Published:Updated:

ஆலயம் தேடுவோம்

ஆலயம் தேடுவோம்
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்

கோதண்டராமனுக்கு நேர்ந்த கொடுமை!தி.ஜெயப்பிரகாஷ்

ஆலயம் தேடுவோம்

கோதண்டராமனுக்கு நேர்ந்த கொடுமை!தி.ஜெயப்பிரகாஷ்

Published:Updated:
ஆலயம் தேடுவோம்
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்

யிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, நம் புண்ணிய பூமியை ஆட்சி செய்த மன்னர் பெருமக்கள், மக்கள் வழிபட்டு நலம் பெறவேண்டியும், கலை, கலாசாரம் போன்றவற்றை வரும் தலைமுறையினர் தெரிந்துகொள்ள விரும்பியும் எண்ணற்ற ஆலயங்களை நிர்மாணித்து உள்ளனர். நித்திய பூஜைகளும், பெரும் திருவிழாக்களும் தொடர்ந்து நடைபெற மானியங்களும் வழங்கி உள்ளனர். இத்தகைய ஆலயங்கள் எந்த ஒரு தனி மனிதருக்கும் உரிமையானது அல்ல. ஆனால், ஆண்டவன் அருள்புரியும் ஆலயங்களும், அவற்றுக்கு மன்னர்கள் வழங்கிய மானியங்களும், என்னவோ தங்களுடைய சொந்த சொத்து என்று நினைத்து ஆக்கிரமிக்கவும், மற்றவர்களுக்கு விற்றுவிடும் அவலமும் இந்த மண்ணில்தான் நடைபெற்றது என்பது எத்தனை வருத்தத்துக்கும் அவமானத்துக்கும் உரிய விஷயம்?

இதோ இப்போது நாம் தரிசித்துக் கொண்டு இருக்கிறோமே, இந்த ஸ்ரீகோதண்டராமர் கோயிலும்கூட, தங்களுடைய சொந்த சொத்து என்ற நினைப்பில் மற்றொரு நபருக்கு விற்கப்பட்ட அவலத்தைச் சந்தித்துள்ளது.

ஆலயம் தேடுவோம்
ஆலயம் தேடுவோம்

கோட்டை என்றாலே அது செஞ்சிக் கோட்டை என்று சொல்லும் அளவுக்குப் பிரசித்தி பெற்றிருக் கும் செஞ்சி நகரத்தில், சங்கராபரணி நதியின் கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீகோதண்டராமர் கோயில் ஒரு காலத்தில் மூலவர் சந்நிதி, தாயார் சந்நிதி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், இரண்டு மணி மண்டபங்கள், சங்கராபரணி ஆற்றுக்கு உள்ளே நீராழி மண்டபம், நாற்பது கால் மண்டபம், அறுபது கால் மண்டபம் மற்றும் துளசி மண்டபம் என்று மிகுந்த கலையழகோடு நான்கு பிராகாரங்களுடன் அமைந்திருந்ததை இன்றைக்கும் எஞ்சி இருக்கும் தடயங்கள் நமக்கு உணர்த்தவே செய்கின்றன. ஒரு காலத்தில் அழகியலுக்கே இலக்கணமாய் மிகப் பிரமாண்டமாய் திகழ்ந்த திருக்கோயிலின் இன்றைய சிதிலமடைந்த நிலையைக் கண்டு மனம் பதறித் துடிக்கவும் செய்தது.

பல வருஷங்களாக வழிபாடுகளே இல்லாமல், சமூக விரோதிகளின் புகலிடமாக இருந்த கோதண்டராமர் ஆலயத்தைச் சீர்படுத்தி, தங்களால் இயன்ற அளவு வழிபாடுகள் செய்ய விரும்பிய ஊர் பொதுமக்கள், ஒரு திருப்பணிக் கமிட்டியை ஏற்படுத்தி ஆலயத்தைச் சீர்படுத்தச் சென்ற நேரத்தில், ஓர் இடையூறையும் எதிர்கொண்டனர். அதுபற்றி திருப்பணிக் கமிட்டியைச் சேர்ந்த துரைரங்கராமானுஜ தாசன் நம்மிடம் கூறும்போது...

