மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 11

சிவமகுடம்  - 11
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 11

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிற்பக் கமலம்!

‘மலர்களுக்கும் மனிதர்களுக்கும்தான் எத்தனைப் பொருத்தம். மலர்கள் மணத்தால் மாறுபடுகின்றன என்றால், மனிதர்கள் குணத்தால் மாறுபடுகிறார்கள். அவர்களிடையே வர்ண பேதங்கள் இருப்பது போல், மலர்களிலும் நிறத்தால், மணத்தால், குணத்தால் பேதங்கள் பல உண்டு. சில மணக்கும் நிலைக்காது; சில நிலைக்கும் மணக்காது. இன்னும் சில புஷ்பங்கள் காய்க்காது; மலர்ந்து மணம் வீசித் திகழ்ந்து சடுதியில் உதிர்ந்தும்போகும். வேறுசிலவோ பூத்து, காய்த்துக் கனியாகி விதை தந்து விருட்சங்களாய் பரிணமிக்கும். 

மனித இனமும் அப்படித்தான்! பெரும்பாலா னோரின் வாழ்க்கை, ஒரு நாள் பூவாக எந்த அடையாளமும் மிச்சமின்றி மறைந்துபோகும். குறிஞ்சி பூப்பது போன்று அபூர்வமாக வெகு சிலரே, சாதனையால் சரித்திரத்தில் நிலைக்கிறார் கள். அவ்வகையில், என் மகள் இளவரசி மானி சோழகுலத்தின் குறிஞ்சிப்பூ!’

இங்ஙனம், மலர் நினைவுகளால் நிரம்பிய மனத்தால், மனிதக்குலத்தையும் மகள் மானியையும் தனக்குள் எடைபோட்டபடி,  மணி முடிச்சோழர்  சிந்தனைச் சிலையாகி நின்றுவிட்டார் என்றால், அதற்குக் காரணம் இருக்கவே செய்தது.

இளவரசி மானி படித்துறையின் பிடிச் சுவரில் இருந்த புலி முகத்தைத் திருப்ப, நீராட்ட குளத்தின் நீர் சடுதியில் வழிந்ததும், மானியின் மற்றொரு திருகலில், குளத்தின் தரைத்தளம் பிரிந்து விலகி பெரும் சுரங்கத்தை கண்முன் காட்டியதும் அவருக்கு  பிரமிப்பை தந்தன என்றால், அதைவிட பெரும் பிரமிப்பை அளித்தன, அந்தச் சுரங்கச் சுவர்களின் சிற்பங்களும் சித்திரங்களும்!
ஒருபுறம், தேவலோகத்தில் இந்திரனை ஜயித்து முசுகுந்தர் விடங்க லிங்கங்களைப் பெற்று வரும் காட்சி. அடுத்து கண்களில் நீர் பெருக ஆராய்ச்சி மணியை அடிக்கும் பசு ஒன்று. அதைத் தொடர்ந்து மகனை தேர்க்காலில் இட்டு அந்த பசுவுக்கு  மனுநீதிச் சோழன்  நீதி வழங்குவதைக் காட்டும் சித்திரத் தொகுப்புகள்.

சிவமகுடம்  - 11

இவையாவும் சோழர்களின் அறக்கருணையை விளக்கினால், அந்தச் சித்திரங்களுக்கு ஊடாகவும் எதிர்ப்புறச் சுவற்றிலும் திகழ்ந்த சிற்பங்களோ, அவர்களின் மறக்கருணையைச் சித்திரிப்பவை யாகத் திகழ்ந்தன.

ஒரு சிற்பத்தில், பொங்கிப் பெருகிவரும் பொன்னியை தடுத்தபடி மிகப் பிரம்மாண்டமாய் கல்லணை எழும்பிக் கொண்டிருக்க, தனது கனவு கண்முன் நிஜமாவதைக் கம்பீரமாக மேற்பார்வை யிடுகிறான் கரிகாலன். வேறொன்றிலோ, கோழி யூரின் மேன்மையைச் சொல்லும் யானையை கோழி வீழ்த்தும் சிற்பக் காட்சி. அதன் எதிர்ப்பு றத்தில் வெண்ணியாற்றங்கரையில் நிகழ்ந்த பெரும் போரை மிக தத்ரூபமாக வடித்திருந்தார்கள்.

