ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வழிபாடுகள்... பிரமிப்புகள்!

வழிபாடுகள்... பிரமிப்புகள்!

வழிபாடுகள்... பிரமிப்புகள்!

அடேங்கப்பா... படையல்!  

##~##
பொ
துவாக ஆலயங்களில், இறைவனுக்கு நைவேத்தியம் செய்வது வழக்கமான ஒன்றுதான்! ஆனால், நெல்லைச் சீமையின் பல ஆலயங்களில், கடவுளுக்கான படையலில், பிரமாண்டத்தைக் காட்டுவார்கள், பக்தர்கள். அதேபோல், பழங்களைக் குறைந்த அளவில் படைக்காமல், கூடைகூடையாக, கொத்துக் கொத்தாக, குலைகுலையாகப் படைத்து வழிபடுகின்றனர், இந்த ஊர் மக்கள்.

காய், கனிகளால் ஸ்வாமிக்கு அலங்காரம் செய்வதாகட்டும்; கிராம தெய்வங்களுக்கு, படையல் போடுவதாகட்டும்... எல்லாவற்றிலுமே ஏக தாராளம் காட்டி, அந்தப் பிரசாதத்தை மொத்த ஊர்மக்களும் சாப்பிடுகிற அளவுக்குப் படையலிட்டு, விழாவைக் கொண்டாடி மகிழ்வார்கள். காய்- கனிகளைப் படைத்து வழிபட்டால், தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது இங்கே வாழ்கிற மக்களின் நம்பிக்கை!

திரட்டுப்பால் நைவேத்தியம்!

நெல்லைச் சீமையின் படையலில், திரட்டுப்பாலுக்கும் இடம் உண்டு. திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில் உள்ளது விட்டலாபுரம். இங்கு, ஸ்ரீபாமா - ருக்மிணி சமேதராக அழகுத் ததும்பக் காட்சி தருகிறார் ஸ்ரீபாண்டு ரங்கன். அற்புதமான ஆலயத்தில், இங்கு, பஜனை, அபங்கம் என பாண்டுரங்கனைப் போற்றி வணங்குகின்றனர், பக்தர்கள். தமிழகத்தில் காண்பதற்கு அரிதான இந்தக் கோயிலில் திரட்டுப்பால் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. ஸ்ரீபாமா- ருக்மிணி சமேத ஸ்ரீபாண்டுரங்கனின் ஆலயத்துக்கு வந்து, திரட்டுப்பால் நைவேத்தியம் செய்து, மனதாரப் பிரார்த்தித்தால், சந்தான பாக்கியம் கைகூடும்; கல்யாண வரம் கிடைக்கும்; சகல ஐஸ்வரியங்களும் பெற்று இனிதே வாழலாம் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.  

படிப்பாயசம்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள காருகுறிச்சியில் அமைந்துள்ளது குளத்தூர் அய்யன் சாஸ்தா கோயில். கோயிலும் அருகில் திருக்குளமும் கொண்டு, தன்னை நாடி வருவோருக்கெல்லாம், அருளையும் பொருளையும் அள்ளித் தருகிறார் சாஸ்தா. இங்கு, படிப்பாயச நைவேத்தியம் பிரபலம். கோயிலுக்கு அருகில் உள்ள குளக்கரையின் படிகளைச் சுத்தம் செய்து, அதில் இறைவனுக்குப் படையலிட்ட உணவை இட்டுச் சாப்பிடுகிற வழிபாடு உள்ளது. இதனை 'படிப்பாயசம்’ என்கின்றனர் பக்தர்கள். இறைவனைப்  பிரார்த்தித்து, படிப்பாயச வழிபாடு செய்தால், வாழ்க்கை இனிக்கும் என்பது நம்பிக்கை!

- சி.பிரதாப் 
படங்கள்: ஏ.சிதம்பரம்