பிரீமியம் ஸ்டோரி

‘‘அடியார்க்கு அடியேன் போற்றி!’’

எப்போதும் நாராயண நாம முழக்கத்துடன் வரும் நாரதர், வழக்கத்துக்கு மாறாக அடியார்களுக்குப் போற்றி கூறியபடி நுழைந்ததுமே தெரிந்தது, அவர் எங்கிருந்து வருகிறார் என்று!


‘‘என்ன நாரதரே, மயிலை பங்குனிப் பெருவிழா வைபவங் கள் எல்லாம் சிறப்பாக முடிந்ததா?’’ எனக் கேட்டோம்.

நாரதர் உலா

‘‘அங்கிருந்துதான் வருகிறேன் என்பதை எப்படித் தெரிந்து கொண்டீர்?’’ பதிலுக்குக் கேட்டார் நாரதர்.

‘‘அடியாரைப் போற்றும் அறுபத்துமூவர் விழா நடைபெறும் தலங்களில் ஒன்றல்லவா திருமயிலை! நீரும் அடியார்களைப் போற்றியபடியே வந்தீரே? அதிலிருந்து தெரிந்துகொண்டோம்!’’ என்று கூறிவிட்டு, ‘‘அதுசரி, மயிலையில் வேறு ஏதேனும் சிறப்புத் தகவல் உண்டா?’’ எனக் கேள்வியை வீசினோம் நாரதரிடம்.

‘‘உண்டு, உண்டு. அதைப் பிறகு சொல்கிறேன். முதலில் அல்லிக் கேணி அலங்கோலத்தைப் பதிவு செய்துவிடுகிறேன்’’ என்றவர் அதுபற்றி விவரித்தார்: “கடந்த மாசி மாதம் அமாவாசை துவங்கி தொடர்ந்து ஏழு நாட்கள், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தெப்போற்ஸவம் நடந்தது உமக்கு நினைவிருக்கலாம். அந்த விழாவுக்கு முந்தைய நாள், என்ன காரணத்தாலோ தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதந்தனவாம். அவற்றை அப்புறப்படுத்தி, திருக்குளத்தைச் சுத்தப்படுத்தச் சொல்லி பொதுமக்களும், தன்னார்வலர்களும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டார்களாம். ஆனால் பலன் ஏதும் இல்லை எனப் புலம்புகிறார்கள் உள்ளூர் பக்தர்கள் சிலர்.’’

‘‘அடடா! பிறகு, தெப்போற்ஸவம் எப்படி நிகழ்ந்ததாம்?’’

‘‘வேறு வழி? அதே நிலையிலேயே தெப்பத்திருவிழாவும் நடந்து முடிந்ததாக வருத்தப்படுகிறார்கள் பக்தர்கள்.’’

‘‘இதுகுறித்து அதிகாரிகள் வட்டத்தில் ஏதும் விசாரித்தீரா?’’

‘‘அவர்களைத் தொடர்புகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். மேலும், திருக்குளம் இன்னமும் துப்புரவு செய்யப்படவில்லை; துர்நாற்றம் வீசுகிறது என்கிறார்கள் பொது மக்கள். அதுகுறித்தும் நேரிலேயே சென்று விசாரித்துவிட்டு வந்து உம்மிடம் விரிவாகப் பகிர்ந்துகொள்கிறேன்’’ என்றவர், திருமயிலை குறித்த தகவல்களுக்குத் தாவினார்.

நாரதர் உலா

‘‘மயிலையில் பங்குனிப்பெருவிழா முடிந்து விட்டது. விரைவில் அந்தக் கோயிலில் கும்பாபி ஷேகம் நடைபெறவுள்ளது’’ என்ற நாரதரை, ‘‘நல்ல விஷயம்தானே’’ என்று இடைமறித்தோம்.
நம்மை மேலும் பேசவிடாமல் கையமர்த்தியவர், ‘‘நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், கோயிலைச் சேர்ந்தவர்களோ தங்களால் கும்பாபி ஷேகப் பணிகளில் பங்கேற்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுகிறார்கள்’’ என்றார்.

‘‘ஏன், என்னதான் பிரச்னை?’’

“கபாலீஸ்வரர் கோயிலின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவருக்கு வேண்டப் பட்ட ஆட்களே, அதிக அளவில் தினக்கூலி அடிப்படையில் குடமுழுக்குக்கான பணிகளை
மேற்கொள்கிறார்களாம். கோயிலில் போதுமான ஆட்கள் இருந்தும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது இல்லையாம். இதனால் கோயிலைச் சேர்ந்தவர்கள் பணி செய்ய வாய்ப்பு மறுக்கப் படுகிறது என ஆதங்கப்படுகிறார்கள்’’ என்றவர்,

  ‘‘இன்னொரு செய்தியும் செவிவழியாகக் கிடைத்தது. நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்தபோது, அந்தச் செய்தி உண்மைதான் என்கிறார்கள்’’ என்று பில்டப் கொடுத்தவரிடம், ‘‘முதலில் என்ன தகவல் என்று சொல்லும்’’ என்று செல்லமாக நாம் கடிந்துகொள்ள, நாரதர் அந்தத் தகவலைச் சொன்னார்.

நாரதர் உலா

சென்னையில் உள்ள பிரபல கோயில் ஒன்றின் நிதியில் இருந்து புதிய கார் ஒன்றை வாங்கினார்களாம். அதை அறநிலையத் துறையில் முக்கியஸ்தர் பயன்படுத்திக் கொள்ளப் போகிறாராம். ஒருவேளை பூஜைகூட நடைபெற வழியில்லாத கோயில்கள் தமிழகத்தில் எத்தனையோ உள்ளன. அவற்றைச் சீரமைக்கச் சொன்னால் பணம் இல்லை என்று கையை விரிக்கிறார்கள். ஆனால், இங்கே கோயில் பணத்தில் கார் வாங்கி ஜமாய்க்கிறார்கள்!’’ என்றவர், வேறொரு தகவலையும் சொன்னார்.

நாரதர் உலா

‘‘மன்னர்கள் காலம் தொட்டு இப்போது வரையிலும் பல்வேறு நகை ஆபரணங்கள் திருக் கோயில்களுக்குக் காணிக்கை வழங்கப்பட்டு வருவதை நீர் அறிந்திருப்பீர். பல கோயில்களில் இன்னின்ன வைபவங்களுக்கு இன்னின்ன நகைகள் அணிவிக்க வேண்டும் என்ற விதிமுறையே உண்டு. அதன்படியே நகை அலங்காரங்களும் நடைபெறும்.

நாரதர் உலா

ஆனால், குறிப்பிட்ட சில கோயில்களில் முழுமையான நகையாபரண அலங்காரங்கள் நடைபெற்றே வெகு காலம் ஆகிறதாம். அதுபற்றிக் கேட்டால், நகைகள் பழுதுபட்டுள்ளன, பழுது நீக்கக் கொடுத்துள்ளோம், பாதுகாப்பு கருதி வெளியே எடுக்க முடியவில்லை என்று என்னென்னவோ காரணங்களைச் சொல்கிறார்களாம். இது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்குமே என்று ஆதங்கப்பட்ட நண்பர், அதுபற்றி நீங்கள்தான் விசாரித்துத் தகவல் சொல்லவேண்டும் என்று பொறுப்பை என் தலையில் சுமத்திவிட்டார்’’ என்ற நாரதர், மேற்கொண்டு ஏதோ சொல்ல வாயெடுக்க, அவரது தொலைபேசி அழைத்தது.

நாரதர் உலா

பேசிவிட்டு வந்த நாரதர், ‘திருவல்லிக்கேணி திருக்குளத்தில் துப்புரவு பணி துவங்கிவிட்டதாம். ஆனால், தன்னார்வத் தொண்டர்கள்தான் இந்தப் பணியை கையில் எடுத்திருக்கிறார்கள். நேரில் சென்று விசாரித்துவிட்டு, விரிவாக பகிர்ந்துகொள்கிறேன்'' என்றபடி நம் பதிலுக்குக் காத்திராமல், விறுவிறுவென புறப்பட்டுவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு