Published:Updated:

``இது அந்தத் தாயே எங்க உடம்புல புகுந்து ஆடும் ஆனந்தத் தாண்டவம்!’’ - `சக்தி கரகம்’ வெற்றிவேல்

``இது அந்தத் தாயே எங்க உடம்புல புகுந்து ஆடும் ஆனந்தத் தாண்டவம்!’’ - `சக்தி கரகம்’ வெற்றிவேல்
``இது அந்தத் தாயே எங்க உடம்புல புகுந்து ஆடும் ஆனந்தத் தாண்டவம்!’’ - `சக்தி கரகம்’ வெற்றிவேல்

லரால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பவாகனத்தில் அங்காளம்மன் கம்பீர வடிவில் பவனி வந்துகொண்டிருந்தாள். அவளுக்கு முன்னே ஒரு சக்தி கரகம் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தது. பார்த்தவர்கள் எல்லாம் வியக்க அப்படி ஒரு வேகம், அத்தனை அழகான ஆட்டம். ஒலித்துக்கொண்டிருந்த பாடலின் சுதிக்கேற்ப ஆட்டம் களைகட்டிக் கொண்டிருந்தது. மயானக்கொள்ளை விழாவின் எல்லா இடங்களையும் விட, சக்தி கரகத்தைச் சுற்றியே இளைஞர்களும் குழந்தைகளும் கூடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

6 அடி உயரம் கொண்ட அந்தக் கரகம் எங்கே சாய்ந்துவிடுமோ என்று அச்சம் கொள்ளத்தக்க வகையில் பல சாகசங்களோடு 45 வயதைக் கடந்த ஒருவர் ஆடிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் சுழன்று சுழன்று ஆடியவர், சற்று ஓய்வு எடுப்பதற்காக, தனது சிஷ்யப்பிள்ளை ஒருவரிடம் கரகத்தை ஒப்படைத்துவிட்டு ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றார். அவர், கலைஞர் வெற்றிவேல்.


''22 வருஷமா இந்த சக்தி கரகம் ஆடுறேன். நான் இருக்கிறது தேனாம்பேட்டை வரதராஜபுரம். எனக்கு இந்த ஆட்டத்தை சொல்லிக்கொடுத்த என் குருநாதர் மதியழகன் இருக்குறது இந்த மயிலாப்பூர். ஊர் ஊராப் போய் சக்தி கரகம் ஆடுவோம். தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அடையார், மேல்மலையனூர், ராயபுரம்னு மாசி மயானக்கொள்ளையின்போது சக்தி கரகம் ஆடுவோம்.'' என்கிற சக்திவேல் மயானக்கொள்ளையின்போது மட்டுமல்லாமல், ஆடி மாதம் தொடங்கி 13 வாரங்கள் வரை சக்தி கரகம் ஆடுகிறார். 
``கரகாட்டத்திலேயே இந்த சக்தி கரகம்தான் அம்மனுக்குப் பிடிச்ச ஆட்டம். அதனால அம்மனுக்கு முன்னாடி எங்களைத்தான் ஆடவைப்பாங்க.

60-லேர்ந்து 80 கிலோ வரை எடை இருக்குற இந்தக் கரகத்தைத் தூக்கி தலைல வைக்கிறப்போ, அந்த அங்காளம்மா தாயையே தலைல சுமக்கிற மாதிரி ஒரு சிலிர்ப்பு வந்துடும். அப்புறம் என்ன? தானா ஆடுவோம். அந்தத் தாயே எங்க உடம்புல புகுந்துகிட்டு ஆனந்த தாண்டவம் ஆடிக்குவா. எத்தனை வேகமா சுழன்று ஆடினாலும் இதுவரைக்கும் கரகம் தவறியதே இல்லை. அப்படித் தவறினா அது தெய்வக் குற்றம். கரகம் தவறி விழுந்தா அந்தத் திருவிழாவே களையிழந்து போகும். அதனால பயபக்தியோடு காப்பு கட்டி விரதமிருந்து, கரகம் ஏத்துற நாள்ல அம்மாவுக்குப் படையல் போட்டு வேண்டிக்கிட்டுதான் தலைல சுமப்போம். ஊர் பூராவும் ஆடினாலும் மேல்மலையனூர்ல ஆடினா அது ஒரு தனி சுகம். அங்க காசு வாங்காமத்தான் ஆடுவோம். அது அம்மனோட பிறந்த ஊரு இல்லீங்களா, அதான் ஒரு தாய்ப்பாசம்.