அதோ, தனது பெரிய துதிக்கையை தூக்கிப் பிளிறியபடி பாய்ந்து வருகிறது எதிரியின் பட்டத்து யானை. அதன் மேல் ஆரோகணித்திருப்பவனின் மார்பை நோக்கி பாய்ந்து வருகிறது, கரிகால் பெருவளத்தானின் வீர வேல்.

அடுத்த காட்சி... அடடா, வேல் மார்பைப் பிளக்க தரையில் மாய்ந்து வீழ்ந்தேவிட்டான் பகைவன். வெற்றிமுழக்கம் செய்கிறது சோழ முரசுகள். அப்பப்பா... பார்ப்பவர்களுக்கு, போர்க்களத்தில்  தாங்களும் களமாடுவது போன்ற உணர்வைத் தரும்படி அந்தச் சிற்பங்களுக்கு உயிர் கொடுத்திருக் கிறார்கள், அவற்றை வடித்தச் சிற்பிகள்.

அவை எல்லாவற்றையும்விடவும், போர்க் காட்சிக்கு அடுத்தபடியாக, கரிகாலனை சூரியனா கவும், அவன் தோன்றியதன் விளைவால் மலரும் தாமரையாக சோழர்குலத்தையும் சித்திரிக்கும் அந்த சிற்பத் தாமரையே மணிமுடிச் சோழரை பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும்.

அந்தக் கல் மலரைக் கண்டாரோ இல்லையோ, அவரின் மனதை ஆக்கிரமித்து, அங்கிருந்து சிறிதும் அவரை அசையவொட்டாமல்  அடித்துவிட்டன அந்தப் பூவும் அதையொட்டிய பூக்கள் பற்றிய சிந்தனையும்!

‘‘என்ன தந்தையே... சிற்பக் கமலத்திடம் சிந்தை யைப் பறிகொடுத்து விட்டீர்களா?’’

அவரின் தோள் தொட்டு உசுப்பிய மானி, மெள்ள நகைக்கவும் செய்தாள். அவளின் அந்தச் சிரிப்பொலியாலும், அவளுடைய கரங்கள் அசைந்ததால் உண்டான கைவளைகள் எழுப்பிய ஓசையாலும் சிந்தனை களைந்த சோழர் பிரான், ‘‘ஆம் தாயே! மிக அற்புதமானச் சிற்பம் இல்லையா?’’ என்றார்.

சிவமகுடம்  - 11

‘‘வெறும் சிற்பம் மட்டுமல்ல தந்தையே... இந்தக் கமலம், நம் வியூகத்துக்கான சூத்திரமும் கூட’’ என்றாள் மானி.

மகள் கூறுவது புரியாததால், வினா தொக்கிய பார்வையோடு மானியை ஏறிட்டார் சோழர். அவருக்கு அந்தச் சிற்பம் சொல்லும் ரகசியத்தை விவரிக்க முற்பட்ட இளவரசி, பரமேசுவரப் பட்டரிடம் ‘‘பட்டர் பிரானே தங்களிடம் விபூதி இருக்கிறதல்லவா? அதில் சிறிது தாருங்கள்’’ என்று கேட்டாள்.

பரமேசுவரப்பட்டர் தன் இடைமுடிப்பில் இருந்த விபூதியில் கொஞ்சம் எடுத்து மானியிடம் கொடுத்தார். ‘‘சிவ சிவா’’ என்று  சிவநாமத்தை உச்சரித்தபடி பயபக்தியுடன் விபூதியைப் பெற்றுக் கொண்ட மானி, அதில் சிறிது எடுத்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு மீதியை அந்தச் சிற்பக் கமலத்தின் மீதும், அதையடுத்திருந்த வெண்ணிப் போர்க்காட்சியின் மீதும் தெளித்தாள்.
சிற்பங்களில் விபூதி படிந்ததும், அதுவரையிலும் புலப்படாதிருந்த மெல்லிய கோடுகள் தெளிவாகப் புலப்பட்டன. அவை கமலத்தையும், போர்க்காட்சியையும் அங்காங்கே இணைத்து எதையோ குறிப்பால் உணர்த்தின. அதுபற்றி மானி விவரிக்கவும் செய்தாள்.

