Published:Updated:

கேள்வி பதில்

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

கடமையைச் செய்யாமல் கடவுள் அருள் கிடைக்குமா?

கேள்வி பதில்

கடமையைச் செய்யாமல் கடவுள் அருள் கிடைக்குமா?

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

? மகா சிவராத்திரியை ஒட்டி இரவு வழிபாட்டுக்குச் செல்லலாம் என்று நண்பனை அழைத்தேன். அவனோ, பக்தி எல்லாம் மனதில் இருந்தால் போதும். ராத்திரி விழித்து இருந்தால்தான் அருள் கிடைக்கும் என்பதெல்லாம் கிடையாது. ஆத்மார்த்தமா ஒரு தடவை அவர் நாமத்தைச் சொல்லி வழிபட்டாலே அருள் கிடைக்கும். மற்றதெல்லாம் வீண் என்கிறான். மனிதனுக்கென்று சில அறங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதைச் செய்யாமல் கடவுள் அருள் கிடைக்குமா?

- சொ.இசக்கியப்பன், செகந்திராபாத்


முதல் கோணம்

பொறுப்பு இல்லாத சுதந்திரமாக வாழ விருப்பம். சுதந்திரத்தைப் பறிக்கும் சட்டதிட்டத்தை ஏற்கமாட்டோம். பொறுப்பின் சுமையை சுமக்கமாட்டோம். உடல் சுகாதாரமும், உள்ளத் தெளிவும் வேண்டும். ஆனால், அவற்றை ஏற்க எந்தவொரு முயற்சியும் எடுக்கமாட்டோம். வெளியே இருக்கும் ஒரு சக்தியோ, கடவுளோ அல்லது மகானோ, நம் வேண்டுகோளை எதிர்பார்க்காமல் தன்னிச்சையாக முன்வந்து நமக்கு உடல் சுகாதாரத்தையும் உள்ளத் தெளிவையும் தந்து உதவவேண்டும் என்று நினைப்போம்.

? நீங்கள் சொல்லும் அளவுக்கெல்லாம் தற்போது வழிபாடு மலிந்துவிடவில்லை. மிகைப்படுத்துகிறீர்களோ எனத் தோன்றுகிறது.


எதையும் மிகைப்படுத்தவில்லை. யதார்த்த நிலையையே விளக்குகிறோம். படுக்கை அறையில் படுத்துக்கொண்டே சின்னத் திரையில் கடவுள் தீபாராதனையைப் பார்க்க இயலும். அது நிஜமல்ல நிழல்தான் என்றாலும், நமது விருப்பத்தை அந்த தரிசனம் பூர்த்தி செய்யவேண்டும். அப்படியே, மகான்களின் அன்றாட அலுவல்களைப் பார்த்துக்கொண்டிருப்போம், அவர் பூஜிப்பதையும் பார்ப்போம். நிழல் வடிவிலான அந்த தரிசனமும் நமக்குத் தன்னிச்சையாக அருள்செய்ய வேண்டும். கடவுளும் மகான்களும் தங்கள் பெருமையைத் தக்கவைத்துக்கொள்ள, நமக்கு அருள்வது கடமையாகும்.

கேள்வி பதில்

‘நான் அனாதை. ஆபத்தில் சிக்கியவன். என்னைக் காப்பாற்றுவது அவனது அடையாளம்.’ தவறினால், அவன் ரக்ஷகன், ஆபத்பாந்தவன் என்கிற பெருமை மறைந்துவிடும். பஜனையைப் பார்ப்போம், சங்கீதத்தை ரசிப்போம். எனவே, பஜனையை நேரில் தரிசித்த பெருமை நம்மை அடையவேண்டும் என விரும்புவோம்.

