Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ

Published:Updated:
அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
அருட்களஞ்சியம்

அருள் மணம் வீசும் அரவிந்தம்!

தத்துவம் எங்கு பிறந்தாலும் அது தவம் செய்து ஒளி பெற்றதெல்லாம் பாரதத்தின் தென் திசையில்தான். காந்திஜி பிறந்தது குஜராத்தில்தான். என்றாலும், அந்த ஏழைப் பங்காளன் ஏழ்மைக் கோலம் பூண்டது மதுரை என்ற தென்பாண்டி மண்ணில். விவேகானந்தர் பிறந்தது வங்கத்தில்தான்; ஆனால், அவர் தவமியற்றி அன்னையின் அருளைப் பெற்றது தென்குமரி முனையில்.

அதேபோல் உலகுக்கு ஓர் அருள் ஒளியாய்த் திகழ்ந்தவர் அரவிந்தர். அரவிந்த கோஷ் பிறந்தது கல்கத்தாவில்; ஆனால், அவர் யோகம் புரிந்து ஞானமாய்த் திரண்டெழுந்து அருள் மணம் வீசும் தெய்விக அரவிந்த மலராக மகரந்தம் வீசியது தென் பாரதத்தில் வங்கக் கடலின் தென் முனையருகே; பாண்டிச்சேரியில்!

‘எல்லாம் நானே! என்னை அறிவாய்!’ என்று குரல் கொடுத்தான் கீதை நாயகனான கண்ணன். அந்தக் கீதை நாயகனின் ஞானத் தொட்டிலில் வளர்ந்த பிள்ளையான அரவிந்தர், அந்தக் கீதைக்கு விளக்கம் சொன்னார்:

‘‘இறைவனை அறிவதற்கு இந்த லோகத்தை விட்டே மடிந்து மறு உலகம் செல்ல வேண்டும் என்பதில்லை. இறைவன் உன்னிலே இருக்கிறான். அவனை இந்த உலகத்திலேயே, இந்த மனித சடலத்தோடேயே நீ உணரலாம். அவனோடு பேசலாம். அதற்கு நீ உன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளத் தேவை ஒன்றே ஒன்றுதான்; தியானம்!

அருட்களஞ்சியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விலங்கினத்திலிருந்து மனித இனமாக வளர்ந்தவன் நீ! உன் வளர்ச்சியை இதோடு நிறுத்திக்கொள்ளாதே. சாதாரண மனித இனத்திலிருந்து தெய்விக மனிதனாக நீ மாறவேண்டும். இது நடக்க முடியாத காரியமல்ல. மனித குலம் எப்படி விலங்கினத்திலிருந்து வளர்ந்ததோ அப்படி, மனித இனம் தெய்வ இனமாக மாறவும் முடியும். மாறித்தான் ஆகவேண்டும். இது வெறும் தத்துவம் அல்ல; நடைமுறைச் சித்தாந்தம்தான்! மனிதனின் அடுத்த முயற்சியினால் தெய்விக மனிதனாக மாற முடியும்.

அதற்கு நானே சாட்சி. நான் இதோ என் தவத்தாலும் யோகத்தாலும் மனித உடலோடே தெய்விக மனிதனாக மாறியிருக்கிறேன். முக்காலத்தையும் என்னால் உணர முடிகிறது. தெய்வத்தை என்னால் நேரடியாக உணர முடிகிறது.

நீங்களும் என்னைத் தொடர்ந்து என் வழியில் பயிற்சி செய்தால், அப்படி தெய்விக மனிதர்களாக மாற முடியும். அப்படி மாற வேண்டியதுதான் இன்றைய மனித குலத்தின் அடுத்த முயற்சி. அவர்கள் ஏற வேண்டிய பாதையின் அடுத்த படி!’’

- இதுதான் மகான் அரவிந்தரின் ஞான அழைப்பு.

