மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 24

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 24
News
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 24

சத்தியப்பிரியன், ஓவியம்:ஸ்யாம்

39. அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே ?

ஏற்கனவே திருக்கோளூர் பெண்பிள்ளையின் இருபதாவது வார்த்தையான அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்திரனைப் போலே என்ற வார்த்தையில் தசரதன் சபையில் என்ன நடந்தது என்று பார்த்து விட்டோம் . இது அதன் தொடர்ச்சிதான்.

புத்திர பாசம் காரணமாக அடிக்கடி வாக்கு மாறும் தன்மையுள்ள தசரதன் விசுவாமித்திரருடன் அரக்கவதம் செய்ய இராமனை அனுப்ப மறுக்கிறான். விசுவாமித்திரர் கோபம் கொண்டு கிளம்ப எத்தனிக்கிறார். வசிஷ்டருக்கு நடக்கப் போகும் மகா சம்பவங்களின் கோர்வை ஞானதிருஷ்டியில் வந்து போகிறது. இராவணன் அழிந்தால் என்ன அழியாவிட்டால் என்ன இராமனுக்கும் பிராட்டிக்கும் திருமணம் நடக்கவேண்டியது கட்டாயமல்லவா? சட்டென்று தசரதனைப் பார்த்து “உன் பிள்ளைகளுக்கு ஒரு நல்லது நடந்தால் அதனை மன்னனே நீ தடுப்பாயோ ? என்று கேட்கிறார். இதனை கம்பன் தனது வரிகளில் அழகாகக் கூறுகிறான்.

கறுத்த மா முனி கருத்தை உன்னி.

‘நீ பொறுத்தி’ என்று அவற் புகன்று.

‘நின் மகற்கு உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் மறுத்தியோ?’
எனா. வசிட்டன் கூறினான்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 24

அத்துடன் நில்லாமல் “ வெள்ளம் பெருகி ஒரு நாட்டிற்கு வளம் சேர்வதைப் போல உன் பிள்ளைகளுக்கு நிறைய நல்லவைகள் பெருகி வரப் போகின்றது. அதனை தடுக்கப் போகிறாயா? “ என்று கேட்கிறார். இதனையும் கம்பர் தனது கவித் திறத்தால்,

‘பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்.
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது’ என்னவே.


இதன்பிறகே தசரதன் மனம் மாறி தனது புதல்வர்களான ஸ்ரீராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரருடன் அனுப்ப சம்மதிக்கிறான்.

சீதாபிராட்டிக்கும், ஸ்ரீராமனுக்கும் திருமணவைபவத்தை நடத்தி வைக்கும் பொருட்டு ஸ்ரீராமனை விசுவாமித்திரருடன் அனுப்பிவையும் என்று தசரத சக்கரவர்த்தியிடம் சொன்னதைப் போன்ற எந்த நல்ல செயலையும் நான் எங்கள் வைத்தநிதி பெருமானுக்கு செய்யவில்லையே பிறகு எதற்கு இந்த ஊரில் இருக்கவேண்டும் என்று திருக்கோளூர் பெண்பிள்ளை கேட்டபடி கிளம்புகிறாள்.