அன்றாட அலுவல்களை நிறை வேற்ற நேரம் போதாத நிலையில் பூஜையிலோ, பஜனையிலோ ஈடுபட இயலாது. வாய், பகவான் நாமாவை உச்சரிக்கும். ஆனால், மனதுக்கும் அதற்கும் தொடர்பு இருக்காது. அன்றாட அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில், நாமாவை உச்சரிப்பதில் கவனம் செலுத்த முற்பட்டால் மனம் அதில் இணைய மறுக்கும். அஷ்டோத்ரம், ஸஹஸ்ரநாமம் போன்றவற்றை ஒலி நாடாவில் ஒலிக்கச் செய்து, அதைக் காதால் கேட்டுக்கொண்டு அன்றாட அலுவல்களில் ஈடுபட இயலும். அப்போது, மனம் அலுவலைக் கவனிக்கும். காது நாம ஒலியைக் கேட்டுக்கொண்டிருக்கும். அலுவலுடன் இணைந்தபடி நாம ஒலியைக் கேட்டுக்கொண்டிருப்போம். மகான்களின் பெருமைகளை அடிக்கடி சொற்பொழிவில் கேட்டுக்கொண்டிருப்போம். முடியாத நிலையில், இரவில் நேரம் கிடைக்கும்போதோ அல்லது கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போதோ மகான்களின் உபதேசத்தை ஒலிநாடாவில் கேட்போம். மனம் ஓட்டுதலில் ஒட்டிக் கொண்டிருக்கும்; காது உபதேசத்தை செவிமடுத்துக் கொண்டிருக்கும். அது போன்று காருக்குள் நமக்கு எதிரிலேயே மகான்களின் படம் இருக்கும். அதையும் தரிசித்துக் கொண்டே காரை ஓட்டுவோம். மகான்களின் பாதங்களை ஸ்டிக்கர் வடிவில் ஒட்டி மகிழ்வோம்.மகான்களின் மார்பளவு திருவுருவை மோதிரத்தில் பதித்தும் அணிந்து மகிழ்வோம். தோரணத்திலும் அவர்களின் உருவப்படம் இருக்கும். சிலை அமைத்தும் கொண்டாடுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி, மகான்களிடம் பக்தி வளர்ந்திருப்பதை அவர்களின் காதுக்கும் எட்டவைப்போம். அதனால், அவர்களிடம் இருந்து விருதும் கிடைக்கும். ஆக, அவர்களின் உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் எண்ணம் நம்மில் இருக்காது.

? உபதேசத்தை மனதார ஏற்றுக்கொள்வதால் தானே அவர்கள் மீது பக்தி ஏற்படுகிறது. எனில், மகான்களின் உபதேசத்தை கடைப்பிடிப்பது இல்லை என்று எப்படி கூற முடியும்?

உபதேசம் மனதில் பதிந்திருந்தால் உண்மையை உணர்ந்து கொண்டிருப்பீர்கள். ஆனால், நிலைமை அப்படியில்லையே!

மகான்களின் உபதேசங்களை அச்சிட்டு வெளியிடுவோம், பிரசாரம் செய்வோம். இவற்றுக்கெல்லாம் பலன் வேண்டும் என்றும் எதிர்பார்ப்போம். மகான்களின் அருள் முழுமையாகக் கிடைக்கவேண்டும். விலையில்லாப் பொருளைப் போல், விலையில்லா அருள் கிடைக்கவேண்டும்! மகான்களின் பக்தர்கள் குழாமை ஒன்றுசேர்த்து, அவரது பெருமையை சொற்பொழிவு மூலம் மக்களுக்கு எடுத்துரைக்கவும் செய்வோம். இப்படியான மகான்களுக்குச் செய்யும் பணிவிடைகளே நமக்கு சுகாதாரத்தையும், மகிழ்ச்சியையும், உள்ளத் தெளிவையும் அளித்து, மறுபிறப்பில்லா ஆனந்த நிலையை அளிக்கவேண்டும் என்று விரும்புவோம். இத்தனை விஷயங்களிலும் நமது பங்கு என்ன என்று ஆராயமாட்டோம்.

கேள்வி பதில்

ஆன்ம சோதனை செய்துகொள்ளாமல் எல்லா விருப்பங்களும் நிறைவேற வேண்டும் என்று எண்ணுவோம். ‘மகான்கள் இப்படித் தான் நடக்கவேண்டும்’ என்று சட்டதிட்டம் போடுவோம். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று ஆராயமாட்டோம். நம்மை அவர்களது அருளுக்குப் பாத்திரமாகும்படியாக மாற்றிக் கொள்ள மாட்டோம். நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. சுதந்திரமும் உண்டு. நமது பங்கை அளிக்காமல் மகானின் பங்கை இனாமாகப் பெறுவோம். அதுதான் நம்மால் இயலும். அதுமட்டுமா? ‘மஹான்கள் நம்மை உயர்த்து வதற்காகப் பிறந்தவர்கள். அது அவர்களது கடமை’ என்று விளக்கமும் அளிப்போம்.

? பக்தி செய்வதில் நமது பங்கு என்று என்ன இருக்கிறது?

கணவன் - மனைவி இருவரது பங்கில் குழந்தை உருவாகிறது. ரஸம், ரத்தம், மாமிசம், வசை ஆகியன மனைவியின் பங்கு.  எலும்பு, மஜ்ஜை, சுக்கிரம் ஆகியன கணவனின் பங்கு. ஆண் - பெண் இருவரது பங்களிப்பில் காதல் உருவாகும். இருவரது பங்கில் தாம்பத்தியமும் நிறைவு பெறும். வில்-அம்பு இரண்டின் இணைப்பில் பாணம் வெளியேறும். இரண்டு இறக்கைகளால் பறவைகள் பறக்கும். இரண்டு சக்கரங்களால் தேர் நகரும். காலும் பந்தும் இணைந்தால்தான் கால்பந்து விளையாட்டு.

கரும்பில் இருக்கும் சாறு தானாக வெளிவராது. நமது முயற்சியும் இணைந்தால் மட்டுமே வெளிவரும். எள்ளை யந்திரத்தின் இணைப்பில் சேர்த்தால்தான் எண்ணெய் கிடைக்கும். அட்வைஸர், எக்ஸ்க்யூடிவ், மார்க்கெட்டிங், லேபர் ஆகிய நான்குதரப்பும் இணைந்தால்தான் வியாபாரம் நிறைவை எட்டும். இரு கைகளும் இணைந்தால் மட்டுமே சத்தம் வரும். இப்படி யிருக்க, நமது பங்கை அளிக்காமல் கடவுள் பங்கையும் மகான்கள் பங்கையும் எதிர்பார்ப்பது தவறு.

முதலில், அவர்களது அருளைப் பெறுவதற்கான நமது தகுதியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் அருள் நமது முயற்சியால்தான் வெளிவரும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். பொறுப்பு இல்லாத சுதந்திரத்தை விரும்புபவ னுக்கு, அவர்கள் அருள்பாலித்தாலும் அது அவனிடம் சேராது. அவனது பங்கு (செயல்பாடு) இல்லாத வரையிலும், மகான்களின் திருவருள் பயன்பெறாது. எல்லா அலுவல்களில் இருந்து விடு பட்டு அவர்களில் ஈடுபாட்டுடன் மனம் ஒன்றி தியானத்தில் இணைந்தால் மட்டுமே, அவர்களின் அருளைப் பெறுவதற்கான தகுதி பிறக்கும்.

இரண்டாவது கோணம்

பக்தர்களை ஏளனமாகப் பார்க்கும் தங்களது கோணம் அறியாமையின் வெளிப்பாடு. ‘என் காதுகள் அச்சுதனின் கதைகளைக் கேட்க வேண்டும். என் நாக்கு கேசவனை உச்சரிக்க வேண்டும். என் மனம் ஸ்ரீதரனை பூஜிக்கவேண்டும். எனது கரங்கள் அவனை அர்ச்சிக்கவேண்டும். கண்கள் அவனைப் பார்க்க வேண்டும். கால்கள் அவனது ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். மூக்கு அவனது பாதத்தில் பட்ட துளஸியை முகர்ந்து பார்க்க வேண்டும். தலை அவனை வணங்க வேண்டும்’ என்று குலசேகரப் பெருமாள் விளக்கியிருக்கிறார்.

கேள்வி பதில்

? அதற்காக, சின்னத் திரையில் கடவுள் தீபாராதனையைப் பார்ப்பதும், மகான்களின் திருவுருவத்தை ஸ்டிக்கரில் ஒட்டிப் பார்ப்பதும், ஒலி நாடாவில் மகான்களின் சொற்பொழிவைக் கேட்பதும் பக்தி ஆகிவிடுமா?

ஏன் பக்தி ஆகாது?! கடவுளும் மகான்களும் நம்மிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அத்தனைப் பொருள்களும் கடவுள் படைத்தவை. நமக்குரியது என்று எந்தப் பொருளும் இல்லை. ஆகவேதான், கடவுள் தான் படைத்த பொருள்களை தனக்கு அளித்தால் போதும் என்றார். இலைகள் (வில்வம், துளசி), புஷ்பம் (தாமரை, மல்லி), பலம் (பழம்), தோயம் (நீர்) ஆகியவை இறைவனின் படைப்பு. அவற்றை அளித்தால் போதும். நமது பங்கு என்று சொல்வதற்கு எதுவும் இல்லை என்பது கடவுளுக்குத் தெரியும்.

நமது அறியாமையை அகற்றுவதற்கு மகான்கள் எந்தக் கூலியும் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் அவர்கள் பங்கு மட்டும்தான் பெறத் தகுந்தது. ஸ்ரீகிருஷ்ண சைதன்ய ப்ரபு தெருவில் இறங்கி நாம சங்கீர்த்தனம் செய்தார். கடவுள் அருள் கிடைத்தது.  ‘ஸ்ரீராம்’ என்று எழுத்தைத் தாங்கிய பாறாங்கல் நீரில் மிதந்தது. வாலி, ராம நாமாவைச் சொல்லி முக்தி அடைந்தான். நாராயண நாமத்தில்  பிரகலாதனும் த்ருவனும் பெருமை பெற்றார்கள். முளையில் (மூங்கிலில்) ஒட்டிக்கொண்டிருந்த துந்துகாரி, பகவான் நாமாவைக் கேட்டவுடன் முக்தியடைந்தான். வேடன் ரத்னாகரன் ராம நாமாவை உச்சரித்து வால்மீகியானார். எதிலும் மங்களம் அளிப்பது ராம நாமா. கலியுகத்தில் மனதில் படிந்த மாசை அகற்றுவது. அது, பாதகனையும் பரிசுத்தமாக்குவது ராம நாமம் (பதிதபாவன ஸீதாராம). பரிசுத்தமானதை நீடித்து இருக்கவைப்பது ராம நாமம். பரலோகம் செல்ல பயணம் மேற்கொண்டவனுக்கு பசியாற்றுவது ராம நாமம். கவி வார்த்தையின் எல்லை ராம நாமம். நல்லவர்களுக்கு வாழ்வு அளிப்பது ராம நாமம். அற விருட்சத்தின் விதை ராம நாமம் என்று நாமத்தின் பெருமையை விளக்கியிருக்கிறார் ஆஞ்சநேயர், தனது ஹனுமத் ராமாயணத்தில் (கல்யாணானாம் நிதானம் கலிமலமதனம்...).

அவாப்த ஸமஸ்தகாமன் அதாவது எல்லா பெருமையும் நிறைந்தவர் கடவுள். அவர், பக்தனிடம் கேட்டு வாங்க வேண்டியது ஒன்றும் இல்லை. மகான்களும் நம்மிடம் எதிர்பார்க்க ஒன்றும் இல்லை. அறியாமையை அகற்றும் வேலை அவருடையது. அதில் பக்தனின் பங்கு இணைய வேண்டியதில்லை. ஜீவன்முக்தரான... அதாவது உயிர் இருக்கும்போதே அறியாமை அகன்று அறிவொளி பெற்றவர், நம்மிடமிருந்து (பக்தனிடமிருந்து) எதையும் எதிர் பார்க்கத் தேவையில்லை. எதைத் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்தவராக மாறுகிறாரோ, அவருக்குத் தேவை ஒன்றும் இல்லாததால், நமது பங்கை அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் அருள் பெற பக்தனின் பங்கு தேவைப்படாது. ஆக, கடவுள் அருளும், மகான்களின் அருளும் எதையும் எதிர்பார்க்காமலே தன்னிறைவு பெற்றது. அதுவும் தவிர, அறியாமையை அகற்ற அவர்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களின் நினைவு, பக்தர்களின் அறியாமையை அகற்றி, அவர்களது விருப்பத்தை ஈடேற்றி விடும். பக்தனின் பங்கும், அவர்களின் பங்கும் சேர்ந்து உருப்பெறும் பொருள் அல்ல அவர்களது அருள்.

? எனில், நாம் எந்த முயற்சியுமே செய்யவேண்டாம் என்கிறீர்களா?

அறியாமையை அகற்றும் அருள் அலாதியானது. அது தாங்கள் சொல்வதுபோன்று இரண்டு பங்குகளின் இணைப்பால் உருப்பெறும் பொருள் அல்ல. கலிகாலத்தில் வாழ்வதே பெரும் பிரச்னை; அவிழ்க்க முடியாத முடிச்சு. அவர் அருள் விடுவிக்கும். ‘ஆதிமூலமே’ என்று அழைத்த யானைக்கு மனம் ஏது? மனம் தொடாத சொல் நாராயணனை ஈர்த்து வரவழைத்தது.

மரணப்படுக்கையில் சாய்ந்த அஜாமிளன் ‘நாராயணா’ என்று அலறினான். கடவுள் அருளினார். அவனது சொல்லுக்கு மனதின் தொடர்பு இருக்கவில்லை. சபரி மோட்சத்துக்காக எந்த முயற்சியும் செய்யவில்லை. ராமனைப் பார்த்தாள். முக்தியடைந்தாள். ஆதவன், தாமரைப் பூவை தன் விருப்பப்படி மலரவைக்கிறான். தாமரைப் பூ வேண்டுவதில்லை. மேய்ந்து திரும்பி வந்த பசு தனது கன்றுக்குட்டியைப் பார்த்ததும் தானாகவே மடி சுரந்து பால் அளிக்கிறது. கன்றுக்குட்டி ‘பால் வேண்டும்’ என்று கேட்கவில்லை. சூரியகாந்தக் கல் ஆதவனின் சேர்க்கையில் தானாகவே நெருப்பை உமிழ்ந்துவிடுகிறது. சந்திரனின் சேர்க்கையில் சந்திரகாந்தக் கல் குளிர்ச்சியான நீரை வெளியிடுகிறது.

இங்கெல்லாம் பெறுபவரின் பங்கு தேவைப்பட வில்லை. பக்தன் வாங்கிக்கொள்பவன். கடவுளும் மகான்களும் என்றும் கொடுப்பவர்கள். அவர்கள் தன்னை அடைபவனின் பங்கை எதிர்பார்க்க வில்லை. எதிர்பார்த்தால், அவர்கள் வியாபாரிகள் ஆகிவிடுவார்கள். அவர்கள் வியாபாரிகள் அல்ல. ஆனால், தங்களின் வியாபார நோக்கு, அவர்களை ஏளனம் செய்யத் தூண்டியது.

மூன்றாவது கோணம்

புராண விளக்கங்களை அளித்து உண்மையை மறைக்க முயற்சிக்கிறீர்கள். கஸ்தூரி வாசனையை கைகளால் மறைக்க இயலாது. எங்கும் பரவும் நறுமணத்தை மறைக்க இயலாது. த்ருவனும், பிரகலாதனும் பல வருடங்கள் காத்திருந்து பலனைப் பெற்றார்கள்.

த்ருவன் பல வருடம் தவத்தில் வாழ்ந்து தனது பங்கை நாராயணனிடம் செலுத்தினான். அதன் பிறகே கடவுள் கண் திறந்தார்; அருள் பாலித்தார். உடனடியாக அவனுக்கு மோட்சம் அளிக்கவில்லை. சிம்மாசனத்தில் அமரச் செய்து, ராஜ பரிபாலனம் செய்யச் செய்து, அவன் தனது  கடமையை ஆற்றிய பிறகே தன்னோடு இணைத்துக் கொண்டார். மனமுவந்து பல நாள் நாராயண நாமத்தில் முழ்கிய பிறகுதான், நேரில் தோன்றி அவனுக்கு அரசவையில் இடம் அளித்து, அவன் தனது வம்சத்தை தழைக்க வைத்தபிறகுதான் தன்னோடு இணைத்துக் கொண்டார். இருவரும் அவரவர் பங்கை அளித்துதான் அருள் பெற்றார்கள். தங்களை அருளுக்குப் பாத்திரமாக்கிய பிறகுதான் அதை அடைந்தார்கள்.

? எங்களுக்கும் புராணம் தெரியும். திரெளபதி கூப்பிட்டதும் கிருஷ்ணன் ஓடோடி வரவில்லையா?

திரௌபதி மனமுருகிக் கதறியபிறகுதான் ஆபத்திலிருந்து விடுபட, அவளுக்குச் சேலையை அளித்து உதவினார். அவள் பங்குக்கு தனது விருப்பத்தை வெளியிட்டபிறகே, அருள் கிடைத்தது. அர்ஜுனன் மனதார கண்ணனை நேசித்தான், வேண்டினான், தனது விருப்பத்தை முன்வைத்தான். கிருஷ்ணன் அருள்பாலித்தார்.துரியோதனன் வேண்டிக்கொள்ளவில்லை; அருளும் கிடைக்கவில்லை. வேண்டுபவனின் பங்கு இல்லாமல் அருள் கிடைக்காது.

முசுகுந்தன் கண்ணனை வேண்டினான். ‘நீ செய்த பாபங்களுக்கு க்ஷேத்ராடனம் சென்று தீர்த்தங்களில் நீராடி பாபம் விலகிய பிறகு, அருள்புரிகிறேன்’ என்று வாக்களித்தார் கண்ணன். அங்கும் முசுகுந்தன் பங்கை எதிர்பார்த்து அருள் மழை பொழிந்தது.

ராவணன், விபீஷணன் போன்றவர்கள் தவமியற்றி தனது பங்கை செலுத்திய பிறகுதான் கடவுள் அருள் மலர்ந்தது. எல்.ஐ.ஸி-யில் கடன் பங்கை விடுவிக்க வேண்டுமெனில், அவனது
பங்கை செயல்படுத்திய பிறகுதான், விடுவிக்க முற்படுவார்கள். ‘தாங்கள் தரும் கடனைத் தந்து விடுங்கள். எனது பங்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்று சொன்னால் கடன் பங்கை விடுவிக்கமாட்டார்கள். ஓய்வு ஊதியம் பெறவும், தனது பங்கை செலுத்திய பிறகுதான் விடுவிப்பார்கள்.

