தொடர்கள்
Published:Updated:

கலகல கடைசி பக்கம்

கலகல கடைசி பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
கலகல கடைசி பக்கம்

சொர்க்கம் எங்கே? நரகம் எங்கே?தெனாலி

ராஜா ஒருவனுக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். சொர்க்கம், நரகம்னு சொல்றாங்களே, அதெல்லாம் எங்கே இருக்கு? அதுங்களுக்கான வாசல் கதவுகள் எங்கே இருக்கு?

வாசல் கதவுகள் இருக்குமிடம் தெரிஞ்சா சொர்க்கத்துக்குள்ளே சுலபமா நுழைஞ்சுடலாம், நரகத்துக்குப் போனாலும் சுலபமா தப்பிச்சுடலாமேங்கிறது அவன் எண்ணம்.

ஒரு நாள், அவன் நாட்டுக்கு ஒரு மகான் வந்தார். கடவுள் தத்துவம், பாவம், புண்ணியம்னு எல்லாத்தை பத்தியும் விரிவா, விளக்கமா, அழகா கதை போலச் சொல்லி மக்களுக்குப் புரிய வைக்கிறார்னு கேள்விப்பட்டு, அவரைப் போய்ப் பார்த்தான் இந்த ராஜா. வணங்கினான்.

“யாருப்பா நீ?''ன்னு கேட்டார் மகான்.

“நான் இந்த நாட்டு மன்னன். சுற்றுப்பட்டில் உள்ள 16 தேசங்களையும் வென்றவன். அந்தச் சிற்றரசர்கள் எல்லாம் எனக்குக் கப்பம் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள்’’னு பெருமிதத்தோடு சொன்னான்.

“சரி, எதுக்கு என்னைத் தேடி வந்திருக்கே?''

“சுவாமி, நீங்க பெரிய ஞானி; கடினமான தத்துவங்களையெல்லாம் எளிமையா விளக்கிப் புரிய வைக்கிறீங்கன்னு கேள்விப்பட்டு, உங்களிடம் என்னோட சந்தேகங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுப் போகலாம்னு வந்திருக்கேன். சொர்க்கம், நரகம் இதெல்லாம் எங்கே இருக்கு? அதுக்கான வாசல் எங்கே இருக்கு? இதான் என் சந்தேகம்’’னான் ராஜா.

கலகல கடைசி பக்கம்

“அதிருக்கட்டும்... நீ ஒரு பெரிய சக்கரவர்த்தின்னு சொல்லிக்கறே. ஆனா, உன்னையும் பூஞ்சையான உன் உடம்பையும் பார்த்தா ஒரு வீரன் மாதிரி தெரியலையே! 16 தேசங்களையும் வெற்றி கொண்டவனா நீ? நம்புற மாதிரி இல்லையே?''ன்னார் மகான், கேலிப் புன்னகையோடு.

அவ்வளவுதான்... ராஜாவுக்குக் கடுங்கோபம் வந்துட்டுது. உறையிலிருந்து வாளை உருவினான். மகானின் கழுத்துக்குக் குறி வெச்சான். “யாரைப் பார்த்து என்ன சொல்றே? இந்த நொடியே உன் தலையைச் சீவி எறிய என்னால் முடியும். செய்யட்டுமா?''ன்னான் ஆத்திரமாக.

மகான் மறுபடியும் சிரிச்சார். “இதான்... இதுதான் நரகத்துக்கான வாசல். நீ உன் அகங்காரத்தாலும் கோபத்தாலும் அதைத் திறந்திருக்கிறே''ன்னார்.

ராஜா சட்டுனு நிலைமையை உணர்ந்து, சாந்தமாகி, வாளை உறையிலேயே மறுபடி சொருகினான்.

மகான் தொடர்ந்தார்... “நீ உன் உணர்வுகளையும் கோபத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு சாந்தமானாய் அல்லவா! அப்பவே சொர்க்கத்தின் வாசலைத் திறந்திருக்கிறாய்னு அர்த்தம்!''
சொர்க்கம், நரகம்கிறதெல்லாம் வெளியே எங்கேயோ இல்லை. அது நம்ம ஒவ்வொருத்தர்கிட்டேயும் இருக்கு. புலன்களுக்கும் உணர்வுகளுக்கும் நாம அடிமையா இருந்தோம்னா அது நரகம்; புலன்களும் உணர்வுகளும் நம்ம கட்டுப்பாட்டுல இருந்தா, அதுதான் சொர்க்கம்!