இந்த ஆத்தா துடியானவங்க. அதான் எந்த வம்பும் வச்சுக்காம பக்தியோட ஆடுறோம். நான் ஆடும்போது அம்மனே வந்து ஆடுறதா நம்பி பலரும் எங்களை விழுந்து கும்பிட்டு அருள்வாக்குக் கேட்பாங்க. எங்க வழியா அந்த அம்மாவே அருள்வாக்கு சொல்லி பல பேருக்குக் கல்யாணம், பிள்ளை பாக்கியம் எல்லாம் கிடைச்சு இருக்கு. எல்லாம் அவ அருள்.'' 


''சக்தி கரகம் இவ்வளவு எடைதான் இருக்க வேண்டும் என்று விதிமுறை எதுவும் இருக்கிறதா?'' என்று கேட்டால், விரிவாகப் பதில் சொல்கிறார்...


''அப்படியெல்லாம் இல்லை. அலங்காரம் கூடக் கூட கரகத்தோட எடையும் கூடும். மலர் அலங்காரம் செஞ்சா 80 கிலோ வரைக்கும் கரகம் இருக்கும். எடை அதிகமா இருந்தாத்தான் எங்களுக்கு ஆட வசதியா இருக்கும். எடை குறைஞ்சா வேகமா ஆடும்போது, அடிக்கிற காத்துக்குக் கரகம் சாஞ்சிடுமோன்னு பயம் வரும். எவ்வளவுதான் உடம்பு சரியில்ல, கால்வலின்னு இருந்தாலும் கரகம் தலைல ஏறிட்டா ஒரு வேகம் வரும் பாருங்க. அந்த சொகத்துக்குக் கிறங்கித்தான் ஆடிக்கிட்டு வரோம்'' என்றவரின் கண்களிலும் கிறக்கம் தெரிந்தது.


சக்தி கரகம் ஆடற காலம் போக மற்ற நாள்களில் என்ன செய்கிறார் வெற்றிவேல்? 


''இது காசுக்கு செய்யற ஆட்டம் இல்லீங்க. எனக்கு மத்த நாள்ல வெல்டிங் வேலைதான். என்கூட ஆடுற பசங்க எல்லாம் வேற வேற தொழில்ல இருக்காங்க. மெக்கானிக், ஆட்டோ ஓட்டுறவங்க இப்படி. பத்தாவது படிக்கிற ஒரு பையன், ஒரு வக்கீல்கூட எங்க டீம்ல சக்தி கரகம் ஆடுறாங்க. மூணு நாள் கடுமையான விரதமிருந்து, பிறகுதான் ஆடுவோம். ஆனா, ஆடும்போது மட்டும் கொஞ்சமா மது குடிப்போம். அது தப்பா இல்லையான்னு எல்லாம் தெரில. அது வழக்கமாவே இருக்கு. மதுவும் மாமிசமும் மயானக் காளிக்குப் படைக்கிறதுதான்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க'' என்றார்.


அவர் கரகம் ஆட வந்த கதையைச் சொன்னபோது, நமக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது.


