Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

மஞ்சள் இடித்தால் மாங்கல்யம்!திருமண வரம் தரும் பாபநாசர் - உலகம்மன்...

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

மஞ்சள் இடித்தால் மாங்கல்யம்!திருமண வரம் தரும் பாபநாசர் - உலகம்மன்...

Published:Updated:
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

‘தஞ்சையில் தடுக்கி விழுந்தால் கோயில், திருநெல்வேலியில் திரும்பிய இடமெல்லாம் கோயில்’ என்று கிராமங்களில் சொலவடையே சொல்வார்கள். அத்தகைய சிறப்புவாய்ந்த திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது, பாபநாதசுவாமி திருத்தலம். அங்கு, தன்னை வழிபடுபவர்களின் பாவங்களைப் போக்கியும், மாங்கல்ய வரமளித்தும் கல்யாண கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள் சிவனான பாபநாசர், சக்தியான உலகம்மன்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

அசுரகுலத்தின் குருவான சுக்கராச்சாரி யாரின் மகன் துவஷ்டாவை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா, அசுரர்களின் நலனுக்காக ஒரு பெரும் யாகத்தை நடத்தினான். இதனை அறிந்த இந்திரன் துவஷ்டாவைக் கொன்றுவிட்டான். இதனால் இந்திரன், தோஷத்துக்கு ஆளானான். பூலோகத்திலுள்ள பல தலங்களுக்கும் சென்று பாவ விமோசனம் தேடினான். 

`பாபநாசத்துக்குச் சென்று பரணி ஆற்றங்கரையில் (தாமிரபரணி) நீராடி அத்தல நாதரை (சிவனை) வழிபடு... பாவம் விலகும்’ என வியாழபகவான் இந்திரனிடம் கூறினார். அதன்படியே இந்திரனும் செய்து பாவ விமோசனம் பெற்றான். இந்திரனுக்கு பாவ விமோசனம் அளித்ததால் இத்தல ஈசனுக்கு ‘பாபநாசர்’ என்றும், பாவத்தை நாசம் செய்த இடமாதலால் இவ்வூருக்கு ‘பாபநாசம்’ என்றும் பெயர் வந்தது என்கிறது, கோயிலின் தல வரலாறு.

திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவியாருக்கும் திருமணம் நடைபெறு வதைப் பார்க்க முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் வடக்கே உள்ள கயிலையில் திரண்டதால், பாரம் தாங்காமல் வடக்குப் பகுதி தாழ்ந்து,  தெற்குப் பகுதி உயர்ந்தது. `அகத்தியா... நீ தென்பொதிகை மலைக்குச் செல். நீ சென்றால்தான் உலகம் சமநிலை பெறும்’ என அகத்தியரை, சிவபெருமான் தென் பொதிகைக்கு போகும்படிச் சொன்னார். அதற்கு அகத்தியர், ‘பரம்பொருளே... எனக்கும் தங்களின் திருக்கல்யாணத்தைப் பார்க்க ஆசை இருக்காதா..?’ என்று சிவனிடம் கேட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

‘என் திருமணம் முடிந்ததும் திருக்கல்யாணக் காட்சியை முதலில் உனக்கு அளிப்பேன்’ என்று சிவபெருமான் உறுதியளித்ததால், அகத்தியர் தெற்கு நோக்கி தென் பொதிகைக்கு நடந்து வர வர, உலகம் சமநிலை அடைந்தது. சிவபெருமான் கூறியவாறே அகத்தியருக்கும், அவருடைய மனைவி லோபமுத்திரைக்கும் திருக்கல்யாணக் காட்சியை அளித்து அருள்பாலித்த திருத்தலம் இது! கோயில் கருவறைக்குப் பின்புறம் பிராகாரத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி  - அம்பாள் திருக்கல்யாண கோலத்துடன் அகத்திய முனிவருக்கும், அவர் மனைவிக்கும் திருக்கல்யாணக் காட்சி அளிக்கும் ‘கல்யாணநாதர் சந்நிதி’ உள்ளது.

கோயில் அர்ச்சகரான ஹரிஹர சுப்பிரமணிய பட்டர், ஆலயத்தின் பெருமைகளைப் பற்றி பேசும்போது... ``இத்தல சிவனுக்கு ‘பாபநாசர்’, ‘கயிலைநாதர்’, ‘கல்யாணநாதர்’ என்ற பெயர்களும், அம்பிகைக்கு ‘உலகம்மன்’, ‘உலகாம்பிகை’, ‘விமலை’ என்ற பெயர்களும் உண்டு. காசியில் கங்கை வடக்குநோக்கிப் பாய்வதுபோல, இந்தக் கோயில் முன்பு பாய்ந்து ஓடும் தாமிரபரணியும் வடக்காகப் பாய்ந்து கிழக்காக பிரிவதால் இதனை ‘வேத தீர்த்தம்’ என்றும் சொல்வர். வேத தீர்த்தத்தில் குளித்துவிட்டு சிவனை தரிசித்தால் பாவம் போகும். இதே தீர்த்தத்தில் குளித்துவிட்டு, கைப்பிடி அளவு விரலி மஞ்சள் வாங்கிவந்து, அம்பாள் பாதத்தில் வைத்து வழிபட்டு, அவள் சந்நிதியின் முன்பு உள்ள உரலில் போட்டு இடித்துப் பொடியாக்கி, ஒரு துளி மட்டும் எடுத்து நெற்றியில் பூச வேண்டும். பிறகு, கருவறைக்குப் பின்புறம் திருக்கல்யாணக் கோலத்தில் சிவன் - பார்வதி, அகத்தியருக்கு அருள்பாலிக்கும் காட்சியைப் பார்த்தால்... விரைவில் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும். 

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெண்கள் இடித்த மஞ்சள் பொடியால் அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்படும். கட்டியான மஞ்சளை உரலில் இடித்து பொடியாக்கியதைப்போல திருமணத் தடைகளும் விலகிவிடும். இடித்த பொடியை அம்பிகைக்கு அபிஷேகம் செய்வதால், அம்பிகை மனம் குளிர்ந்து, மஞ்சள் இடித்த பெண்களுக்கு விரைவில் குங்குமம் கொடுத்து கல்யாண வரம் அளிப்பாள். மாங்கல்ய பலம், கணவர் ஆயுள் தீர்க்கம் ஆகியவற்றுக்காக திருமணமான பெண்களும் மஞ்சள் இடிக்கலாம். ஆனால், ஆண்கள் உரலையோ உலக்கையையோ தொடக்கூடாது'' என்று சொன்னார். 

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியைச் சேர்ந்த சுதா, ‘‘கல்யாணத்துக்கு முன்னால எனக்கு வரன் தட்டிப் போயிட்டே இருந்தது. எங்க ஊருல உள்ள ஒரு பாட்டியம்மாதான், ‘பாபநாசம் கோயிலுக்குப் போய் உரல்ல மஞ்சள் இடிச்சிட்டு வா’னு சொன்னாங்க. அப்படியே செய்ய, ரெண்டாவது மாசமே நல்ல வரன் அமைஞ்சுருச்சு. கல்யாணம் முடிஞ்சதும் தம்பதியா இப்போ அம்பாளை தரிசனம் செஞ்சுட்டுப் போக வந்திருக்கேன்’’ என்றார்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

தூத்துக்குடியிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த தேவி... ‘‘பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யத்தான் இந்த கோயிலுக்கு வந்திருக்கோம். எனக்கு ரெண்டு பொண்ணுங்க. மூத்த பொண்ணு நிதி இந்த வருஷம் எம்.டெக் முடிக்கப் போறா. இப்பவே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டோம். இப்போதான் இந்த உரல், மஞ்சள் பத்தி தெரிய வந்தது. என் மகளை மஞ்சள் இடிக்கச் சொல்லிட்டேன். என் பொண்ணுக்கு நல்ல வரனை உலகாம்பிகை அமைச்சுத் தருவா’’ என்றார் நம்பிக்கையுடன்.

மஞ்சள் இடிக்கலாம், மாங்கல்யம் பெறலாம்... பாபநாசத்தில்!

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

எப்படிச் செல்வது?

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவு). தினமும் காலை 6 மணிமுதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

தொடர்புக்கு: அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோயில் அலுவலகம், 04634-293757.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism