மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 22

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 22
News
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 22

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

37 - அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே ?

உடையவர் இராமானுஜர் கஜேந்திரதாசன் என்று அழைக்கப்பட்ட திருக்கச்சி நம்பிகளைப் பார்த்தார். எத்தனை கால பழக்கம் இந்தப் பெரியவருடன்? தனக்குக் கூட கிட்டாத பாக்கியமாம் அந்தப் பேரருளானான காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் தேவப் பெருமாளுடன் நேரில் பேசும் பாக்கியம் பெற்றவர் அல்லவா இவர்? தனக்கு ஸ்ரீவைஷ்ணவம் மீது சில தீர்மானங்கள் உண்டு. அவை சரிதானா என்று அந்த காஞ்சி தேவப்பெருமாள் வாயிலிருந்து அறிந்துகொள்ள நினைத்தார். உடனே நினைவில் வந்தவர் இந்த திருக்கச்சி நம்பி. “பெருமாளுக்கு சரீரம் மூலம் செய்யும் கைங்கரியமே பெரிய கைங்கரியம் என்பதற்கு சுவாமி நீரே உதாரண புருஷர்" என்றார். திருக்கச்சி நம்பி தனது தொழில் சாய்த்து வைத்திருந்த மயிலிறகினால் செய்யப்பட்ட அந்தப் பெரிய ஆல வட்டத்தை கோயில் தூணில் சாத்தி வைத்தார். இருவருக்கும் இடையிலான உறவு மிகப் புனிதமானது. இது இன்று கிடைக்கும் பாராட்டல்ல. தனது கைங்கரியத்தை பாராட்டும் முகமாக சிறு வயதில் இந்தப்பிள்ளை சடாரென்று தான் ஒரு வேதம் படித்த பிராமணன் என்பதையும் மீறி என் காலில் விழுந்து விட்டதே. திர்க்கச்சி நம்பிகள் மனதில் பழசு எல்லாம் ஓடியது.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 22

"இராமானுசரே! முதலில் அரங்கனுக்கு ஆல வட்டம் வீசத்தான் எண்ணினேன். அவன் என்னிடம் பூம்புனல் சூழ் காவேரிக் கரை என்பதால் எனக்கு ஆல வட்டம் வீசத் தேவையில்லை என்று கூறிவிட்டான். பிறகு நான் திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடனாதனுக்குக் கைங்கரியம் பண்ணச் சென்றேன். அவனும் மலைசூழ் பிரதேசம் என்பதால் குளிர் நிலவும் இடமிது. உமது ஆலவட்டம் தேவையில்லை என்று நேரடியாகக் கூறிவிட்டான். பின்னர் இருவருமே என்னிடம் யாக குண்டங்கள் நிறைந்த திருக்கச்சியில் இருக்கும் தேவப்பெருமானுக்கு ஆலவட்டம் வீசச் சொன்னார்கள். அன்றிலிருந்து இந்தக் கைங்கரியம் தொடர்கிறது.”என்றார். “அதனால் தான் அந்த எம்பெருமானுடன் நேரில் பேசும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்" என்றார் இராமானுஜர் சிரித்துக் கொண்டே. "உம்மால் எனக்கு அந்த தேவப்பெருமாளிடம் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது சுவாமி" என்றார் உடையவர். “சொல்லுங்கள் அவனிடம் கேட்டு சொல்கிறேன்" என்று அண்டை வீட்டுக்காரனிடம் கேட்டு சொல்வதைப்போல மிக சாதாரணமாக சொன்னார். “மொத்தம் ஆறு கேள்விகள் என்னிடம் உண்டு. அதற்கான பதிலை நீர் அந்தத் தேவப்பெருமாளிடம் கேட்டு சொல்லுங்கள்". எவை அந்த ஆறு கேள்விகள்?

“1. பரம்பொருள் என்பவர் யார்?

2. நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய உண்மைத் தத்துவம் எது?

3. பரமனை அடைவதற்கான உபாயம் எது?

4. மரண காலத்தில் இறைவனின் நினைவு தேவையா?

5. மோட்சம் பெறுவது எப்போது?

6. குருவாக யாரை ஏற்பது?

இவைதாம் அந்த ஆறு கேள்விகள். இதற்கான பதிலை அந்தத் தேவப்பெருமாளிடம் கேட்டு சொல்லவும் என்றார். திருக்கச்சி நம்பிகளும் தேவப்பெருமாள் சன்னதி முன்பு நின்றுகொண்டு அந்தப் பேரறிவாளனுடன் பேசத் தொடங்கினார். பெருமாளும் ஸ்ரீஇராமானுஜர் எழுப்பிய சந்தேகங்களுக்கான பதிலை திருக்கச்சி நம்பியிடம் கூறினார். அந்த ஆறு வார்த்தைகளுமே விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படை தத்துவங்களாயின.

1. பரம்பொருள் நாமே! அனைவரும்  அடைய வேண்டிய பரம்பொருள் நாமே!

2. பேதமே தர்சனம்! எதுவுமே மாயை இல்லை. எல்லாமே உண்மை! விசிஷ்டாத்வைதமாகிய ஆத்மா - இறைவன்... இது பற்றிய வேறுபாடே தத்துவம்!

3. உபாயம் ப்ரபத்தியே!

அகங்காரத்தை விடுத்து, இறைவனை சரணடைவதே உபாயம்! அதாவது, பிரபத்தி எனும் சரணாகதியே உபாயம்!

4. அந்திம ஸ்மிருதி வேண்டாம்! இறக்கும் நேரத்தில் மட்டும் இறைவனின் ஸ்மரணை இருந்தாள் போதாது.! உடல் திறனோடு நன்றாக இருக்கும்போது இறைவனை நினைத்தலே போதும்! அப்படி இருந்தால் இறக்கும் நேரத்தில் இறைவனுக்கு நம்மைப் பற்றிய சிந்தனை வரும்.

5. சரீரம் விடுகையில் மோட்சம்! சரணம் அடைந்தவர்க்கு, உடலை விடும்போது மோட்சம்!

6. பெரிய நம்பிகளை குருவாகப் பற்றுவது! இப்படி ஒரு பதிலைத்தானே இராமானுஜர் எதிர்பார்த்தார்?.

இவ்வாறாக அந்த எம்பெருமானிடம் நேரில் பேசும் பாக்கியத்தைப் பெற்றவர் திருக்கச்சி நம்பிகள். அவன் உரைக்கபெற்றேனோ திருக்கச்சி நம்பிகள் போலே ? அதாவது அந்தத் தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பிகளிடம் நேரில் பேசியதைப்போல என்னிடமும் பேசும் பாக்கியம் பெற்றேனோ? இந்த திருக்கோளூரில் நான் இருக்க மாட்டேன் என்று அந்தப் பெண்பிள்ளை கிளம்புகிறாள்.