ஆலயம் தேடுவோம்

‘‘வழிபாடு இல்லாமல் பாழ்பட்டுக் கிடக்கும் கோதண்டராமர் கோயிலில் நாங்கள் முயற்சி எடுத்து வழிபாடு நடத்தச் சென்றபோது, இந்தக் கோயிலையும் கோயில் சார்ந்த இடத்தையும் 1878-ம் ஆண்டு ஓர் ஆன்மிக மடத்திடம் இருந்து வேடந்தாங்கலைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் ரு.500 கொடுத்து தன் பெயருக்கு மாற்றிக்கொண்டதாக ஒரு பத்திரத்தை வட்டாட்சியரிடம் காட்டி, கோயிலில் பூஜைகள் நடைபெறக் கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்து கோயிலை பூட்டியும் விட்டனர். ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று, அவரும் கோயிலைப் பூட்டி சீல் வைக்குமாறு உத்தரவிட்டார்.

எனினும், செஞ்சி மக்கள் தங்கள் முயற்சியில் இருந்து சற்றும் பின்வாங்காமல் தொடர்ந்து போராடியதன் பயனாக, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட பிறகே, செஞ்சி வட்டாட்சியர் கோயில் சாவியை ஊர்ப் பொதுமக்களிடம் ஒப்படைத்தார். அதன்பிறகு நாங்கள் எங்களால் முடிந்த அளவு பூஜைகள் செய்து வருகிறோம். விரைவிலேயே திருப்பணிகள் செய்யவும் முடிவு செய்திருக்கிறோம்’’ என்றார்.

ஆலயம் தேடுவோம்

வருடந்தோறும் மாசிமகத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த சிங்கவரம் அரங்கநாத பெருமாள், ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பல கோயில்களில் இருந்து தெய்வமூர்த்தங்கள் இந்தக் கோயிலுக்கு வந்து சங்கராபரணி ஆற்றிலே தீர்த்தவாரியில் கலந்துகொள்ளும். அன்றைய தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு தரிசித்து வந்தனர். ஆனால் இன்றைக்கோ, அந்த ஆற்றங்கரை படித்துறையே மண்ணுக்குள் புதைந்துபோய்க் கிடந்திருக்கிறது. சமீபத்தில் அவ்விடத்தில் இருந்த மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது, இரண்டு புறங்களிலும் மீன் சின்னங்கள் செதுக்கப்பட்ட அகலமான படித்துறை தென்பட்டது. இதனால், இந்தக் கோயிலுக்குப் பாண்டிய மன்னர்களும் திருப் பணிகளைச் செய்திருக்கக் கூடும் என்று யூகிக்க முடிகிறது. இத்தனை புராதனமான இந்த ஆலயம்  ஏனோ இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் இடம்பெறவில்லை என்பது நமக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதேநேரத்தில், ஊர் மக்கள் தொடர்ந்து போராடி திருக்கோயிலைச் சீர்படுத்தி பூஜை வழிபாடுகளைச் செய்து வருவது நமக்கு ஆறுதலைத் தந்தது.

ஆலயம் தேடுவோம்

கவனிப்பார் இல்லாமல் கிடக்கும், திருக்கோயில் மீண்டும் புதுப்பொலிவு பெறவேண்டாமா? அந்த முயற்சியில் தங்களை அர்ப்பணித்து, ஊர் மக்கள் மேற்கொண்டு வரும் திருப்பணிகளுக்கு நாமும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது நம்முடைய கடமை அல்லவா?

ஆலயம் தேடுவோம்

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிய வள்ளல் ராமபிரான்! அந்த வள்ளலின் திருக்கோயில் மீண்டும் புதுப்பொலிவு பெற்றிட நாமும் நம்மால் இயன்ற அளவு பொருளுதவி செய்தால், வில்லினை ஏந்தி, நம்முடைய பாவ வினைகள் அனைத்தையும் போக்கும் எம்பிரான், நம்மையும் நம் சந்ததியரையும் சகல துன்பங்களில் இருந்தும் காப்பாற்றி வாழ்வாங்கு வாழ அருள்புரிவார் என்பதில் சந்தேகமே இல்லை. 

 படங்கள்: ஏ.ராஜேஷ்

எங்கிருக்கிறது..? எப்படிச் செல்வது..?

ஆலயம் தேடுவோம்

செஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், சங்கராபரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது கோதண்டராமர் கோயில். பல இடங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.