இரண்டாம் வீட்டுக்கு உடையவன் லக்னத் துக்கு உடையவனுடன் இணைந்து 6, 8, 12 - இவற்றில் ஏதாவதொரு வீட்டில் இருந்தால், அந்த ஜாதகனுக்கு பார்வை மங்கலாக இருக்கும். சுக்கிரனும் சந்திரனும் 6, 8, 12-ம் வீடுகளில் சேர்ந்திருக்க நேர்ந்தாலும் பார்வை மங்கலாக இருக்கும். இரண்டுக்கு உடையவன் லக்னத்தில் இருந்தால் ‘நிசாந்தன்’ அதாவது ராக்கண்ணு-இரவில் கண்பார்வை வலு இழந்துவிடும். ஆனால், இரண்டுக்கு உடையவன் (நேத்திர ஸ்தானாதிபன்) உச்சம் பெற்று அல்லது சுப கிரகங்களுடன் இணைந்து லக்னத்தில் இடம் பிடித்துவிட்டால், மேற்சொன்ன தோஷங்கள் தென்படாது. கண் பார்வை நல்ல முறையில் அமைந்து, வாழ்நாள் முழுதும் சுகத்தை சுவைப்பான் என்கிறது ஜோதிடம்.
கண்களில் வலுவை, இரண்டுக்கு உடையவனின் தரத்தை வைத்து நிர்ணயிக்க வேண்டும். குடும்பம், தன் பொறுப்பில் வாழும் அனைத்து ரத்தபந்தங்கள், வாக்கு, சொல், சுத்தம், கண்கள்-அதிலும் குறிப்பாக வலது கண், வாழ்க்கை பயணத்தைச் சிறப்பிக்கும் பல்நோக்குக் கல்வி ஆகிய அத்தனையையும் இரண்டுக்கு உடையவனின் தரத்தை வைத்து முடிவெடுக்க வேண்டும்.
புலன்களில் கண்களுக்கு முதலிடம் உண்டு என்கிறது ஜோதிடம் (ஸர்வேந்திரி யானாம் நயனம் ப்ரதானம்). தான் பிறந்த பிரபஞ்சத்தைப் (உலகத்தை) பார்க்கக் கண்கள் வேண்டும். வாழ்வில், பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். அப்படி, பார்த்துத் தெரிந்துகொள்வதும் ஓர் அறிவாகும். ‘மற்ற புலன்கள் தேவைப்பட்டால் உண்மையை மறைக்கும். கண் உள்ளதை உள்ளபடி காட்டும்; மாற்றிக்காட்டாது. கண்கள் உண்மையைச் சொல்லும் என்று நம்பலாம்’ என்கிறது வேதம் (சஷுர்வைஸத்யம்).

நேரடியாக கண்ணால் பார்த்து விஷயத்தை உள்வாங்கியவனின் வாக்கு நம்பிக்கைக்கு உகந்தது. ‘ஸாக்ஷீ’ என்ற சொல்லுக்கு நேர்க் காணலில் பார்த்து உணர்ந்தவன் (ஸாஷாத் த்ரஷிடாஸாக்ஷி) என்று பொருள். கண் வழியாக மனதில் பதிந்த காட்சியை கண் மாற்றிக் காட்டாது. மனம் மாற்றி எண்ணும், சொல் மாற்றிச் சொல்லும் என்கிறது வேதம் (அநிருதம் வைவாசாவததி அறிருதம்மனஸாத்யாயதி. சஷுர்வைஸத்யம்). ஆக, ஜாதகம் பார்க்கும்போது, கண் பார்வையை அலசி ஆராய வேண்டும். இல்லையெனில், வாழ்க்கை இருண்டுவிடும். மருத்துவத்தின் வழியில் பிற்காலத்தில் பார்வையைச் சரிசெய்ய முற்படுவதைவிடவும், ஆரம்பத்திலேயே மங்கலான பார்வை இல்லை என்பதை உறுதி செய்வது சிறப்பு. கண்களின் சந்திப்பில் காதல் பிறக்க வேண்டும். கண்ஜாடை பல தகவல்களை அள்ளித்தரும். ஆயுள் நிறைவு, திருமணம், குழந்தை பாக்கியம், வேலை நிரந்தரம், பொருளாதாரச் சிறப்பு ஆகியவற்றை மட்டும் பார்த்தால் போதாது. புலன்களின் திறமையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தூரப்பார்வை, கிட்டப்பார்வை, ராக்கண்ணு, மங்கலான பார்வை ஆகியவை இருந்தால், காலப்போக்கில் இந்த குறைபாடுகள் வளர்ந்து, பார்வை இழப்பைச் சந்திக்க வைக்கும். கண் மருத்துவ விஞ்ஞானம் அதிசயிக்கத்தக்க விதத்தில் வளர்ந்து இருந்தாலும், அதன்மூலம் பலனடைந்தவர்கள் பலர் இருந்தாலும், பயன் பெறாதவர்களும் அதே எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மாற்றுக் கண்ணைப் பொருத்தும் முயற்சியில் ஈடுபடும்போது, முழு வெற்றியை எட்ட இயலவில்லை என்று தெளிவாகத் தெரிய வருகிறது!
6-ம் வீடு எதிரிடை விளைவு, 8-ம் வீடு அதன் அழிவு, 12-ம் வீடு அதன் இழப்பு. இந்த மூன்றும் விரும்பத் தகாத பலனை ஏற்கவைக்கும். லக்னாதிபதி அவன், இரண்டாம் பாவாதிபதி அவனது கண். இவை இணைந்து 6-ல் இருந்தால் பார்வை பாதிப்பு, 8-ல் அமைந்தால் பார்வை அழிவு, 12-ல் இழப்பு. இப்படி இரண்டுக்கு உடையவன் (நேத்திர ஸ்தானாதிபன்) தவறான இடங்களில் 6, 8, 12-ல் மாட்டிக்கொண்டு தனது பெருமையை இழக்கிறான். ஜாதகனின் கர்மவினையானது, பார்வையை இழக்கும் தருணத்தை ஏற்படுத்தும் வகையில், அவன் பிறந்தவேளையில் (ஜாதகம்) இரண்டுக்கு உடையவன் லக்னாதிபதியோடு இணைந்து, 6 அல்லது 8 அல்லது 12-ல் இருக்கும் வேளையைத் தேர்ந்தெடுத்தது. இப்படியிருக்க இரண்டுக்கு உடைய நேத்திர ஸ்தானதிபனை விழுந்து விழுந்து கும்பிட்டாலும், பரிகாரமாகிவிடாது; விரும்பிய பலனைப் பெற இயலாது. கர்ம வினையை உருவாக்கிய பாவம் கரைந்தால்தான் கர்மவினை செயல்படாமல் இருக்கும்; அது பரிகாரமாக மாறும். இன்றைய பிரபலங்களும் செவ்வாய்க்கு பரிகாரமாக முருகன் வழிபாட்டையும், கேதுவுக்கு பரிகாரமாக கணபதி வழிபாட்டையும் பரிந்துரைக்கிறார்கள். ‘வக்கீல் கால்களில் விழுவதற்கு பதிலாக கட்சிக்காரன் கால்களில் விழுவது வெற்றி அளித்துவிடும்’ என்று சொல்லும் பிரபலங்களும் தென்படுகிறார்கள். அதற்கு, அந்தந்த கிரகங்களுக்கு இட்டுக்கட்டின காயத்ரியை உபதேசம் செய்வதும், வேள்வியிலும் ஜபத்திலும் ஈடுபட வைப்பதுமான பிரபலங்களும் ஏராளம் உண்டு. கடவுளுக்கு சுப்ரபாதம் பாடினார் ஒருவர். அதைக் கண்ணுற்று மனிதக் கடவுள்களுக்கான சுப்ரபாதங்களும் தினம் தினம் காதில் விழுகின்றன! ராசிபலன் சொன்னார் ஒருவர். தற்போது அத்தனை ஜோதிடர்களும் ராசிபலன் சொல்வதைப் பார்க்கிறோம். அதிலும், வித்தியாசமாக இருக்கவேண்டும் எண்ணத்தில் மாறுபட்ட ராசிபலன்கள் வெளிவர ஆரம்பித்து விட்டன. கெடுதலான ராசி பலன்களையும் பரிகாரத்தில் சரிகட்டிவிட முடியும் என்று விளக்கமளித்து, அவரவர் கர்மவினையை அனாயாசமாக அளித்து அருள் வழங்கும் ஜோதிடர்களும் நிறைய இருக்கிறார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசிபலன் சொல்லும் வேளையில், அப்போது சந்திரனின் 7-ல் கிரகத்தைச் சுட்டிக்காட்டி, இந்த வாரம் தங்களுக்கு விவாஹ ஆலோசனை ஏற்படும், அதில் வெற்றியும் கிடைக்கும். தங்களது ராசியில் இருந்து 7-ல் குரு இருப்பதால் சந்தேகத்துக்கு இடமின்றி சங்கடம் விலகும் என்றெல்லாம் சொல்வார்கள். அவரிடமே ஜாதகத்தைக் காண்பித்து விவாஹம் எப்போது எனக் கேட்டால், ‘தங்களது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 7-ல் செவ்வாய் இருப்பதாலும், குரு 6-ல் இருப்பதாலும் திருமணத்துக்கு காலதாமதம் ஏற்படும்’ என்பார். அப்பாவி மக்கள் இந்த இரண்டு விபரீதமான விளக்கங்களில் எதை ஏற்பது என்று திணறுவார்கள். இதெல்லாம் நமது துரதிருஷ்டம்.
சந்திரனும் சுக்ரனும் 6, 8, 12-ல் அமைந்தாலும் பார்வை இழப்பு ஏற்பட அவகாசம் உண்டு. மனமானது கண் வாயிலாக உலகத்தில் தென்படும் விஷயங்களை உணர்ந்து சுவைத்து மகிழ்கிறது. உலகவியல் சுகத்தைக் குறையின்றி அள்ளித்தருபவன் சுக்ரன். சந்திரன் மனம். மனமும் (சந்திரன்) உலகவியலும் (சுக்ரன்) இணைந்து தவறான இடத்தில் (6, 8, 12-ல்) அமையும் வேளையில், கண் பார்வையின் ஒத்துழைப்பு இன்மையின் காரணமாக உலகவியலை அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறது. உலகவியலை அளிப்பவனும் (சுக்ரனும்) சுணக்கமுற்று, ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்துவிடுகிறான். இவை இரண்டும் தட்ப கிரகங்கள். அவற்றின் சேர்க்கை நல்ல பலனை அளிக்கவேண்டும். ஆனால் தவறான இடத்தில் வந்ததால், பலன் அளிக்கும் திறமை இருந்தும், விபரீத செயல்பாட்டை ஏற்கவைக்கின்றன. சில பிரபலங்கள் மாறுபட்ட கோணத்தில் இதை விளக்கி மக்களை திசைதிருப்புகிறார்கள்.

இரவில் கண் பார்வை மங்கி இருப்பவர்கள் ஏராளம் உண்டு. இரவில் லேசான வெளிச்சத்திலும் கண்கள் செயல்படும். இருட்டிலும் நாம் அலுவல்களை கவனிக்க இயலும். ஆனால் சிலரது கண்கள் சூரிய வெளிச்சத்தில் மட்டுமே சரியாக இயங்கும். இதை ‘ராக்கண்ணு’ என்று சொல்லுவது உண்டு. ஆரம்ப நிலையில் ஆயுர்வேதம் அதை சரிசெய்து விடும். காலப் பழக்கமானதை சரிசெய்ய இயலாமல் போய்விடும். பூனை, ஆந்தை போன்றவை இருட்டிலும் கண் பார்வையோடு இயங்கும். அவற்றுக்கு மிகக் குறைவான வெளிச்சமே செயல்பட போதுமானதாக இருக்கும். அதேநேரம், சூரியனின் (பகலில்)அதிகமான வெளிச்சம் கண் மங்கலை அளித்துவிடும்!
நேத்திர ஸ்தானாதிபன் (இரண்டுக்கு உடையவன்) லக்னத்தில் இருந்தால், இரவில் பார்க்கும் திறமை குன்றிவிடும். ஆனால், உச்சம் பெற்று வலுப்பெற்று இருந்தால், லக்னத்தில் இணைந்த இரண்டாம் பாவாதிபன் நல்ல கண் பார்வையோடு சிறப்பிப்பான். இதிலிருந்து, நேத்திர ஸ்தானாதிபனின் வலுவே பார்வையின் பாகுபாட்டுக்குக் காரணமாகிறது என்பதை அறியலாம். அத்துடன், லக்னாதிபதியின் சேர்க்கை அதை அவனிடம் நடை முறைப்படுத்துகிறது.
திருமணத்துக்கு என்றில்லை, வாழ்க்கைக்கே கண் பார்வையின் செழிப்பு வேண்டும். இன்றைய நாளில் சின்னத்திரைகள் பார்வை வாயிலாகத்தான் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காட்சியைக் கண்டுகளிக்கும் எண்ணம்தான் மேலோங்கியிருக்கிறது; சிந்தனை வளம் அல்ல. சீர்திருத்தவாதிகளும் காட்சி வாயிலாகத்தான் மக்களை ஈர்க்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், சிந்தனை வளம் படுத்துவிட்டது. பார்வையில் விஷயத்தை உள்வாங்கும் திறமை வளர்ந்து சிந்தனை வளத்தை முடக்கிவிட்டது. காட்சி வாயிலாக விஷயங்களை உள்வாங்கி, அலசி ஆராய்ந்து, தெளிவு பெறும் திறன் வளரவேண்டும். அதற்கு கண் பார்வை அவசியம். ஜாதகத்தில் ஐம்புலன்களின் இயக்கத்தையும் ஆராயவேண்டும். அதிலும் குறிப்பாக கண் பார்வையின் தரத்தை ஆராய மறந்துவிடக் கூடாது. ஜாதகம் பார்த்து விஷயங்களை விளக்குபவர்கள், ஆராய்ந்து பலன் சொல்ல முற்பட்டால், கண் மருத்துவமனைக்குப் போகும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். மாற்றுக் கண்களைத் தேடி அலையும் அவலம் இருக்காது.

இயற்கையின் படைப்பை மிஞ்சும் அளவுக்கு எந்த மருத்துவமும் சிறப்பு பெறாது. இதை அறிந்த நம் முன்னோர்கள், வருமுன் காப்போம் என்பதைக் கையாண்டு வாழ்ந்தார்கள். வருங்கால இன்னல்களை கோடிட்டுக் காட்டும் ஜோதிடத்தை நம்பினார்கள்; செயல்பட்டார்கள்; வென்றார்கள். சிந்தனை வளம் பெறாதவன் ஜோதிடத்தை மூடநம்பிக்கையாகச் சித்திரித்தான். அதை நம்பி மக்கள் ஏமாந்து போகிறார்கள். ஆதாரம் இல்லாத எந்த தகவலும் எழுத்து வடிவம் பெறாது. எந்தப் பேச்சும் எதிர்பார்ப்பு இல்லாமல் எழும்பாது என்பது முதியோர் வாக்கு (நாமூலம்விக்யதெகிம்சித்...).
கண்களை இழந்தபிறகு சூரிய நமஸ்காரமா என்று சொல்வது உண்டு. அதற்கு ஆதாரம்- ஜாதகத்தில் சூரியனின் பலம் கண் பார்வைக்கு ஊக்கமளிக்கும். உலகத்தின் கண்ணாக (ஆன்மாவாக, பார்ப்பவனாக) சூரியனைச் சுட்டிக்காட்டும் வேதம் (சூர்ய ஆன்மாஜாகத தஸ்துஷ:ச). லக்னத்தின் காரகன் சூரியன்; லக்னத்தை (ஜாதகனை) வழிநடத்துபவன். அவன் பலம் பொருந்தியிருந்தால், நேத்திர ஸ்தானாதி பதியின் (இரண்டுக்கு உடையவனின்) சேர்க்கை நல்ல பார்வை இருப்பதை உறுதி செய்யும். ஜாதகத்தில் லக்னமும், சூரியனும், இரண்டுக்கு உடையவனும் பலம் இழக்காமல் இருந்தால் கண் பார்வை செழிப்பாக இருக்கும்; வாழ்க்கையும் இனிக்கும் என்கிறது ஜோதிடம்.
உலகத்தில் முதல் கண்கொடையாளர் காளஹஸ்தி வேடன் என்று புகழ் பாடுவார்கள். ஈசனுக்கு இரண்டுக்கு மேல் மூன்றாவது கண்ணும் உண்டு. அவருக்கு யாரும் கொடையாக அளிக்கத் தேவை இல்லை. இப்படி ஜோதிடத்திலும் புராணத்தை மேற்கோள் காட்டி, தப்பான விளக்கங்களை அளிக்கும் சிந்தனை வளம் குன்றியவர்களும் உண்டு. அவர்கள் கண்கள் இருந்தும் பார்வை இழந்தவர்களே! தன்னைப் போல் மற்ற உயிரினங்களையும் பார்க்கவேண்டும். அப்படி பார்க்காதவன் குருடன் (பார்வை இழந்தவன்) என்கிறது சாஸ்திரம் (ஆன்ம வத்ஸர்வ பூதானிய: பச்யதிஸபசியதி). ஊனமுற்றவன் பலவற்றை இழப்பான்.
கண் ஊனமுற்றவன் எல்லாவற்றையும் இழப்பான். பேச்சு வராத பண்டைய மனித இனம் தகவல் பரிமாற்றத்துக்கு கண் பார்வையின் ஜாடையை (குறிப்பை) பயன்படுத்தினார்கள் என்று ‘டார்வின்’ கூறுவார். ஆனந்தக் கண்ணீரும் சோகக் கண்ணீரும் கண்ணிலிருந்து வெளிவரும். அதன் பாகுபாட்டை வார்த்தை சொல்லாது; கண்கள் சொல்லும். வராஹமிஹிரரின், ப்ருஹத் ஸம்ஸிதை, பிருஹத் ஜாதகம், கோவிந்தாசார்யனின் தசாத்யாயீ, ஸாராவளி, பலதீபிகை போன்ற நூல்கள் ஜோதிடத்தின் உண்மைக்கு எடுத்துக்காட்டு. கண் பார்வையின் செழிப்பு, இழப்பு, இருந்தும் பயனற்ற நிலை போன்றவற்றை காரண காரியத்தோடு விளக்கிக்கூறும். பராசர ஸம்ஹிதை போன்ற முனிவர்கள் வாக்கும் அதை விளக்கிக் கூறும்.
நம் கண்களுக்கு இலக்கானவற்றை ஒதுக்கி, பல மொழிகளில் தென்படும் மொழிப்பெயர்ப்புகளை யும் புராணத் தகவல்களையும், பக்தனின் கதைகளையும், சிலரது அனுபவங்களையும் சான்றாக எடுத்துக்கொண்டு உண்மை ஜோதிடத் தின் உருவத்தை கண்ணுக்கு இலக்காக்காமல் மறைப்பது தவறு. இன்றைய மக்கள் கண் திறந்து விட்டார்கள். அவர்களைப் பணியவைப்பது கடினம். ஆகவே, உள்ளதை விளக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- தொடரும்