Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ

Published:Updated:
அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
அருட்களஞ்சியம்

வானொலியில் ஜகத்குருவின் ஆசியுரை!

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகள், வானொலியில் தேசத்துக்கு அருளிய ஆசிச் செய்தி:

ஸ்ரீகாமகோடித் தாயை, உலகத்துக்கெல்லாம் ஒரே தாயை, ஸ்ரீகாமாட்சி அன்னையை முற்காலத்தில் ஒரு ஊமை ஐந்நூறு கவிகளால் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். அதில் அவர் ஸ்தோத்திரம் செய்யும்போது, ஸ்ரீகாமகோடி அம்பிகையை `ஸமர விஜயகோடி' என்று ஆரம்பிக்கிறார்.

ஸமரம் என்றால் யுத்தம். யுத்தத்தில் வெற்றி கோடி. விஜய கோடி என்பது அம்பிகையே.

அம்பிகையினுடைய சரணாரவிந்தங்களில் நமது ஹ்ருதயம் எப்பொழுதும் லயித்து இருப்பதனால், நமக்கு எப்பொழுதும் வெற்றி நிச்சயம். அம்பிகையினுடைய கருணையே நமக்கு வெற்றி.
நான்மறைகளில் ஸாம வேதத்தில் ஓர் உபநிஷத் இருக்கிறது. அதற்கு கேனோபநிஷத் என்று பெயர். அந்த உபநிஷத்தில் ஒரு கதை வருகிறது. இமயவர் புத்ரி பார்வதி. உமா என்பது அவள் பெயர். அந்த உமாதேவி தேவர்களுக்கு புத்தி புகட்டுகிறாள்.

தேவர்கள், அசுரர்களை வென்றார்கள். அப்பொழுது அவர்களுக்கு அகம்பாவம் உண்டாயிற்று. `நாம் ஜெயித்தோம். நம்முடைய சக்தியினால் ஜெயித்தோம்' என்று எண்ணினார்கள். கொண்டாட்டம் கொண்டாடினார்கள்.

அருட்களஞ்சியம்

அப்பொழுது அம்பாள் ஆவிர்பவித்து அவர்களுடைய அஹங்காரத்தை நீக்கி, அவர்களுக்கு அடக்க புத்தியை உபதேசித்து ஆத்மஞானிகளாகச் செய்து அனுகிரஹித்தாள். அதுபோல நமக்கும் அஹங்காரம் என்பது என்றும் வேண்டாம்.

சத்ருக்களினிடத்திலும் எப்போதும் மித்ர பாவம் இருக்கவேண்டும். அதுவே காமாக்ஷி கடாட்சத்துக்கு முக்கியமான சின்னம். சத்ருக்கள் தப்பு வழியில் சென்றால், அவர்களை தண்டிக்கவேண்டியது அவசியம்.
ஒரு அரசனோ, ஒரு நீதிபதியோ, தனது மித்திரனோ அல்லது புத்திரனோ தப்பு வழியில் சென்றால் அவனை எப்படித் தண்டிக்கிறானோ, அதுபோலவே அவர்களையும் தண்டிக்கவேண்டியது. ஆனாலும், அவர்களிடத்தில் த்வேஷம் இருக்கக்கூடாது. த்வேஷம், பகைமை நமக்கு இருக்கக்கூடாது. எல்லோரிடத்திலும் நமக்கு அன்பே இருக்க வேண்டும்.

** 23.12.62 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராமாயணம் ஆரம்பமாகிவிட்டது!

சுமந்திரன் ராமனைக் கைதொழுது, ‘‘ஐயனே! சக்ரவர்த்தி அழைத்து வரும்படி நியமித்தார்; ஒரு காரியம் உண்டு” என்று அந்தக் கட்டளையைத் தெரிவித்ததும், ராமன் பொசுக்கென எழுந்து சுமந்திரன் தேரில் ஏறிச் சென்றான். அந்த நிகழ்ச்சியை இதிகாசப் போக்குக்கு இசையக் கம்பன் பின்வருமாறு சித்திரிக்கிறான்:

  முறையின் மொய்ம்முகில் எனமுர(சு) ஆர்த்திட, மடவார்
 இறைக முன்றசங்(கு) ஆர்த்திட, இமையவர் எங்கள்
குறைமு டிந்ததென்(று) ஆர்த்திடக், குஞ்சியைச் சூழ்ந்த
நறைஅ லங்கல்வண்(ஒ) ஆர்த்திடத், தேர்மிசை நடந்தான்.


ராமன் தேரில் போகும்போது, அந்த வருகை யைக் குறிக்க முரசுகளை ஆங்காங்கே முறையாக முழங்குகிறார்கள். அவனது அழகில் ஈடுபட்ட பெண்கள், வளை கழன்று விழுவதும் தெரியாமல்
அவ்வளவு மெய்ம்மறதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

அருட்களஞ்சியம்

வான வீதியில் தேவர்களோ ‘எங்கள் குறை முடிந்தது, ராவணன் ஆயுளும் முடிந்தது; ஆம், ராமாயணம் ஆரம்பமாகிவிட்டது!’ என்ற தூரதிருஷ்டியோடு சந்தோஷ ஆரவாரம் செய் கிறார்களாம். ராமன் முடியில் சூடியிருந்த மாலையைச் சுற்றி வண்டுகளும் ரீங்கார பாஷையில் ஏதோ முழக்குகின்றனவாம்.

காதலும் கடமையும்

ராமன் குருவாகிய வசிஷ்டரை முதலில் வணங்கித் தந்தையின் பாதங்களில் பணிகிறான், பணிந்த அளவில், சக்ரவர்த்தியின் மன நிலையையும் செய்கையையும் இதோ பாருங்கள்:

     காதல் பொங்கிடக் கண்பனி உகுத்திடக் கனிவாய்ச்
     சீதை கொண்கனைத் திருவுறை மார்பகம்சேர்த்தான்


இங்கும் ராமனைச் சீதாராமன் என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. தன் மார்பகத்திலுள்ள திருவை (ராஜ்யஸ்ரீயை) மைந்தன் மார்பகத்திலே சேர்த்துவிடுவது போலத் தழுவிக்கொண்டு, தந்தை அந்தக் கனி போன்ற வாயைப் பார்த்தான், ஆனந்தக் கண்ணீர் திரையிட்ட கண்களால்.

தந்தை மைந்தனைத் தழுவிக்கொண்ட அந்த நிகழ்ச்சிதான், இன்னும் எவ்வளவு ரஸமாகவும் பொருத்தமாகவும் கற்பனைத் திறனுடனும் வர்ணிக்கப் பெறுகிறது:

நலங்கொள் மைந்தனைத் தழுவினன்
    என்பதென்? நளிநீர்
நிலங்கள் தாங்குறும் நிலையினை
    நிலையிட நினைந்தான்:
விலங்கல் அன்னதிண் தோளையும்
    மெய்த்திரு இருக்கும்
அலங்கல் மார்பையும் தனதுதோள்
    மார்புகொண்(டு) அளந்தான்.


“இந்த ராஜ்ய பாரத்தைத் தாங்குவானா? இளைஞனாயிருக்கிறானே” என்று சோதித்துப் பார்ப்பது போலத் தழுவிக் கொண்டானாம். இந்த இளைஞனது தோளின் திண்மையையும் மார்பின் பரப்பையும் தன் தோள் மார்புகளால் அளந்து பார்த்துச் சோதிப்பதற்காகவே, ராமனைத் தசரதன் தழுவிக்கொண்டான் போலும் - என்கிறான் கவி.

அருட்களஞ்சியம்

‘நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்!’

ராம பட்டாபிஷேகம் நடைபெறும் என்று பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்புப் பத்திரிகை அனுப்பினான் தசரதன். அது முத்திரையிட்ட கடிதம் என்று தெரிவிக்கிறான் கவிஞன். அது கருட முத்திரை என்பது கம்பன் கற்பனை.

செய்தி கேட்டார்களோ இல்லையோ, ஒரே குதூகல வெறிதான் அந்தச் சிற்றரசர்களுக்கு எல்லாம். இவர்கள், ‘ராஜ்யம் ராமனுக்குக் கிடைக்கப் போகிறது’ என்றுகூட ஆனந்திக்க வில்லையாம்; ‘தங்களுக்கே சக்ரவர்த்தி ஸ்தானம் கிடைத்துவிட்டது’ என்றே மகிழ்ந்து போகிறார்களாம்.

