ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##
கு
ற்றால அருவியில் குளித்துவிட்டு, சுற்றுவட்டார கிராமங்களையும் அந்த ஊர் மக்களையும் பார்ப்பதற்காகப் புறப்பட்டான் செண்பகராம பாண்டிய மன்னன். அடடா... எங்கு திரும்பினாலும் மலைகள்; எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென வயல்கள்; உயரமான தென்னை மரங்களும், குட்டையும் நெட்டையுமாக வாழை மரங்களும் பார்க்கப் பார்க்கப் பரவசமாகி, ஊரின் செழிப்பை உணர்ந்து சிலிர்த்தான் மன்னன்.
ஆலயம் தேடுவோம்!

வழிநெடுக வரவேற்பதற்காகத் திரண்டிருந்தனர் மக்கள். அத்தி மரங்களும் அரச மரங்களும் சூழ்ந்திருந்த பகுதிக்கு வந்த மன்னன், அந்த வனத்தின் அழகில் லயித்து நின்றான். மந்திரிகளும் ஊர்ப்பெரியவர்களும் அதிகாரிகளும் சூழ்ந்துகொண்டு, அந்த வனத்தின் சிறப்பை எடுத்துரைத்தார்கள்.

'அகத்திய முனிவர் இங்கு வந்து அத்திமர நிழலில், பல காலம் இருந்து தவம் செய்துள்ளார்’ என்றார் அமைச்சர்.

'புலிப்பாணிச் சித்தர் பின்னாளில் இங்கு நெடுங்காலம் இருந்து சிவனாரைத் தொழுது அருள்பெற்றிருக்கிறார்’ என்றார் ஊர்ப்பெரியவர் ஒருவர்.

இப்படியாக, அந்த வனத்தின் பெருமையை ஒவ்வொருவரும் சொல்லச் சொல்ல, பூரிப்பில் திகைத்துப் போனான் மன்னன். அப்போது ஊர்ப்பெரியவர், மக்களின் சார்பாக வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். 'மன்னா, நல்ல நாள் திருநாள் என்றால், தென்காசி திருத்தலத்துக்குச் செல்லவேண்டியிருக்கிறது. அப்படியில்லை யெனில், சங்கரனார் கோயிலுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. நம்மூரிலேயே ஓர் ஆலயம் இருந்தால், நாங்கள் நல்ல நாள் பெரிய நாள் என்றில்லாமல், எல்லா நாளும் வணங்குவோம்; நினைத்தபோதெல்லாம் சிவபெருமானை வழிபடுவோம். ஆகவே, தாங்கள் தயைகூர்ந்து இங்கு ஓர் ஆலயத்தை எழுப்ப வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

ஆலயம் தேடுவோம்!
##~##
'அட... நானே இதைத்தான் நினைத் தேன்!’ என்று வியந்த மன்னன், அந்த வனப்பகுதியில் மிகப் பிரமாண்டமாக ஓர் ஆலயம் எழுப்பினான். தவிர, சுமார் ஐயாயிரம் குடும்பங்கள் தங்குவதற்கு வசதியாக இடங்களையும் நிலங்களையும் தானமாகத் தந்து மகிழ்ந்தான். 'ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர். எனவே, இந்தப் பகுதி இனிமேல் சுந்தரேசபுரம் என வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசெண்பகவல்லி.

பிறகு, மெள்ள மெள்ள சுந்தரேசபுரம் எனும் கிராமம் செழிப்புடனும் வனப்புடனும் வளர்ந்தது. ஸ்ரீசெண்பகவல்லி சமேத ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கோயிலின் பெருமைகளை அறிந்து, நெல்லைச்சீமையின் பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனர். அடுத்தடுத்த கால கட்டங்களில், கிரக தோஷங்கள் நீக்கும் தலம் என இந்த ஆலயம் போற்றப்பட்டதாகத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரருக்குக் கோயில் கட்டும் வேலைகள் துரிதமாக நடைபெறும் வேளையில், எந்த இடையூறும் தாமதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைத்த மன்னன், சுந்தரேசபுரத்தில் அவசரம் அவசரமாக மண்கோட்டை ஒன்றைக் கட்டி, அங்கேயே தங்கினான். 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த மண்கோட்டை, இன்றைக்கு வெறும் மேட்டுப் பகுதியாக, பரம்புப் பகுதியாகத் திகழ்கிறது. அதைவிட, முழுக்க முழுக்கக் கருங்கற்களால் கட்டப்பட்ட சுந்தரேஸ்வரர் கோயில், இன்றைக்கு வழிபாடுகளோ பூஜைகளோ இல்லாமல் இருப்பதுதான் மிகக் கொடுமை.

''கடந்த நூறு வருடங்களில் கும்பாபிஷேகம் நடந்ததாகத் தெரியவில்லை. தவிர, இந்த ஆலயத் துக்குள் செல்லவே முடியாதபடி, சிதிலம் அடைந்து, முட்கள் முளைத்து, பாம்புகள் வாழும் இடமாக மாறிப்போய்விட்டிருந்தது. சிவனடியார் களின் துணையுடனும் ஒத்துழைப்புடனும் புதர்களை வெட்டிச் சீரமைத்து, பாம்புகளை விரட்டியடித்துவிட்டுப் பார்த்தால், நிறைய சிலைகளை, எவரோ எப்போதோ களவாடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இன்றைக்கு, அற்புதமான இந்தக் கோயிலின் திருப்பணிகளை மெள்ளத் துவக்கியிருக்கிறோம்'' என்று ஸ்ரீசெண்பகவல்லி சமேத ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அறக்கட்டளையின் தலைவர் கணபதி சுப்ரமணியன் தெரிவிக்கிறார்.

ஆலயம் தேடுவோம்!

சந்தன மரத்தாலான கொடிமரம் அமைந்திருந்ததாம், இங்கே! ஆனால், தற்போது கொடிமரத்தைக் காணோம். அழகும் அன்பும் ததும்பக் காட்சி தந்த ஸ்ரீசெண்பக வல்லியின் விக்கிரகத் திருமேனியையும் எவரோ எடுத்துச் சென்றுவிட்டனராம்! பிரமாண்டக் கோயிலில், மண்டபங் களுக்கோ அங்கேயுள்ள தூண்களில் சிற்ப நுட்பங்களுக்கோ குறைவே இல்லை. ஆனால், எங்கு பார்த்தாலும் விரிசல்; சின்ன மழைக்குக்கூட கோயிலின் உட்பகுதி குளமாகிவிடுகிற நிலைக்கு, விதானத்தில் ஆங்காங்கே ஓட்டைகள். இந்தக் கோயிலின் ஒரே ஆறுதல்... ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மற்றும் ஸ்ரீஅகோர பைரவர் ஆகியோர் காட்சி தருவதுதான். ஒரு காலத்தில், கிரக தோஷ பரிகார ஸ்தலமாகப் போற்றப்பட்டு, ஆராதனைகள் செய்யப்பட்டு வந்த கோயில், இன்றைக்கு மொத்த சந்தோஷங்களையும் தொலைத்துவிட்டு, களையிழந்து காட்சி தருகிறது.

இத்தனை பிரமாண்ட கோயி லில், அகத்தியர் முதலானோர் வழிபட்ட ஆலயத்தில், தீர்த்தக் குளம் இல்லாமல் இருக்குமா, என்ன? நெடுங்காலமாக குப்பைக் கூளங்களுடன் தண்ணீரின்றிக் காட்சி தந்த தீர்த்தக் குளத்தை, தற்போது தூர்வாரி சுத்தம் செய்துள்ளனர், அறக்கட்டளைக் குழுவினர்.

ஆலயம் தேடுவோம்!

வழிபாடுகள் இல்லாத பிரமாண்ட கோயிலுக்கு, வழிபாடு கள் நடைபெற நாம்தானே வழிவகைகள் செய்யவேண்டும்? ஆராதனைகள் ஏதுமின்றி இருக்கிற ஆலயத்தை, அரவணைத்துக் காபந்து செய்கிற கடமை, நமக்கு இருக்கிறதுதானே?!

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு நம்மால் ஆனதைச் செய்வோம். ஸ்ரீசெண்பகவல்லி அம்பாள் அருளாட்சி நடத்துகிற ஆலயத் தைச் சீரமைக்கும் பணிகளுக்கு நம்மால் முடிந்ததைக் கொடுப்போம்.

எட்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்ட அற்புதமான கோயில், இழந்த எழிலைப் பெறுவதற்கு, திருப்பணிக்குக் கரம் கொடுப்பது நம் பொறுப்பு; கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று, நம்மை வாழ்வாங்கு வாழச் செய்வது, ஈசனின் பொறுப்பு!

படங்கள்: எல்.ராஜேந்திரன்