''நான் இந்தக் கரகம் ஆட வந்த கதையே ரொம்ப ஆச்சர்யமான விஷயம். சொன்னா நம்ப மாட்டீங்க. 22 வருஷத்துக்கு முந்தி மூணு வருஷம் தொடர்ந்து ஆடி மாசத்துல அம்மை போட்டுடுச்சி. அம்மை விட்ட பிறகும் நடக்கவே முடியாது. கடைசியா அம்மை போட்டபோது கூன் விழுந்து ரொம்ப கஷ்டப்பட்டேன். வேலைக்கும் போக முடியல. வறுமை, உடம்பு வலின்னு அநியாயத்துக்கு அல்லல்பட்டேன். அப்போ என் குருநாதர் சொல்லித்தான் ஆத்தாகிட்ட வேண்டிக்கிட்டு இந்தக் கரகத்தை சுமக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரைக்கும் ஒரு நோய்நொடியும் இல்ல. காத்து கறுப்புன்னு எந்த ஒரு கெட்டதும் என்னை தொட்டதுமில்லை'' என்றார்.


''கரகம் எப்படிச் செய்கிறார்கள்?''


''மூங்கிலை வளைச்சு வட்டவட்டமா அடுக்குவோம். அதுக்குமேல பேப்பர் கூழைத் தடவி நல்லா காய வைப்போம். அதுக்கு மேல பேப்பர்களை ஒட்டி கரகம் செய்வோம். உருவம் அழகா வந்ததும், அதுக்கு மேல கலர் பேப்பர்களை ஒட்டி அலங்காரம் செய்வோம். கரகத்துக்கு மேல கிளி, நாகம் எல்லாம் வச்சு அலங்காரம் பண்ணுவோம். முன்பக்கத்துல அம்மன் உருவம் பதிச்சு, மலர் அலங்காரம் பண்ணுவோம். சமயங்கள்ல கலர் பேப்பர்களுக்கு பதிலா, பூவாலயே ஜோடிக்கறதும் உண்டு. இப்படி கரகம் தயார் செஞ்ச பிறகு, ஒரு கனமான செப்புப் பானை மேல வச்சுக் கட்டுவோம். அதைத்தான் நாங்க தலையில தாங்கி ஆடி வருவோம்'' என்றார்.


''உங்கள் வீட்டில் வேறு யாரும் கரகம் ஆடுகிறார்களா?'' 


''எனக்குப் பிறகு எங்க வீட்டுல யாரும் கரகம் ஆட வரலை. ஆனா, நான் நிறைய பசங்களுக்கு கரகம் ஆட சொல்லிக்கொடுத்துப் பழக்கிட்டு வர்றேன். என்னோட உடம்பு தளர்ந்து போறவரைக்கும் நான் சக்தி கரகம் ஆடிக்கிட்டுத்தான் இருப்பேன். ஏன்னா, என்னைப் பொழைக்க வச்ச அங்களாம்மாவுக்கு நான் செய்யற நன்றி இது. அங்காளம்மன் இல்லேன்னா நான் எப்பவோ நோயில போயிட்டிருப்பேன். என்னைப் பொழைக்க வச்சு நடமாட வச்ச என்னோட தாய்க்கு நான் சக்தி கரகம் ஆடித்தானே பட்ட கடனைத் தீர்க்கணும்'' என்று சொல்லிச் சிரித்தார்.


அப்போது அவரை அவசரமாகக் கூப்பிடவே, ஓடிச் சென்று கரகத்தை வாங்கித் தலையில் வைத்துக்கொண்டு ஆடத் தொடங்கிவிட்டார். ஒருவர் ஐம்பது ரூபாய் நோட்டை கீழே வைக்கவும், சக்தி கரகம் ஆடியபடியே கீழே குனிந்து, கண்ணாலேயே அந்த ரூபாய் நோட்டை எடுத்தார். பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் முழுவதும் கை தட்டி,விசிலடித்து பாராட்டியது.


கரகத்தை சுமந்தபடி மேலும் பல சாகசங்களைச் செய்துகொண்டிருந்தவரின் கால்களில் சில பெண்கள் விழுந்து வணங்கி ஆசி கேட்டார்கள். அம்மன் ஆவாஹணமானதைப் போல் அவருடைய முகமே பிரகாசமாகி, அவர்களுக்கு வாக்கு சொன்னார். சற்றுத் தொலைவில் அங்காளம்மனும் விளக்கொளியில் சிரித்தபடி வந்துகொண்டிருந்தாள்.