Published:Updated:

கேள்வி பதில்

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

மனதுக்கு மருந்தாகுமா இறை சிந்தனை?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி பதில்

மனதுக்கு மருந்தாகுமா இறை சிந்தனை?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

? பங்குனி உத்திரத்துக்கு பழநிக்குப் போகலாமா என்று உறவினரிடம் கேட்டேன். தன்னால் வர இயலாது என்றவர், அதற்கான காரணத்தையும் பகிர்ந்துகொண்டார். மகன் குடும்பத்தில் பிரச்னை. அவனுக்கும் மருமகளுக்கும் மனரீதியாக கவுன்சிலிங் தேவைப்படுகிறது. அதற்கு ஏற்பாடு செய்யவேண்டி இருப்பதால் பழநிக்கு வர இயலாது என்று தெரிவித்தார். அந்தக் காரணம், எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

நம் முன்னோர், அறத்தாலும் ஆன்மிகத்தாலும் ஆன்ம பலம் பெற்றிருந்தார்கள். அதனால் அவர்களின் மனம் செம்மையாகவும், வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைந்தது. அவர்களின் அந்த பாதையில் இருந்து விலகியதாலேயே தற்போதைய தலைமுறையினர் பெரும் துயரங்களைச் சந்திக்க நேரிடுகிறது எனக் கருதுகிறேன். தங்களின்  விளக்கம் என்ன?

- கே.எஸ்.ஜானகிராமன், திண்டுக்கல்

 முதல் கோணம்

தாழ்வு மனப்பான்மையும், பாதுகாப்பின்மை யும் மனதில் குடியேறிவிட்டால், சுதந்திரமான சிந்தனை தலைதூக்காது. அவன் உயர்ந்தவன் - நான் தாழ்ந்தவன், அவன் செல்வந்தன் - நான் ஏழை, அவன் படித்தவன் - நான் படிக்காதவன், அவன் புகழோடு விளங்குகிறான் - நான் இகழ்ச்சியில் தவிக்கிறேன், அவன் நினைத்ததெல்லாம் நடக்கிறது - நான் நினைத்தது நிறைவேறுவது இல்லை,  அவன் பாதுகாப்போடு இருக்கிறான் - எனக்குப் பாதுகாப்பு இல்லை... இப்படி, பிறரது வாழ்க்கை வளத்தைக் கண்ணுற்று தன்னை தாழ்த்திக் கொள்பவர்கள் உண்டு. இப்படியான மதிப்பீடுகள், அவர்களது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு!

அவர்களின் சிந்தனையானது கடந்த கால அனுபவத்தை வைத்து வருங்காலத்தை மதிப்பீடு செய்யும். கடந்த காலம் திரும்பி வராது. அந்த அனுபவம் பொது நியதியல்ல. வருங்காலத்தின் மதிப்பீடும் உண்மை அல்ல; வெறும் கற்பனை. அது, நடைமுறைக்கு வராது. கற்பனையில் தோன்றும் எதிர்காலத்தை உண்மை என்று நினைத்து, அதற்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் செயலில்
ஈடுபடவைக்கும். அதாவது, பிறக்காத குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று நினைப்பவனாக மாறிவிடுவான்!

கேள்வி பதில்

? வருங்காலம் கற்பனை என்கிறீர்கள். ‘வருமுன் காப்போம்’ என்றும், எதிர்காலத்துக்காக இப்போதே செயல்படுங்கள் என்றும் அறிவுறுத்துவதும் உங்களைப் போன்றவர்கள்தான்! எனில், எது சரி?
எது தவறு?


கடந்தகால அனுபவத்தைக் கொண்டு வருங்காலத்தை மதிப்பிடுவது தவறு என்பதே எங்கள் கருத்து. அந்த தவறைச் செய்யத் தூண்டுவது, செம்மை இல்லாத மனம். ஒருவனை உயர்ந்தவனாகவோ, தாழ்ந்தவனாகவோ உருவாக்க இயலாது. உயர்வு, தாழ்வு என்பதை மனம்தான் தீர்மானிக்கிறது. ஒருவன், முயற்சி எடுத்துக்கொண்டு முன்னேறுகிறான். வேறொருவன் அதைக் கண்ணுற்றும், எந்த முயற்சியும் இல்லாமல் முன்னேற்றத்தை அடைய விரும்புகிறான். அது கிடைக்காதபோது, அவன் மனம் தன்னை தாழ்ந்தவனாக நினைத்து வருந்துகிறது. ஆக, உயர்வு - தாழ்வு எல்லாம் சிந்தனை மாற்றத்தில் தோன்றும் பொய்யான மதிப்பீடு.

செல்வந்தனும் போற்றப்படுகிறான். ஆன்மிக வாதியும் போற்றப்படுகிறான். இரண்டையும் எட்ட முடியாதவன், ‘அவை தனக்கு எட்டாக் கனி’ என்று நினைத்து, செல்வந்தரிடமோ அல்லது ஆன்மிகவாதியிடமோ அடைக்கலமாகிவிடுகிறான்.அந்த இரு தரப்பினரையும் எப்போதும் குறைந்தது பத்து பேர் சூழ்ந்திருப்பார்கள். இவர்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று மதிப்பீடு செய்யமாட்டார்கள் ஆன்மிகம் உயர்ந்தது, செல்வம் தாழ்ந்தது என்ற மதிப்பீடே தோன்றாது. அதில் இணைந்தவர்கள், இரண்டையுமே உயர்வாக மதிப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில்

? எனில், ஆன்மிகவாதிகளைப் பின்பற்றுவதும் அவர்களின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதும் தவறாகுமா?

தனியொருவன் தனது சுய சிந்தனையை முடக்கி, மற்றவர்களிடம் அடைக்கலமாகும் எண்ணம் தாழ்வு மனப்பான்மையின் வெளிப் பாடு எனச் சொல்ல வருகிறோம். பிரபலங்களின் விசிறிகளாக மாறி, தனது முன்னேற்றத்துக்கு முயற்சி எடுக்காமல், எப்போதும் விசிறிகளாகவே இருப்பதை பெருமைக்கு உரியதாக எண்ணுபவர்களில் பலபேர், தாழ்வு மனப்பான்மையைத் தழுவியவர்களே! வாழ்வின் குறிக்கோளை முற்றிலும் மறந்து, மேற்சொன்ன இரு தரப்பினரில் ஒருவருக்குத்தான் செய்யும் பணிவிடைகளால் ஏற்றம் காண நினைப்பவர்கள், தாழ்வு மனப்பான்மையில் சிக்கிக் கொண்டவர்கள் ஆவார்கள்.

ஷீர்டி பாபா, ஸத்ய சாயிபாபா, ரமண மகரிஷி, பீடாதிபதிகள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள். பக்தி சொற்பொழிவாளர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், திரையுலக பிரபலங்கள், மிகப்பெரிய செல்வந்தர்கள், விளையாட்டு வீரர்கள், சமுதாய சேவகர்கள் இவர்களெல்லாம் உயர்ந்தவர்கள் என்று எண்ணி, அவர்களில் ஒருவராக மாற இயலாமல், அவர்களின் விசிறிகளாக அடைக்கலமாகி, தனது தாழ்வு மனப்பான்மைக்கு திரைமறைவை ஏற்படுத்திக்கொண்டு, நிம்மதி தேடுகிறார்கள்!

கேள்வி பதில்

வேலையில் நுழைந்ததும் வருங்கால வாழ்க்கையின் வரைபடத்தை உருவாக்கி, அதை எட்டுவதற்கு பண சேமிப்பில் இறங்கி, நிகழ்கால வாழ்வை சுரத்தில்லாமல் செய்துகொண்டு, வருங்கால கற்பனை வாழ்க்கை நடைமுறைக்குத் தென்படாததால் தவித்து மருகுபவர்களும் உண்டு. பணம் பாதுகாக்கும் என்ற நினைப்பில், வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி, சிறுகச் சிறுக சேமித்து, வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும், வீடு - வாசல், வாகனம் ஆகியவற்றை அனுபவிக்க எண்ணும் வேளையில், புலன்கள் தளர்ச்சி அடைந்திருக்கும். ஆக, எதையும் அனுபவிக்க இயலாமல் அத்தனை சேமிப்புகளையும் விட்டுவிட்டு உயிர் துறப்பவர்களும் உண்டு. இப்படியானவர்கள், வருங்காலத்தை நினைத்து நிகழ்காலத்தை இழக்கிறார்கள். அதாவது, சுகத்துக்கு உகந்த உருப்படிகள் தயாராக இருந்தும், அந்த சுகத்தை உணரும் புலன்களின் இழப்பால், தோல்வியைத் தழுவுகின்றனர்.

? சரி! இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் சொல்லும் தீர்வுதான் என்ன?

மனிதப் பிறவி சிந்தனை வளம் பெற்றது. தனது சிந்தனையால் தன்னை உயர்த்திக்கொள்ள இயலும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தனது தேவைகளை சுயமாக ஈட்டி அனுபவிக்க இயலும். உயர்வு - தாழ்வு என்ற பாகுபாட்டை மறந்து, நிம்மதியான வாழ்க்கையை தனது சிந்தனையால் பெற இயலும். அப்படியொரு உயர்ந்த சிறப்பான பிறவி மனிதப்பிறவி.

அதன் தரத்தை அறிந்துகொண்டு சுணக்கமின்றி செயல்பட்டால், அவனைப் பின்பற்றுபவர்கள் தானாகவே வந்து இணைவார்கள். மனிதப் பண்பில் மிக உயர்வான ஒழுக்கமும் பண்பும் உருக்குலையாமல் இருந்துவிட்டால், தாழ்வு மனப்பான்மையும் பாதுகாப்பு இன்மையும் தலைதூக்காது. இந்த நிலையை அடைவதற்கு வாழ்க்கையின் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உடல் உழைப்பையும் ஏற்க வேண்டும். இந்த இரண்டும் தென்படாத இடத்தில், தாழ்வு மனப்பான்மையும், பாதுகாப்பு இன்மையும் தலைதூக்கி அவனை அலைக்கழித்துவிடும்.

பண்டைய பாரதம் தனது பண்பாலும் நெறிமுறைகளாலும் தலைநிமிர்ந்து நின்றது என்பதை உணர வேண்டும். வாழ்க்கைமுறை மாறுபாட்டை எட்டினாலும், அடித்தளமான நேர்மையும் உழைப்பும் எத்தகைய மாறுபாட்டிலும் வெற்றியை அளிக்கும். பண்புக்கும் நெறிமுறைக்கும் கடவுள் வழிபாடு தேவை. உயர்வுக்கு உழைப்பும் தேவை. இதை உணர்ந்தால், பிறந்த பூமியே சொர்க்கமாகிவிடும்.

 இரண்டாவது கோணம்

தங்களின் சிந்தனை தற்காலச் சூழலுக்குப் பொருத்தமற்றது. இன்றைய சமுதாயத்துக்கு உதவாத பழைய சிந்தனைகளை புதுப்பிப்பது வீணான செயல். ஆன்மிகத்தை ஒதுக்கிவிட்டு யுக்தி வாதத்தில் ஈடுபடும் சமுதாயத்துக்கு, பண்பும் நெறிமுறையும் ஏற்க முடியாத ஒன்று.

இயற்கையில் கொட்டிக்கிடக்கும் வளங்களை எல்லோரும் பகிர்ந்துகொண்டு, நோய்நொடியின்றி இன்பத்தைச் சுவைத்து வாழவேண்டும். உயிர் பிரிந்த பிறகு மறுபிறவியற்ற நிலையை எட்ட வேண்டும் என்ற கற்பனையை ஏற்க இன்றைய சமுதாயம் தயார் இல்லை. இல்லாத ஒன்றை இருப்பதாகச் சித்திரித்து, அதை ஈட்டும் பொருட்டு நிகழ்கால வளங்களைப் புறக்கணித்து, ‘வருங்கால உயர்வுக்காக’ எனும் பெயரில் இல்லாத ஒன்றை எட்ட நினைப்பது அறியாமையில் வெளிப்பாடு. பண்பு, அறநெறி, ஒழுக்கம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, அவர்களது சுய சிந்தனையையும் உழைப்பையும் திசைதிருப்பிவிட்டு, அவர்களது தாழ்வு மனப்பான்மையைப் பயன்படுத்தி, ஒருசிலர் தங்களது முன்னேற்றத்தை உறுதிசெய்யும் திரிசமன் எப்படி பண்பாகும்?

கேள்வி பதில்

? அதுபோன்றவர்களை அடையாளம் காண, அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆன்ம பலம் பெற, பண்பும் ஒழுக்கமும் அவசியம் என்பது உங்களுக்கு உரைக்கவில்லையா?

பண்பும், நெறிமுறையும் ஏட்டளவிலேயே இருக்கின்றன; நடைமுறையில் இல்லை. அதை கையாளுபவர்களும் ஏளனத்துக்கு உள்ளாவார்கள்! பண்டைய ஆன்மிகவாதிகள் விட்டுச் சென்ற அறக்கட்டளைகளையும், உயர்ந்த நெறிமுறைகளையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தாமல், அவற்றை தங்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே பயன்படுத்துப வர்களே அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களது சிந்தனையும் காலத்துக்கு உகந்த வகையில் மாற்றத்தை ஏற்கிறது. உலகளாவிய காலமாற்றம் சட்டதிட்டங்களுக்கு புது வடிவம் கொடுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டு விடும். கால மாற்றத்தின் போக்கை யூகித்து, வருங்கால வளமான வாழ்வுக்கு வரைபடம் உருவாவது அவசியம்.

வருங்கால மழையை எதிர்பார்த்து, முன்ன தாகவே அணையைக் கட்டினால்தான் பயன் உண்டு. மக்கள் பெருக்கத்துக்கு உகந்த வகையில், வருங்கால மனிதவள வளர்ச்சியைக் கண்ணுற்று, அதில் கவனம் செலுத்தி மதிப்பீடு செய்து, அதற்கேற்ப உழைப்பைத் திருப்பிவிட்டால் மட்டுமே எல்லோரது வாழ்க்கையும் இன்பமயமாக மாற இயலும். எல்லா சட்டதிட்டங்களும் காலத்துக்கு உகந்த வகையில் மாறிக்கொண்டிருக்க வேண்டும். நிரந்தரமான சட்டதிட்டம் என்றும் விலைபோகாது. நமது முன்னேற்றத்துக்கு சட்டதிட்டம் பயன்பட வேண்டும். இருக்கும் சட்டதிட்டத்தை அப்படியே காப்பாற்றுவது நமது கடமை ஆகாது.

? அதாவது, நமது வசதிக்கு ஏற்ப எல்லா வரையறைகளையும், அறநெறிகளையும் வளைத்துக்கொள்ளலாம் என்கிறீர்கள்! அது சரியா?

 வாழப் பிறந்தவனின் வாழ்க்கைக்கு உகந்த வகையில் சட்டதிட்டம் இருக்கவேண்டும். ஏற்கெனவே இருக்கும் சட்டம், பலபேருக்கு முன்னேற்றத்தடையாக இருந்தால், அதை மாற்றி அமைக்கவேண்டியது கட்டாயம். பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய சமுதாயத்துக்கு உகந்த சட்டதிட்டத்தை சிரஞ்ஜீவியாக்க முயற்சிப்பது, தற்கொலைக்குச் சமமாகும்.

கடவுளைப் பார்த்தவரும் இல்லை, அடையாளம் காட்டுபவரும் இல்லை. ‘அன்னையே கடவுள்’ என்று பறைசாற்றிக் கொள்பவர்களே இருக்கிறார்கள். நம்மைப்போல் பிறவி பெற்ற, நம்மோடு ஆசாபாசத்தில் சாதாரண மனிதனாகத் தென்பட்டவனைக் கடவுளாகப் பார்க்க மனம் இடமளிக்கவில்லை. சுரத்தான வாழ்க்கையைச் சிக்கலானதாகச் சித்திரித்து, மகிழ்ச்சியானது எனும் ஒரு கற்பனை உலகைச் சுட்டிக்காட்டி திசைதிருப்பும் முயற்சி எப்படி பண்பாகும். அதனால் நடைமுறை வாழ்வில் துயரமே மிஞ்சும். எல்லாம் துறந்த துறவியும் உலகவியல் சுகத்தை துறக்கவில்லை.

நேற்றுவரை நம்மோடு பழகிய சராசரி மனிதன், ஒரு சுப்ர பாதத்தில் துறவி உடை அணிந்து அறிவாளியாக பிரகடனப்படுத்தப்படுகிறான்! ஆக, ‘துயரம் தொடாத ஆனந்தமயமான வாழ்க்கைக்கு ஆன்மிகம் வழி வகுக்கும்’ என்று போகாத ஊருக்கு வழி சொல்வது அறநெறியும் இல்லை, பண்பும் ஆகாது!

? ஒன்றிரண்டு உதாரணங்களைக் காட்டி, ஆன்மிகத்தில் எல்லாமே தவறு என்று சொல்வது எப்படிச் சரியாகும்?

உழைக்கும் வர்க்கம் உழைத்துக் கொண்டிருக்கிறது. சுரண்டும் வர்க்கம் சுரண்டிக் கொண்டிருக்கிறது. ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, உழைக்கும் வர்க்கத்தின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், பாதுகாப்பு இன்மையும் ஏற்படுத்தி, அவர்களிடம் இருந்து இனாமாக கிடைத்த ஒத்துழைப்பில் தன்னை உயர்த்திக் கொண்டு  மகிழ்கிறது சுரண்டும் வர்க்கம். எந்த மனதிலும் பாதுகாப்பு இன்மையோ தாழ்வு மனப்பான்மையோ தானாக உருவாகாது. பிறரது தூண்டுதலால் அவை இடம்பிடித்து விடுகின்றன. அவற்றை அகற்றுவதற்கு கடவுளின் அருளோ, மகானின் அருளோ பயன்படாது. ஆபத்தில் சிக்கியவனை கைதூக்கி விடாமல் கடவுளை வழிபடு, பண்பை கடைப்பிடி என்று சொல்வது, கையாலாகாதவனின் பிதற்றல்.

வருங்காலத்தின் தரத்தை உணர்ந்து, முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு, விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுதான் பண்பு. அதுவே நெறிமுறை. ஆனால், அவனை ஆன்மிகத்திலும் அறத்திலும் திருப்பிவிட்டு, தனது முன்னேற்றத்துக்கு பயன்படுத்தும் அவலத்தையே இங்கு பார்க்க இயல்கிறது. அவர்கள் வலுவிழப்பதற்கு, அவர்களிடம் தென்படும் தாழ்வு மனப்பான்மையையும், பாதுகாப்பின்மையையும் காரணம் காட்டி,  அதை அவர்களை ஏற்கவைப்பதே பண்பு ஆகிறது!

 மூன்றாவது கோணம்

தங்களது மதிப்பீடு தவறு. மனித வாழ்க்கையே, புலன்களின் வேட்கையைத் தணித்துக் கொள்வதற்காகத்தான் என்ற முடிவுக்கு வந்துள்ளீர்கள். அதன் வலுவை உருக்குலைக்காமல் தணித்துக்கொள்ள வேண்டும். கடவுளை ஏற்கவேண்டாம், பண்பையும் அறநெறியையும் ஒழுக்கத்தையும்கூட ஒதுக்கிவிடலாம். அப்படி இருந்தாலும் வேட்கையைத் தணித்துக்கொள்ளும் முயற்சி வெற்றி பெறாது. மனம் நினைத்ததை மட்டுமே புலன்கள் செயல்படுத்தும்.

? நீங்கள் சொல்வதுபோல், எல்லாவற்றுக்கும் மனமே காரணம் என்றே வைத்துக்கொள்வோம். அந்த மனம் சிறக்க ஆன்மிகம் மட்டும்தான் வழியா?

தாழ்வு மனப்பான்மையும், பாதுகாப்பின்மையும் மனதில் உருவாகிறது. பிறரது உபதேசமும், தூண்டுதலும் அதை உருவாக்காது. மனம் வலுவில்லாமல் சிந்தனை வளம் முடங்கிக்கிடப் பவனை, தாழ்வு மனப்பான்மை தானாகவே பற்றிக்கொள்ளும். அத்துடன் பாதுகாப்பின்மையும் சேர்ந்துவிடும். அவற்றை விலக்குவதற்கு, அவனுடைய மனம்தான் முயற்சிக்க வேண்டும். பண்பும், அறநெறியும், கடவுள் நம்பிக்கையும், ஒழுக்கமும் அதை மனதில் இருந்து கிள்ளி எறிந்து விடும். இவற்றுக்கு மாற்றுவழி இதுவரை தென்படவில்லை. மனம்தான் தெளிவு பெற்று ஏற்கவேண்டும். அதை அகற்றும் மருத்துவர் இன்னும் உருவாகவில்லை. ஆன்மிக அறிவில் மனம் தெளிவை எட்டினால், இரண்டும் மறைந்து விடும்.

அதற்கு முயற்சிக்காமல் தாழ்வு மனப்பான்மை, பாதுகாப்பின்மை இரண்டையும் தக்கவைத்துக் கொண்டிருப்பவனிடம், பொருளாதாரச் செழிப்பையும், கல்வியையும், பதவியையும் வலுக்கட்டாயமாகத் திணித்தாலும்கூட, அவன் போலி மகிழ்ச்சியுடனேயே திகழ்வான். இரண்டும் விலகினால் மட்டுமே உண்மையான மகிழ்வை உணர இயலும். மனம், உடலுறுப்புகளில் வலுவான ஒன்று. அதன் செயல்பாடு சிறக்காமல், எந்த லோகாயத வாழ்க்கையும் இனிக்காது. லோகாயதம், ஆன்மிகம் என்று இரண்டில்லை. லோகாயத மகிழ்ச்சியை நிறைவு செய்வது ஆன்மிகம்.

ஆன்மாவின் செயல்பாட்டை உணர்ந்து, மனதின் தரத்தை உயர்த்தினால் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியை உணர இயலும்.

தினமும் ஒரு பொன் முட்டை இடும் கோழியை வளர்த்து வந்தான் ஒருவன். ஒருநாள், உணவுத் தட்டுப்பாட்டின் காரணமாக, கோழியை இரண்டாக அறுத்து ஒன்றை உணவுக்கும் மற்றொன்றை முட்டை இடுவதற்குமாகப் பிரித்துவைத்தான். அறுத்த பகுதி முட்டையிடாது என்பதை உணரவில்லை. ஆன்மிகத்தை இழந்த லோகாயதம் நிறைவு பெறாது. வருங்காலத்தின் வரைபடத்தை உருவாக்குவது மனம். அதைச் செயல்படுத்துவது புலன்கள். அவை தனியாக தன்னிச்சையாக செயல்படாது. மனம் ஆசானாக இருந்து வழிகாட்ட வேண்டும். உண்மையான வழிகாட்டுதல் மனதில் உதிக்க, பண்பும் அறநெறியும், ஒழுக்கமும் ஒத்துழைக்கும். கடவுள் நம்பிக்கை தெம்பை ஊட்டும். அதற்கான முயற்சியை நாம்தான் மேற்கொள்ள வேண்டும்.

? என்ன விதமான முயற்சிகள் தேவை என்கிறீர்கள்?

மந்திரத்தில் மாங்காய் விழாது. கடிவாளம் இல்லாத குதிரைகள் போல புலன்களை மேயவிட்டால் மனதையும் கெடுத்து, மகிழ்ச்சி யையும் அழித்துவிடும். அதற்குக் கடிவாளம் வேண்டும். மனம் அதை ஏற்க வேண்டும். மனம் அதன் தரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஏற்ப பண்பும், அறநெறியும், கடவுள் நம்பிக்கையும் இணைந்திருக்க வேண்டும். உழைப்பாளிக்குத் தேவையில்லாத ஒரு பகுதியாக மனதைப் பார்க்கக் கூடாது.

பண்பிலும், அறநெறியிலும், கடவுள் நம்பிக்கையிலும் தோய்ந்த மனதைப் பெற்றுவிட்டால், உழைப்பாளி உழைப்பில் முன்னேறு வான். தாழ்வு மனப்பான்மை உதயமாகாது. பாதுகாப்பின்மையும் மறைந்து விடும். சுரண்டும் வர்க்கமும் இந்தப் பண்பில் மனதை இணைத்துவிட்டால், சுரண்டுவதை மறந்துவிடும்; உழைப்பாளியை பங்காளியாகப் பார்க்கும்.

சிறு வயதிலேயே பண்டைய கலாசாரத்தை ஊட்டி வளரவிட்டால், சீர்திருத்தவாதிகளுக்கு விளையாட இடம் இருக்காது. தனது வாழ்வுக்காக உயிரைப் பறிக்கும் விலங்கினங்கள் காட்டில் உண்டு. அவையும்கூட தான் உண்ட மிச்சத்தை மற்ற விலங்குகளுக்கு விட்டுவிடும்; சேமித்து வைப்பது இல்லை. ஆறாவது அறிவு இல்லாத உயிரினமே ஒரு பண்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஆறாம் அறிவை பெற்றவனோ, சுயநலத்தில் குறியாக இருந்துகொண்டு, பண்பற்ற வழியில் எந்த உறுத்தலும் இல்லாமல் ஈடுபட்டு, சமுதாயத்தை ரணகளமாக்குகிறான்.

? எனில், மனிதன் மிருகங்களைவிட இழிவானவன் என்கிறீர்களா?

மனம் எனும் பொக்கிஷத்தை பக்குவப் படுத்தவோ, பயன்படுத்தவோ தெரியவில்லை எனச் சொல்ல வருகிறோம்.

கொக்கு ஒன்று பாறையின் மீது ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருந்தது. அந்த ஓடையில் வந்த மீன் ஒன்று கொக்கைப் பார்த்துவிட்டு, ‘ஏன் இன்று தாங்கள் உணவுக்கு முயற்சிக்காமல் சோர்வோடு நிற்கிறீர்கள்?’ எனக் கேட்டது. உடனே கொக்கு, ‘எல்லாம் உங்களைப் பற்றிய கவலைதான். உங்களின் வருங்காலத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்றது. அதற்கு ‘ஏன்?’ என்று மீன் கேட்க, ‘‘இன்னும் சில நாட்களில் இந்த நீரோடை வற்றிவிடும். தங்கள் இனம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும். அதுதான் எனது கவலைக்குக் காரணம்’’ என்றதுடன், மீன்கள் தப்பிக்க ஓர் உபாயத்தையும் சொன்னது கொக்கு. ‘‘சற்று தொலைவில் நீர் வற்றாத தடாகம் ஒன்றுள்ளது. உங்களுக்கு விருப்பமெனில், அங்கு சேர்த்துவிடுகிறேன்’’ என்றது. மீன்களும் ஒப்புக்கொண்டன. விளைவு, அத்தனை மீன்களும் பறவையின் கூட்டில் அடைக்கலமாயின!

இது கதைதான். நிஜத்திலும் இப்படி சுரண்டும் வர்க்கம் விழித்துக்கொண்டிருக்கும் சூழலில், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பண்பும், அறநெறியும், கடவுள் சிந்தனையும் இணைந்த மனம்தான் வழிகாட்டும். ஆடு, தன் மேய்ப்பனை நம்பாது; கசாப்புக் கடைக்காரனை நம்பும். தாழ்வு மனப்பான்மையில் இணைந்த மனமும் சுரண்டும் வர்க்கத்தை நம்பும்; தாழ்வு மனப்பான்மையை அகற்ற முற்படாது. அறமும், அறநெறியும், பண்பும் மனதை ஆட்கொண்டு தெளிவு பெற வேண்டும். அதன் தூண்டுதலில் ஏற்பட்ட புலன்களின் செயல்பாடு உழைப்பு. அவை உண்மையான மகிழ்ச்சியை உணரவைக்கும். மனத்தெளிவு இன்றி வாழ்க்கை இனிக்காது. தெளிவுக்கான மருந்து பண்பைத் தவிர வேறொன்றும் இல்லை.

 தங்கள் சிந்தனைக்கு  ஒரு வார்த்தை...

பிணி விலகுவதற்கு, உரிய மருந்தை உட்கொள்ளவேண்டும். வேறு வழியில் பிணியை அகற்ற இயலாமல் போகும்போது, அந்த மருந்து உயர்வு பெற்றுவிடுகிறது. மனதின் போக்கை வரையறுக்க இயலாது. மனதைத் தெளிவாக்க உயர்ந்த மருந்துகள் பண்பும், அறநெறியும், கடவுள் நம்பிக்கையும்தான். அவை இருந்துவிட்டால் தாழ்வு மனப்பான்மையும், பாதுகாப்பின்மையும் மறைந்துவிடும்.

பண்பையும் அறநெறியையும், கடவுளின் நம்பிக்கையையும் ஆராய்ச்சி பண்ணும் அளவுக்கு நமது குறுகிய சிந்தனை பலன் அளிக்காது. அதைப் பெற்றால் தெளிந்த மனம் ஆராய்ச்சி பண்ணும் அளவுக்கு விரிவடையும். அப்போது அதன் பெருமையும் விளங்கிவிடும். பார்த்தும் கேட்டும் தெரிந்த அறிவை வைத்துக்கொண்டு தத்வ விளக்கத்தை மதிப்பீடு செய்வது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போலாகும். மனதில் படிந்த தூசை அகடவிகடங்களில் மாற்ற இயலாது. பிணிக்குத் தகுந்த மருந்தை அளிப்பவன் உண்மையான வைத்தியன். இன்றைய கோலாகலத்துக்கு மூலகாரணம் மனம் கலக்கத்தில் ஆழ்ந்து தெளிவு பெறாததுதான். அதற்கு மருந்து அறம், அறநெறி, பண்பு கடவுள் நம்பிக்கை - இது நம்பிக்கைக்கு உகந்தது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.