Published:Updated:

ஆலயம் தேடுவோம்

பார்வை அருளும் பரமன்!எஸ்.கண்ணன்கோபாலன்

பிரீமியம் ஸ்டோரி

சுக்களாகிய ஆன்மாக்களை பாசமாகிய தளைகளில் இருந்து விடுவித்து, தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் பதியாம் ஈசன், பசுபதீஸ்வரர் என்னும் திருநாமம் கொண்டு அருள்புரியும் தலங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றாக ஒருகாலத்தில் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்தது, தேவஸ்தான புடையூர் என்னும் தலத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத பசுபதீஸ்வரர் திருக்கோயில்.
ஒருகாலத்தில் பிரசித்தி பெற்று இருந்த ஆலயம், இன்றைக்கு மிகவும் சிதிலம் அடைந்து திருப்பணிக்குக் காத்திருப்பதாக வாசகர் ஒருவர் நமக்குத் தெரிவித்தார்.

விருத்தாசலத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இந்த தேவஸ்தான புடையூர் என்னும் தலத்தில் அமைந்திருக்கும் ஆலயத்தை தரிசிக்கச் சென்றோம். ஆலயத்தின் தோற்றத்தைப் பார்க்கும்போதே, ஒருகாலத்தில் பிரமாண்டமாகத் திகழ்ந்த ஆலயம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இன்றைக்கு அந்த ஆலயம் மிகவும் சிதிலம் அடைந்தும், கோபுரங்களில் செடிகொடிகள் புதராக மண்டி இருப்பதையும் கண்டபோது நெஞ்சம் பதறிப் போனோம். ‘நாளும் நம்மைக் காக்கும் ஐயனின் ஆலயத்துக்கா இந்த அவலம்’ என்று மனசுக்குள் கதறினோம்.

இங்குள்ள ஐயன் பசுபதீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்றதன் பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

ஆலயம் தேடுவோம்

முற்காலத்தில் இந்தப் பகுதியில் இருந்த ஒருவனின் பண்ணையில் நிறைய மாடுகள் இருந்தன. அவற்றில், வெண்மை நிறத்துடன் இருந்த பசு ஒன்று தன் மடியில் பால் அருந்த வரும் தன் கன்றினை உதைத்துத் துரத்தியது. தான் ஈன்ற கன்றுக்கே பால் தராமல் உதைக்கும் பசுவின் செயலுக்கான காரணம் அவனுக்குப் புரியவில்லை.

ஒருநாள் மாடுகள் வீடு திரும்பும் மாலை வேளை யில், அந்தப் பசுவைப் பின் தொடர்ந்து வந்தான். வழியில் இருந்த செங்கை முள் தோப்புக்குள் தன் பசு, செல்வதைப் பார்த்துவிட்டு, கற்களை எடுத்து அந்தப் பசுவின் மீது எறிந்தான். அப்படியும் பசு திரும்பி வராததால், தோப்புக்குள் சென்று பார்த்தான். தான் பசுவை அடிப்பதற்காக வீசிய கற்கள், அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்திருப்பதையும், பசு சிவலிங்கத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டான். புனிதமாகப் போற்றி வணங்கப்பட வேண்டிய பசுவை அடிப்பதற்காக வீசிய கற்களைத் தாங்கிக்கொண்ட ஈசன், பசுவை கற்களால் அடித்த வனின் பார்வையைப் போக்கிவிட்டார். பசுவைத் துன்புறுத்த நினைத்த தன் செயலுக்கு வருந்தியதுடன், பிராயச்சித்தமாக ஐயனுக்கு ஓர் ஆலயம் அமைத்து, இழந்த பார்வையைத் திரும்பப் பெற்றான் அவன். அதுவே இந்த பசுபதீஸ்வரர் திருக்கோயில்.

ஆலயம் தேடுவோம்

நாம் அந்த ஆலயத்தை வலம் வந்தோம். பசுபதீஸ்வரர், அகிலாண்டேஸ் வரி, பைரவர், சூரியன், கம்பத்து விநாயகர், ஆறுமுகக் கடவுள், ஸ்ரீதேவி பூமிதேவி சமேத திருமால், நாகலிங்கேஸ்வரர், நடன விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை சந்நிதிகளை தரிசித்த நாம், உடன் வந்த திருப்பணிக்கமிட்டி உறுப்பினர் திருஞானசம்பந்தர் என்பவரிடம் திருப் பணிகள் பற்றியும், ஆலயத்தின் சிறப்புகள் பற்றியும் கேட்டோம்.

ஆலயம் தேடுவோம்

‘‘தேவார வைப்புத் தலமான இந்தக் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் இருக்கிறது. பல வருஷமாகவே சிதிலம் அடைந்திருந்த இந்தக் கோயிலுக்கு, சுமார் 30 வருஷத்துக்கு முன்பாக கோவையைச் சேர்ந்த சிவபிரகாச சுவாமிகள் திருப்பணி செய்ய முன்வந்தார். ஆனால், போதிய பணம் கிடைக்காததால் திருப்பணிகளை முடிக்க முடியாமல் போய்விட்டது.

இப்போது ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் ஒரு கமிட்டி ஏற்படுத்தி திருப்பணிகளைத் தொடங்க நினைத்திருக்கிறோம். விரைவிலேயே திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதுதான் ஊர்மக்களின் விருப்பம். பசுபதீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும்தான் அருள்புரிய வேண்டும்’’ என்றார்.

ஆலயம் தேடுவோம்

‘‘இங்கே முருகப் பெருமான் ஆறுமுகக் கடவுளாக கல்யாணக் கோலத்தில் காட்சி தருகிறார். செவ்வாய் தோஷம் போன்ற காரணங்களால் திருமணம் தடைப்படும் ஆண்களும் பெண்களும் செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வந்து ஆறுமுகக் கடவுளை வணங்கினால் விரைவிலேயே திருமணம் நடைபெற்று விடுகிறது என்று பல பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். அதேபோல் இந்தக் கோயிலில் அருள்புரியும் பசுபதீஸ்வரருக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டால், கண் பார்வை தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பதும் ஐதீகம்’’ என்றார் பாண்டியன் எனும் அன்பர்.

ஆலயம் தேடுவோம்

ஆகம விதிப்படி மிகச் சிறப்பான முறையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு, பல மன்னர்கள் திருப்பணிகள் செய்திருப்பதாகக் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஊர்மக்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.

ஆலயம் தேடுவோம்

நமக்கெல்லாம் அருள்புரியவேண்டும் என்று கருணை மனம் கொண்டு, பசுவின் மூலமாகத் தம்மை வெளிப்படுத்திக்கொண்ட ஐயன் பசுபதீஸ்வரரின் திருக்கோயில் மறுபடியும் புதுப் பொலிவு பெறவேண்டாமா? நாளும் பொழுதும் அங்கே நித்திய பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாழ்வில் சந்தோஷம் நிலவவேண்டாமா?
இப்படியெல்லாம் நடைபெற நாமும் நம்மால் இயன்ற பொருளுதவியை பசுபதீஸ்வரர் கோயில் திருப்பணிக்கு உதவவேண்டாமா? அது நம்முடைய கடமையும் அல்லவா?
‘கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற்போலச் சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று’ அருளும் ஐயன் திருக்கோயில் மீண்டும் புதுப் பொலிவு பெற்றிட நம்மால் இயன்ற நிதியுதவியைச் செய்து, நாமும் நம் சந்ததியினரும் வாழ்வாங்கு வாழ்ந்திட ஐயன் திருவருள் பெறலாமே!

படங்கள்: எஸ்.தேவராஜன்

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது?

கடலூர் மாவட்டம் விருத்தாசலம்-வேப்பூர் சாலையில் சுமார் 15 கி.மீ.தொலைவில் உள்ள கண்டப்பன்குறிச்சி என்ற ஊரில் இருந்து சுமார் 4 கி.மீ.தொலைவில் உள்ளது தே.புடையூர். விருத்தாசலத்தில் இருந்து பேருந்து மூலம் கண்டப்பன் குறிச்சிக்குச் சென்று, அங்கிருந்து ஆட்டோ மூலம் கோயிலுக்குச் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு