Published:Updated:

புண்ணிய பூமி

புண்ணிய பூமி
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய பூமி

அகிலம் காக்கும் ஆதவன் ஸ்ரீகாகுளம் சூரியநாராயணன்காஷ்யபன்

புண்ணிய பூமி

அகிலம் காக்கும் ஆதவன் ஸ்ரீகாகுளம் சூரியநாராயணன்காஷ்யபன்

Published:Updated:
புண்ணிய பூமி
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய பூமி

ன்மகாரகனான ஆதவனுக் கான தனிக் கோயில்கள் அபூர்வம். வடக்கே கோனார்க், தமிழகத்தில் தஞ்சைக்கு அருகில் சூரியனார்கோவில், சென்னைக்கு அருகில் ஞாயிறு தலம் ஆகியவை சூரியனின் சாந்நித்தியம் நிறைந்த ஆலயங்களாகத் திகழ்கின்றன.

இந்த வரிசையில், ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் எனும் ஊரிலும் ஒரு கோயில் உண்டு. இங்கே அருள்பாலிக்கும் மூர்த்தியை சூரிய நாராயணராகச் சிறப்பித்து வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள் (சூரியதேவனை சைவர்கள் சிவ சூரியனாகவும் வைணவர்கள் சூரியநாராயணராகவும் வழிபடுவர்).

ஒருமுறை, சிவதரிசனம் செய்ய விரும்பிய இந்திரன், தகாத வேளையில் திருக்கயிலைக்குள் நுழைய முற்பட்டான். அந்த தருணத்தில், பார்வதிதேவிக்கு தாந்த்ரீக யோகத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். ஆகவே, எவரையும் உள்ளே அனுமதிக்கவேண்டாம் என்று நந்திதேவருக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால், தன்னை எவரும் தடுக்க முடியாது என்று ஆணவத்துடன், நந்தியை விலக்கிவிட்டு உள்ளே புக முயற்சித்தான் இந்திரன். மறுகணம் அவனது மார்பில் எட்டி உதைத்தார் நந்திதேவர். அதனால், மயக்கமுற்ற இந்திரன் பூமியில் வந்து விழுந்தான். மயக்கம் தெளிந்து, சிறிது சிறிதாக சுயநினைவு திரும்பும் வேளையில் கனவு ஒன்று கண்டான்.

கனவில் தென்பட்ட ஓர் ஒளிக்கோளம் இந்திரனிடம், ‘சூரிய தேவனுக்கு ஆலயம் எழுப்பி வழிபட்டால், நந்திதேவரால் மார்பில் ஏற்பட்ட வலி நீங்கும்’ என்று அறிவுறுத்தியதுடன், பூமியில் அவன் விழுந்த இடத்தையே அகழ்ந்து பார்க்கும்படியும்  பணித்தது. முழுநினைவுக்கு மீண்டதும், தான் விழுந்துகிடந்த இடத்திலேயே வஜ்ராயுதம் கொண்டு வெட்டினான். அப்போது அவனுக்கு அழகானதொரு சூரியநாராயணர் விக்கிரகம் கிடைத்தது.

புண்ணிய பூமி

அதைப் பிரதிஷ்டை செய்ய தவ முனிவரான காஷ்யபரை அணுகினான் தேவேந்திரன். அவரும் அவனி மக்களின் நலம் கருதி சூரியநாராயணரைப் பிரதிஷ்டை செய்தார் என விவரிக்கிறது தலபுராணம்.
கி.பி. 7-ம் நூற்றாண்டில் கலிங்க தேசத்தை ஆண்ட தேவேந்திர வர்மன், சூரிய நாராயணர் விக்கிரகம் இருந்த இடத்தைக் கருவறையாகக் கொண்டு ஓர் ஆலயம் எழுப்பினான். கலிங்கத்தின் கட்டட பாணியிலான கோபுரம் கொண்ட இந்தக் கோயிலில் ஐந்து வாசல்களைக் கடந்தால்தான் கருவறையை அடையமுடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்ச் 9, 10, 11, 12 மற்றும் அக்டோபர் 1, 2, 3, 4 ஆகிய தேதிகளில், அதிகாலையில், ஆலயத்துள் இருக்கும் ஐந்து வாசல்களையும் கடந்து கதிரவக் கதிர்கள் மூலவரின் திருவடிகளில் விழுந்து பாத பூஜை செய்கின்றன.

ஆலயத்தில் நுழைந்ததும் கொடிமரம். வணங்கிக் கடந்தால் கருடர் சந்நிதி. நேர் எதிரே உள்ள வாசல்களைக் கடந்து சென்றால், கருவறையில் சூரியநாராயண சுவாமி.
அருணஷிலா என்றழைக்கப் படும் கரும் சாளக்கிராமக் கல்லில் சுவாமி உருவம் வடிக்கப்பட்டுள்ளது. மூலவர் விக்கிரகத்தின் கீழ்ப்பாகத்தில் மாடரன் மற்றும் பிங்களன் ஆகிய
துவாரபாலகர்கள் காட்சி தருகிறார்கள். அருகிலேயே சனக முனிவரும், சனாதன முனிவரும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

சஞ்சனா, சாயா மற்றும் பத்மினி ஆகிய தேவியர் சகிதம் இரு கரங்களிலும் கமலமலர்கள் ஏந்திக் கண்கொள்ளாக் காட்சி தருகிறார் சூரியநாராயணர்.  சுவாமி ஏழு குதிரைகள் பூட்டப் பட்ட ரதத்தில் ஆரோகணித்திருக்க, சாரதி அருணன் ரதத்தைச் செலுத்துகிறான். ஆரோக்கியத்துக்காக இந்திரன் பிரதிஷ்டை செய்த இந்த சூரியநாராயணரை சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு வழிபட்டால், உடல் ஆரோக்கியத்துடன் விளங்கும்.

ஆலயத்தில் சூரிய நமஸ்காரம் பண்ணும் பக்தர்கள் ரிக், மற்றும் யஜுர் வேதத்தின் பீஜாக்ஷரங்களைக் கொண்ட அருண மந்திரத்தையும், மஹா சௌர மந்திரத்தையும் உச்சரிக்கிறார்கள். இந்த மந்திரங்களை உச்சரிப்பவர்கள் குறைவற்ற செல்வமும், நிறைவான ஆரோக்கியத்தையும் அடைகிறார்கள்.

இட வலமாகப் பிராகார வலம் வருகையில் முதலில் துர்காலக்ஷ்மி சந்நிதி. வெளிப்பிராகாரத்தில், கருவறைக்குப் பின்னால் ஆஞ்சநேய சுவாமி தனியொரு சந்நிதியில் எழுந்தருளியிருக்கிறார்.
கருவறைக்கு வெளியே இடது புறத்தில் தேவேந்திரனுக்கும் ஒரு சந்நிதி அமைந்துள்ளது.  வெகு பழைமையான சூரிய நாராயணர் ஆலயம், தோஷ நிவர்த்திக்காக ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடும் புகழ் பெற்ற தலம் ஆகும்.

புண்ணிய பூமி

ஆலய மகிமையை அறிந்தோம். இனி, சுகவாழ்வு நல்கும் இந்த நவகிரக நாயகனை பூஜிப்பது எவ்வாறு என அறிவோமா?

நவகிரகங்களின் நாயகரான சூரிய பகவான் மூவகை நாடிகளில் பிங்கலையாகவும், மூவகை குணங்களில் சாத்விக குணமாகவும் இருப்பவர். சிவனின் முக்கண்களில் வலக் கண்ணாக இருப்பவர். புகழ், மங்கலம், உடல் நலம், ஆட்சித் திறம், செல்வாக்கு முதலியவற்றை அருளுபவர்.

சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அபிஷேகம் செய்தல், ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருத்தல், சூரிய நமஸ்காரம் செய்து வருதல், சிவப்பு வஸ்திரம், சிவப்பு மணி மற்றும் செந்தாமரை மலரால் அலங்காரம் செய்தல், கோதுமை தானியத்தை தானம் செய்தல், சூரிய மந்திரங்களை ஓதி வெள்ளெருக்குச் சமித்தினால் யாகம் செய்தல், கோதுமை சர்க்கரைப் பொங்கலை நிவேதனம் செய்தல், அர்ச்சனை மற்றும் தூப தீபம் காட்டி தீபாராதனை செய்தல் ஆகியவற்றால் சூரிய கிரக தோஷம் நீங்கும். 

பக்தர்கள் தங்களால் இயன்ற பரிகாரங்களைச் செய்து பிரார்த்தித்தாலே, சூரிய பகவான் சுட்டெரிக்கும் தணலாய் காயாமல், சாந்தப் படுத்தும் தண்ணொளியாய் சாமரம் வீசுவார்.  
ஸ்ரீகாகுளம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சூரிய நாராயணருக்கு இன்னொரு தனிச்சிறப்பும் உள்ளது. இவரை வணங்கினால், அல்லல் கொடுக்கும் கண் நோய், மற்றும் சரும நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது.

புண்ணிய பூமி

அனைத்து மத மக்களும், ஆதவ வழிபாட்டுக்கு உகந்த நாளான ஞாயிறு அன்று இந்தத் திருத்தலத்துக்கு வந்து, ஸ்ரீசூரிய நாராயணரை மனமுருகி வழிபட்டுச் செல் கிறார்கள்.
வைகாசி, கார்த்திகை, மாசி மாதங்களிலும் அதிக அளவில் மக்கள் வருகிறார்கள். பயிர் பச்சைகளைத் தழைக்கச் செய்து இவ்வுலகு பிழைக்க வழி செய்யும் பகலவனுக்குப் பல்லாண்டு பாட தைப்பொங்கல் நாளன்றும் மக்கள் அணி திரண்டு ஆலயத்துக்கு வருகிறார்கள். 

அனைத்து கிரகங்களின் அரசனான ஆதவனின் ஆலயம் ஸ்ரீகாகுளத்திலேயே அமைந்திருந்தாலும், இது அரசவல்லி ஆலயம் என்றே அறியப்படுகிறது. ஹர்ஷவல்லி என்பதே அரசவல்லியாகத் திரிந்திருக்கிறது. ஹர்ஷவல்லி என்றால் ஆனந்தத்தின் இருப்பிடம் என்று பொருள்.

ஆனந்தத்தின் இருப்பிடமாக விளங்கும் ஆதவனை அடி பணிந்து வணங்குவோம், வாரீர்!

படங்கள்: பொன்.காசிராஜன்

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்:    ஸ்ரீகாகுளம்

சுவாமியின் திருநாமம்:  சூரியநாராயணர்

எங்கே உள்ளது? ஆந்திராவில், காக்கிநாடாவில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில்.

எப்படிப் போவது?  சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் ரயிலில் சென்றால் ஸ்ரீகாகுளத்திலேயே இறங்கலாம்.

எங்கே தங்குவது?  ஸ்ரீகாகுளத்தில் தங்கும் விடுதிகளும்,  உணவு விடுதிகளும் நிறைய உள்ளன.
   
தரிசன நேரம்:  காலை 6.00 மணி முதல் பகல் 12.30 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 வரை.