
பல நோய்கள் நீக்கும் பஞ்சலிங்கேஸ்வரர்!
`நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். ஆரோக்கியம் என்ற அந்த ஈடில்லா செல்வத்தைப் பெறவும், பீடித்திருக்கும் நோய் நீங்கி நலம் பெறவும் அருள்புரிகிறார் பஞ்சலிங்கேஸ்வரராக வீற்றிருக்கும் சிவன்... வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கொண்டாபுரத்தில் உள்ள அருள்மிகு பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்தில்!
ஈசன் பஞ்சலிங்கமாகவும், அந்த ஐந்து லிங்கங்களில் பஞ்ச பூதங்களாகவும் உறைந்திருக்கும் மகிமை குறித்த தலவரலாறு சொன்னார், ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் செந்தில்நாதன்.

‘‘மனிதர்களுக்கு பஞ்சபூதங்களின் தாக்கத்தால்தான் பல்வேறு பிணிகள் ஏற்படுகின்றன. எனவே, அம்பிகை காமாட்சி இந்தத் தலத்துக்கு வந்து ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்தாள். அம்பிகையின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த ஈசன், அவளுக்குத் தரிசனம் தந்தார். அம்பிகை ஈசனிடம், ‘ஐயனே, தாங்கள் இந்த ஐந்து லிங்கங்களிலும் பஞ்சபூதங்களாக எழுந்தருளி, தங்களை வந்து வழிபடும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கையை அருள்புரிய வேண்டும். நோய்களால் துன்பப்படுபவர்கள், தங்களைத் தரிசித்து வணங்கிய உடனே நோய்களில் இருந்து நிவாரணம் பெற வேண்டும்’ என்று வரம் வேண்டினாள். அப்படியே அருள்புரிந்த

பெருமான், ஐந்து லிங்கங்களின் வடிவில் பஞ்சபூதங்களாக இந்தத் தலத்தில் எழுந்தருளி, தரிசித்து வணங்கும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கையை அருள்புரிகிறார்’’ என்றவர்,
‘‘பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில், காஞ்சி மஹாஸ்வாமிகளுக்கு மிகவும் பிரியமான கோயில். காலப்போக்கில் சிதிலம் அடைந்துவிட்ட இந்தக் கோயிலை, அவருடைய திருவுள்ளத்தின்படி பிர்லா குடும்பத்தினர் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்’’ என்றார். இது பற்றிய விவரம் கோயிலுக்கு வெளியில் உள்ள கல்வெட்டிலும் காணப்படுகிறது.
ஐந்து லிங்கங்களில் முதலில் நாம் தரிசிப்பது ஐயனின் வாமதேவ மூர்த்தம். தொடர்ந்து, தத்புருஷ மூர்த்தம், அகோர மூர்த்தம், பிரதான கருவறையில் ஈசான மூர்த்தம், கருவறையின் பின்புறத்தில் சத்யோஜாத மூர்த்தம் என ஐந்து சிவலிங்க மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளைச் சேர்ந்த அன்பர்கள் அக்னி தத்துவமாகிய அகோர மூர்த்தியையும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளைச் சேர்ந்த அன்பர்கள் மண் தத்துவ மாகிய சத்யோஜாத மூர்த்தியையும், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்த அன்பர்கள் வாயு தத்துவமாகிய தத்புருஷ மூர்த்தியையும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்த அன்பர்கள் வாமதேவ மூர்த்தியையும், ராசி, நட்சத்திரம் தெரியாத அன்பர்கள் பிரதான மூர்த்தியாகிய ஈசான மூர்த்தியையும் ஐந்து பிரதோஷ தினங்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால், நோயற்ற வாழ்க்கையைப் பெறலாம் என்பது ஐதீகம்.
அம்பிகை... காமாட்சி என்ற திருப்பெயருடன் இரண்டு சந்நிதிகளில் அழகாகக் காட்சி தருகிறாள். இந்தத் தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்டால், திருவண்ணா மலை, காஞ்சி, காளஹஸ்தி, திரு வானைக்காவல், சிதம்பரம் ஆகிய ஐந்து தலங்களைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருப்பதியைச் சேர்ந்த லக்ஷ்மி, தன்னுடைய இடுப்பு வலி நீங்க இந்த கோயிலில் வேண்டிக்கொண்டவர். ‘‘எனக்குப் பல வருஷங்களாகவே கடுமையான இடுப்பு வலி இருந்தது. எத்தனையோ டாக்டர்கள்கிட்ட காட்டியும் எந்த பலனும் இல்ல. அப்போதுதான் பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலைப் பத்திக் கேள்விப்பட்டு, ஐந்து பிரதோஷம் கோயிலுக்கு வந்து நெய்தீபம் ஏத்தி வேண்டிக்கிட்டேன். ஆறு மாசத்துக்குள்ளேயே என்னோட இடுப்பு வலி சரியாயிடுச்சு’’ என்றார் நன்றியும் நெகிழ்ச்சியுமாக.
சோளிங்கர் நிர்மலா, ‘‘எனக்கு ஒரு வருஷமாவே தீராத வயிற்று வலி. சென்னை ஆஸ்பத்திரியில காட்டினப்போ, ஆபரேஷன் செய்யணும்னு சொல்லிட்டாங்க. அப்போ என்னோட அப்பாவும் ஆஸ்பத்திரியில இருந்ததால, உடனே என்னால ஆபரேஷனுக்கு ஒப்புக்க முடியாத சூழல். அதனால டாக்டர்கள் மூணு மாசத்துக்கு கொடுத்த மாத்திரைகளை எடுத்துக்கிட்டேன். அப்பத்தான் எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலைப் பத்தி சொன்னாங்க. நானும் நம்பிக்கையோட ஐந்து பிரதோஷம் கோயில்ல வந்து வேண்டிக்கிட்டேன். கடவுளோட அனுகிரகத்தாலும் டாக்டர்களோட கவனிப்பாலும் வயிற்று வலி சரியாயிடுச்சு’’ என்றார் ஆச்சர்யமும் ஆனந்தமுமாக.

உலக மக்கள் நோயின்றி வாழ வேண்டி அம்பிகை தவம் இயற்றிய பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில், ஐந்து லிங்க மூர்த்தங்களாக அருள்புரியும் சிவபெருமானை வழிபட்டு நோயற்ற வாழ்க்கையை குறைவற்ற செல்வமாகப் பெறலாம்!
நிவேதிதா
படங்கள்: ஜெர்ரி ரெனால்டு விமல்