ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!

ந்தக் காரியத்தைத் தொடங்கினாலும், அது தடையின்றி முழுமையாக நிறைவேற, விநாயகப் பெருமானை வழிபட்டுத் தொடங்குவதுதானே இந்து தர்ம கோட்பாடு! அதன்படி, 'தெரிந்த புராணம்... தெரியாத கதை’ என்கிற இந்தத் தொடரையும், ஸ்ரீவிநாயகப் பெருமானை வணங்கித் துவக்குகிறேன்.

ஸ்ரீவிநாயகர் புராணம் நமக்குத் தெரிந்ததுதான். அதில் அநேகம் பேருக்குத் தெரியாத கதை ஒன்றைச் சொல்கிறேன், கேளுங்கள்!

விரும்புகிற செல்வங்களை எல்லாம் வழங்கவல்ல பசு 'காமதேனு’; விருட்சம் (மரம்) கற்பக விருட்சம். ஸ்ரீமகாலக்ஷ்மிக்கு இணையாகப் போற்றிப் பூஜிக்கப்படுவது காமதேனு; மிக உயர்ந்ததும் புனிதமானதும், கேட்டதை வழங்கவல்லதுமான விருட்சம்- கற்பகம். இந்த இரண்டுமே, திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவை எனத் தெரிவிக்கின்றன புராணங்கள். இதில், கற்பக விருட்சம் உருவாகக் காரணமானது ஸ்ரீகணபதியின் பேரருளே என்றால், ஆச்சரியப்படுவீர்கள்.

த்ரேதா யுகத்தின் ஆரம்ப காலம் அது. தண்டகாரண்யம் எனும் வனத்தின் துத்தூரம் என்ற பகுதியில், விப்ரதன் என்று ஒரு வேடன் வாழ்ந்து வந்தான். மிருகங்களை வேட்டையாடி, தன்னையும் தன் கூட்டத்தினரையும் பசியின்றிப் பாதுகாத்து வந்தான். திடீரென மழை பொய்க்கவே, வனம் வறண்டது. பறவைகளும் மிருகங்களும் புகலிடம் தேடி, வனத்தை விட்டு அகன்றன. விப்ரதன் தன் கூட்டத்தாருடன் உணவும் தண்ணீருமின்றித் தவித்தான். வேறு வழியின்றி, வழிப்பறிக் கொள்ளையில் இறங்கினான்.

நல்லவர்கள், சந்தர்ப்பவசத்தால் கூடத் தவறு செய்யலாகாது என்பதால், அவர்களைத் தடுத்தாட்கொள்பவன் இறைவன். வழிப்பறியில் ஈடுபட்ட முதல் நாள், முதல் ஆளாக, அந்தணன் ஒருவனைப் பின் தொடர்ந்தான் விப்ரதன். இதை அறிந்த அந்தணன் ஓட, அவனைத் துரத்திக்கொண்டு விப்ரதனும் ஓடினான். அந்த வனத்தில் இருந்த பாழடைந்த ஒரு விநாயகர் கோயிலுக்குள் நுழைந்து, மறைந்தான் அந்தணன்.

வேடன் கண்ணப்பனை ஆட்கொள்ள, காளஹஸ்தி தலத்தில் சிவனார் நடத்திய திருவிளையாடலைப் போலவே, இங்கு மகா கணபதி மகத்துவம் ஒன்றைப் புரிந்தார்.

அந்த கணபதி கோயிலும், அருகில் இருந்த தெய்விகப் பொய்கையும் விப்ரதனைப் பெரிதும் கவர்ந்தன. அதனால், அவன் அங்கேயே தங்கி விட்டான். உணவுக்கும் தண்ணீருக்கும் ஏதேனும் வழி பிறக்குமா என யோசித்தான். அப்போது, அங்கு முக்கால முனிவர் என்பவர் வந்தார். அவரை வழிமறித்து, கூரிய அம்பால் குத்தி விடுவதுபோல் பயமுறுத்தினான் விப்ரதன். ஆனால் முனிவரோ சற்றும் பதறாமல், கருணை பொங்கும் விழிகளுடன் அவனைப் பார்க்க... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல், அந்தக் கருணைக்குக் கட்டுண்டு, அம்பைக் கீழே போட்டான் விப்ரதன். அவரின் பாதங்களில் விழுந்து வணங்கிய வன், அப்படியே மூர்ச்சையானான். தன் கமண்டல நீரால் அவன் முகத்தில் தெளித்த முனிவர், அவனது புறக்கண்களை மட்டுமின்றி அகக்கண்களையும் திறந்தார். 'என் பாபங்களைப் போக்கி அருளுங்கள்’ என வேண்டினான் விப்ரதன்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

உடனே முனிவர், அருகில் கிடந்த காய்ந்த மரக்கிளையை எடுத்து, அவனிடம் கொடுத்தார். ''இந்த மரக்கிளையை, இந்தத் தடாகத்தின் கரையில் நட்டு, மகா கணபதி மந்திரத்தைத் தொடர்ந்து ஜபித்து வா! இந்த மரக்கிளை துளிர்விடும்வரை, ஜபிப்பதை நிறுத்தாதே. இது துளிர்க்கும்போது உன் பாவம் நீங்கி, புனிதனாவாய்; தேவர்களைப்போல் உயர்ந்தவனாய்!'' என அருளி, மந்திரத்தையும் உபதேசித்தார். ஏற்கெனவே உணவின்றி உபவாசமாக இருந்து, தடாகத்தில் நீராடி, மகா கணபதியை விக்கிரக வடிவில் தரிசித்திருந்த விப்ரதன், உபதேசம் பெறத் தகுதியான நிலையில் இருப்பதை அறிந்து, அவன் தலை மீது கை வைத்து, 'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், க்லீம், க்லௌம், கம், கணபதயே நமஹ!’ என்கிற மகிமை மிகு மகா கணபதி மந்திரத்தை உபதேசித்தார், முனிவர்.

'வளைந்த துதிக்கையும், பேருடலும், கோடி சூரியனின் பேரொளியைக் கொண்டவருமான கணபதி தேவா! எல்லா நற்காரியங் களும் தடையின்றி நடக்க அருள்புரி வீராக!’ எனும் பொருள் கொண்ட, 'வக்ரதுண்ட மஹாகாய, சூர்ய கோடி ஸமப்ரபா, அவிக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷ§ ஸர்வதா’ என்ற கணபதி காயத்ரியையும் உபதேசித்தார்.

பிறகு, முனிவர் சொன்னபடி ஜபத்தில் ஈடுபடலானான் விப்ரதன். காலங்கள் ஓடின. அன்ன ஆகாரம் இன்றி, அவன் செய்த தவத்துக்குப் பலன் கிடைத்தது. காய்ந்த அந்த மரக்கிளை, துளிர்க்கத் துவங்கியது.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!
##~##
தன்னையே அனுமனாக பாவித்துக் கொண்டு, தீவிரமாக ராமஜபம் செய்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு வால் முளைத்ததாக ஸ்ரீராமகிருஷ்ண வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், நம்பிக்கையுடன் கணபதி மந்திரத்தை இடையறாது உச்சரித்த விப்ரதனுக்கு, கணபதியைப் போலவே தும்பிக்கை வளர்ந்தது. அவன் முன் தோன்றிய விநாயகர், ''மகனே, பக்தியுடன் எனது மந்திரத்தை ஆழ்ந்து ஜபித்ததால், நீயும் என் போன்ற உருவத்தைப் பெற்றுவிட்டாய். புருவங்களுக்கு மத்தியில் தும்பிக்கையைப் பெற்றிருப்பதால், நீ 'புருசுண்டி’ என அழைக் கப்படுவாய். உனது மந்திர பலத்தால் துளிர் விட்ட இந்த மரம், கற்பக விருட்சமாகிவிட்டது. எந்தச் செல்வத்தைக் கேட்டாலும், அதைத் தரும் வல்லமை இதற்கு உண்டு. என்ன வரம் வேண்டும், கேள்!'' என அருளினார். இதில் சிலிர்த்தவன், ''தங்களின் தரிசனமே கிடைத்து விட்டது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும், சுவாமி! தங்களின் திருவடியைச் சரணடைந்து தொண்டாற்றுகிற பாக்கியம் மட்டுமே போதும்!'' என்றான்.

''சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கினைக் கடைப்பிடித்து, விரைவில் எம்மை அடைவாயாக!'' என்று அருளி மறைந்தார் மகா கணபதி. அப்படியே செய்யத் துவங்கினார் புருசுண்டி.

அவரின் பெருமையை நாரதர் மூலம் அறிந்த தேவேந்திரன், புருசுண்டியைத் தரிசிக்க பூலோகம் வந்தான். தவத்தில் ஈடுபட்டிருந்த புருசுண்டியிடம் பக்தனாக, யாசகனாக வந்து நின்றான் தேவேந்திரன். எது கேட்டாலும் தருவதாகக் கூறிய புருசுண்டி யிடம், கற்பக விருட்சத்தைத் தரும்படி கேட்டான். அதன்படி, கற்பக விருட்சத்தை தேவேந்திரனுக்குத் தானமாகத் தந்தருளினார் புருசுண்டி. விநாயகர் தந்ததையே மனமுவந்து தானமாக இந்திரனுக்கு வழங்கிய அந்தக் கணத்தில், அங்கு தோன்றிய மகா கணபதி, புருசுண்டியை தன் திருப்பாதத்தில் சேர்த்துக் கொண்டு, அவருக்குப் பிறவா நிலையை அருளினார். 'தவம் சிறந்தது. அதிலும், தவத்தின் பலனையே தானமாகத் தருவது மிகச் சிறந்தது’ எனும் உயரிய தத்துவத்தை இதன் மூலம் உலகுக்கு உணர்த்தியுள்ளார் ஸ்ரீவிநாயகப்பெருமான்.

- இன்னும் சொல்வேன்...