‘‘தந்தையே! இதோ சிற்பத்தில் விரியும் போர்க்களத்தையும் அடுத்துள்ள கமலத்தையும் கவனியுங் கள். கமலத்தின் பாகங்கள் ஒவ்வொன்றும் சிறு கோடுகளால் போர்க்களத்தின் பாகத்தைத் தொடு கிறது அல்லவா? இங்கிருக்கிறது நம் முன்னோர் பயன்படுத்திய வெற்றிச் சூத்திரம். கமலத்தின் *அண்டகோசம் போர்க்களத்தின் மையத்தைக் குறிக்கிறது. அதன் புற இதழ்களும் அக இதழ்களும் மையத்தைச் சூழ்ந்துவிட்ட சோழர் படையைக் குறிக்கின்றன.’’

‘‘ஆமாம் ஆமாம். பகைவரைச் சடுதியில் சுற்றி வளைத்திருக்கிறது சோழர்படை. அதுவே வெற்றிக்குக் காரணம் என்பதையும் அறிய முடிகிறது. ஆனால், எதிரிகள் சைன்னியத்தை சுற்றி வளைப்பது எப்படி சாத்தியமாயிற்று என்பதுதான் புலப்படவில்லை. பகைவரின் பெரும் படையை ஊடுறுவினால் மட்டும்தானே எதிர்ப்புறம் செல்ல முடியும்?’’

வியப்பும் வினாவுமாக கேட்டார் சோழர்.

‘‘மன்னவா! இது, சடுதியில் சமைக்கப்படும் பத்மவியூகம். போர்ப் பாடங்களில் புதுவிதமானது.’’ என்று இடைபுகுந்து பேசிய பட்டர்பிரான் மானியிடம் கேட்டார்: ‘‘மகளே இந்த வியூகம் வியப்பானதுதான். ஆனால் நமக்கு எப்படி உதவப்போகிறது?’’

‘‘நாமும் போரின் அணுக்கத்தில் பத்ம வியூகம் அமைக்கப் போகிறோம். அதற்கு, தங்களின் ஆலோசனையுடன் தந்தையார் ஏற்கெனவே அமைத்திருக்கும் சக்கர வளையும் உதவும்’’ என்ற மானி தொடர்ந்து தனது திட்டத்தை விவரித்தாள்.

‘‘சிற்பக் கமலத்தின் தண்டை கவனியுங்கள். இயற்கையில், கமலப் பூக்களுக்கு உயிர்த்துடிப்பு தரும் பூமித்தாயின் தொப்புள் கொடியாகத் திகழ்வது தண்டுதான் இல்லையா?’’ என்று  வினா எழுப்பியபடி விளக்கத்தைத் தொடர்ந்தாள்.

‘‘நமது கமல வியூகத்துக்கு இந்தச் சுரங்கப்பாதை தான் தண்டும் தொப்புள்கொடியும் ஆகும். சிற்பக் கமலத்தின் தண்டு முடியும் இடம் உறையூருக்கு சில காத தூரம் உள்ள பரந்தவெளியைக் காட்டு கிறது.’’ என்றவள் சிறிது நிறுத்தி தமது தந்தையிடம் வினவினாள்.

‘‘தந்தையே கோட்டைக்கு வெளியே நகர்த்தி யிருக்கும் நமது படைகளை எங்ஙனம் அணி வகுத்திருக்கிறீர்கள்?’’

