Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

க்னத்தில் ரவி வீற்றிருக்கிறார். செவ்வாய் லக்னத்தையும் ரவியையும் சேர்த்துப் பார்க்கிறான். இந்த அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் சுவாச ரோகம், க்ஷயம், வித்ரதி, குல்மம் போன்ற பிணிகளைச் சந்திக்க நேரிடும்.

சுவாச ரோகம் என்றால் மூச்சு இரைப்பு. சிறு வயதில் லேசாகத் தென்படும் இந்தப் பிணி, மருந்துக்குக் கட்டுப்பட்டு பரிணாம வளர்ச்சியில் மறைந்திருக்கும். சிலபேர், இதை நடைமுறையில் ப்ரைமரி காம்ப்ளக்ஸ் என்பார்கள். வயது வந்தபிறகு சுற்றுச் சூழலின் மாறுபாட்டில் பிணி தோன்றுவது உண்டு. மேகம் சூழ்ந்த ஆகாசம், பனிபடர்ந்த ஆகாசம் இருக்கும் வேளையில், இது தென்பட்டு துன்பத்தை அளிக்கும். கோயில் பிரம்மோற்ஸவம் போன்று வருடாவருடம் பனியும் குளிரும் வெளிப்படும் காலங்களில் இதைச் சந்திப்பவர்களும் உண்டு. இது மாறாப் பிணி. கட்டுப்படுத்த மட்டுமே இயலும்.

ஒருவனுக்கு பொருளாதார நிறைவும் குடும்பத்தின் செழிப்பும் இருந்தும் பிணியின் காரணமாக குடும்பத்தை இழக்க நேரிடும். அது, தாம்பத்திய சுகத்தில் நெருடலை ஏற்படுத்திவிடும். சிறு வயதில் ஜாதகம் பார்க்கும்போது, சுறுசுறுப்பாக இயங்குவதைக் கண்ணுற்று, வருங்கால பிணிகளைப் பற்றி ஆராயாமல் இணை சேர்ப்பது, ஜோதிட பிரபலங்களுக்குத் தகாது. இது விஞ்ஞானத்துக்கு எட்டாத விஷயம். ஜோதிடத்தால் மட்டுமே மதிப்பீடு செய்ய இயலும். கர்மவினையின் தரத்தை அறிந்து, அது பிணியாக, அதுவும் நிரந்தர பிணியாக மாற இடம் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். இன்றைய விஞ்ஞான மருத்துவமானது மாறாப் பிணியையும் எளிதாக மாற்ற இயலும் என்றுதான் சொல்லும். ஆனால், அனுபவத்தில் வேறுவிதமாகத்தான் உணரமுடிகிறது. ‘நல்லதைச் செய்யவேண்டும், நல்லதைச் சொல்லவேண்டும். பிணியாளர்களின் மனம் பேதலித்துப் போகக் கூடாது’ என்ற எண்ணம் நல்லதுதான். ஆனால் சிந்தனை வளமும், தைரியமும் பெற்ற புதுத் தலைமுறையினருக்கு உண்மையைச் சொல்வது பொருத்தமாகும்.

முன்னோர்கள் சொன்னார்கள்

க்ஷயம் என்பது உடலில் இருக்கும் ரஸம், ரத்தம், மாம்சம், வசை, எலும்பு மஜ்ஜை, சுக்கிலம் - இந்த ஏழு தாதுக்களும் வலுவிழந்து காணப்படும் நிலை. வயது வந்த பிறகு தென்பட்டால் தாம்பத்தி யம் கசந்துவிடும். வித்ரதி என்றால் உடலில் தென்படும் கட்டிகள். குறிப்பாக பெண்களின் கொங்கையில் தென்படும் கட்டிகளை அகற்ற முடியாமல் கொங்கையை அகற்ற நேரிடும். குல்மம் என்பது வயிற்றில் ஏற்படும் கட்டி. அதுவும் தாம்பத்தியத்தைச் சுவைக்க இயலாமல் செய்துவிடும். புதர்கள் எப்படி உருண்டு திரண்டு தென்படுகின்றனவோ அதுபோல் வயிற்றில் தென்படுவது குல்மம். திருமணத்துக்கு ஜாதகம் பார்க்கும்போது வருங்கால பிணியைப் பற்றி ஆராய வேண்டும். அதை அலட்சியப்படுத்தினால், தவறான இணைப்பின் காரணமாக இருவரது இன்பமும் பகல் கனவாகிவிடும்.

லக்னத்தில் இருக்கும் சூரியன் வெப்ப கிரகம். அவனைப் பார்க்கும் செவ்வாயும் வெப்ப கிரகம். இரண்டின் தாக்கமும் மாறாப் பிணிக்குக் காரணமாகிவிடும். உடலில் ஆரோக்கியத்துக்கு உகந்த வகையில் அமைந்த வெப்பதட்பங்கள், இந்த இருவரின் வெப்பாதிக்யத்தால் (சூரியன்-செவ்வாய்), தட்பம் கட்டியாகி கப வடிவில் பலம்பெற்று இடையூறை விளைவிப்பதே இந்த நான்கு பிணிகளும். கபத்தில் தடங்கலில் வாதத்தின் செயல்பாடு  மாறுவதால் சுவாச ரோகம் ஏற்படுகிறது. அதிக வெப்பம் தட்பத்தை மாறவிடாமல் அழிப்பதால் க்ஷயம் ஏற்படுகிறது. கட்டியின் மூலப் பொருள் கபம் (வித்ரதி குல்மம்). அதை கரையவிடாமல் தடுத்து நிறுத்துவதால் வித்ரதியும் குல்மமும் அலைக்கழிக்கின்றன. சூடான வெப்பத்தில் குளிர்ச்சி யின் தாக்கம் ஜலதோஷத்தை ஏற்படுத்தி உள்ளே இருக்கும். ஆவி ஜலமாக மாறி மூக்கு, கண்கள் போன்றவற்றின் வழியாக வெளியேறுகிறது!

லக்னத்தில் இருக்கும் சூரியனை செவ்வாய் 7-ம் பார்வையாகப் பார்க்க வேண்டும். அதன் விசேஷ பார்வையான 4-ம், 8-ம் பிணியை நிரந்தரமாக்காது. இருவரும் 7-ம் பார்வையாக ஒன்றுக்கொன்று இணையும்போது பிணியை ஏற்படுத்தும் அளவுக்கு வெப்பம் உச்சகட்டத்தை அடைய இயலும். 4-ம் பார்வையாகவோ, 8-ம் பார்வையாகவோ பார்க்கும்போது, சூரியனின் பார்வை செவ்வாயில் விழாது. பிணியில் சிக்காமல் இருந்துவிடுவார்கள். எல்லா லக்னத்துக்கும் இது பொருந்தும்.

லக்னத்தில் லக்னகாரகன் சூரியன் லக்னத்தை அழிக்கமாட்டான். 9-க்கு உடையவன் சூரியன். அவன் பாக்கியாதிபதி. பாக்கியாதிபதி லக்னத்தில் இணைந்தால் பாக்கியம் உண்டு. 9-க்கு உடைய செவ்வாய் லக்னத்தையும் அதிலிருக்கும் சூரியனையும் பார்க்கிறான். ஆகையால் பாக்கியம் இருப்பதை உறுதி செய்கிறது. இப்படியெல்லாம் தேவையற்றதும், தொடர்பற்றதுமான விளக்கங் களை அள்ளி வீசி, இணையை சேர்த்து வைப்பது நமது துரதிருஷ்டம். எந்தக் கோட்பாடு எங்கு செல்லுபடியாகும், எங்கு செல்லுபடி ஆகாது என்ற ஊஹாபோஹங்கள் (அலசி ஆராய்தல்) நமக்கு இருக்கவேண்டும். மக்களுக்கு ஜோதிட வாசனை இல்லை; ஆகையால், நாம் சொல்லும் விளக்கத்தை ஏற்பார்கள் என்கிற எண்ணம் ஜோதிட பிரபலங்களுக்கு வரக்கூடாது.

முன்னோர்கள் சொன்னார்கள்

லக்னத்தில் செவ்வாய். சனியும் சூரியனும் லக்னத்தையும் செவ்வாயையும் பார்க்கிறார்கள். இந்த அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் வாள், கத்தி, குந்தம், உலக்கை போன்ற கருவிகளின் தாக்கத்தால் உடல் வளம் குன்றியவனாகக் காட்சியளிப்பான். இந்த ஆயுதங்களால் அடிபட்டு உடலுறுப்புகள் வலுவை இழக்கலாம். அதுவும் தாம்பத்தியத்தில் நெருடலை உண்டுபண்ணும். வாழ்நாள் முழுதும் மனம் துயரத்தைச் சந்தித்துவிடும்.

இங்கு செவ்வாய் வெப்ப கிரகம், சனியும் சூரியனும்  வெப்ப கிரகங்கள். பூமியின் புதல்வன் செவ்வாய் என்ப தால் பூமியின் வெப்பம் செவ்வாயில் தென்படும். சூரியனின் புதல்வன் சனி என்பதால் சூரியனின் வெப்பம் சனியில் தென்படும். இந்த மூன்றின் தாக்கம் உடலுறுப்புகளில் ஒன்றை இழக்கவைக்கலாம். அல்லது இயங்க முடியாமல் செய்துவிடலாம். பிறக்கும்போது இல்லாத குறை, வளர்ந்த பிறகு குறிப்பிட்ட தசா காலங்களில் தோன்றிவிடும். செவ்வாய், சனி, சூரியன் ஆகிய மூவரின் தசைகளிலோ, புத்தியிலோ, அந்தரத்திலோ தென்பட்டுவிடும். உடலுறுப்புகள் செழிப்பாக வளர்ந்த பிறகு, இளமையில் திளைக்கும் வேளையில் இந்த மூன்று கிரகங்களில் எதனுடைய தசை, புத்தி, அந்தரம் முதலில் தென்படுகிறதோ, அப்போது உடலுறுப்புகள் இயங்கும் தகுதியை இழந்துவிடும்.

முன்னோர்கள் சொன்னார்கள்

கைகளில் விரல்களை மட்டும் இழந்தவர்கள். கைமூட்டு வரை இழந்தவர்கள், தோள்பட்டையிலிருந்து கையை இழந்த வர்கள், மூக்கிலும் உதட்டிலும் அடிபட்டு தெளிவாகப் பேச இயலாதவர்கள், அடிபட்டு அதனால் கண்களை இழந்தவர்கள், அதுபோல் கால்களை இழந்தவர்கள் ஆகிய அனைவரும் பிறர் உதவியில் வாழும் கட்டாயம் வந்துவிடும். பிறக்கும் தறுவாயில்
இம்மூவரில் ஒருவர் தசை இருந்தால், அவரது கால்கள் அல்லது கைகள் சூம்பிப்போவதும் உண்டு. பிறந்த சில மாதங்களுக்குள்ளேயே மசூரி (வெப்பத்தால் வரும் பிணி) ஏற்பட்டு கண்களை இழந்தவர் களும் உண்டு. முதுமையில் கீழே விழுந்து கால் - கைகள், தலை ஆகியவற்றில் அடிபட்டு ஊனத்தை ஏற்பவர்களும் உண்டு. முதுமையில் இம்மூவரில் ஒருவரது தசா காலம் தென்பட்டால், அந்த வேளையில் பாதிப்பு ஏற்படுவதும் உண்டு.

பண்டைய நாளில் போரில் கை - கால் இழந்தவர்கள் இருந்தார்கள். இன்றைய விஞ்ஞானம் இழப்புகளுக்கு உகந்த வகையில் கை வண்டிகளையும், தள்ளு வண்டிகளையும் அளித்து உதவினாலும் அவர்களின் மனம் படும்பாட்டை அகற்ற இயலாது. இன்றைய மருத்துவ விஞ்ஞானம் மாற்று உறுப்புகளை அளித்து உதவுவது, அவர்களுக்கு ஏற்றம் கொடுக்காது. குறை, மனத்தளவில் பசுமையாக இருந்துகொண்டிருக்கும். இன்றைய நாளிலும் ரயிலில் இருந்து தவறி விழுந்து கை, கால்களை இழந்தவர்கள் உண்டு. குளியல் அறையில் வழுக்கி விழுந்து உடலுறுப்புகளை இழந்தவர்களும் உண்டு. மது மேக நோயால் கண்களை இழந்தவர்களும், கால் விரல்களை இழந்தவர்களும், கால்களை இழந்தவர்களும் ஏராளம்.

இன்னாளில் ஊனமுற்றோர் எண்ணிக்கை அதிகமாகி அவர் களது வாழ்வுக்கு அரசாங்கமே உதவி செய்யவேண்டிய நிர்பந்தம் வந்திருக்கிறது. வயது வந்த பிறகு தென்படும் இக்குறைகளை முன்னதாகவே அறிய விஞ்ஞானத்தால் இயலாது. ஜோதிடம் மதிப்பீடு செய்து, வருமுன் காக்கும் நடைமுறைகளைக் கையாண்டு, அதைத் தவிர்க்க சந்தர்ப்பத்தை அளிக்கும்.

செவ்வாயின் வெப்பம் வெளியே பரவாது. உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு இருக்கும். சனியின் வெப்பம் சூரியனின் சாரமானதால் (புதல்வன்) சூரியனை விடக் கடுமையாக இருக்கும். சூரியனின் வெப்பம் வெளியே பரவுவதால் தாங்கக்கூடியதாகவே இருக்கும். மூன்றும் வெப்பக் கிரகம் என்றாலும் வெப்பத்தின் அளவில் மாற்றம் உண்டு. கோடை முடிந்து புது மழையைச் சந்திக்கும்போது, பூமியின் வெப்பம் ஆவியாக மாறுவதைப் பார்த்திருக்கிறோம். வெளிவந்த வெப்பம் பயிர்களையும் தாக்கும். உயிரினங்களிலும் மாறுதலை ஏற்படுத்தும். மனிதர்களிலும் குறிப்பிட்ட பிணிகள் தோன்றிவிடும். அதிக வெப்பத்துக்கு பிணிகளைத் தோற்றுவிக்கும் திறமை உண்டு. புது மழையில் வெப்பம் தாங்க முடியாமல், பூமிக்குள் வளைகளில் தங்கியிருக்கும் பாம்புகளும் எலிகளும்கூட வெளியே வந்துவிடும்!

7-ல் இருக்கும் சூரியனும்,  சனியும் கணவனை அலைக்கழிக்கும். செவ்வாய் அழித்துவிடும் என்ற முடிவிற்கு வரவேண்டியதாயிற்று. புழுக்கத்தோடு தென்படும் வெப்பம் வெளியில் பரவும் வெப்பத்தைவிடக் கடுமையானது. விஞ்ஞான முறைப்படி என்னதான் பாதுகாப்போடு வாழ்ந்தாலும், கர்மவினையானது குறித்த காலத்தில் நம்மையும் அறியாமல் நம்மில் பாதிப்பை திணித்துவிடும். வந்தபிறகுதான் நாம் உணருவோம். ஜோதிடத்தின் எல்லையை விஞ்ஞானம் எட்டாது.

முன்னோர்கள் சொன்னார்கள்

லக்னத்தில் கேது தென்படுகிறான். இரு பாப கிரகங்கள் அவனைப் பார்க்கிறது. இந்த அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் பூதம், பிரேதம், பிசாசு, யக்ஷி போன்ற துர்தேவதைகளை நினைத்து மனம் பயத்தில் ஆழ்ந்துவிடும். திருட்டு பயமும் மனதை விட்டு விலகாது. துர்தேவதைகள் கண்ணுக்குப் புலப்படாதவர்கள். அவர்களைக் கண்ணால் பார்த்தவர்களும் இல்லை. யக்ஷன், பிசாசு போன்றவர்கள் தேவயோனிகள். அதாவது தேவர்களில் அடங்கி யவர்கள். கெடுதலைச் செய்யும் இயல்புடைய தேவர்கள் என்று அமரகோசத்தில் அமரஸிம்ஹன் விளக்கமளிப்பார் (பிசாசோ குஹ்யக: ஸித்தோ பூதோ மீ தேவயோனய:). அவர்கள் நம் கண்களில் படமாட்டார்கள். நம் மனம் அவர்கள் இருப்பதை நினைத்து பயத்தைத் தழுவும். இன்றைய சின்னத் திரையும், பெரிய திரையும் பார்க்காத ஒன்றின் உருவத்தை உருவாக்கி பயந்த மனதைப் பதற்றப்படும்படி செய்கிறார்கள்.

திருடனும் கண்ணுக்குப் புலப்படமாட்டான். திருடின பிறகு அவன் திருடன் என்று தெரிந்து கொள்வோம். ரயில் பயணி  இரவு எல்லோரும் உறங்கும் வேளையில், பணப்பையை எடுத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கச் செல்வான். அப்போதும், தனது பெட்டிகள், பைகள் போன்றவை திருட்டுப் போய்விடுமோ என்று பயப்படுவான். பணப் பையோடு பயணம் மேற்கொள்ளும் பயணி, தன்னுடன் பயணிப்பவர்கள் தனது பணப் பையை கவனிக் கிறார்கள் என்ற எண்ணத்தில், அது திருட்டுப் போய்விடுமோ என்று வீணாகக் கவலைப்படுவான். பர்ஸில் பணம் இருக்கும். பர்ஸ் சட்டைப் பையில் இருக்கும். எனினும், உறங்கும் வேளையில் கையை சட்டைப் பையில் வைத்துக்கொண்டு உறங்குவான். விழித்தவுடன் ஒரு தடவை பையைத் தடவிப் பார்ப்பான். இப்படி திருட்டுப் பயம் அவனிடம் விலகாமல் இருக்கும்.

முன்னோர்கள் சொன்னார்கள்

லக்னத்தில் இருக்கும் கேது வெப்ப கிரகம். அதற்கு சிகி என்று பெயர் உண்டு. சிகா என்றால் நெருப்பின் ஜ்வாலை. அதை உடையவன் சிகி. அதாவது கேது என்று விளக்கம் உண்டு. ஜ்வாலை வெப்பத்துக்கு உண்டு. ஆகையால் வெப்ப கிரகம் என்று விளக்கம் அளிப்பார்கள். உண்மையில் அது வெப்பமா தட்பமா என்று தெரியாது. தட்பம் இல்லை என்று தீர்மானமானதால் வெப்ப வரிசையில் இடம்பிடித்துவிட்டான். இரு வெப்ப கிரகங்கள் அவனைப் பார்க்கும்போது, பூதத்தையும் பிசாசையும் யக்ஷனையும் நினைத்து மனம் பயத்தைத் தழுவிவிடும். திருட்டுப் பயமும் சேர்ந்துவிடும்.

இங்கு மனம் இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துப் பயத்தில் ஆழ்ந்து விடுகிறது. வாழ்க்கையில் இந்த பயம் அவனது நிம்மதியை இழக்கவைக்கும். பூதம் என்றால் உயிரினம் என்று பொருள். ப்ரேதம் என்றால் உலகத்திலிருந்து சென்றவன், இங்கிருந்து சென்றவன், உடலை விட்டுப் பிரிந்தவன் என்று பொருள். பிசாசு என்றால் அடைக்கலத்தைத் தேடி அலைந்து கொண்டிருப்பவன் என்று பொருள். சீர்திருத்தவாதிகளின் திரிசமன் இது. இல்லாத ஒன்றை சாஸ்திரம் சொல்வதாகச் சொல்லி அதை மூடநம்பிக்கையாகச் சித்திரிக்கப் பயன்படுத்துகிறார்கள். சாஸ்திரங்களில் மூடநம்பிக்கைக்கு இடமில்லை. அது, காரிய காரணத்துடன் விளக்கம் அளிக்கும். மூடநம்பிக்கைகளை சாஸ்திரத்துக்குள் ஊடுறுவச் செய்தவர்கள் சில சீர்திருத்தவாதிகளே!

- தொடரும்