Published:Updated:

பசுக்களின் நோய் தீர்க்கும், காதலருக்கு வரமருளும் குலடுபாறை பெருமாள்!

பசுக்களின் நோய் தீர்க்கும், காதலருக்கு வரமருளும் குலடுபாறை பெருமாள்!
பசுக்களின் நோய் தீர்க்கும், காதலருக்கு வரமருளும் குலடுபாறை பெருமாள்!

'பசுக்களின் நோய்களைத் தீர்க்கும் பெருமாள் ஒரு மலைமேல் குடிகொண்டிருக்கிறார்’ என்று கேள்விப்பட்டோம். அந்த அதிசயப் பெருமாளை தரிசித்துவிட்டு வரலாமென்று, கிளம்பிவிட்டோம். கரூர் அருகே இருக்கும் குஜிலியம்பாறையிலிருந்து தரகம்பட்டி செல்லும் சாலையில் ஏழு கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது அந்த கிராமம். `குருடம்பாறை’ என்ற குலடுபாறை அதன் பெயர். நாங்கள் போய்ச் சேர்ந்தபோது மாலை நேரமாகியிருந்தது. அது ஒரு சிறிய மலை. சுற்றும்முற்றும் ஆள் அரவம் இல்லை. `சின்ன மலைதானே... ஈஸியா ஏறிடலாம்’ என்று நினைத்து ஏறத் தொடங்கினோம். ஆனால், படிகளோ, பாதையோ இல்லை.

மலை ஏறத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே மேற்கொண்டு எப்படிப் போவது என்று தெரியாமல் தடுமாறி நின்றோம். சற்று தூரத்தில், ``ஹெ ஹெ... பா பா...’’ என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தோம். ஒருவர் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.

அவரிடம், ``அண்ணே... மலைமேல ஏர்றதுக்குப் பாதை ஏதாவது இருக்கா?’’ என்று கேட்டோம். ``பாதையெல்லாம் இல்லை... அதோ தெரியுது பாரு... ஆட்டுப்பாதை... அது வழியாத்தான் மேல ஏறணும்’’ என்றார். அண்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவர் காட்டிய ஒற்றையடிப் பாதையில் மலையேறத் தொடங்கினோம். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக இல்லை. பாதி தூரம் ஏறிய பிறகும், பெருமாள் கோயில் மட்டும் கண்ணுக்குத் தெரியவில்லை. நம்பிக்கையைத் தளரவிடாமல், மேலே நடந்தோம். தாகம் தொண்டையை அடைத்தது. வாய் வறண்டுபோனது. விழுங்குவதற்கு எச்சில்கூட இல்லை. அவசரத்தில் தண்ணீர் பாட்டிலைக்கூட எடுக்காமல் வந்திருந்தோம். ஆனாலும், ஏதோவொரு நம்பிக்கை... எப்படியும் பெருமாளைப் பார்த்துவிடலாம் என்று தோன்றி, எங்களை மேலே போகச் சொல்லித் தூண்டிக்கொண்டிருந்தது. மேலும் நடதோம்.

மொத்தமாக மூன்று கிலோமீட்டருக்கு மேல் மலையில் ஏறிய பிறகுதான் ஒரு முகடு கண்ணுக்குத் தெரிந்தது. அது ஒரு ஒரு சிறிய கூரைக் கொட்டகை. மேற்கூரை கீற்றுகள் கிழிந்த நிலையில் இருந்தன. அந்தக் கொட்டகை வாசலில் நின்று பெருமாள் இருக்கிறாரா என்று உள்ளே பார்த்தோம். அங்கே மூன்று கற்கள் நடப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றிலும் சில மாதங்களுக்கு முன்பாக பூஜை செய்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன. பூக்களில்லாமல் வெறும் நாராக மாலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. சந்தனம், குங்குமம், திருநீறு எல்லாம் கற்களாக நின்ற தெய்வங்களின் மீது பூசப்பட்டிருந்தன. கண்மூடி சற்று நேரம் வணங்கிவிட்டு, வெளியே வந்து, மலை முகட்டில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தோம். சற்றுத் தள்ளி இன்னொரு கட்டடம் தென்பட்டது. ஒருவேளை அதுதான் பெருமாள் கோயிலோ என்று நினைத்து அங்கே சென்றோம்.

அந்தக் கட்டடம் ரொம்பப் பழைமையானது. சுண்ணாம்பையும் மணலையும் கொண்டு கட்டியிருந்தார்கள். கோயில் முழுக்க குப்பை கூளங்களால் நிறைந்திருந்தது. உள்ளே சதுரமாக ஒரு கல்லில் சங்கு பொறிக்கப்பட்டிருந்தது. அதனருகே இரண்டு பழைய குத்துவிளக்குகள் இருந்தன. அவ்வளவு குப்பைகளுக்கு நடுவில், கோயில் கருவறைக்குள் மனதை மயக்கும் ஜவ்வாது மணம் வீசியது நமக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. கேள்விப்பட்டது போல், இவர்தான் பசுக்களின் பிணிகளை நீக்கும் பெருமாள் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்.