சிவமகுடம்  - 11

‘‘கோட்டையின் வடபாகத்தை காவிரி பாதுகாக்கிறாள். ஆகவே  நதியின் அணைப்பில் துவங்கி ஓர் வளையமாக கோட்டையைச் சுற்றி நமது படையணிகளை நிறுவியிருந்தேன். ஆனால் பட்டர் பிரான், மெள்ள படைகளை நகர்த்தி அருகிலிருக்கும் தோப்புகளுக்குள்ளும், கிராமங் களுக்குள்ளுமாக மறைந்துரையும்படி பணித்தார். அதாவது, எதிர் தரப்பு ஒற்றர்களுக்கு நமது முன்னேற்பாடு குறித்து இப்போதே எதுவும் தெரியவேண்டாம் என்பது அவரது எண்ணம்”

‘‘நல்ல ஏற்பாடு. இப்போது சொல்கிறேன் கேளுங்கள். சிற்பக் கமலத்தைப் போல் நமது கமலத்துக்கும் அக இதழ்களும் புற இதழ்களும் உண்டு. கமலச் சிற்பத்தில் அண்டகோசமாகத் திகழ்வது பகைவரின் படை. ஆனால் நமது கமலத்தின் அண்டகோசம் உறையூர்க் கோட்டை. அதன் அக இதழ்களும் புற இதழ்களுமாய் நமது படையணிகள் திகழும். பகைவர்கள் நம்மை அணுகும்போது, அக இதழ்கள் விரியும். அவர்கள் அதை நெருங்கியதும் புற இதழ்கள் விரியும்!’’

இந்த இடத்தில் பரமேசுவரப்பட்டர் குறுக்கிட்டார். ‘‘தாயே! உன் வியூகம் விசித்திரமாகப் படுகிறது. வழக்கமாக புற இதழ்கள் விரிந்து இடம் கொடுத்த பிறகுதானே அக இதழ்கள் விரிய இயலும்?’’
பட்டர்பிரானின் இந்தக் கேள்விக்கு, ‘‘தாங்கள் கூறுவது உண்மைதான். ஆனால், சில நேரங்களில் விநோதங்களும் விசித்திரங்களும்தான் சரித்திரம் படைக்கக் காரணமாகும். இது தாங்கள்
கற்றுத் தந்த பாடம்தான்’’ என்று சிறு புன்னகை யோடு பதிலளித்தாள் மானி.

பதிலுக்கு பெரிதாய் நகைத்த பட்டர்பிரான், ‘‘வியாக்யானத்தில் குருவையே மிஞ்சிவிட்டாய் மானி’’ என்றதோடு அவள் அருகில் வந்து தலையில் வாஞ்சையோடு கை வைத்து ஆசிர்வதித்தவர், ‘‘சரி குழந்தாய், சொல்... கமல வியூகத்தில் என்ன விசித்திரத்தை விதைக்கப்போகிறாய்?’’

‘‘பட்டர்பிரானே! உறையூர்க்கோட்டையை கமலத்தின் அண்டகோசம் என்றேன். அதைச் சூழப்போகும் தந்தையின் படையணிகள் அக இதழ்களாகத் திகழும். அதைப் பிய்த்தெறியும் வேகத்துடன் எதிரிகள் பாயும் தருணத் தில் திடுமென புற இதழ்கள் விரியும்!’’

‘‘அது எப்படி சாத்தியமாகும்?’’ சற்று இரைந்தே கேட்டார் சோழவேந்தர்.

‘‘தந்தையே புற இதழ்களாக அணி வகுக்க மேற்கொண்டு படையணிகள் நம்மிடம் ஏது என்பதுதான் தங்கள் கேள்வி இல்லையா? அதையும் விளக்கிவிடுகிறேன். பரதவர் படையில் பாதியையே
கடற்புறம் அனுப்பியுள்ளோம். மீதிப் படையும், நம் மக்களில் போர்ப்பயிற்சியில் தேர்ந்தவர்களையும் சேர்த்து பெரும் படையணி ஒன்று உருவாகி யிருக்கிறது. அது இந்தச் சுரங்கத்தின் வழியே வெளியேறி, மறைந்துய்யும். பகைவர்கள் அக இதழைத் தாக்கும்போது, திடுமென விரிந்து அவர்களைப் பின்புறம் தாக்கும்.’’

‘‘அதி அற்புதம்... மிக விசித்திரம்!’’

மன்னரும், பரமேசுவரப்பட்டரும் ஏககாலத்தில் மானியைப் பாராட்டினார்கள்.

அதேநேரம், உறையூர்க்கோட்டை போருக்கு சன்னத்தமாகிக் கொண்டிருந்தது. ‘அந்தி மயங்குவதற்குள் கோட்டைக் கதவுகள் மூடப்பட வேண்டும்’ என்ற மன்னரின் உத்தரவுப்படி, பிரதான வாயிலில் காவலர்கள் சுழற்பொறிகளை இயக்க கோட்டைக்கதவுகள் மெள்ள நகரத் துவங்கின. அகழிப் பாலத்தை மேலெழுப்பவும் சித்தமானார்கள் சோழ வீரர்கள். அப்போது, தூரத்தில் பெரிதாக ஒரு சங்க நாதம் ஒலித்தது.

வீரர்கள் சத்தம் வந்த திக்கை நோக்க, பொதி களைச் சுமந்தபடி நான்கைந்து பார வண்டிகள் வெகுவேகமாக வந்துகொண்டிருந்தன. ‘தாங்கள் வருவதற்குள் கதவுகளை மூடிவிட வேண்டாம்’ என்பதற்கான வண்டிக்காரர்களின் வேண்டுகோள் சமிக்ஞையே சங்கநாதம் என்பதைப் புரிந்துகொண்ட வீரர்கள், கதவுகள் மூடுவதை நிறுத்தி, வண்டிகளை எதிர்நோக்கினார்கள்.

பார வண்டிகள் நெருங்கியதும், அவற்றைத் தடுத்து நிறுத்தவும் செய்தார்கள். போர்க்காலம் என்பதால், எவரொருவரையும் விசாரித்தபிறகே கோட்டைக்குள் அனுமதிப்பது அவசியமாகவும், அரசரின் உத்தரவாகவும் இருந்தது. ஆனால், முன்னால் வந்த வண்டிக்காரன் அந்தக் காவலர்களின் விசாரணையை, வெகு அலட்சிய மாக எதிர்கொண்டான். அத்துடன், ‘‘எங்களைத் தடுக்காதீர்கள். கோட்டை முற்றுகையிடப்பட்டால் உள்ளே இருப்பவர்களுக்குத் தேவையான தானியங்களைச் சேமிக்கும் படி அரசரின் உத்தரவு திட்டமாக இருக்கிறது. அது உங்களுக்கும் தெரிந்திருக்கும். அதன் பொருட்டு கடந்தபல நாட்களாக பாரவண்டிகள் தானியங்களுடன் வந்து கொண்டிருப் பதையும் அறிவீர்கள். ஆகவே, எங்களை வீணாக தாமதிக்கச் செய்து, அரச கோபத்துக்கு ஆளாக வேண்டாம்’’
 
என்று கட்டளைத் தொனியில் கூறியவன், ‘‘இதோ அரச உத்தரவு’’ என்றபடி நறுக்கோலை ஒன்றையும் எடுத்துக் காட்டினான். அதைப் பார்த்த பிறகு மறுப்பேதும் சொல்லாமல் வண்டிகளை நுழைய அனுமதித்தான் காவலர் தலைவன்.

பாவம் அவனுக்குத் தெரியாது... பார வண்டி களின் உருவில், சோழக் கமலத்தைப் பிய்த்தெறியப் போகும் பேராபத்து உறையூர்க் கோட்டைக்குள் நுழைகிறது என்று!

அந்த பேராபத்துக்கு அச்சாரமாக கூன் பாண் டியர் வரைந்தளித்த திட்டத்தை, ரிஷபகிரியில் தங்கியிருக்கும் படைகளின் தலைவன் பார்த்து பிரமித்தது போலவே, அங்கிருந்து நகர்ந்து சோழ தேசத்தின் எல்லையைத் தொட்டுவிட்ட அஸ்திரப் பிரிவின் தலைவனும் பார்த்து, பெரும் வியப்புக்கு ஆளாகிக்கொண்டிருந்தான்!

- மகுடம் சூடுவோம்...