இந்த நிலையில் சக்ரவர்த்தி பெருமகிழ்ச்சி அடைந்தும், அதை உள்ளுக்குள்ளே அடக்கிக் கொண்டு, அவர்களுடைய உள்ளத்தை இன்னும் உள்ளபடி சோதித்து உணர வேண்டும் என்று தந்திரமாக ஒரு கேள்வி போடுகிறான்.

‘‘அரசர்களே! நான் புதல்வனிடமுள்ள அன்பி னால் மயங்கி, நாடாளும் வல்லமை உடையவன் அவன் என்று எண்ணியிருக்கிறேன். இக்கருத்து தக்கதோ என்று எனக்குத் தெரியாது. நீங்கள் நடுநிலையாக மனமுவந்து ஒரே மனமாக என் அபிப்பிராயத்தை ஒப்புக்கொள்கிறீர்களா? அன்றி முகஸ்துதியாகச் சொன்ன சொல்தானா? எதனால் நீங்கள் ராமன் அரசாளத் தகுந்தவன் என்கிறீர்கள்?” என்று வினாவுகிறான் தசரதன்.

மேகம் பருவமழை பொழிவதையும், வயல்களுக்கு நீர் பாய்ச்சும் நதி ஜீவநதியாகப் பெருகிக் கொண்டிருப்பதையும் வேண்டாம் என்று தடுக்கிறவர்கள்தாம் உண்டா? அப்படியே, ராம பட்டாபிஷேகமும் இயற்கை அன்னையின் வரப்பிரசாதம் போன்றது. ஆகவே, இதை மறுக்கும் உள்ளமும் இருக்க முடியுமா? இவ்விதமாய்ப் பேசுகிறார்கள் சிற்றரசர்கள். இதை மறுக்கும் கோணல் உள்ளமும் (அதாவது கூனியுள்ளமும்) சக்ரவர்த்திக்குப் பக்கத்திலேயே உண்டு என்பதை இவர்கள் எப்படி அறிவார்கள்?

அருட்களஞ்சியம்

அரசர்களின் சொல்லைக் கேட்ட சக்ரவர்த் தியின் மகிழ்ச்சியைத்தான் என்னென்பது? “என் மகன் என்றுதான் ராமனைச் சொல்வானேன்? இவன் உங்களுடைய புதல்வன்; அடைக்கலமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்கிறான்.

‘நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்ற ஆனந்தம் தாண்டவமாடும் பிரதேசத்திலே, சக்ரவர்த்தியும் சிற்றரசர்களும் இப்படியெல் லாம் நடந்துகொள்வதில்தான் என்ன அதிசயம் இருக்க முடியும்?

ஒரு கொண்டாட்டம்

தசரதனும் மந்திரிகளும் செய்த மந்திராலோ சனை இனிது நிறைவேறியது. ‘ஏதாவது இடையூறு எப்படியோ நேர்ந்துவிடலாகாதே!’ என்பதற்காகப் பட்டாபிஷேகச் செய்தி ரகசியமாயிருக்க வேண்டும் என்பது சக்ரவர்த்தி யின் விருப்பம்; சக்ரவர்த்தியின் குறிப்பான ஆணை.

எனினும், அதற்குச் சிறகு முளைத்துவிடுகிறது. ‘எப்படி?’ என்ற ஆராய்ச்சி தேவையில்லை. ஒரு மதிமந்திரி தன் காதலி காதில் மாத்திரம் ஓதியிருக் கலாம். ‘ஊதிவிடாதே, பரம ரகஸ்யம். ஹிருதயத்தில் பூட்டி வைத்துக்கொள்’ என்று மன்றாடியும் இருக்கலாம். அது போதுமல்லவா ரகஸ்யம் பறந்து போவதற்கு? தனக்கு மட்டும் நாயகன் சொன்னதை, அந்த அம்மாள் தோழிக்கு மட்டும் சொல்லாமல் இருக்க முடியுமா? சொல்லாவிட்டால் ஹிருதயம் வெடித்துப்போகுமே!

மந்திராலோசனையின் முடிவை அறிந்து கொண்டவர்கள் பெண்கள் என்றால், அந்த ரகஸ்யம் எப்படிச் சிறகடித்து பறக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? தங்கள் பேரன்புக்குரிய ஒருத்தியோடு அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இவர்களைச் சும்மா இருக்கவிடுமா? சரி, யார் இவர்கள்? அந்தப் பேரன்புக்குரிய அவள் யார்?

கண்ட மாதரைக் காதலின் நோக்கினாள்,
கொண்டல் வண்ணனை நல்கிய கோசலை;
‘உண்டு பேர் உவகைப்பொருள், அன்னது,
தொண்டை வாயினிர்! சொல்லுமின் ஈண்(டு)' என்றாள்.


முதலில் கண்டாளாம் அம்மாதரை; பிறகு நோக்கினாளாம். (இந்த இரண்டு வார்த்தைகளுக் கும் உள்ள நுட்பமான பொருள் - வேற்றுமை கவனிக்கத்தக்கது.)
கொண்டல் வண்ணனை நல்கிய கோசலை

அருட்களஞ்சியம்

என்ற தொடர்தான் எவ்வளவு வசீகரமாய் அமைந்திருக்கிறது! கொண்டல் வண்ணனையும் கோசலையையும் இவ்வளவு வசீகரமாக இசைத்து நிற்கும் ‘நல்கிய’ என்ற தமிழ்ச் சொல்லின் ஆற்றலைத்தான் பாருங்கள். ‘உலகத்திற்கென்றே பெற்றுக் கொடுத்த’ என்ற பொருளை எவ்வளவு நுட்பமாக வெளியிடுகிறது!

சேடியர்கள் பக்கத்தில் வந்ததும் கௌசலை, ‘‘உங்களிடம் ஏதோ ஒரு பெரிய சரக்கு, சந்தோஷச் சரக்கு இருக்கிறது - எனக்குத் தெரியும். உடனே காட்டிவிடுங்கள்’’ என்று தோழமை உணர்ச்சி தோன்றக் கொஞ்சிக் கேட்கிறாள்.

கௌசலை புதல்வன் தன் பெருவீரத்துக்கு அறிகுறியாகப் பெரிய வீரக்கழல் அணிந்து சிங்காசனத்தில் புருஷ ஸிம்மமாக வீற்றிருப்பதும், அந்தப் புதிய சக்ரவர்த்தியின் அடிகளில் முடி பொருந்தும்படி மன்னர் களெல்லாம் ஒருவர் பின் ஒருவராக வந்து விழுவதும், பிறரும் அப்படியே அடி விழுந்து வணங்குவதும், அப்பெண்களின் மனக்கண் முன் சித்திரக் காட்சிகளாகத் தோன்றுகின்றன.

கௌசலையை நோக்கி இச்செய்தி சொல்லும் தோழிகள்,

‘உன் புதல்வனுக்கு’ என்று சொல்லாமல் ‘உன் மூத்த புதல்வனுக்கு’ என்று சொல்கிறார் கள். ராமன் கௌசலையின் ஏக புத்திரன். சரி, அவளோ ‘ராமன் வேறு, அவன் தம்பியர் வேறு’
என்று பாராமல் அவர்களையும் தன் புதல்வர்கள் போலவே கருதி அன்பு செய்கிறாள். எனவே ‘எந்தப் புதல்வனுக்கு?’ என்று சந்தேகம் உண்டாகக் கூடுமல்லவா?
மேலும், முடி சூட்டப் போவதை ‘முடி சூட்டுகின்றான்’ என்று நிகழ்காலத்திலே தெரிவிக்கிறார்கள். பட்டாபிஷேக நிகழ்ச்சி அவ்வளவு தெளிவாக, அவ்வளவு பிரத்தியக்ஷமாக அவர்கள் மனக் கண்முன் நிகழ்கிறது.

** 17.2.46, 24.2.46, 3.3.46 மற்றும் 10.3.46

தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழ்களிலிருந்து...