கோயிலில் குப்பைகளுடன் பெருமாளைப் பார்க்க மனமில்லை. பிறகென்ன... துப்புரவுப் பணிதான். கோயிலை ஓரளவுக்கு சுத்தம் செய்து முடித்தோம். மலை ஏறி வந்த களைப்பு, துப்புரவுப்பணி எல்லாம் சேர்ந்து தாகத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தன. அருகில் ஏதாவது தண்ணீர் கிடைக்குமா என்று தேடிப்பார்த்தோம். மலைப்பகுதி என்பதால் ஓடைகள் இருக்கும்தானே..! நம்பிக்கை வீண்போகவில்லை. ஓடை இருந்தது... ஆனால், காய்ந்து போயிருந்தது. ஓடையில் இருந்த மணலில் யாரோ குழிதோண்டி வைத்திருந்தார்கள். குருட்டு நம்பிக்கையில் தோண்டிப் பார்த்தோம். தோண்டத் தோண்ட தண்ணீரும் ஊறியது. கலங்கிய தண்ணீர். ஆபத்துக்குப் பாவமில்லை என்று கைகளால் அள்ளிக் குடித்தோம்.

மாலை நேரக் கதிரவன் தன் பணியை முடித்துவிட்டு அவசரமாகத் தூங்கச் சென்றுகொண்டிருந்தது. அருகில் ஒரு காலடிச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தோம்.தலையில் உறுமால், கையில் தடியுடன் ஒருவர் எதிரே நின்றுகொண்டிருந்தார். பயம் கூடியது. ``ஏம்ப்பா... இந்தத் தண்ணியவா குடிச்சீங்க... நல்ல தண்ணி அங்கே இருக்குப்பா’’ என்றார். அவருக்கு நன்றி சொல்லி, ஒரு சிரிப்பை உதிர்த்டுவிட்டு அவருடன் சென்றோம்.

கோயிலுக்குப் பின்புறத்தில் ஒரு குழியைக் காட்டினார். அந்தக் குழியில் தெளிந்த தண்ணீர் கிடந்தது. தாகத்தில் ஆவலோடு அள்ளிக் குடித்தோம். தண்ணீரா அல்லது தேவாமிர்தமா என்ற உணர்வு. அவ்வளவு சுவையாக இருந்தது. அந்த நடுத்தர வயதுக்காரர் சொன்னார்... ``இந்தக்குழி இடி விழுந்ததால ஏற்பட்டுச்சுனு பெரியவங்க சொல்லுவாங்க... இந்தத் தண்ணி எந்தக் காலத்துலயும் வத்தவே வத்தாது. இந்தத் தண்ணியிலதான் பெருமாளுக்குப் பூசை செய்வாங்க’’ என்றார்.

கோயிலின் அருகே ஒரு மரம்... அதன் பெயர் `ஒரசமரம்’ என்றார் அவர். அந்தப் பெயருக்கு என்ன காரணமோ, தெரியவில்லை. மரத்தில் துணிகளில் கற்களைக் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். நமக்கு வழிகாட்டியவரிடம் கேட்டோம். ``குழந்தை பாக்கியம் இல்லாதவங்களும், மாடுகளுக்கு ஏதாச்சும் வியாதி வந்தா குணமாகணும்னு வேண்டிக்கிறவங்களும், இந்த மாதிரி துணியில கல்லைக்கட்டி மரத்துல கட்டிருவாங்க. அவங்க வேண்டுனதைப் பெருமாள் நிறைவேத்துவார்’’ என்றார். கோயிலைப் பற்றி அவரிடம் கேட்டால், அவர் ``எனக்கு அந்தளவுக்கு வெவரம் பத்தாது தம்பி. அதோ தெரியுது பாரு... ஊரு... அங்கே போய்க் கேளுங்க’’ என்று சொல்லிவிட்டுத் தன் வழியில் போனார். பெருமாளை வணங்கிவிட்டு, அவர் காட்டிய திசையில் இருந்த ஊரை நோக்கி மலையிலிருந்து இறங்கத் தொடங்கினோம். மலையை விட்டு இறங்கியபோது இருட்டியிருந்தது.