** 18.7.71 ஆனந்த விகடன் இதழிலிருந்து...

சித்திர ராமாயணம்

திருமணத்துக்குப் பின்

விச்வாமித்திர முனிவர் மணமக்களுக்கு ஆசி கூறிவிட்டு மறுபடியும் தாம் உகந்த மலையிலே தவஞ்செய்யப் போய்விட்டார். இனி நாம் இவரை ராமாயணத்தில் சந்திப்பதேயில்லை.
தசரதன் தம் மக்கள், மருமக்கள் முதலியவர்களுடன் அயோத்திக்குப் புறப்பட்டான். சக்ரவர்த்தி முன்னே செல்ல மிதிலைவாசிகள் மனம் பின்னே தொடர, தம்பிமார் அருகே வர, ராமன் சீதையுடன் இனிமையாக அயோத்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.

அருட்களஞ்சியம்

வழியிலே பரசுராமன் மின்னும் ஜடையோடும் வில்லோடும் தன் ஆயுதமான மழுவோடும், முகமும் கண்ணும் நெருப்பைக் கக்க, பயங்கரமாக வருகிறான். தன் தாய் தந்தையருக்குக் கேடு செய்த கார்த்தவீரியார்ச்சுனன் என்ற அரசனுடைய தோள்களை வெட்டித் தள்ளியும் கோபம் தணியாமல் பல வேறு க்ஷத்திரிய அரசர்களையும், வெறி கொண்டவனைப்போல் கொன்று தள்ளியவன், இப்போது ரௌத்ராகாரமாக வருவது கண்டு, தசரதன் தன் அருமைப் பிள்ளையாகிய ராமனுக்குக் கேடு விளையுமோ என்று பயப்படுகிறான்.

பரசுராமனோ இடிக் குரலில் அதட்டிக் கொண்டே ராமன் எதிரில் வருகிறான். சக்ரவர்த்தி ராமனுக்கும் பரசுராமனுக்கும் இடையே போய்த் தரையில் முடி படியப் பரசுராமன் காலில் விழுகிறான்.

அருட்களஞ்சியம்

‘இவனும்என(து) உயிரும்உன(து)
அபயம்இனி’ என்றான்.


‘எனதுயிரும்’ என்பதற்கு முன் ‘இவனும்’ என்று ராமனைக் குறிப்பிடுவதால், இவன் தன் உயிரினும் இனியவன் என்பதும், ராமன் இருந்தால்தான் தனக்கும் உயிர் இருக்கும் என்பதும் குறிப்பு. எனவே ராமனைக் காப்பாற்ற வேண்டுமென்றும், அவனைக் கண்டு இன்புற்றிருக்கவே தனக்கும் உயிர்ப்பிச்சை கொடுக்க வேண்டுமென்றும், ராமனும், தன்னுயிரும் பரசுராமனுடைய அடைக்கலப் பொருளாகுமென்றும் சொல்லி ஸ்தோத்திரம் செய்கிறான்.

பரசுராமன் அந்தச் சமாதான முயற்சியைச் சிறிதும் கவனிக்க வில்லை. காலில் விழுந்த வீர மன்னனை இகழ்ந்து ராமனை நோக்கிப் பெருஞ்சினத்தோடும், ‘நீ முறித்த சிவ தனுசு முன்னமே சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஏற்பட்ட போரில் முறிந்து போனதுதான்!” என்ற பீடிகையோடும், தான் வந்த காரியத்தைச் சொல்லுகிறான். ‘அந்தப் போரில் வெற்றி பெற்ற வில் இதோ இருக்கிறது; இதுதான் விஷ்ணு வில், இதை நீ வளைக்க முடியுமானால் வளைத்துப் பார். உனக்கு வலியிருந்தால் உன்னுடன் போர் செய்யவும் சித்தமாயிருக்கிறேன்” என்கிறான்.

பரசுராமனுடைய கோப வார்த்தையைக் கேட்டதும், சீற்றத்தைப் பார்த்ததும், ராமன் அமைதியாகப் புன்சிரிப்புச் சிரிக்கிறான். அந்தப் புன்சிரிப்பு முகமண்டலத்தை நன்றாக ஒளிரச் செய்ய, “அந்த வில்லைத் தந்துவிடு” என்று மெள்ளத் தன் கையில் வாங்கிக் கொள்கிறான்.

திடீரென்று பரசுராமனுக்கு ஏன் இந்த நடுக்கம்? அவ்வளவு அநாயாசமாக ராமன் அந்த விஷ்ணு தனுசையும் வளைத்து விடுகிறான்.

‘பூதலத் தரசை யெல்லாம்
   பொன்றுவித் தனையென் றாலும்,
வேதவித் தாய மேலோன்
   மைந்தன்நீ; விர்தம் பூண்டாய்!
ஆதலின் கொல்ல லாகா(து)
   அம்பிது பிழைப்ப தன்றால்!
யாதிதற்(கு) இலக்க மாவ(து)?
   இயம்புதி விரைவின்’ என்றான்.


‘’பரசுராமா, நீ உலகத்திலுள்ள அரச குலத்தாரைக் கொன்ற கொலைஞன்; எனவே தண்டனைக்கு உரியவன். அப்படியிருந்தும் உன்னை நான் மன்னிக்கப் போகிறேன். இந்த மன்னிப்பு வேதவித்தான உன் தந்தை பொருட்டேயாகும். மேலும் தவ வேஷத்தோடு விரதம் பூண்டிருக்கிறாய்; இனி நீ நல்வழிப் படுவாய் என்று நம்புகிறேன். ஆகையால் உன்னை நான் கொல்லப் போவதில்லை. வில்லில் தொடுத்த அம்போ வீணாகப் போவதும் இல்லையே! இதற்கு இலக்கு யாது? விரைவாகச் சொல்லு!” என்று கேட்கிறான்.

‘இயம்புதி விரைவின்’ என்பது ராமனுடைய ஆத்திரமன்று, பயமுறுத்தலு மன்று; ராமபாணம் வெளிப்பட்டு அபாயத்தை உண்டாக்குவதற்கு முன்னே அவன் தப்பவேண்டும் என்ற அருளின் வேகந்தான்.

கர்வத்திற்குக் காரணமான தபோ பலம் ராமன் அம்புக்கு இலக்காகி அழிந்துபோகிறது. பரசுராமன் தொழுது விடை பெற்றுக் கொள்கிறான். இப்போது தான் தசரதன் - மூர்ச்சித்தவனைப்போல் கிடந்தவன் - உணர்வு வெளிப்பட ராமனை ஆலிங்கனம் செய்து கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான்.

* * * *
இவர்கள் அயோத்தி அடைந்து சில நாள் சென்ற பின் பரதன் தன் தாயார் பிறந்த நாடான கேகய நாட்டுக்குப் போகிறான். இவனும் தந்தையைப்போல் ராமனையன்றி உயிர் வேறு இல்லாதவன். ஆதலால், உயிரைப் பிரிந்து உடல் சென்றாற் போலச் செல்லுகிறான் - என்கிறான் கவிஞன். கைகேயியின் சதியாலோசனையை அறவே வெறுக்கப் போகும் பரதனுடைய குணாதிசயத்துக்கு இங்கே வித்து இடப்படுகிறது.

விதி சிரிக்கிறது!

மந்திரிகள் தத்தம் ஆசனங்களில் அமர்ந்த பின் சக்ரவர்த்தி அவர்களை முறையாக முகம் பார்த்து, ‘’ஒரு பெரிய காரியத்தைக் குறித்து இப்போது ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன். என் ‘அறிவு நிலை’யாகிய அமைச்சர்களே! நான் சொல்லப் போவதை நன்றாகக் கேட்க வேண்டும்” என்று பேசத் தொடங்கினான்.

‘’அறுபதினாயிரம் ஆண்டு நான் முறை தவறாமல் ஆட்சி செலுத்தி வந்திருக்கிறேன். இந்த மகாராஜ்யத்தை என் தோள்களில் தாங்கி வருகிறேன் என்ற பொறுப்புடன் ஆண்டு வந்தேன். ஆனால், இந்த மாட்சி, மகாராஜாவாகிய என் மாட்சி அன்று; எல்லாம் மந்திரிகளாகிய உங்களுடைய மாட்சிதான்!” என்ற முன்னுரையே அமைச்சர்களை வசீகரித்து விடுகிறது:

பிறகு, தமது ஆட்சிக்கு மந்திரிகள் பேருதவி புரிந்ததுடன் தருமமும் கை கொடுத்து உதவியது என்றான். குடிகளுக்கு உண்மையாகவே இதம் செய்ய வேண்டுமென்றால் அந்த நாட்டின் சுதந்திரம் இனிது காக்கப் பெற வேண்டும்.எனவே, தன் மகாராஜ்யத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்து ஜனங்களுக்கு எப்போதும் நன்மை செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு வாழ்ந்து வந்தானாம் தசரதன். இதற்காகவே தானும் அமைச்சர்களும் தருமமும் சேர்ந்து தோள் கொடுத்து ராஜ்ய பாரத்தைச் சுமந்ததாகச் சொல்லுகிறான்.

அருட்களஞ்சியம்

இப்படிப்பட்ட ராஜ்ய பாரத்தை இனித் தன் கிழத் தோள்களால் சிறிதும் தாங்க முடியாதென்று தசரதன் சொல்லுகிறான். தான் இனிமேல் சிங்காசனத்தில் இருந்தால் அது ராஜ்யபாரத்தைத் தாங்குவதற்காக அன்று, ராஜ போகத்தை அனுபவிப்பதற்கே ஆகும் என்று கருதுகிறான்.

இவ்விதமாகத் தசரதன் பேசிக்கொண்டிருக்கும்போதே, இளையாளாகிய கைகேயியின் நினைவு வருகிறது. அவளுடைய இளமையும் கட்டழகும், அசுரர்களைத் தான் வென்றொழித்த காலத்தில் அந்த வாழ்க்கைத் துணைவி தன் அழகிய தளிரடிகளால் ரதத் தட்டை மிதித்தேறிப் பதுமைபோல் மலர்க் கைகளில் சாட்டை பிடித்துச் சாரத்யம் செய்த அந்தத் திறமையும், இவன் மனக் கண் முன் ஓடி வருகின்றன.

பஞ்சிமென் தளிரடிப் பாவை கோல்கொள
வெஞ்சினத்(து) அவுணர்தேர் பத்தும் வென்றுளேற்(கு)
எஞ்சலில் மனம்எனும் இழுதை ஏவிய
அஞ்சுதேர் வெல்லும்ஈ (து) அருமை ஆவதே?


‘கைகேயி ஏவிய ஒரு தேரில் இருந்துகொண்டு அசுரர்களுடைய பத்துத் தேர்களையும் ஜயித்த எனக்கு, மனம் என்ற பேய் ஏவுகிற ஐம்புலனாகிற ஐந்து தேர்களையும் வெல்லுவது அருமையாகுமோ?’- என்ற இந்தக் கேள்வியிலேயே அந்த இளையாள் மீது கிழச் சக்ரவர்த்திக்கு உள்ள மோகம் தொனிக்கிறது; இதனால் விளையப் போகும் அநர்த்த பரம்பரையும் முன்கூட்டியே மறைமுகமாய் உணர்த்தப்படுகிறது.

‘பத்துத் தேர்’ கைகேயி சாரத்யம்’ ‘அஞ்சு தேர்’ என்றெல்லாம் சக்ரவர்த்தி பேசுகிறான்: விதி சிரிக்கிறது பிடரியிலிருந்து கொண்டு!

** 30.12.45 மற்றும் 13.1.46

ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism