Published:Updated:

``திருச்செந்தூர் மண்டபம் இடிந்தது, திருவாரூர் கோயிலில் தீ... தமிழ்நாட்டில் இப்படி நடந்ததே இல்லை’’ - சமய ஆர்வலர்கள் குமுறல்!

``திருச்செந்தூர் மண்டபம் இடிந்தது, திருவாரூர் கோயிலில் தீ... தமிழ்நாட்டில் இப்படி நடந்ததே இல்லை’’ - சமய ஆர்வலர்கள் குமுறல்!
``திருச்செந்தூர் மண்டபம் இடிந்தது, திருவாரூர் கோயிலில் தீ... தமிழ்நாட்டில் இப்படி நடந்ததே இல்லை’’ - சமய ஆர்வலர்கள் குமுறல்!

டிசம்பர் 14, திருச்செந்தூர் முருகன் கோயில் பிராகார மண்டபம் இடிந்துவிழுந்து பெண் ஒருவர் பலி.

பிப்ரவரி 2, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ.

பிப்ரவரி 6 , தேதி மண்டபம் பசுபதி ஈஸ்வரர் கோயிலில் தீ அதன் காரணமாக மேற்கூரை இடிந்து நாசம்.

பிப்ரவரி 7, திருவாலங்காட்டில் வடாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள தீ விபத்தால் எரிந்து நாசம்

பிப்ரவரி 8, வேலூர் பொன்னியம்மன் கோயிலில் இரண்டு தேர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு.

பிப்ரவரி 8, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தீ விபத்து.

பிப்ரவரி 13, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் மற்றும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தீ.

இந்த விபத்துகளில் முதல் செய்தியான, திருச்செந்தூர் முருகன் கோயில் பிராகார மண்டபம் இடிந்துவிழுந்து ஒருவர் பலி என்றதுமே மக்களுக்கு ஏற்பட்டது அதிர்ச்சி. இது போன்ற செய்திகள் தொடர்ந்து வர சென்னை விமான மேற்கூரை விழுந்தது போன்ற வழக்கமான செய்தியாகிப் போயின கோயில் விபத்துகள். இத்தனை வருடங்களில் தொடர்ச்சியாக கோயில்களில் தீப்பிடிக்கும் சம்பவங்களோ, விபத்துகளோ நடந்ததே இல்லை.

கோயில்களில் தீப்பிடித்த இடங்கள் குடிசைப் பகுதிகள் நிறைந்த இடங்களும் அல்ல. கருங்கற்களால் ஆன, உறுதியான ஆலயச் சுவர்கள். அவை வெறும் சுவர்கள் மட்டும் அல்ல. நம் தொன்மங்களையும் அடையாளங்களையும் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சான்றுகள்.

இந்த விபத்துகளுக்குக் காரணம் என்ன, தடுப்பது எப்படி?

வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியனிடம் பேசினோம்... ``இருவிதமான காரணங்கள் உள்ளன. ஒன்று, ஆன்மிகரீதியானது. மற்றொன்று, நிர்வாகரீதியானது. ஆன்மிகக் காரணத்தைப் பொறுத்தவரை ஆகம விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொள்வதால்தான் இப்படித் தொடர்ச்சியாக கோயில்களில் விபத்துகள் நடக்கின்றன.

கோயில்கள் ஆகம நியதிகளின் அடிப்படையில் அமைக்கப்படுபவை. அதற்காகவே, சைவக் கோயில்களுக்கு இருபத்தெட்டு நூல்களும், வைணவக் கோயில்களுக்கு இரண்டு நூல்களும் உள்ளன. கோயில் கட்டுவதற்கு நிலம் தேர்வுசெய்வதிலிருந்து, தினமும் நடைபெறும் பூஜைகள், ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாக்கள், திருப்பணிகள் செய்யும்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள்... என அனைத்துக்கும் ஆகம விதிகள் உள்ளன. இப்படியிருக்க, இப்போது பெரும்பாலான கோயில்களில் ஆகம விதிகள் பின்பற்றப்படுவதில்லை. அதனால்தான் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன.

`ஆகம விதிகளை மீறினால் கோயில் தீப்பிடிக்கும், நாட்டில் ஏகப்பட்ட அழிவுகள் உண்டாகும்’ என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், கோயில் வளாகத்துக்குள்ளேயே கடைகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். கோயில் சுற்றுச்சுவரோடு ஒரு கோயில் முந்துவிடுவதில்லை. அதையும் தாண்டி சில அடிகள் தூரம் வரையும்கூட புனிதமான இடமாகத்தான் கருதப்படும். உதாரணமாக திருவானைக்காவல் கோயிலின் கிழக்குப் பக்கத்தில், கோபுரத்தையொட்டியே ஃப்ளாட்டுகளைக் கட்டியிருக்கிறார்கள். இப்படி ஆகம விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டால் தீப்பிடிக்காமல் என்ன செய்யும்?

அது மட்டுமல்ல, தெய்வத்தின் முன்னால் சாதி, பணம் என்கிற பேதமெல்லாம் கிடையாது . ஆனால், பெரும்பாலான கோயில்களில், காசு கொடுப்பவருக்குத்தான் முன்னுரிமை. பக்கவாட்டில் உள்ள கேட் வழியே வி.ஐ.பி-க்களை அனுமதித்து, காசு இல்லாதவர்களைக் கடைசியாக உள்ளே விடுகிறார்கள். இதுவும் ஆகம விதிகளுக்குப் புறம்பானதுதான்.

அடுத்ததாக நிர்வாகம் சார்ந்த முறைகேடு. இந்து அறநிலையத்துறை, முற்றிலுமாக அறமற்ற வழியில், காசு சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாக மாறிவிட்டது. இந்தத் துறையே கலைக்கப்பட வேண்டும்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சமய அறிஞர்கள் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். கோயில் பராமரிப்புகள் முழுவதும் தனி நபர்களிடமும் போய்விடக் கூடாது. அதே நேரத்தில் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலும் போய்விடக் கூடாது’’ என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியம்.

இது குறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷிடம் பேசினோம்... "கோயில்களில் ஏற்கெனவே கட்டப்பட்ட புராதன மண்டபங்களைத் தவிர புதிதாக எதையும் கட்டக் கூடாது.

கோயில்கள் நல்ல விசாலமான இட வசதியோடுதான் கட்டப்பட்டன. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் எந்தக் கோயில்களும் அப்படி இல்லை. எப்போதும் ஒருவித நெருக்கடியான சூழலே நிலவுகிறது. ``கோயில்களுக்குள் குறிப்பிட்ட இடம் என்றில்லாமல் சகல இடங்களிலும் விளக்கேற்ற அனுமதிப்பதையும் தவிர்க்க வேண்டும்; விருட்சங்களுக்குக் கீழேயும் விளக்கேற்றுகிறார்கள்''

இதுபோன்ற ஆகம விதி மீறல்களுக்குப் பின்னணியில் மிகப்பெரிய வியாபாரம்தான் உள்ளது. கடைகளை ஏலம்விடுவதில் முறைகேடுகள் நடக்கின்றன. திருப்பணிகள் என்ற பெயரில் பல கோயில்களில் சிலைகள் சிதைக்கப்படுகின்றன.

கோயில்களில் புகுத்தப்பட்ட புதிய பழக்கவழக்கங்கள், கடைகள், கோயிலைச் சரியாக நிர்வகிக்காமல் கோயிலுக்கு வரும் பக்தர்களை அவர்கள் இஷ்டத்துக்குச் செயல்பட அனுமதிப்பது... இவையெல்லாம்தான் விபத்துகளுக்குக் காரணம்.

கோயிலுக்குள் எப்போதும் விசாலமாக இடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்துக் கோயில்களிலும் ஸ்மோக் டிடெக்டர், ஃபயர் அலாரம், சிசிடிவி கேமரா ஆகியவை பொருத்தப்பட வேண்டும்.

அறநிலையத் துறையினர், `இதற்கெல்லாம் நிதி இல்லை’ என்பார்கள். ஆனால், கோயில் பணத்தில் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கார் வாங்கிக் கொடுக்கிறார்கள்; பெட்ரோலுக்கு பில் கட்டுவதற்கு பணம் கொடுக்கிறார்கள்.

தொன்மையான ஒரு கோயிலில் வருமானம் வரவில்லை என்றால், அதைச் சுத்தமாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். முதலில் வருமானம் வரும் கோயில், வருமானம் குறைவாக வரும் கோயில் என்று பிரிப்பதே தவறு. தொன்மையான கோயில், தற்போது கட்டப்பட்ட கோயில் என்றுதான் பிரிக்க வேண்டும்" என்கிறார் ரமேஷ்.

"பரவலாகத் தீப்பிடிக்கும் சம்பவங்கள் நடைபெறுவதைப் பார்க்கும்போது, இது திட்டமிட்டு செய்யப்படுவதாகவே தெரிகிறது. ஆனால், அதற்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் தெரியவில்லை. அதைத் தாண்டி பாராமரிப்புப் பணி, நிர்வாகச் சீர்கேடு ஏற்படுவதும் முக்கியக் காரணம்" என்கிறார் சைவ சித்தாந்த அறிஞர் இறைநெறி இமயவன்.