காற்று இதமாக இருந்தது. அதை அனுபவித்தபடியே அந்த ஊருக்குள் நுழைந்தோம். அதை `மேட்டூர்’ என்றார்கள் ஊர்க்காரர்கள். கிராமம் முழுக்க நாயக்கர் இன மக்களே பெரும்பான்மயாக இருக்கிறார்கள். ஒருவரிடம் ஊர்த் தலைவரின் வீடு எங்கே என்று விசாரித்தோம். வழியைச் சொன்னார். ஊருக்குள் நுழைவதற்கு முன்னதாக ஊர் மந்தையிலேயே செருப்பைக் கழற்றிவிட வேண்டுமாம். அது என்ன விதியோ..! நாமும் செருப்பை மந்தையில் போட்டுவிட்டு, ஊர்த் தலைவர் சின்னராசுவைப் பார்க்கப் போனோம்.

எங்களை வரவேற்றவர், ஒரு கயிற்றுக் கட்டிலில் அமரச் சொன்னார். நாம் வந்த விஷயத்தைச் சொன்ன பிறகு, பெருமாளின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்... `` நாங்க சின்னப் புள்ளைங்களா இருந்தப்ப எங்க அய்யா சொன்னதைத்தான் உங்கக்கிட்ட சொல்றேன். இந்தப் பெருமாள் கோயிலை பாண்டிய மன்னர்கள்தான் கட்டினாங்களாம். மலை முகட்டுல முதல்ல இருக்குற கூரைக்கொட்டாய்தான் பழைய கோயில். அந்தக் கோயில்ல பல வருசமா சிங்கம் ஒண்ணு இருந்துச்சாம். ஒரு அடைமழை காலத்துல, அங்கே சிங்கம் இருக்கிறது தெரியாம, வயித்துல கன்னுக்குட்டியோட ஒரு பசுமாடு மழைக்கு ஒதுங்கியிருக்கு. தஞ்சம் புகுந்த பசுமாட்டை சிங்கம் அடிச்சு சாப்பிட்டுடுச்சி. இதனால பெருமாள் கோவிச்சுக்கிட்டு அடுத்த முகட்டுக்கு போயிட்டாராம். அங்கேயே கோயில் கட்டிட்டாங்க பாண்டிய மன்னர்கள். பழமை மாறக் கூடாதுன்னுதான் முதல் முகட்டுல நாங்க கூரகொட்டாயைப் போட்டுவெச்சிருக்கோம். ஒவ்வொரு வருசமும் புரட்டாசி, தை மாசங்கள்ல கரூருக்குப் பக்கத்துல இருக்குற தான்தோன்றிமலை கோயில்ல இருக்கிற குருக்கள் இங்கே வருவார். பூசை செஞ்சுட்டுப் போவாரு. புரட்டாசி மாசத்துல இங்கே இருக்குற பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெருமாள் கோயிலுக்கு வருவாங்க, அவங்களால முடிஞ்ச காணிக்கையை, அரிசி, பருப்பு, பணமா கொடுப்பாங்க. அந்த காணிக்கையைவெச்சு, சாப்பாடு செஞ்சு, பூசை பண்ணி அன்னதானம் போடுவோம். தை மாசம் மாட்டுப்பொங்கல் அன்னைக்கு, வியாதியால அவதிப்படும் பசுமாடுகளோட பாலை எடுத்துட்டு வந்து பெருமாளுக்கு பூசை செஞ்சா, மலையைவிட்டு கீழ இறங்குறதுக்குள்ள மாட்டுக்கு வியாதி சரியாகிடும்னு எங்க முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. கோயிலுக்கு வர்ற மக்கள், பாலை ஊத்திப் பூசை செஞ்சுட்டு, துணியில கல்லைக் கட்டி ஒரசமரத்துல தொங்கவிட்டுட்டுப் போவாங்க...”

`காதல் நிறைவேற வேண்டும்’ என்று காதலர்களும் இங்கு வந்து பூஜை செய்து துணியில் கல்லைக் கட்டித் தொங்கவிடுவார்கள் என்கிறார்கள் ஊர் மக்கள். எந்த வசதியும் இல்லாமல் இருக்கும் இந்த மலையில் ஏற முடியாதவர்கள், கீழே நின்றபடியே அன்னாந்து பார்த்துக் கும்பிட்டுவிட்டுப் போய்விடுகிறார்களாம். ``படிகளும், மின்விளக்கு வசதியும் அரசு செய்துகொடுத்தால், பெருமாளை தரிசிக்க வருகிறவர்கள், சிரமம் இல்லாமல் வழிபட்டுச் செல்வார்கள் என்கிறார் ஒரு கிராமப் பெரியவர். கல்லும் முள்ளும் நிறைந்த இந்த மலையில் ஏறி, இறங்கிய எங்களுக்கு உடலில் எந்தக் காயமும் ஏற்படவில்லையே என்று வியப்புடன் கேட்டதற்கு, ``இந்த மலையில ஏறி, இறங்கினா ஒரு காயம்கூடப் படாது. இதுவரைக்கும் யாருக்குமே காயம் பட்டதில்லை’’ என்று திகைக்கவைத்தார் அந்தப் பெரியவர்.