ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

நலம் தரும் நவ கயிலாயங்கள்!

நெல்லை தரிசனம்!

நலம் தரும் நவ கயிலாயங்கள்!
##~##
வகயிலாயத் திருத்தலங்கள், நெல்லைச் சீமையின் பெருமைகளில் ஒன்று. பாபநாசம் துவங்கி... புராணங்கள் போற்றும் நவ கயிலாயங்களையும் இங்கே நாம் தரிசிப்போம்!

திருநெல்வேலியில் இருந்து சுமார் 47 கி.மீ. தொலைவில் உள்ளது பாபநாசம். இங்கே ஸ்ரீஉலகாம்பிகை சமேத ஸ்ரீபாபநாசருக்கு அபிஷேகித்த தீர்த்தத்தை அருந் தினால், பாவங்கள் அகலும்; சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

திருநெல்வேலி- பாபநாசம் சாலையில், சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது சேரன்மாதேவி. இங்கே ஸ்வாமி ஸ்ரீஅம்மைநாதர்; அம்பாள்- ஸ்ரீஆவுடைநாயகி. இவளது சந்நிதியில், தட்டில் அரிசி வைத்து, அதில் தேங்காயில் நெய்யிட்டுத் தீபமேற்றி வழிபட்டால், திருமண தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

திருநெல்வேலி- சேரன்மாதேவி செல்லும் சாலையில் நடுக்கல்லூருக்கு அருகில் உள்ளது கோடகநல்லூர். சேரன்மாதேவியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவு. இந்தத் தலத்து இறைவன்- ஸ்ரீகயிலாசநாதர்; அம்பாள்- ஸ்ரீசிவகாமியம்மை. 58 விரலி மஞ்சளை மஞ்சள் சரடில் கட்டி, நந்திக்கு அணிவித்து வழிபட்டால், செவ்வாய் தோஷம் விலகும்; திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.

நலம் தரும் நவ கயிலாயங்கள்!

திருநெல்வேலி டவுனில் இருந்து திருவேங்கடநாதபுரம் செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது குன்னத்தூர் (சங்காணி). ஸ்வாமி- ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் என்கிற ஸ்ரீகயிலாசநாதர்; அம்பாள்- ஸ்ரீசிவகாமியம்மை. இங்கு வந்து வணங்கினால், கால சர்ப்ப தோஷம் நீங்கும்; ராகு தோஷம் விலகும்!

திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில், சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது முறப்பநாடு. இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீகயிலாசநாதர் கோயில். சிவனார் குரு அம்சமாகத் திகழும் தலம் இது! காசியில், கங்கையைப் போன்று, இங்கே... தாமிரபரணி வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்கிறது. எனவே, இதனை தட்சிண கங்கை எனப் போற்றுவர். இதில் நீராடி, சிவனாரை வழிபட, குரு பலம் கிட்டும். காசிக்கு நிகரான தலம் இது!  

நலம் தரும் நவ கயிலாயங்கள்!

திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில், சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீவைகுண்டம். இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீசிவகாமி யம்மை சமேத ஸ்ரீகயிலாசநாதர் கோயில். இது, சனிப் பரிகாரத் திருத்தலம். இழந்த சொத்து மற்றும் பதவியைப் பெற, இங்கே வந்து வேண்டிச் செல்கின்றனர் பக்தர்கள்.  

தென்திருப்பேரை, ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது ஸ்ரீஅழகிய பொன்னம்மை சமேத ஸ்ரீகயிலாசநாதர் கோயில். புதன் தோஷம் உள்ளவர்கள், இங்கே வந்து, ஸ்வாமிக்கு பச்சை வஸ்திரம் சார்த்தி வழிபடுகின்றனர். இங்கு, வேதத்தின் அம்சமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீகால பைரவர்.

தென்திருப்பேரையில் இருந்து குரும்பூர் சென்று, அங்கிருந்து ஏரல் செல்லும் சாலையில், மணத்தி எனும் கிராமத்திலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 1 கி.மீ. பயணித்தால், ராஜபதி தலத்தையும் ஸ்ரீஅழகிய பொன்னம்மை சமேத ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்தையும் அடையலாம். கேது பரிகாரத் தலம் இது. இங்கு வந்து பிரார்த்திக்க, குடும்பத்தில் நிம்மதி தழைக்கும்.

திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் உள்ளது ஆத்தூர். இங்கிருந்து புன்னைக்காயல் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது சேர்ந்தபூமங்கலம் ஸ்ரீசௌந்தர நாயகி சமேத ஸ்ரீகயிலாசநாதர் கோயில். இங்கு வந்து, வெண்மை நிற வஸ்திரம் சார்த்தி, மொச்சைப் பொடி சேர்த்த சாதம் மற்றும் தயிர்சாதம் நைவேத்தி யம் செய்து, வெண் தாமரை மலர்களால் அர்ச்சித்துப் பிரார்த் திக்க, சுக்கிர தோஷம் நிவர்த்தியாகும். வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் (சுக்ர ஹோரையில்) வழிபடுவது மிகவும் விசேஷம் என்கின்றனர் பக்தர்கள்.

  - பே.முத்துராமன்