்டறியும் பரிசோதனை நடைபெறுகிறது. கடமை தவறியவனை தண்டிக்கிறது. அது காலத்தால் மாறவில்லை. பண்பும், ஒழுக்கமும் காலத்தால் மாறாதவை, மிகமிகப் பழைமையானவை. அவற்றை காலத்தால் அழிக்க முயற்சிப்பது தற்கொலைக்கு ஒப்பானது.

மனித இனம் பெருமையோடு விளங்க பண்பும் ஒழுக்கமும் தேவை. அவற்றைப் போதிப்பது கூட்டுக்குடும்ப வாழ்க்கை. அது என்றைக்கும் நன்மை அளிக்கும். அதற்கு ஈடான மற்றொன்று இருக்க இயலாது. பண்பும் ஒழுக்கமும் பழைமை என்று ஒதுக்க வேண்டிவை அல்ல. நமது முன்னோர்கள் அவற்றைக் கடைப்பிடித்து வந்ததால்தான் நாம் பெருமையோடு வாழ்கிறோம். நாம் கடைப்பிடித்தால்தான் நமது அடுத்த பரம்பரை வாழும். இது சுயநலமல்ல; பொது நலம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.