தொடர்கள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 23

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 23
News
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 23

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

38. அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே ?

காவிரியின் தென்கரையில் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. திருப்பாணர் தமது தோளில் தொங்கவிட்ட உரையிலிருந்து யாழ் எனப்படும் தந்தி இசைக் கருவியை வெளியில் எடுத்தார். திருவரங்கன் இருக்கும் திசை நோக்கி சேவித்தார். யாழுக்கு சுருதி சேர்த்தார். கல்லும் கரைந்துருகும் வண்ணம் அரங்கன் மேல் பாக்களைப் பாடத் தொடங்கினார்.
“ ஆஹா என்ன ஒரு கானம். கேட்பவர்களை மதி மயங்க வைக்கும் இசை” என்றார் ஒரு பக்தர்.
“ எதற்காக இவர் இப்படி கோயிலுக்கு வெகுதொலைவில் நின்றுகொண்டு பாட வேண்டும்? அரங்கன் சன்னதியில் பாடலாமே? “ என்றார் உடன் வந்த வேறொரு பக்தர்.

“ என்ன ஓய் புரியாத மாதிரி பேசறீர்? இவர் நான்காவது வர்ணத்தைச் சேர்ந்தவர். தீண்டத்தகாதவர்.”

“ திருவரங்கனுக்கு அடிமைப்பட்ட ஆத்மாவுக்கு ஏதுங்காணம் குலமும் ஜாதியும்? “

“ இது உமக்கு எமக்கு தெரியும். கோயிலைச் சேர்ந்தவாளுக்குத் தெரிய வேண்டாமோ?”

‘ஜீயர் வர்றார் ஜீயர் வர்றார் நான்காம் வருணத்தினர் எதிரில் நிற்க வேண்டாம். ஒதுங்கி போங்கள்‘ என்ற ஒலி எழுந்தது.

அந்த பக்தர்கள் திரும்பிப் பார்த்தனர். திருவரங்கன் கோயிலைச் சேர்ந்த லோகசாரங்கர் என்ற ஜீயர் தனது தொண்டர் கூட்டம் புடை சூழ காவிரியில் குளிப்பதற்கு வந்து கொண்டிருந்தார். திருப்பாணரின் செவிகளில் எம்பெருமானுடன் சுருதி சேர்ந்த பண்ணின் ஒலியைத் தவிர வேறு ஒலி எதுவும் விழவில்லை. ஜீயருடன் வந்தவர்கள் அவரை விலகிப்போகச் சொன்னர். கேட்காமல் போகவே ஜீயரைப் பார்த்தனர். ஜீயருக்கு திருமஞ்சனத்துக்கு பொற்குடத்தில் நீர்கொண்டு போகவேண்டிய அவசரம். “ஏதாவது பண்ணி அவனை அப்புறப்படுத்துங்கோ“ என்று உத்தரவிட்டார். உடன் வந்த தொண்டர் கூட்டம் திருப்பாணரை கல்லால் அடிக்கத் தொடங்கினர்.

தனது சுயநினைவுக்கு வந்த திருப்பாணர் ஜீயருக்கு இப்படி ஒரு அபச்சாரம் செய்து விட்டோமே என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 23

இவரைக் கண்ணுற்ற அந்த இரண்டு பக்தர்களும் “இது என்ன இப்படி ஒரு அக்கிரமம்“ என்றபடி ஜீயர் கூட்டத்துடன் உள்ளே சென்றனர்.

தனது பாகத்தன் மேனியில் கல்லால் அடித்து இரத்த காயமாக்கியதால் கோபாவேசமான திருவரங்கன் தனது அர்ச்சாவதார மேனியில் இரத்தம் வழியச் செய்தான்.

ஜீயருக்கு கைகால் நடுங்கிவிட்டது. வெளியில் நின்று தரிசித்த அந்த பக்தர்களுக்கும் மெய் சிலிர்த்தது. நாளை அவசியம் இங்கு வருவோம் என்று கூறிவிட்டு அகன்றனர்.

திருவரங்கச் செல்வன் சிலை மேனியில் இரத்தம் வழிந்ததன் அர்த்தம் புரியாமல் லோக சாரங்கர் கலங்கியபடி கண்துயின்றார். கனவில் அரங்கன் தோன்றினான். “என் பரமபாகவதனை கல்லால் அடித்து பெரும்பழி தேடிக்கொண்டு விட்டீர். நாளை அந்த திருப்பானரை உமது தோளில் சுமந்து எம் சன்னதிக்குள் வாரும். அப்போதுதான் உமது பாவமும் எமது குருதியும் வடியும்“ என்றார்.

மறுநாள் லோகசாரங்கர் திருப்பாணர் வரும்வரை காத்திருந்தார். திருப்பாணர் வந்ததும் அவரிடம் தனது தோளில் ஏறிக்கொள்ளச் சொன்னார்.

திருப்பாணர் தீயை மிதித்தவர் போல பதறினார்.

“இது அரங்கனின் கட்டளை. எம்முடைய விருப்பமும் இதுவே. ஒரு பாகவதனின் நெஞ்சம் நோகும்படி நடந்துகொள்வது மற்றொரு பாவதோத்தமனுக்கு அழகில்லை“ என்றார் ஜீயர்.

“ஜீயருக்கு இது நேற்று ஏன் தெரியாமல் போனது?“ என்று நேற்று வந்த அதே பக்தர்கள் நினைத்துக் கொண்டனர்.

லோகசாரங்கர் தோள்களில் ஏறிக்கொண்டு பிரகார வீதிகளின் வழியாக திருப்பாணர் அரங்கன் சன்னதிக்குள் நுழைகிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல் காவேரிக் கரையில் பரவத் தொடங்கியது. நாற்புரத்திலிருந்தும் பக்தர்கள் திரண்டனர். ஒரு திருவிழா உற்சவம் போல திருப்பாணர் அரங்கன் சன்னதிக்குள் நுழைந்தார்.

ஊரே கொண்டாடும் ஒருவனை அதுவரை நேரில் காணாமல் திடீரென்று இப்படி ஒருநாள் இப்படி ஒருவிதமாக பார்த்ததும் திருப்பாணருக்கு வாய் அடைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்

வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்

கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்திரு

வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே.

என்று கதறி பண்ணிசைத்தார். அமலனாதிபிரான் என்று தொடங்கி மொத்தமே பத்த பாசுரங்கள்தான் மங்கள சாசனம் செய்திருப்பார்.

கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்

கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.

என்ற பாசுரம் பாடிமுடித்தவுடனேயே அரங்கன் அவரை தம்முடன் ஐக்கியப்படுத்திக் கொண்டான்.

வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பக்தர்களும் கண்களில் நீர் மல்க“ பக்தி என்றால் இதுதான் பக்தியாக இருக்க முடியும்” என்றனர்.

அப்படி ஒரு பக்தியுடன் பண்ணிசைத்து அவன் மேனியுடன் கலந்து ஐக்கியமான, திருப்பாணரைப் போல தான் பாக்கியம் செய்யவில்லையே என்று அந்தத் திருக்கோளூர் பெண்பிள்ளை வெளியேறுகிறாள்.