Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

Published:Updated:
அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
அருட்களஞ்சியம்

ஸ்ரீராகவேந்த்ரா..!

சோழ மண்டலத்தில் கடும் பஞ்சம் நிலவிய காலம்! அப்போது, தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த விஜயராகவ நாயக் என்பவர், ஸ்ரீராகவேந்திரரின் மந்திர சக்தியையும், யோக மகிமையையும் பற்றிக் கேள்வியுற்று, குடந்தை வந்து, ‘சுவாமிகளின் பொற்பாதங்கள் தஞ்சை மண்ணில் படவேண்டும்’ என்று பிரார்த்தித்தார். அரசரின் அழைப்பிற்கிணங்கிச் சுவாமிகளும் தஞ்சைக்குச் சென்றார்.

ஸ்ரீமடத்திலிருந்த பணத்தை எடுத்து ஏழைகளுக்கு அளித்தார். திருமகள் உள்ளம் குளிர்ந்தாள். அரசரின் கஜானா மீண்டும் நிரம்பியது. வடவாற்றின் தென் கரையிலிருந்த மடத்தில் தங்கியிருந்த சுவாமிகள், பூஜைகள் செய்தார். தவமிருந்தார். யாகங்களை நடத்தினார். வருண தேவன் மனம் குளிர்ந்தான். வானில் கார்மேகங்கள் சூழ்ந்தன. கடும் மழை பெய்தது. அரசர் அகம் மகிழ்ந்தார். நன்றியின் அடையாளமாக ஒரு வைர மாலையை ஸ்ரீமடத்துக்குப் பரிசளித்தார். அதை ஸ்ரீராகவேந்திரர் அக்னியில் அர்ப்பணித்துவிட்டார். சுவாமிகள் தன்னை அவமதித்து விட்டதாகக் கருதிய அரசர் கடும் கோபங் கொண்டார்.

 இதையறிந்த சுவாமிகள், அக்னிதேவனை வேண்டினார். அந்த வைர மாலை வெளிவந்தது. அதைக் கண்ட அரசர், ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, தம்மை மன்னித்தருளும்படி சுவாமிகளிடம் வேண்டினார். அந்த மாலையை அக்னி தேவன் விரும்பியதால் அவனுக்கு அளித்ததாக விளக்கம் தந்தார் சுவாமிகள். பன்னிரண்டு ஆண்டுகள் தஞ்சைத் தரணியில் தங்கிவிட்டு மீண்டும் கும்பகோணம் வந்து சேர்ந்தார்.

அருட்களஞ்சியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கும்பகோணத்தில் இருந்த சுவாமிகளைத் தரிசிக்க ஒரு சமயம் மூன்று அந்தணர்கள் வந்தார்கள். வரும் வழியில் ஸ்ரீமடத்தில் தங்களுக்கு நல்ல உணவு கிடைக்குமா என்பதைப் பற்றி பேசிக்கொண்டு வந்தனர். ஊருக்குள் வந்ததும் காவிரிக்குக் குளிக்கச் சென்றனர். சுவாமிகளின் சீடர் ஒருவர், துவைப்பதற்காக எடுத்து வந்த குருவின் காஷாய உடையுடன் படித்துறையில் நின்றுகொண்டிருந்தார். அவர் அந்தணர்களைக் கண்டதும், ‘‘கவலை வேண்டாம். ஸ்ரீ மடத்தில் உங்களுக்குத் தேவையான உணவும், இதர வசதிகளும் கிடைக்கும்’’ என்று கூறினார்.

இதைக்கேட்ட அந்தணர்கள், வியப்பில் ஆழ்ந்தனர். பின்னர் தங்கள் மனத்தில் இருப்பதைக் கூறும்படி அந்தச் சீடரிடம் வேண்டினர். ‘‘என்னை ஏன் கேட்கிறீர்கள்? எனக்கு ஒன்றுமே தெரியாது’’ என்றார் சீடர். அப்போது சுவாமிகளின் காஷாயம் அவர் கையில் இல்லை. காவிரியில் இருந்தது. காஷாயத் துணி கையில் இருந்ததால்தான் தங்கள் மனத்திலிருந்ததை அவரால் கூற முடிந்தது என்று உணர்ந்த அந்தணர்கள், ‘காஷாயத்துக்கே இத்தனை மதிப்பு என்றால், ஸ்ரீராகவேந்திரரின் மகிமையைப் பற்றிக் கேட்கவா வேண்டும்’ என்று அவரைத் தரிசிக்கச் சென்றனர்.

ஸ்ரீ மடத்தில் சாப்பிடும்போது சுவாமிகள் மிகப் பரிவோடு அவர்களைக் கவனித்துக் கொண்டார்.

‘‘நான் பிருந்தாவனப் பிரவேசம் செய்தபின் என் பிருந்தாவனத்தைப் பரம்பரையாய் பூஜை செய்யும் பொறுப்பு உங்களிடமே ஒப்படைக்கப்படும். நிவேதனம் தங்களுக்கு என்றும் ஆகாரமாகக் கிடைத்துவிடும்’’  என்று ஆசி வழங்கினார். அந்தப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான் இன்றைக்கும் மந்த்ராலய பிருந்தாவனத்தில் பூஜை செய்து வருகிறார்கள்.

** 10.11.68 ஆனந்த விகடன் இதழிலிருந்து...

அருட்களஞ்சியம்

சோதிடம் பலித்ததா?

அரண்மனை - அந்தப்புரம் பிரார்த்தனையும், நோன்பும், தான தர்மங்களுமாய் இருக்க, சக்ரவர்த்தியோ அந்த அரண்மனையிலேயே மிகப்பெரிய ஒரு மண்டபத்தில் தானும் சோதிடர்
களுமாய், கிரக நட்சத்திரங்களுடன் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்.

சக்ரவர்த்தியின் விருப்பத்துக்கிணங்க, அவர்களும் கணக்குப் போட்டுப் போட்டுப் பார்த்தார்கள். என்ன அதிசயம்! ‘‘நாளைக்கே நல்ல முதன்மையான நாள்தான்” என்று குதூகலமாய்ச் சொல்லுகிறார்கள். குரு வசிஷ்டரிடம் சோதிடர்களின் அபிப்பிராயத்தைத் தெரிவித்து ‘‘பட்டாபிஷேகத்துக்காக முன்கூட்டிச் செய்ய வேண்டிய காரியங்களை இன்றே செய்து முடித்து விடும்” என்று அவரைத் துரிதப்படுத்துகிறான். இந்த மகத்தான சந்தர்ப்பத்தை முன்னிட்டு மகனுக்கு விசேஷ உபதேசம் ஏதாவது வசிஷ்டர் தமது ஞான பொக்கிஷத்திலிருந்து அள்ளிக் கொடுக்கவேண்டுமென்றும் ஆசைப்படுகிறான்.
வந்தாளே கூனி - சுந்தரி!

அலங்கரிக்கப் பெற்ற ரதங்களும் யானைகளும் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருக் கின்றன. அந்த ரதங்களையும் அவற்றில் பூட்டியுள்ள குதிரைகளையும் பார்த்தால், தேவலோகத்திலிருந்து விமானங்கள் பூலோகம் காண வந்திறங்கியிருக்கின்றனவோ! - என்று தோன்றுகிறது. ஜொலிக்கும் நெற்றிப் பட்டங்களுடன் போகும் யானைகளைப் பார்த்தால், உதயகிரி உதயசூரியனை நெற்றியில் தரித்துக் கொண்டு திரிவது போலத் தோன்றுகிறது.

இத்தகைய கோலாகலங்களைப் பார்த்தால், ‘இந்நகரம் பூலோகத்தின் பகுதியன்று; வானத்திலுள்ள தேவராஜதானியாகிய பொன்னகரத்தைச் சேர்ந்ததுதானோ!’ என்று எண்ணத் தோன்றுகிறது. ராம பட்டாபிஷேக குதூகலம், இப்படி அழகுக்கு அழகுசெய்து, விண்ணிலுள்ள சொர்க்கத்தை மண்ணிலே வந்து இறங்கச் செய்துவிட்டது!

அருட்களஞ்சியம்

‘இராவணன் இழைத்த தீமைபோல்’ இவ்வளவு ஆனந்தத்திற்கும் இடையே திடீரென்று தோன்றுகிறாள் ஒருத்தி, திருஷ்டி கழிப்பது போலே!

அந்நகர் அணிவுறும் அமலை, வானவர்
பொன்னகர் இயல்பெனப் பொலியும் எல்லையில்,
இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல்,
துன்னருங் கொடுமனக் கூனி தோன்றினாள்.


கூனியை ‘இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல்’ என்று குறிப்பிடுவது, இதிகாசத்தின் மத்திய சம்பவத்தை எவ்வளவு நாடகத் திறமையோடு நினைப்பூட்டுகிறது!

அயோத்தியை வானளாவ வர்ணித்து விட்டுக் கூனியை இப்படித் தோற்றுவிக்கும் இந்த ரஸிகப் பண்பை என்னென்பது? அயோத்தியின் அதிசௌந்தரியத்துக்குத் திருஷ்டி - பரிகாரம் போல் வரும் கூனி - சுந்தரி, ராவணன் இழைத்த அதீதமான தீமையின் வடிவமாக வருகிறாளாம்.

உருவம் சிறிது; எனினும் கொடுமையை வைத்துத் திணித்திருக்கிறதாம் அந்த உள்ளத் திலே. உருவத்திலும் கூனி; உள்ளத்திலும் கூனி; பேரிலும் புகழிலும் கூனி!

‘உள்ளமும் கோடிய கொடியாள்' என்று வர்ணிக்கப்படும் கூனியின் கோணல்-உள்ளம், ராம பட்டாபிஷேகச் செய்தி கேட்டதும், எத்தனையோ தேள் கொட்டியது போல் துடித்துப் போகிறதாம்.
‘‘என்ன? ராமனுக்கு முடி சூட்டப் போகிறார்களா? அதற்கா இந்தத் தடபுடல்! என்ன வெட்கக்கேடு! அதற்கா இந்த அலங்காரங்கள் எல்லாம்? இந்த ஆசாமிகளுக்கு வேறு வேலையில்லையா? என்ன வீணான செலவு!” என்றெல்லாம் இந்தப் பாழான நெஞ்சு நெருப்புப் பொறிகளை வாரி இறைப்பது போல வார்த்தைகள் சிதறிவிழக் கோபத்தை மூட்டிக்கொண்டு வரும் கூனியை, ‘இராவணன் இழைத்த தீமை போல்’ என்றும்,

மூன்றுல கினுக்குமோர்
இடுக்கண் மூட்டுவாள்!

என்றும், பிரமாதமாய்க் கட்டியங் கூறுவது போல் அறிமுகப்படுத்துகிறான் கவிஞன். ஏன் கூடாது? இன்னும் சொல்லப் போனால், மூன்று உலகினுக்கும் இடுக்கண் மூட்டிய ராவணேச்வரனுக்கும் இடுக்கண் மூட்டப் போகிறவள் அல்லவா இக்கூனி - சுந்தரி?

 குடு குடு... வெடு வெடு!

அருட்களஞ்சியம்

இக் ‘கொடு மனக் கூனி’ குடு குடு என்று கைகேசி - அரண்மனைக்குள் திடும்பிரவேசம் செய்வதையே பார்த்துவிடுகிறோம், - கம்பன் கவிதை என்ற ஜாலக் கண்ணாடி வாயிலாக:

தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள், வெகுளியின் மடித்த வாயினாள்,
பண்டைநாள் இராகவன் பாணி வில்உமிழ்
உண்டைஉண் டதனைத்தன் உள்ளத்(து) உள்ளுவாள்!


கைகேசியின் அரண்மனைக்குள் பிரவேசித் தாள் என்று கூறாமல், ‘மண்டினாள்’ என்று கூறுவது கவனிக்கத் தக்கது. புகை மண்டி இருள் சூழ்ந்து கண்ணை மறைப்பது போல், இவள் கைகேசியின் அறிவுக் கண்ணைப் புகைத்து விடக் குடுகுடுவென்று போகிறாள்! - என்பது குறிப்பு.

‘வெகுளியின் மடித்த வாயினாள்’ என்பதில், உதடுகளை மடக்கிக் கடித்துக்கொண்டு போகும் கோபம் சித்திரிக்கப்படுகிறது. எதிராளி மேலுள்ள கோபம்தான் இவள் உதடுகளை இந்தப் பாடு படுத்துகிறது!
விளையாட்டே வினையாச்சு!

இந்த நிலையில், தன் ஆங்காரத்துக்குத் தூபம்போடுவதுபோல், ராமன் மேலுள்ள கோபத்துக்கும் ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொள்கிறாள். ராமன் சிறு பையனாக இருந்த போது கையில் சிறு வில்லும், களிமண் உருண்டையும் கொண்டு விளையாடுவதுண்டு. ஒரு நாள் குழந்தை - ராமன் இந்தக் கூனி அம்மாளையும், இவளுடைய முதுகுக் கூனையும் பார்த்துவிட்டான். உடனே ‘இதுவும் ஒரு வேடிக்கைதான்’ என்று இவளுடைய கூனை இலக்காகக் கொண்டு அந்தச் சிறு களிமண் உருண்டையைத் தன் கை வில்லில் வைத்து விளையாட்டாக எய்துவிட்டான்.

எய்து, ‘சபாஷ்! குறி தவறவில்லை’ என்று சந்தோஷித்தான். அந்தக் கையில் ‘உமிழ்’ந்த (அதாவது லேசாகத் தள்ளிய) அந்த உருண்டை தன் கூன்மேல் பட்டதைக் கூனியின் கோணல் உள்ளம் மறக்கவே இல்லை. விளையாட்டுப் பிள்ளை செய்த இந்த விளையாட்டுத் தொழிலே வியாஜமாக ஆங்காரத்தை மூட்டிக்கொண்டு, இவள் ராம பட்டாபிஷேகத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டுமென்று கைகேசியின் அரண்மனைக்குள்ளே பிரவேசிக்கிறாள்.

கைகேசி இன்னும் விழித்தெழுந்து வரவில்லை. அதற்காகக் காத்திருந்தாளா கூனி? குடுகுடுவென்று படுக்கையறைக்குள்ளேயே போய்விட்டாள்.

அப்பொழுது அவளது கடைக்கண் மாத்திரம் திறந்திருப்பது போலவும், கருணை பொழிந்து கொண்டிருப்பதாகவும் கவிஞன் காட்டுகிறான். சுத்தமான, கறந்த பால் போன்ற உள்ளத்திலே அன்பும் அமைதியும் வாய்ந்தவள் கைகேசி என்பது குறிப்பு. அவள் தூய வெண்ணிறப் பட்டு மெத்தையில் படுத்திருப்பதும், அவளது தூய நாகரிக உள்ளத்துக்கு ஓர் அறிகுறி என்று கருதலாம்.

இத்தகைய அழகியான கைகேசிக்கும், ஒரே எரிச்சலாய்ப் புகைந்து கொண்டு சரேலென்று இந்தப் படுக்கையறைக்குள் பாய்ந்து வந்த கூனிக்கும் என்ன முரண்பாடு, பாருங்கள்! எனினும் என்ன பாசம்!
கூனி அங்கே வந்து நின்றது கைகேசிக்குத் தெரியாது. பஞ்சணை மேல்  தூங்கிக்கொண்டு தான் இருக்கிறாள். கூனி அவள் எழுந்திருக்கும் வரையிலும் காத்திருக்கவில்லை. உடனே எழுப்பப் பார்க்கிறாள். அவ்வளவு நெருங்கிய பழக்கம் இந்தத் தாதிக்கு எஜமானியம்மாளிடம்.

கூனி எப்படி எழுப்புகிறாள்? தன் ஆத்திரத்துக்கு இசைய அவசரமாகத்தான் எழுப்புகிறாள்; ஆனால் சத்தம் போட்டோ, நாகரிகமற்ற வேறு முறையிலோ எழுப்பி விடவில்லை. மெள்ளக் கால்களைத் தடவிக் கொடுக்கிறாள். இந்தக் காட்சியைத்தான் கவிஞன் எப்படி அனுபவிக்கிறான், பாருங்கள்:

எய்தி, அக் கேகயன்
  மடந்தை - ஏடவிழ்
நொய்தலர் தாமரை
  நோற்ற நோன்பினால்
செய்தபே ருவமைசால் -
  செம்பொன் - சீறடி,
கைகளில் தீண்டினாள்,
  காலக் கோள் அ(அன்)னாள்.


‘கைகேசியின் மிருதுவான மலரடிகளுக்கு உவமையாகச் சொல்வதற்குத் தாமரை மலர் தான் என்ன தவம் செய்ததோ?’ என்ற கவிதானுபவத்தைப் பாருங்கள். இத்தகைய மலரடிகளைக் கூனி மெள்ளத் தீண்டித் தடவியதும் கைகேசி விழித்துக் கொள்ளப் போகிறாள். பாம்பு தீண்டியது போல் கூனி தீண்டி, துயிலுணர்ந்த கைகேசி மீது விஷத்தைக் கொட்டுவது போல வார்த்தைகளைக் கொட்டப் போகிறாள்.
குடுகுடு என்று வந்த கூனி வெடுவெடு என்று பேசப் போகும் போக்கையும், கூனி - கைகேசிகளின் சம்பாஷணையையும் தொடர்ந்து பார்ப்போம்.

அருட்களஞ்சியம்

சூழ்ச்சி - வலை

பெரியோரை உறக்கத்திலிருந்து அவசரமாக எழுப்புவதற்கு நமது நாட்டுப் பண்புக்கு ஏற்ற இதமான நாகரிக முறை, கூப்பாடு போடுவதன்று; உடம்பைப் பிடித்து அலைப்பதன்று; காலைப் பிடிப்பதுதான். அந்த முறையைத்தான் கைக்கொண்டாள் கூனியும் கைகேசியை எழுப்புவதற்கு. எனினும் தூமகேது போலத் தோன்றிய கூனி, காலைத் தீண்டியது சர்ப்பம் தீண்டியது போலத்தான்! (இந்த வால் நட்சத்திரத்துக்கு வால் இல்லை, கூன்தான்!)

தூக்கம் போனாலும் தூக்க மயக்கம் போய்விடவில்லை, அந்த நீண்ட கண்களிலே. அப்படி விழித்ததும் விழிக்காததுமாயிருந்த நிலையில் செய்யும் தலையணை மந்திரம் வீண் போகாது; பகுத்தறிவின் விசேஷ எதிர்ப்பின்றி அப்படியே, உள்ளத்துக்குள்ளே, போய்ச் சேர்ந்துவிடும் என்பர். அத்தகைய சந்தர்ப்பத்தைக் கூனியம்மாள் எப்படிப் பயன் படுத்திக்கொள்கிறாள், பார்க்கலாம்:

‘தீப்பிடித்த வீட்டிலே கிடந்து உறங்குவார் உண்டா?’ எனத் திடீரென்று கலங்கச் செய்து எழுப்புவதுபோல் கூனி பேசுகிறாள்.

‘’என்னடி உளறுகிறாய்? எனக்கேதடி இடர்? என் புத்திரசிகாமணிகள் நால்வரும் க்ஷேமமா யிருக்க, எனக்கும் உண்டோ குறை? என் பிள்ளைகளெல்லாம் இளவரசர்களாகவே பல அரசாங்க இலாகாக்களையும் அறம் தவறாமல் மேல் பார்த்து வருகிறார்களல்லவா?” என்றெல்லாம் சொல்லிக்கொண்டே, தன் பார்வை வேல்போல் கூனி மேல் பாயக் கோபமாய்ப் பார்க்கிறாள் கைகேசி.

‘இராமனைப் பயந்தஎற்(கு)
இடர்உண் டோ?’ என்றாள்.


‘‘ஸ்ரீராமச்சந்திரனைப் பெற்றெடுத்த எனக்கு என்னடி துன்பம்?” என்று பேசும் கள்ளங்கபடமற்ற மன நிலையைப் பாருங்கள்.

எனினும் கூனியின் கோணல் உள்ளத்தில் சமயோசித புத்திச் சாதுரியத்துக்கும் குறைவில்லை. இவள், பேச்சை வேறொரு கோணமாகத் திருப்பி, ‘சக்களத்திக் காய்ச்சலை’ உண்டுபண்ணப் பார்க்கிறாள்:

வீழ்ந்தது நின்நலம்; திருவும் வீழ்ந்தது!

வாழ்ந்தனள் கோசலை மதியி னால்!’ என்றாள்.


‘‘உன் செல்வமும் போச்சு, செல்வாக்கும் போச்சு! மதியினால் வாழ்ந்தாள் உன் சக்களத்தி!” என்று குத்திக்காட்டும் கூனி, ‘‘நீ விதியினால் அல்ல, புத்தித் தாழ்வால் தாழ்ந்து போனாய்!’’ என்பதைக் கைகேசிக்குச் சொல்லாமல் சொல்லி விடுகிறாள்.

** 17.3.46, 7.4.46, 14.4.46 மற்றும் 21.4.46

ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism