Election bannerElection banner
Published:Updated:

மயிலையே கயிலை!

மயிலையே கயிலை!
மயிலையே கயிலை!

ரா.வளன், பிரசன்ன வெங்கடேஷ்

‘கற்பகமே அற்புதமே!’

சிவஸ்ரீ எஸ்.கபாலி குருக்கள்

‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ என்று இந்தத் தலத் தைப் போற்றுகின்றன புராணங்கள். ஒருமுறை கயிலை மலையில் அம்பாளுக்கு பிரணவம், பஞ்சாட்சரம் குறித்து உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது, அழகிய மயில் ஒன்று தோகை விரித்து நடனம் ஆடிக்கொண்டிருந்தது. அதைக் கண்டு அம்பாளின் கவனம் சிதறியது. இதனால் கோபம் கொண்ட சிவ பெருமான், ‘பூலோகத்தில் மயிலாகப் பிறப்பாய்’ என்று அம்பாளை சபித்துவிட்டார்.

மயிலையே கயிலை!

தனது தவற்றை உணர்ந்த அம்பிகை, ஸ்வாமியிடம் சாப விமோசனம் வேண்டினாள். அவளிடம், தொண்டைநாட்டுக்குச் சென்று தவமியற்றும்படி பணித்தார் சிவபெருமான். அதன்படி, தொண்டை
நாட்டில் அமைந்த இத்தலத்துக்கு மயிலுருவில் வந்த அம்பிகை, இங்கே புன்னை மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வந்தாள். அம்பிகையின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் அவளுக்குக் காட்சியளித்து சாப விமோசனம் தந்தார். அவரிடம் ‘இந்தத் தலத்திலேயே தாங்கள் கோயில் கொண்டு உலகத்தவர்க்கு அருள் பாலிக்கவேண்டும்’ என வேண்டிக்
கொண்டாள் அம்பிகை. அதன்படியே சிவனார் இங்கே கோயில் கொள்ள, அவருடன் அம்பாளும் கற்பகவல்லி எனும் திருப்பெயருடன் அருள்கிறாள். அவள் மயிலாக வந்து வழிபட்ட தலம் ஆதலால், இவ்வூரும் மயிலை என்று பெயர் பெற்றது.

மயிலையே கயிலை!

‘கற்பகம்’ என்பதற்கு வேண்டும் வரம் தருபவள் என்று பொருள். இவளைத் தரிசித்துவிட்டே ஸ்வாமியைத் தரிசிக்கும்படியான அமைப்பு, இக்கோயிலின் சிறப்பம்சம். சைவ சித்தாந்தங்களும் சக்தியின் மூலமாகவே சிவத்தை அடையமுடியும் என்கின்றன. அதற்கு உகந்த முறையில் திகழ்கிறது கபாலீஸ்வரர் ஆலயம். இங்கு வந்து அம்பாளைப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்; எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும்.

ஏற்றம் தரும் ஏழு!

ஏழு என்ற எண்ணை அடிப் படையாகக் கொண்ட விஷயங்கள் மயிலையின் தனிச்சிறப்பு. கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்த பாலீஸ்வரர் ஆகிய மயிலையில் உள்ள ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் எல்லாப் பேறுகளும் கிடைக்குமாம்.

மயிலையே கயிலை!

அதேபோல் மயிலாப்பூரில் ஏழு தீர்த்தங்களும் சிறப்புடன் திகழ் கின்றன. அவை: கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடவுள் தீர்த்தம் (கடல்), ராம தீர்த்தம்.

மயிலையே கயிலை!

திடத்துமனமும் பொறுமையும் திறமையும் தரும்

    சிந்தனையும் அதி நுட்பமும்

தீனர்கள் இடத்தில் விசுவாசமும் என்றும் அவர்

    தீப்பசி தணிக்க நினைவும்

கடக்க அரிதான ஜனன கடல் கடந்து

    கதிகாண மெய்ஞ்ஞான மோனக்

கப்பலும் தந்துதவி செய்து ரக்ஷித்து

    கடைத்தேற அருள் புரிகுவாய்

விடக்கடு மிடற்றினன் இடத்தில் வளர் அமுதமே

    விரிபொழில் திருமயிலை வாழ்

விரைமலர்க்குழல் வல்லி மரை மலர்ப்பதவல்லி

    விமலி கற்பக வல்லியே


- திருமயிலை கற்பகாம்பாள் பதிகம்

பதிகத்தால் உயிர் பெற்ற பூம்பாவை!

பூசை ஆட்சிலிங்கம்

திருமயிலையில் வாழ்ந்து வந்த வணிகர் சிவநேசர்; சிறந்த சிவபக்தர். இவரின் ஏழு வயது மகள் பூம்பாவை. ஒரு நாள் பூப்பறிக்கச் சென்ற பூம்பாவையை பூநாகம் ஒன்று தீண்டியது. அவள் இறந்தாள். பெரும் துயரத் துடன் பூம்பாவையின் உடலை தகனம் செய்த சிவநேசர், அவளின் எலும்பு மற்றும் சாம்பலை ஒரு குடத்தில் அடைத்து கன்னிமாடத்தில் வைத்திருந்தார்.

மயிலையே கயிலை!

இந்த நிலையில், திருஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு விஜயம் செய்தார். இதையறிந்த சிவநேசர் அங்கு சென்று, ஞானசம்பந்தரை வணங்கி அவரிடம், பூம்பாவைக்கு நிகழ்ந்ததை விவரித்தார். அவர் மேல் இரக்கம் கொண்ட சம்பந்தப் பெருமான் திருமயிலைக்கு வந்தார். ஸ்ரீகபாலீஸ்வரரை வணங்கினார். பிறகு, பூம்பாவையின் சாம்பல் நிறைந்த குடத்தை எடுத்து வரச்செய்த ஞானசம்பந்தர், ‘மட்டிட்ட புன்னையங் கானல்...’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். மாண்ட பூம்பாவை உயிர் பெற்று, 12 வயதுப் பெண்ணாக வெளி வந்தாள். பெரிதும் மகிழ்ந்த சிவநேசர், தன் மகள் பூம்பாவையை
மணந்துகொள்ளுமாறு திருஞானசம்பந்தரை வேண்டினார். ஆனால், சம்பந்த பெருமான் மறுத்துவிட்டார். இதன் பிறகு நெடுநாள் வாழ்ந்த பூம்பாவை, தொடர்ந்து சிவ வழிபாட்டில் திளைத்திருந்தாள். இறுதியில் சிவ தியானத்தில் இருந்த நிலையில் முக்தியடைந்தாள்.

மயிலையே கயிலை!

சிங்கார வேலன்

முருகனுக்கும் உகந்த திருத்தலம் மயிலை. சிக்கல் திருத்தலத்தில் சக்தி வேல் பெற்ற முருகப் பெருமான், மயிலைக்கும் வந்து வழிபட்டு சிங்கார வேல் ஒன்றைப் பெற்றாராம். எனவே, இங்குள்ள முருகனுக்கு சிங்கார வேலன் என்று பெயர்.
 
இவ்வாறு தன்னை வணங்கிய முருகப்பெருமானிடம், ‘அண்ணன் விநாயகனையும் வணங்கு!’ என்று பணித்தார் ஈசன். அதன்படியே இங்குள்ள கணபதியையும் வணங்கி வழிபட்டார் கந்தவேள். இதனால் மகிழ்ந்த விநாயகர் ஆனந்தக் கூத்தாடினார். இவரே இங்கு நர்த்தன விநாயகராகக் காட்சி தருகிறார்.

பார்போற்றும் பங்குனிப் பெருவிழா!

சிவஸ்ரீ வெங்கடசுப்ரமணிய சிவாச்சாரியார்

ஈஸ்வரனுக்கு ஒப்பாக தனக்கும் ஐந்து தலைகள் என்று கர்வம் கொண்ட பிரம்மனின் ஒரு சிரத்தைக் கொய்து, அந்தக் கபாலத்தை கையில் ஏந்தியதால், கபாலீஸ்வரர் எனும் திருப்பெயருடன் சிவனார் அருளும் மிக உன்னதமான திருத்தலம் இது. ஸ்வாமி மேற்கு நோக்கி அருள்வது கூடுதல் விசேஷம்.

இந்தத் தலத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பது பங்குனிப் பெருவிழாவும், அதிலும் பிரதானமான அறுபத்து மூவர் திருவிழாவுமே! பங்குனிப் பெருவிழாவின் எட்டாம் நாளன்று காலையில், ‘பூம்பாவை உயிர்ப்பித்தல்’ நிகழ்ச்சி நடைபெறும். கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் பதிகம் பாடி பூம்பாவையை உயிர்ப்பித்த பின்னர், மண் குடுவையில் உள்ள வெல்லம் பிரசாதமாகத் தரப்படும். அஸ்தியில் இருந்து பூம்பாவையை ஞானசம்பந்தர் உயிர்ப்பித்ததை ஐதீகமாகக் கொண்டு இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

மயிலையே கயிலை!

தொடர்ந்து மாலையில் 63 நாயன்மார்களுடன் விநாயகர், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் நான்கு மாடவீதிகளில் நள்ளிரவு வரை வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பக்தர்கள் தங்களால் இயன்றளவு தானம் வழங்குவது இவ்விழாவின் தனிச்சிறப்பு.

பத்தாம் நாள் காலை விழாவில்,  கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு, அம்பாள் மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார். பௌர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பாள் அம்பிகை. கல்யாணத் தடைகளால் வருந்தும் அன்பர்கள், இந்த வைபவத்தைத் தரிசித்து ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்டு வர, விரைவில் தடைகள் யாவும் நீங்கி கல்யாணம் கைகூடும்.

எத்தனை பெயர்கள்?

மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரமாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது.

 உமையவள் மயிலாக வந்து இங்கு ஈசனை வழிபட்டதால்- மயிலை; சோமுக அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை மகாவிஷ்ணு மீட்டு வந்து இங்கு சேர்த்ததால் - வேதபுரி; சுக்ராச்சார்யார் இங்குள்ள ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால்- சுக்ரபுரி; மயிலை மற்றும் திருவொற்றியூரில் வாழ்ந்த கபாலிகர்கள் ஈசனைப் போற்றி வழிபட்டதால் - கபாலீச்சரம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது திருமயிலை.

மயிலையே கயிலை!

மூவேந்தர் காலத்தில், புலியூர் கோட்டத்துப் புலியூர் நாட்டைச் சேர்ந்ததாக விளங்கிய மயிலை, வடமொழியில் ‘கேகயபுரி’ எனப்பட்டது. ‘மயிலாப்பி’ என்றும் இந்தத் தலம் அழைக்கப்பட்டதை அப்பர் பெருமானின், ‘மயிலாப்பிலுள்ளார்...’ என்ற திருத்தாண்டகத்தின் வரிகளில் இருந்து அறியலாம்.

திருமழிசை ஆழ்வார்- ‘மாமயிலை’ என்றும், திருமங்கை ஆழ்வார் - ‘மயிலை’ மற்றும் ‘மாமயிலை’ ஆகிய பெயர்களாலும், சுந்தரர் ‘தொன்மயிலை’ என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் மயிலாப்பில், மயிலாப்பு, மயிலாபுரி ஆகிய பெயர்களும் இவ்வூருக்கு உண்டு.

  படங்கள்: ஜெ.வேங்கடராஜ்


 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு