மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 12

சிவமகுடம்  - 12
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 12

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

பூ மந்திரம்! 

அந்தி மயங்கி ஆறேழு நாழிகைகள் கழிந்தும் கீழ்வானில் நிலவு தென்படாத தால், மருந்துக்கும் வெளிச்சம் இல்லாதிருந்த காவிரியின் கரையை ஒட்டிய ஒற்றையடிப் பாதையில், ஒருவாறு அனுமானித்தபடியே ஒன்றன் பின் ஒன்றாக மெள்ள நடைபோட்டுக் கொண்டிருந்தன அந்த நான்கு புரவிகளும்.

அவற்றின் வேகமும் ஓட்டமும் தடைபடுவதற்கு நாலாபுறமும் கவிந்திருந்த இருள் மட்டுமே காரணமல்ல. அந்த வெண் புரவிகளும், அவற்றின்

எஜமானர்களும் வன மாளிகையில் இருந்து புறப்பட்ட தருணத்தில், மெல்லிய கோடுகளாய் தரையிறங்கிய தூறல், நேரம் செல்லச் செல்ல பெருமழையாய் வலுக்க ஆரம்பித்திருந்தது. கோடை மழை ஆதலால் சில நாழிகைகளுக்கு வலுவாய் பெய்த பிறகே ஓயும் என்பது தெரியும். ஆகவே, அதன் பொருட்டு எங்கும் தேங்கிவிடாமல், தங்களின் எஜமானர்கள் பயணத்தைத் தொடர்ந்தபடியால் உண்டான களைப்பும், பெரும் மழையோடு, அவ்வப்போது சுழன்றடித்த பேய்க்காற்றும் ஒருசேர அந்தப் புரவிகளின் பயணத்தைக் கடினப்படுத்தவே செய்தன!

பெருமழையுடன் கோடை இடியும் கண்ணைப் பறிக்கும் மின்னலும் சேர்ந்துகொள்ள, இயற்கை ஒருவித ஊழித் தாண்டவத்தை நிகழ்த்தினாலும், புரவிகளின் மீது அமர்ந்து பயணித்தவர்கள் சிறிதும் சலனம் அடைந்தார்களில்லை!

மற்ற மூன்று புரவிகளையும் வழிநடத்தியபடி முன்னால் சென்றுகொண்டிருந்த புரவியின் மீது அமர்ந்திருந்தவன், பெரும் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டிருந்தான். அடிக்கடி பயணித்து பழக்கப்பட்ட வழி என்பதால், தனது குதிரையைச் செலுத்துவதற்கு அவன் அதிக சிரமங்கள் எடுத்துக்கொள்ள தேவை இல்லாதிருந்தது.

சிவமகுடம்  - 12

இருளில், புரவி மேடுபள்ளங்களில் ஏறி இறங்கியபோதும்சரி, பாதையின் இரு புறமும் தாழ்ந்து வளைந்திருந்த விருட்சங்களின் கிளைகள் மேனியில் உராய்ந்து காயப்படுத்தியபோதும் சரி, புரவியின் போக்குக்கு தக்கபடி அவனது மேனி அசைந்துகொடுத்ததே தவிர, மற்றபடி அவன் வேறு எதையும் லட்சியம் செய்யாமல், இமைக்கவும் மறந்து, தூரதிசையை வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்தானாகையால், அவனது சிந்தனை ஆழம் வெகு அதிகம் என்பதை அவனது சகாக்களும் புரிந்து கொண்டார்கள். ஆகவே, அவர்களும் மெளனம்

அனுஷ்டித்தபடியே, தத்தமது புரவிகளில் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.

அந்த ஒற்றையடிப் பாதை, அவர்களை இன்னும் நான்கு காத தூரத்தில் உள்ள பெரிய ஏரிக்கு மெள்ள அழைத்துச் சென்று கொண்டி ருக்க, அவர்களில் முதலில் சென்றவனும், அச்சுதன் எனும் பெயரைக் கொண்டவனுமாகிய அந்த முரடனின்  மனமோ, அவர்கள் புறப்பட்ட வனமாளிகையிலேயே தங்கிவிட்டிருந்தது. அதுமட்டுமா? அன்று வனமாளிகையில் ஒலித்த வெள்ளாடைத் துறவியின் கோபக் குரலையும், அறைகூவலையும் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கச் செய்தது அவன் மனம்!

அன்றைக்கு, முதலில் கோபவயப்பட்டிருந்த துறவி, ஒரு தருணத்தில் சட்டென்று தமது முகபாவம் மாற, வெகு கம்பீரத்துடனும், பெருமிதத் துடனும், 'அச்சுதன் என்ற பெயருக்கு உரியவனின் மகிமையை நீ அறிவாயா?’ என்று கேட்டதும், 'அரசர் குலதிலகன் அச்சுதன் முற்றத்தில்’ என்று உச்சஸ்தாயியில் குரலெடுத்து அவர் பாடிய காட்சியும் அவன் மனத்திரையில் நிழலாடின.

அன்று அவர் ஏளன வார்த்தைகளால் சாடிய தருணத்தில் சற்று கோபம் எழுந்தது உண்மைதான் என்றாலும், மூவேந்தர்களையும் அடக்கியாண்ட களப்பிரரின் சிறப்பையும், எண்திக்கும் புகழ் மணக்கத் திகழ்ந்த களப்பிர அரசன் அச்சுதனின் பெருமையை அவர் எடுத்துச் சொன்ன விதமும், 'அவன் பெயரைக் கொண்ட நீயும் அத்தகையதொரு

பெருமையை அடைய வேண்டாமா?’ என்று கேட்டதுடன், அதன் பொருட்டு அவர் காட்டிய அக்கறையும், அவர் தந்த ஆலோசனைகளும் அவனது சீற்றத்தைத் தணித்ததுடன், அவர் மீதிருந்த மதிப்பையும் பன்மடங்காக உயர்த்திவிட்டன.இதோ, இப்போது பெருமழையின் ஊடாகப் அவர்கள் பயணிப்பதற்கும் துறவியார்தானே காரணம்.

ஆமாம்! அன்று வன மாளிகையில் அவர் அளித்த திட்டத்தின் முதற்படியே இந்த பயணம்.எத்தகையதொரு மகத்தான திட்டம் அது?!

'இருவரை அழிக்க வேண்டும்’ என்று திட்டத்தை அவர் அவிழ்க்கத் துவங்கியபோது, முதலாமவர் யாரென்பது தெரியும். இரண்டாவதாக யார் என்று தனது சந்தேகத்தை அச்சுதன் கேட்டவுடன், அவனை சற்று முறைத்துவிட்டு, இரண்டாவது நபரின் பெயரை துறவிச் சொன்னபோது, அச்சுத

முரடனும், அவன் நண்பனும் பெரும் குலை நடுக்கத்துக்கு ஆளானார்கள் என்றால், துறவி திட்டத்தை மேலும் விவரிக்க விவரிக்க அவர் களின் நடுக்கம் இன்னும் அதிகமானது என்றே சொல்லவேண்டும்.

அதிலும், சோழர்கள் பெரும் ரகசியமாக வைத் திருக்கும் பூ மந்திர வியூகத்தை விவரித்து, போரில் மாயாஜாலம் செய்யப்போவதாக சோழர்கள் நம்பிக் கொண்டிருக்கும் அந்த மந்திரப்பூ வியூகத் தின் வெளிவட்ட இதழ்கள் விரியுமுன் அவற்றை அழிப்பதே தனது திட்டம் என்று அவர் விளக்கிய போது, அயர்ந்து நின்றுவிட்டான் அச்சுதன்.

மேலும், சோழ வியூகத்தை உடைப்பதால் பாண்டியர்களுக்கே லாபம். அதனால் நமக்கு என்ன பயன் என்ற சிந்தனையும் அவனுக்குள் எழாமல் இல்லை. அதைப் புரிந்துகொண்ட துறவி, அவன் கேட்காமலேயே பதில் சொன்னார்... 'அச்சுதா, காரணமின்றி காரியம் இல்லை. காரணத்தைப்

பிற்காலத்தில் தெரிந்துகொள்வாய். மேலும், வியூகத்தை முறியடிக்கும் முயற்சியில் நமது  முதல் எதிரியும் கொல்லப்படுவார்' என்றவர், பூ வியூகம் குறித்தும் விளக்கினார்.

சிவமகுடம்  - 12

உறையூர்க் கோட்டை பூ மையம் எனில், அதை சுற்றி வளைத்து பாதுகாத்து நிற்கும் சோழர் படையணி பூவின் உள்வட்டம். அந்த படையணி மீது பாண்டியர் வேகமாக மோதும் தருணத் தில், ஏற்கெனவே சந்தடியின்றி கோட்டையில் இருந்து வெளியேறி பதுங்கியிருக்கும் வேறொரு படையணி, அதாவது பூவின் வெளிவட்டம் திடீரென விரியும். ஆக, பூவின் வெளிவட்டத்துக்கும் உள் வட்டத்துக்கும் இடையில் பாண்டிய சேனை சிக்கித் திணறும்!

இப்படியான சோழர்களின் பூ மந்திர வியூக ரகசியத்தை, நேரில் கேட்டவர் போன்று மிகத் துல்லியமாக விவரித்த துறவி, வெளி வட்டத்தை அழிக்கும் தனது திட்டத்தையும் விவரித்திருந்தார்.

அரண்மனை நீராட்ட குளத்தில் துவங்கும் ஒரு சுரங்கம் வழியாக நுழைந்து, அங்கிருந்து நான்கைந்து

காத தூரத்தில், பெரிய ஏரிக் கரையில் இருக்கும்  சமவெளிக்கு வந்து, அதன் அக்கம்பக்கத்து *நீர்நிலங்களில் பதுங்கும் சோழர்களின் இரண்டா வது அணி.

அரண்மனையில் துவங்கும் அந்தச் சுரங்கப் பாதை, ஏரிக்கரையில் அமைந்திருக்கும் வளவன் மண்டபத்தில் வெளித் திறக்கும்!

கோடை மழையின் உபயத்தாலும், ஏற்கெனவே காவிரிக் கால்வாய்களின் வழியே வரும் வெள்ளத் தாலும் இப்போதே முக்கால் பங்கு நிரம்பியிருக் கிறது பெரிய ஏரி. கோடைமழை இன்னும்

நான்கைந்து நாட்களுக்கு விட்டு விட்டு நீடிக்கும். அதன் பலனாக ஏரி முழுவதுமாக நிரம்பும். அதற்குள்ளாக நம் வீரர்கள் நால்வர் சென்று அதன் கரையில் ஒரு பகுதியை சிறிது சேதாரம் செய்து, பலவீனப்படுத்தி விட்டுவந்தால் போதும்.

இரண்டொரு நாட்களில்  பலவீனம் பெரிதாகி கரை தானாகவே உடையும். வெள்ளம் சமவெளியை மூழ்கடிக்கும். நீர்நிலங்களும் பாழாகும்.

சமவெளியையோ, அதையொட்டிய நீர்நிலங் களையோ, சுரங்கத்தையோ பயன்படுத்த இயலாததால், சோழர்களின் மந்திரப் பூ இதழ் விரிக்காமலேயே உதிர்ந்துபோகும். முன்னதாக, நம்மவர்களில் இருவர் சுரங்கத்தின் வழியே அரண்மனைக்குள் புகுந்து காத்திருப்பார்கள். தருணம் வாய்க்கும்போது, முதல் எதிரி அழிக்கப் படுவார்'

துறவியின் இந்தத் திட்டம் அவன் மனதை வியாபித்து, சிந்தையை பலவாறு ஓடவிட்டதால்  மெளனத்துக்கு ஆளாகியிருந்தான் அச்சுதன். ஒருவாறு புரவிகள் ஏரிக்கரையை அடைந்த பிறகே அவனது மெளனம் கலைந்தது.

புரவியில் இருந்து தரையில் குதித்தவன், ஏரிக் கரை அருகில் ஓரிடத்தில் விழுதுகளைப் பரப்பி நின்றிருந்த ஆல விருட்சங்களைக் கண்டான். புரவிகளை அந்த மறைவிடத்தில் கட்டிப்போட்டு வரும்படி சகாக்களுக்கு உத்தரவிட்டான்.

சிவமகுடம்  - 12

மழை ஓரளவு மட்டுப்பட்டிருந்தது. ஆனாலும் காற்றின் வேகம் தணியவில்லை. புரவிகளை மறைவிடத்தில் கட்டிப்போட்டுவிட்டு, நண்பர்கள் வந்ததும், அனைவருமாகச் சேர்ந்து கரையை அடைந்தார்கள். சகாக்களில் ஒருவன் தயாராக எடுத்து வந்திருந்த மண்வெட்டிகளையும் இன்னும் பிற கருவிகளையும் கொண்டு மெள்ள கரையின் ஒரு பாகத்தை உடைக்கத் துவங்கினார்கள்.

"கூடுமானவரை சத்தம் எழ வேண்டாம்'' என்று நண்பர்களை எச்சரித்துவிட்டு, கரையின் மீது ஏறி ஏரியை நோக்கினான் அச்சுதன். சமுத்திரமாக விரிந்து கிடந்தது ஏரித் தண்ணீர். அச்சுதனுக்கு ஏக திருப்தி. அதை வெளிப்படுத்துவதுபோல், முகத்தை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டான்.

'துறவியின் திட்டத்தில் பழுதேதும் இல்லை' என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டவன்,  திரும்ப யத்தனித்தான். அப்போது ஏரியின் பரப்பில்

நீர்க்குமிழிகள் எழும் சத்தம்! அதேநேரம், பெரும் மின்னல் ஒன்று மண்ணில் பேரொளியைப் பாய்ச்ச, அதன் வெளிச்சத்தில் மூங்கில் குழல்கள் சில, நீர்ப்பரப்பில் காற்றுக் குமிழ்களை உமிழ்ந்தபடி மெள்ள கரையை நோக்கி நகர்ந்துவருவதைக் கவனித்தான்.

ஏதோ பேராபத்து தங்களை நெருங்குகிறது என்பதை சடுதியில் புரிந்துகொண்டான் அச்சுதன்.

ஆனால் அவன் சுதாரித்து அங்கிருந்து நகர்வதற் குள், நீருக்குள் இருந்து திடுமென எழுந்த பேருருவம், சட்டென்று பாய்ந்து அவன் கால்களை இறுகப் பற்றிக் கொண்டது.

அந்த உருவத்தின் வலது தோளில்  மிகப்பெரிதாக மீன் பச்சை!

சிறு மலரும் குறுவாளும்!

ஏரிக் கரையில் அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த அதேநேரம், அரண்மனையின் நந்தவனத்தில் உலாவிக்கொண்டிருந்தாள் இளவரசி மானி.

வானில் மேகத் திரை விலக்கி மெள்ள பிறை முகம் காட்டிக்கொண்டிருந்தது பால்நிலவு. அப்போதுதான் பெய்து ஓய்ந்திருந்த பெருமழை யின் சிதறல்கள், நந்தவனத் தாவரங்களிலும் அவற்றின் இலைகளிலும் படிந்து பிறை நிலவைப்பிரதிபலிக்க, அங்கே ஆயிரமாயிரம் பிறைகள் தோன்றிவிட்டதாகவே கருதினாள் மானி.

பிறை நிலவுகள் மட்டுமல்ல, நீர்த் துளிகள் மூலம் நிலவின் பிம்பத்தைச் சூடிக் கொண்டிருந்த இலைகள் ஒவ்வொன்றும் அவளுக்கு பிறை சூடிய பெருமானின் திருமுகத்தையே காட்டின. மெய்ம்மறந்தாள் மானி!

சோழம், அதைச் சூழ்ந்திருக்கும் போர் மேகங் கள், பாண்டியன் ஏவியிருக்கும் அஸ்திரங்கள், அதை எதிர்க்க தான் சமைத்திருக்கும் பூ வியூகம் அத்தனையும் மறந்துபோக, தென்னாடுடை யானே அவள் மனதை முழுமையாக வியாபித்துக்கொண்டார்.

அங்ஙனம் பரமன் வியாபித்திருந்த மனம் அவளைப் பாடவும் தூண்டியது. இனிய குரலெடுத்து பாடினாள்

வெண்நிலாமதியம்தன்னை

விரிசடை மேவ வைத்து(வ்),

உள்நிலாப் புகுந்து நின்று,

அங்கு உணர்வினுக்கு உணரக் கூறி,

விண்இலார்; மீயச்சூரார்;

வேண்டுவார் வேண்டுவார்க்கே

அண்ணியார்; பெரிதும் சேயார்...

பாடலைப் பாடியதோடு, 'சிவனாரைப் போற்றும் வாகீசரின் பாட்டு. எவ்வளவு அற்புதம்!'

என்று தனக்குள் சிலாகிக்கவும் செய்தாள்.

அதேநேரம், வெளிப்புறம் எங்கோ அதிர முழங்கும் சங்கநாதம் அவளை உசுப்பியது. அரண்மனைக் காவலர்கள் பணிமாறும் நேரம் என்பதை உணர்த்தியது அந்தச் சத்தம்.

நந்தவனத்தில் நாதன் குறித்த சிந்தனையிலேயே அதிக நேரம் கழிந்துவிட்டதை உணர்ந்து அறைக்குத் திரும்ப யத்தனித்தவள், எதிரில் ஒரு பூச்செடியில் குலுங்கிய இரவுப்பூக்களைக் கண்டதும், மீண்டும் குதூகலம் கொண்டாள்.

அந்தப் பூக்களில் ஒன்றைப் பறித்து தலையில் சூட்டிக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அருகில் நெருங்கினாள்.

பூக்களில் ஒன்றைப் பறிக்கவும் செய்து அவள் சூடிக்கொள்ள இருந்த தருணத்தில், அவளுக்குப்

பின்னால் இருந்த புதருக்குள் இருந்து, கூரிய குறுவாளோடு நீண்டது ஒரு கரம்!

மகுடம் சூடுவோம்...