கடவுள் வியாபாரம் செய்யவில்லை. உழைக்காமல் ஊதியம் பெற அனுமதிக்கமாட்டார். வேண்டிக்கொள்ளாமல் கொடுக்க மாட்டார். ‘இலை, புஷ்பம், பழம், நீர் - இதில் எதாவது ஒன்றைத் தந்தால் போதும். ஆனால் உனது பங்குக்கு, என்னிடம் ஆழமான பக்தி அந்தப் பொருளில் தோய்ந்து இருக்க வேண்டும்’ என்று சொன்னார் பகவான் (யோமேபக்த்யாப்ரயக்சதி). மனமுவந்து அவனது பணிவிடையில் ஈடுபட வேண்டும். ஐம்புலன்களை அடக்கி, மனதை இறைவனில் இருத்தி, அன்ன ஆகாரம் இன்றி, சிரமத்தையும் பாராமல் கடவுளை வழிபடவேண்டும். அப்போது நமது பங்கு நிறைவு பெறுவதால் கடவுள் அருள்பாலிப்பார்.

உடலையும் உள்ளத்தையும் வருத்திக்கொண்டு தவமிருந்த முனிவர்களுக்கு அருள்பாலிப்பார். இன்று, எவரும் தங்களை வருத்திக் கொள்வ தில்லை. தான் செய்த தவறுக்கு வருந்துவதும் இல்லை. இன்று நடைமுறையில் தென்படும் பக்தி உண்மையான பக்தியன்று. அதற்கு உகந்த பலனும் கிடைக்காது. பக்தி பண்ணினதாக பாவனை செய்துகொள்ளலாம். உடம்பு நோகாமல், உள்ளத்தையும் சுத்தம் செய்யாமல், ஏனோதானோ என்று கடவுள் பெயரை உச்சரிப்பது பக்தியாகாது. பாசாங்கு பக்தியில் பாதகம்தான் விளையும்.

? பாசாங்கு பக்தி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

இன்றைய நாளில் பக்தி அதன் தரத்தை இழந்துவிட்டது. ஆர்வத்தோடு கடவுள் பணிவிடையில் இறங்குபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தனது சுகபோகங்களுக்கு உகந்த தேவைகளை நிறைவு செய்ய பக்தியைப் பயன்படுத்துபவர்களே ஏராளம். ஆன்ம லாபம் அடைய யாரும் முற்படுவதில்லை. மகான்களின் சரித்திரத்தைக் கேட்டாலே மோட்சம் என்று நினைக்கிறார்கள். முற்றும் துறந்த மகான்களுக்கு உபயோகப் பொருளைக் காணிக்கையாக அளிக்கிறார்கள். அளித்தவர்களுக்கு அருள் உண்டு; அளிக்காதவர்களுக்கு அருள் இல்லை. இங்கும் தனது பங்கை அவர்களிடமிருந்து பெற்ற பிறகுதான் அருள்பாலிக்கிறார்கள். அவரவர் கடமைகளைச் சரிவர நிறைவேற்றினாலே கடவுள் அருள்புரிவார்.

கேள்வி பதில்

அறம் அவனது பங்கு. அதை நிறைவேற்றினால் கடவுள் தனது பங்கை விடுவிப்பார். சோம்பேறிக்கு இவ்வுலகமும் இல்லை, அவ்வுலகமும் இல்லை. நமது கடமைகளை ஸனாதனம் பட்டியலிட்டுத் தந்த பிறகு, அதை அலட்சியப்படுத்திவிட்டு  கடமையை மறந்து கடவுளையும், மகான்களையும் சரண் அடைவது தேவையற்றது. அறம் கடவுள். அதைக் கடைப்பிடித்தால் கடவுள் தானாகவே அருள்வார். அறத்தை அகற்றிவிட்டு, எப்படிக் கதறினாலும் கடவுள் செவிசாய்க்க மாட்டார். தன்னை முதலில் தகுதியுள்ளவனாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நமது கடமையை உணர வேண்டும். கடமையில் எதிர்ப்பு எழும்போது, கடவுளை நினைக்க வேண்டும். அப்போது அவர் அருளுவார்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

‘அறம்’ கடவுளின் கட்டளை. அது வளர்ந்தோங்க வேண்டும். அதற்கு முயற்சி செய். வளர்ந்த அறம் உன்னைப் பாதுகாக்கும் (தர்மோ ரஷதிரஷித்:)’ என்று ஸனாதனம் சொல்லும். கடவுளுக்கு உருவம் இல்லை. அறம்தான் உருவம். உடலெடுத்த அறம் ராமன் என்று மாரீசன் சொன்னான் (ராமோ விக்ரஹவான் தர்ம:). தினம் தினம் அக்கறையோடு உனது அறத்தை நடைமுறைப்படுத்து. அது வளர்ந்து செழிப்புற்றால், உனது சுகாதாரத்தையும் உள்ளத் தெளிவையும் வரவழைத்து பாதுகாக்கும்.

சின்னத்திரையில் தீபாராதனையைப் பார்க்க வேண்டாம். மகான்களை கழுத்து டாலரில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அறத்திலிருந்து நழுவியவனை கடவுளும் கைவிடுவார்; மகானும் கைவிடுவார். ஆகையால், அவர்கள் அருள் பெற நமது பங்கான அறத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அது இல்லாத பக்தி வெறும் பாசாங்குதான்.

- பதில்கள் தொடரும்...

சம்வத்ஸர அபிஷேக விழா!

சேலம் மாவட்டம், ஆத்தூருக்கு அருகில் உள்ளது கோவிந்தம்பாளையம். இங்கே, மிக அழகாக அமர்ந்து, தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் நலமும் வளமும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவிநாயகப் பெருமான். ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலேயே மிகப் பெரிய பிள்ளையார் கோயில் இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

கேள்வி பதில்

சுமார் 500 வருடங்கள் பழைமையான இந்த ஆலயத்தில், சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் நெல் விதைப்பதில் துவங்கி, திருமணம், குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது என எந்த ஒரு நல்ல நிகழ்வுக்கும் இங்கு வந்து ஸ்ரீகற்பக விநாயகரை வணங்கிவிட்டுத்தான் காரியத்தில் இறங்குவார்களாம். விதை நெல்லை எடுத்து வந்து ஸ்ரீவிநாயகரின் துதிக்கையில் வைத்து மனதாரப் பிரார்த்தனை செய்துவிட்டு, பின்பு அதை எடுத்துச் சென்று விதைத்தால், அந்த முறை அமோக விளைச்சல் நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். அதேபோல், கல்யாணம் தடைப்பட்டு நீண்ட காலமாகத் தவிப்பவர்கள், இங்கு வந்து தங்களின் ஜாதகத்தை வைத்து, ஸ்ரீகற்பக விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி  உள்ளம் உருக வேண்டிக்கொண்டால், விரைவில் திருமணம் நடந்தேறும்; நல்ல வரன் அமைந்து, வாழ்க்கை இனிக்கும் என்பது ஐதீகம். மிகுந்த வரப்பிரசாதியான விநாயகர் இவர். தன் திருநாமத்துக்குத் தகுந்தது போலவே, தன்னை நாடி வரும் அன்பர்களுக்கெல்லாம் கற்பக விருட்சமென வரங்களை வாரி அருள்வார் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

மிகப் பெரிய பிராகாரத்தையும், மூலவராக ஸ்ரீகற்பக விநாயகரையும் கொண்டு அற்புதமாக அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில், வருகிற 23.3.16 புதன்கிழமை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் (2-ம் ஆண்டு) சம்வத்ஸர அபிஷேக விழாவானது வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் பக்தகோடிகள் அனைவரும் கலந்துகொண்டு, வாழ்வில் பதினாறு செல்வங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழலாம்.

- ரா.வளன்

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.